Published:Updated:

50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெறவேண்டுமானால் ரன்கள் மட்டும் போதாது. 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பெளலர்கள் வேண்டும் என்பதை உணர்ந்ததால் நிகழ்ந்த மாற்றம் இது.

Kohli
Kohli

தோனி கேப்டன்ஸியில் நம்பர் 1 அணியாக இருந்ததுதான் இந்திய அணி. ஆனால், ஆஸ்திரேலியாவில் பாதி சீரிஸில் தோனி ஓய்வை அறிவிக்க, கோலி கேப்டன் ஆனபோது இந்தியாவின் ரேங்க் 7. பேட்டிங்கிலும் ஸ்ட்ராங், ஸ்பின்னிலும் ஸ்ட்ராங்... ஆனால் அந்த ஒரு இடம் மட்டும்... ஆமாம், அந்த இடத்தைத்தான் சரி செய்தார் கோலி.

Shami
Shami

இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்... இந்தியாவின் ஒரே பலவீனமான வேகப்பந்து டிபார்ட்மென்ட்டை சரிசெய்ததுதான் கோலியை நம்பர் 1 கேப்டனாக உயர்த்தியிருக்கிறது.

70-80களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 90-2000-களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் எப்படித் திறமையான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்ததோ, அப்படி ஒரு அணியை இப்போது உருவாக்கிவைத்திருக்கிறார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெறவேண்டுமானால் ரன்கள் மட்டும் போதாது. 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பெளலர்கள் வேண்டும் என்பதை உணர்ந்ததால் நிகழ்ந்த மாற்றம் இது.

உள்ளூர்களில் ஸ்பின்னர்கள் கைக்கொடுப்பார்கள், ஆனால் வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பேட்ஸ்மேன்களை வீழ்த்துவார்கள் என்பதை சரியாகப் புரிந்து அதற்கு ஏற்றபடி டீமின் காம்போவை அமைத்திருக்கிறார் கோலி. இந்த ஒரு மாற்றத்துக்காகவே கோலியைக் கொண்டாடலாம்.

Kohli
Kohli

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பும்ரா, இஷாந்த், ஷமி என இந்த மூன்று பெளலர்கள் எடுத்த விக்கெட்டுகள் மட்டும் 178. எந்த அணியும் செய்யாத சாதனை இது. பெளலர்களின் பொற்காலம் என இந்த கோலியின் காலத்தை சொல்லலாம். இன்று 50-வது டெஸ்ட்டில் கேப்டனாகக் களத்தில் நிற்கும் கோலி, தன்னுடைய பலமாக நினைப்பது வேகப்பந்து வீச்சாளர்களைத்தான்.

50-வது டெஸ்ட்டில் கேப்டன் கோலியின் வெற்றி சதவிகிதம் 59.18. சீக்கிரமே ஸ்டீவ் வாக் வைத்திருக்கும் வெற்றி சதவிதமான 71.93 என்கிற எண்களைக் கடந்து உலக சாதனைப் படைப்பார். அதை சாத்தியமாக்கத்தான் இந்த பெளலர்கள் இருக்கிறார்கள்.

இஷாந்த் ஷர்மா!

இஷாந்த் ஷர்மாவுக்கு இது கிட்டத்தட்ட செகண்ட் இன்னிங்ஸ். இஷாந்த் பவுலிங் வேரியஷனை நிறையவே மாற்ற மெனக்கெட்டது இந்த கோலி கேப்டன்ஸியில்தான். கடந்த 2 வருடத்தில் மட்டும் 53 விக்கெட்கள் எடுத்திருக்கிறார் இஷாந்த். இதில் 3 முறை `5 விக்கெட் ஹால்’ எடுத்திருக்கிறார்.

Ishant Sharma
Ishant Sharma
AP

`இஷாந்த் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். இதில் கோலிக்கு என்ன கிரெடிட்?' எனக்கேட்பவர்கள் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டைப் பார்க்கலாம். பவுமாவின் விக்கெட்டை வீழ்த்த இஷாந்துக்குப் பல ஐடியாக்கள் கொடுத்துக்கொண்டேயிருந்தார் கோலி. இறுதியில் இஷாந்த் பந்தில்தான் எல்பிடபிள்யூ ஆனார் பவுமா.

முகமது ஷமி!

சாதா சாமியாக இருந்தவரை ஆறுச்சாமியாக மாற்றியிருக்கிறார் கோலி. இன்ஸ்விங் அவுட் ஸ்விங் கூடவே ரிவர்ஸ் ஸ்விங் என வேறுமாதிரி மாறி வந்து நிற்கிறார் ஷமி. முதல் டெஸ்ட்டில் இவரது பந்துகளால் ஸ்டம்ப்புகள் உடைந்து விழுந்தன. 2018-ல் இருந்து இப்போது வரை ஷமி எடுத்திருக்கும் விக்கெட்டுகள் 63. அதில் முதல் இன்னிங்ஸில் 23 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 40 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் இந்த செகண்ட் இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட். ஆமாம், செகண்ட் இன்னிங்ஸ்களில் கோலி பந்தை நம்பிக்கொடுப்பது ஷமி கையில்தான்.

Kohli
Kohli

உமேஷ் யாதவ் - ஹர்திக் பாண்டியா!

ஆஸ்திரேலியா, இந்தியா வந்தபோது சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசி ஸ்மித்தையே மிரட்டியவர் உமேஷ் யாதவ். புவி, பும்ரா, ஷமி என மற்ற பெளலர்களின் எழுச்சியால் உமேஷ் யாதவுக்கான வாய்ப்புகள் குறைந்தது. ஆனால், தரமான டெஸ்ட் பெளலர் உமேஷ் என்பது கோலிக்குத் தெரியும். அதனால்தான் இரண்டாவது டெஸ்ட்டில் உமேஷ் யாதவை அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார் கோலி. வெளிநாடுகளுக்குப் போகும்போது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இடைத்தைச் சரியாக நிரப்புபவர் ஹர்திக் பாண்டியா. அவருடைய ஸ்விங்தான் கோலியின் பலமே.

ஜஸ்ப்ரித் பும்ரா!

ஒரு பெளலரிடம் இருக்கும் திறமையை அறிந்து அவரை அணிக்கு ஏற்றபடி பயன்படுத்துவதில்தான் கேப்டனின் வெற்றி இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் தடுமாறிய கோலி அதன்பிறகு உச்சம் தொட ஆரம்பித்துவிட்டார். 2018 ஜனவரியில் நடந்த தென் ஆப்ரிக்க சீரிஸில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலக, அணிக்குள் வந்தார் பும்ரா. அப்போது மைக்கேல் ஹோல்டிங், ``பும்ராவை எப்படி டெஸ்ட் மேட்சுக்கு எடுக்குறீங்க? அவர் நல்ல ஒயிட் பால் கிரிக்கெட்டர். டெஸ்டுக்கு சரிப்பட மாட்டார்'' என்றார் கமென்ட்ரி பாக்ஸில்.

Bumrah
Bumrah

`டெஸ்ட்க்கு எல்லாம் அவர் சரிபட்டு வரமாட்டார்' என்கிற அந்த ஸ்டேட்மென்ட்டே தவறு என நிரூபித்தார் பும்ரா. அன்று ஆரம்பித்த பும்ராவின் எழுச்சி இப்போது வேறு லெவலில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த 2 ஆண்டுகளில் பும்ரா செய்யாத சாதனைகளே இல்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் பும்ரா எடுத்த விக்கெட்கள் மட்டும் 62. ஆவரேஜ் 19.24. 1 ஹாட்ரிக், 5 முறை `5 விக்கெட் ஹால்’ டெஸ்ட்டில்... ஆமாம், டெஸ்ட்டில் பேட்ஸ்மேன்களை மிரளவைத்திருக்கிறார் பும்ரா!

பூம்... பூம்... பும்ரா!