Published:Updated:

சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்... டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தடையா?!

South African cricket

யாகூப் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்தபோது, பிப்ரவரி மாதத்திற்குள் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் நிர்வாக அமைப்பு முறையை புதுப்பிக்கவேண்டும் என்று அவர்களிடம் தீர்க்கமாக தெரிவித்திருந்தார் தேத்வா. இந்த நிர்வாகம் அதைச் செய்யத் தவறியிருக்கிறது.

சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்... டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தடையா?!

யாகூப் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்தபோது, பிப்ரவரி மாதத்திற்குள் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் நிர்வாக அமைப்பு முறையை புதுப்பிக்கவேண்டும் என்று அவர்களிடம் தீர்க்கமாக தெரிவித்திருந்தார் தேத்வா. இந்த நிர்வாகம் அதைச் செய்யத் தவறியிருக்கிறது.

Published:Updated:
South African cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் அவல நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறது தென் ஆப்பிரிக்கா. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணியை ஐசிசி ஒதுக்கி வைத்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 20-ம் நூற்றாண்டில் 20 வருடம் தடை பெற்ற அந்த அணி, இந்தியாவில் வரும் செப்டம்பரில் நடக்கயிருக்கும் டி20 உலகக் கோப்பையை விளையாட முடியாமல் போகலாம். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது?!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னைகள் நீடித்து வருகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கமான ‘கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா’ மீது தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்ந்து அடுக்கப்பட்டன. இதன் காரணமாக, தலைமை செயல் அதிகாரியாக இருந்த தபாங் மோரோவை, அந்த அமைப்பே பொறுப்பை விட்டு நீக்கியது. அதன்பிறகு அந்தப் பொறுப்பில் தற்காலிகமாக அமர்ந்த குகாண்ட்ரி கவெண்டர், மோரோவின் பாதையிலேயே தன் பயணத்தைத் தொடர்ந்தார். வெகுண்டெழுந்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் சங்கம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டை சஸ்பெண்ட் செய்து, பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டது.

பிரச்னை எல்லை மீறிப்போனதால், விளையாட்டுத் துறை அமைச்சர் நதி தேத்வா (Nathi Mthethwa), ஒரு தற்காலிக நிர்வாகத்தை கடந்த செப்டம்பர் மாதம் அமைத்தார். அதற்கு ஜாக் யாகூப் தலைமை தாங்கினார். தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்ததால் கவெண்டரும் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி நிர்வாகிகள் வருவதும் போவதும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாகூப் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்தபோது, பிப்ரவரி மாதத்திற்குள் கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்காவின் நிர்வாக அமைப்பு முறையை புதுப்பிக்கவேண்டும் என்று அவர்களிடம் தீர்க்கமாக தெரிவித்திருந்தார் தேத்வா. இந்த நிர்வாகம் அதைச் செய்யத் தவறியிருக்கிறது.

Nathi Mthethwa
Nathi Mthethwa

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ஒரு விசித்திரமான நிர்வாக அமைப்பைக் கொண்டது. அதில் இரண்டு உள் அமைப்புகள் இருக்கும். ஒன்றில், சுமார் 17 போர்ட் ஆஃப் டைரக்டர்கள் இருப்பார்கள். மெம்பர் கவுன்சில் எனப்படும் இன்னொரு அமைப்பில், ஒவ்வொரு கிரிக்கெட் யூனியனின் தலைவர்களும் அங்கம் வகிப்பார்கள். இந்த முறையை மாற்றி, ஒருவர் தலைமை தாங்கும், தனிச்சையாக செயல்படும் ஒரு போர்டை உருவாக்கவேண்டும் என்பதுதான் அமைச்சகம் கொடுத்து அசைன்மென்ட். மெம்பர் கவுன்சில் அதற்கு ஒத்துழைக்காமல் போக, புதிய நிர்வாக அமைப்பை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

அந்த அமைப்பை உருவாக்கத் தவறியதால், இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தையே சஸ்பெண்ட் செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார் தேத்வா. தென்னாப்பிரிக்க விளையாட்டு விதியின் section 13(5) படி தேத்வா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அந்நாட்டின் பெயரை கிரிக்கெட் அணி பயன்படுத்த முடியாது. அரசும் கிரிக்கெட்டுக்கு எந்தவித பொருளாதார உதவியும் அளிக்கத்தேவையில்லை.

தென்னாப்பிரிக்க அரசு இப்படியொரு அறிக்கை வெளியிட்டதால், ஐசிசி நடவடிக்கை ஆளாவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எப்போது தேசிய கிரிக்கெட் சங்கங்களில் நேரடி அரசியல் தலையீடு வருகிறதோ அப்போது ஐசிசி அந்த போர்டையே தடை செய்துவிடும். 2019-ல் இப்படித்தான் ஜிம்பாப்வே அணியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்திருந்தது ஐசிசி. ஒருவேளை ஐசிசி இப்படியொரு முடிவை எடுத்தால், இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க பங்கேற்க முடியாது.

ஐசிசி-யைப் பொறுத்தவரை மிகச் சிறந்த சில கொள்கைகளை வைத்திருக்கிறது. ஒரு கிரிக்கெட் போர்டை அரசியல்வாதிகளே தலைமை தாங்கலாம். அரசியல் ஆயாதங்களுக்காக கிரிக்கெட்டை எந்த வகையிலும் பயன்படுத்தலாம். ஒரு மைதானத்தைப் புதிதாகக் கட்டி, அதன் இருக்கைகளில் தங்கள் கட்சிக் கொடியின் நிறத்தைப் பூசலாம். இருக்கும் மைதானங்களுக்கெல்லாம் அரசியல்வாதிகள் பெயரை மாற்றலாம். தேசிய அணியின் ஜெர்ஸியில் தங்கள் கட்சியின் நிறத்தை உலகக் கோப்பை அரங்கில் புகுத்தலாம். ஆனால், நேரடியாக அரசியல் செய்யக்கூடாது. நடக்கும் பிரச்னைகளை சரிசெய்கிறோம் என்று எந்த அரசியல்வாதியும் கிரிக்கெட் போர்டு பக்கம் வந்துவிடக்கூடாது. அப்படி நடந்தால் ஐசிசி பொறுக்காது. இந்த அற்புத அமைப்பின் கோபத்தை சம்பாதிக்காமல் இருக்கவாவது கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா மாற்றம் நோக்கி நகரவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism