Published:Updated:

ஐபிஎல்-காக வெயிட்டிங்கா... அதுக்கு முன்னாடி இந்த கரீபியன் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க! #CPL

#CPL
#CPL ( CPLT20.com )

வெஸ்ட் இண்டீஸில் போட்டிகள் நடந்தாலும், கரீபிய வீரர்கள் அதிகளவில் விளையாடினாலும் அந்த அணிகளின் பெரும்பான்மையான உரிமையாளர்கள் இந்தியர்கள்தான். டைட்டில் ஸ்பான்சரும் இந்திய நிறுவனம்தான்.

கொரோனா சிக்கல்களுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கி பிரச்னைகள் எதுவும் இல்லாமல் சுமுகமாக நடத்தி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளை இன்று முதல் நடத்துகிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு.

கொரோனா காரணமாகப் பாகிஸ்தான் சூப்பர் லீக் இடையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த வருடம் அறிமுகமாகவிருந்த இலங்கையின் லங்கா ப்ரீமியர் லீகும் நவம்பர் - டிசம்பருக்குத் தள்ளிப்போயிருக்கிறது. ஐபிஎல்லும் செப்டம்பர் 19 தான் தொடங்குகிறது என்பதால் முதலில் ரீஸ்டார்ட் ஆகும் ப்ரீமியர் லீக் என்ற பெருமையை கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) பெற்றுள்ளது.

Kieron Pollard
Kieron Pollard
CPL

உலகம் முழுவதும் இருப்பதைப் போன்றே வெஸ்ட் இண்டீஸிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருக்கிறது. வீரர்களுக்கான பயோ செக்யூர் விதிமுறைகளும் கறாராகவே பின்பற்றப்படுகிறது. கரீபிய வீரர் ஃபேபியன் ஆலன் சரியான நேரத்துக்குச் செல்லாமல் விமானத்தைத் தவறவிட்டதால் இந்த CPL சீஸனிலும் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. CPL-ல் பங்கேற்கும் 6 அணிகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்த பிறகே, போட்டி நடைபெறும் ஊரான ட்ரினிடாட்டுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கேயும் ஹோட்டல் ரூமில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகே, ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்வாஸ், பர்படாஸ் ட்ரைடென்ட்ஸ், லூசியா ஸோக்ஸ், நேவிஸ் பேட்ரியாட், ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் என ஆறு அணிகள் மோதும் இந்த சீஸனில் மொத்தம் 33 போட்டிகள் செப்டம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எல்லாருமே அதிரடி கதகளி ஆடுபவர்கள் என்பதால் இந்த அணிதான் ஆதிக்கம் செலுத்தும் என அடித்துச் சொல்ல முடியாது. இருந்தாலும் கடந்த சீஸன்களில் அதிகபட்சமாக நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த முறையும் கேப்டன் பொல்லார்ட் தலைமையில் பிராவோ, சிம்மன்ஸ், நரைன், காலின் மன்றோ, டேரன் பிராவோ என அதிரடியும் அனுபவமும் கலந்த கலவையாக ஜொலிக்கிறது நைட் ரைடர்ஸ். இந்த முறை கூடுதலாக இந்தியாவின் ப்ரவீன் தாம்பேவும் இந்த அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போட்டி நடைபெறும் மைதானங்கள் ஸ்பின்னுக்கும் ஒத்துழைக்கும் என்பதால் இவரின் உள்ளடக்கம் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம்.

Afghanistan players
Afghanistan players
CPL
கிரண் மோரே கண்டெடுத்த சூப்பர் கீப்பர்... இந்திய கிரிக்கெட் அணிக்குள் தோனி வந்த கதை!
#Dhoni

இங்கே எப்படி சிஎஸ்கே எல்லா சீஸனிலும் ப்ளே ஆப்புக்கு தகுதி பெற்றிருக்கிறதோ அதேபோல் CPL-லின் 8 சீஸன்களிலும் கயானா அமேசான் வாரியர்ஸ் அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றுள்ளது. இதில் 5 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரன்னர் அப் ஆகவும் வந்துள்ளது. கடந்த சீஸனிலும் கயானாதான் ரன்னர் அப். ஒவ்வொரு முறையும் கடைசி வரை சென்று கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் சோகம். ராஸ் டெய்லர், கிரீன், கீமோ பால், இம்ரான் தாஹீர், ஹெட்மெயர் எனப் பலமான பெயர்களைக் கொண்டுள்ள இந்த அணி இந்த முறையும் நிச்சயம் மற்ற அணிகளுக்கு வலுவான போட்டியைக் கொடுக்கும். கோப்பையை வெல்வதில் எங்கேயோ மிஸ் ஆகும் அந்தச் சின்ன விஷயத்தைக் கண்டறிந்து சரி செய்துவிட்டால் இந்த முறை கயானா கோப்பையுடன் போஸ் கொடுக்கலாம். அணியில் பலமிக்க ஸ்பின் அட்டாக் அதற்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

கடந்த சீஸனில் சாம்பியனான பர்படாஸ் ட்ரைடென்ட்ஸ் இந்த முறையும் கோப்பையை வெல்ல மல்லுக்கட்டும். ஹோப், சார்லஸ், ஹோல்டர், ரஷித்கான், கோரி ஆண்டர்சன், கார்டர், சான்ட்னர் என அணி முழுவதும் மேட்ச் வின்னர்கள். சார்லஸ் கடந்த முறை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 3-ல் இருந்தார். இந்த முறையும் அவரிடமிருந்து ஒரு கன்ஸிஸ்டன்ட்டான பர்ஃபார்மென்ஸ் வெளிப்படுவது அணிக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். மேலும் ஹோப், ஆண்டர்சன், ஹோல்டர், ரஷித் கான் என எல்லா டைப் வீரர்களும் சரியாக ஆடும்பட்சத்தில் இந்த முறையும் பர்படாஸ் சாம்பியனாகலாம்.

ரஷித் கான்
ரஷித் கான்

முதல் சீஸனின் சாம்பியனான ஜமைக்கா தலவாஸும் நல்ல பேட்டிங் பௌலிங் காம்பினேஷன் கொண்ட அணியாகவே திகழ்கிறது. கடந்த முறை 10 போட்டிகளில் வெறும் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது. கிறிஸ்கெயில் இந்த முறை தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகியிருப்பது இவர்களுக்கு கொஞ்சம் பின்னடைவாக இருக்கலாம். கெயிலின் அதிரடியை ரஸல் நிரப்பிவிடுவார். பிளாக்வுட்டிடமிருந்து கன்ஸிஸ்டன்ட்டான நல்ல ஆங்கர் இன்னிங்ஸ்கள் அதிகம் வெளிப்பட வேண்டும். கடந்த முறை டாப் 5-லிருந்த ஃபிலிப்பும் பேட்டிங்கில் ஒத்துழைப்பார். பௌலிங்குக்கு ஒஷேன் தாமஸ், முஜிபூர் ரஹ்மான் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த முறை எதிரணியினர்க்கு கொஞ்சம் சவால் விடலாம்.

ஈவின் லூவிஸ், கிறிஸ் லின் என வெறித்தன ஓப்பனிங்கை கொண்டிருக்கிறது நேவிஸ் பேட்ரியாட்ஸ். இவர்கள் இருவரும் ஃபார்மில் இருந்தாலே பாதி ஆட்டம் நேவிஸின் கையில்தான். ஆனால், அப்படியிருக்க வேண்டும், அதுதான் பிரச்னை. இவர்களைத்தாண்டி பேட்டிங்கில் பெரிய டெப்த் இல்லாததும் இளம் வீரர்கள் சோபிக்க தவறுவதும் பெரும் பின்னடைவாக இருக்கும். காட்ரெல், அல்சாரி ஜோசப், சோஹைல் தன்வீர் எனப் பயங்கரமான வேகங்கள் அணியில் இருப்பது இவர்களின் ப்ளஸ் பாய்ன்ட். விண்டீஸின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷும் இந்த அணிக்கு கோச் ஆகியிருப்பது இவர்கள் பௌலிங்கில் ஒரு மிரட்டலான அணியாக மாற உதவும்.

CheerLeaders
CheerLeaders
CPL

டேரன் சமி தலைமையிலான லூசியா ஸோக்ஸ் பெரிய பலமிக்க அணி என்று சொல்லிவிட முடியாது. சமி, நபி, ஃப்ளெட்சர், சேஸ் ஆகியோரைத்தாண்டி பெரும்பாலும் புதுமுகங்களைக் கொண்டுள்ள அணி. "நான் ஓய்வுபெற்றேனென்று யார் சொன்னார்?" என விண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கேட்டிருப்பதன் மூலம் அவர் விண்டீஸ் அணிக்கு கம்பேக் கொடுக்கத் தயாராக இருப்பதையே காட்டுகிறது. வெறித்தன கம்பேக்குக்காக சமி வெளுத்து வாங்குவாரெனில் அது அணிக்கு பலமாகவே அமையும்.

வெஸ்ட் இண்டீஸில் போட்டிகள் நடந்தாலும், கரீபிய வீரர்கள் அதிகளவில் விளையாடினாலும் அந்த அணிகளின் பெரும்பான்மையான உரிமையாளர்கள் இந்தியர்கள்தான். டைட்டில் ஸ்பான்சரும் இந்திய நிறுவனம்தான். அதனால் மக்களே, ஐபிஎல்-க்கு முன்னோட்டமாக CPL பார்த்து கொண்டாடுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு