Published:Updated:

ஐபிஎல் லெவன், பிக் பேஷ் லெவன், சிபிஎல் லெவன்... இந்த அணிகள் மோதினால் எப்படி இருக்கும்?!

Representational Image
Representational Image

ஐபிஎல் ஆடும் அணிகளை இரண்டாக நார்த் இந்தியன் லெவன், சௌத் இந்தியன் லெவன் என்று பிரித்து போட்டி நடத்தினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தோம். இந்த முறை ஒவ்வொரு டி-20 லீகுக்கும் ஓர் அணி எடுத்து, அந்த அணிகள் மோதினால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்!

ஐபிஎல், பிக்பேஷ் என எக்கச்சக்க டி-20 தொடர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மோதும் அணிகளெல்லாம் சந்தித்துக்கொண்டிருந்த சாம்பியன்ஸ் லீக் தொடர் இப்போது நடப்பதில்லை. அதனால் அப்படியொரு தொடர் நடந்தால் என்ன என்று யோசித்தோம். ஆனால், அதில் ஒரு புதுமையாக, ஒவ்வொரு லீகிற்கும் ஒரே அணி. அந்த லீகின் சிறந்த அணி..! ஐபிஎல், பிக்பேஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வைடாலிடி பிளாஸ்ட் (இங்கிலாந்து), மான்சி சூப்பர் லீக் (தென்னாப்பிரிக்கா) என 6 முக்கிய டி-20 லீக் சிறந்த லெவன்களும் மோதினால் எப்படியிருக்கும்!

இந்த அணிகளைத் தேர்வு செய்ய சில கட்டுப்பாடுகள் மட்டும் வைத்துக்கொண்டோம். ஒரு வீரர் ஓர் அணியில் மட்டும்தான் இடம்பெற முடியும். அதேபோல், ஒவ்வொரு லீகிலும் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை வேறுபடும். பிக்பேஷில் இரண்டு வீரர்கள்தான் இடம்பெற முடியும். இந்தியாவில் நான்கு. அனைத்து அணிகளிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமல்லவா. இதுபோன்ற இடங்களில் பி.சி.சி.ஐ சொல்வதுதான் சட்டமாக இருக்குமென்பதால், ஒவ்வோர் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் வரை அனுமதிப்போம். அதுமட்டுமல்லாமல் வீரர்கள் அந்தத் தொடரின் கடைசி சீசன் செயல்பாட்டையும் நட்சத்திர அந்தஸ்தையும் கருத்தில் கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர் வீரர்கள் அதிகம் இருந்தால் தேசிய அணியின் ஃபீல் வந்துவிடும் என்பதால் அதிகபட்சம், குறைந்தபட்சம் எல்லாமே 4 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒவ்வோர் அணியின் உள்நாட்டு வீரர்களையும் முடிவு செய்துவிட்டு அதன்பிறகுதான் வெளிநாட்டு வீரர்கள் முடிவு செய்யப்பட்டார்கள். ஒரு வீரருக்கு முதலில் அவரது நாட்டு லீகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அணியில் அவர் இடம்பிடிக்கவில்லையென்றால்தான் மற்ற அணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார். உதாரணமாக தாஹிர் ஐபிஎல் தொடரின் பர்ப்பிள் கேப் வின்னர். அதேசமயம், மான்சி சூப்பர் லீகில் டாப் விக்கெட் டேக்கர் அவர்தான். வைடாலிடி பிளாஸ்ட் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் (13 போட்டிகளில் 19 விக்கெட்டுகள்). அவர் தென்னாப்பிரிக்கர் என்ற அடிப்படையில் மான்சி சூப்பர் லீகுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த அணியில் தேர்வு செய்யப்படுகிறார். இன்னொருபுறம், ஜேம்ஸ் வின்ஸ். வைடாலிடி பிளாஸ்ட் தொடரிலும் மான்சி சூப்பர் லீகிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால், வைடாலிடி பிளாஸ்ட் அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவரை விட நன்றாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அதனால், அவர் மான்சி சூப்பர் லீகில் இடம்பெறுகிறார். இந்த அடிப்படையில்தான் ஒவ்வோர் அணியும் தேர்வு செய்யப்பட்டது.

பிக் பேஷ் லீக்

Big Bash XI
Big Bash XI

ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினாலும் பந்துவீச்சில் அசத்தியது என்னவோ வெளிநாட்டு வீரர்கள்தான். புதிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் வெறித்தனமாக விக்கெட் வேட்டை நடத்த, தன் அசத்தல் ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்தார் ரஷீத் கான். கிறிஸ் மோரிஸின் அசத்தல் செயல்பாடு அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் கோடிகளைப் பெற்றுக்கொடுத்தது. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஆடம் ஜம்பா, ரௌஃப் என மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர்கள் இந்த அணியில் அணிவகுக்கிறார்கள். ஜோனதன் வெல்ஸ், போ வெப்ஸ்டர், ஜோஷ் ஃபில்ப் என மூன்று uncapped வீரர்கள் இந்த அணியில் இடம்பெறுகிறார்கள். இந்த சீசனின் ரன்னரான ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்தான் பிக்பேஷ் லெவனின் கேப்டன். ஜம்பா, ரஷீத் என இருவரும் லெக் ஸ்பின்னர்களாக இருந்தாலும் இருவருமே டாப் விக்கெட் டேக்கர்கள் என்பதால் மாற்றுக்கருத்து இல்லாமல் இருவரையுமே தேர்வு செய்வோம்.

அணி : மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), போ வெப்ஸ்டர், ஜோனதன் வெல்ஸ், கிறிஸ் மோரிஸ், டாம் கரண், ரஷீத் கான், ஆடம் ஜம்பா, ஹாரிஸ் ரௌஃப்

வைடாலிடி பிளாஸ்ட்

Vitality Blast XI
Vitality Blast XI

பல டொமஸ்டிக் வீரர்கள் இங்கிலாந்தின் இந்த டி-20 சீசனில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். வெய்ன் மேட்சன், ரிக்கி வெசல்ஸ் போன்ற சீனியர்கள், சாம் ஹெய்ன், கோலர் கேட்மோர் போன்ற இளம் வீரர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் பல நல்ல பெர்ஃபாமன்ஸ்கள் வந்திருக்கின்றன. ஆனால், நட்சத்திரங்கள் நிறைந்த இந்தத் தொடரில் விளையாட அவர்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். பாபர் ஆசம், டார்சி ஷார்ட், ரவி ராம்பால், தாஹிர் என வெளிநாட்டு நட்சத்திரங்கள் பலரும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். கடந்த சீசனின் டாப் ஸ்கோரர் பாபர் ஆசம், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியில் இடம்பிடித்திருப்பதால் இந்த அணியில் அவருக்கு இடமில்லை. பிக்பேஷ் அணியைப்போல் இந்த அணியிலும் பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களும் பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களும் ஆக்கிரமிக்கிறார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாக இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வப்போது ஆடுவதைப்போல் டார்சி ஷார்ட் இந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஆடுவார். ஏழே போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் என 365 ரன்கள் அடித்து நொறுக்கிய மொயீன் அலி இந்த அணியின் கேப்டன்.

அணி : டாம் கோலர் - கேட்மோர், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் பேன்டன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், மொயீன் அலி (கேப்டன்), டார்சி ஷார்ட், ரெலோஃப் வேன் டெர் மெர்வ், ஹாரி கர்னி, கைல் அபாட், ரவி ராம்பால், மேட் பார்கின்சன்

மான்சி சூப்பர் லீக்

Mzansi League XI
Mzansi League XI

மற்ற டி-20 தொடர்களிலெல்லாம் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், மான்சி சூப்பர் லீகின் இந்த சீசனில் வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலானவர்கள் சொதப்பவே செய்தார்கள். கெய்ல், ஜேசன் ராய் எல்லோருமே சுமாராகத்தான் விளையாடினார்கள். அதனால், இந்த அணிக்கான ஓவர்சீஸ் கோட்டாவை நிரப்புவது மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது. வெளிநாட்டு வீரர்களில் பென் டன்க் ஒருவர்தான் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். 37.66 என்ற சராசரியில் வின்ஸ் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார். 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உடானா பேட்டிங்கிலும் ஓரளவு பங்களித்திருப்பதால் ஆல்ரவுண்டர் இடம் அவருக்கு. நான்காவது வெளிநாட்டு வீரரை சல்லடை போட்டுத் தேடியதில் வஹாப் ரியாஸ்தான் ஓரளவு நம்பிக்கை தருகிறார். அவருக்கு இடம் தருவதற்கு மோர்னே மோர்கலை வெளியேற்றவேண்டியிருந்தது. டுப்ளெஸி, டி காக் போன்ற முன்னணி வீரர்கள் இந்த சீசனில் மிகவும் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இந்த அணியில் இடமில்லை. நெல்சன் மண்டேலா பே ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் ஜான் ஸ்மட்ஸ் இந்த அணிக்கு தலைமை தாங்குவார்.

அணி : ஜேம்ஸ் வின்ஸ், ஜானமான் மாலன், பென் டன்க் (விக்கெட் கீப்பர்), ஏ.பி.டி வில்லியர்ஸ், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ஜான் ஸ்மட்ஸ் (கேப்டன்), இசுரு உடானா, வஹாப் ரியாஸ், டேல் ஸ்டெய்ன், தப்ராய்ஸ் ஷம்ஸி, இம்ரான் தாஹிர்.

கரீபியன் பிரீமியர் லீக்

Caribbean Premier League
Caribbean Premier League

டி-20 என்றாலே வெஸ்ட் இண்டீஸ்தானே! வெஸ்ட் இண்டீஸ் டி-20 தொடர் இந்த ஆண்டு உள்ளூர் வீரர்களின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்கள் பல கண்டது. சிம்மன்ஸ், பொல்லார்ட் போன்ற சீனியர் வீரர்கள் நன்றாக ஆடியிருந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிட்மேயர், பூரண் போன்ற இளம் ஸ்டார்கள் பெரிய ஸ்கோர்கள் எடுக்கத் தவறினார்கள். ஆனால், பிராண்டன் கிங் போன்ற ஒரு நம்பிக்கையை இந்த சீசன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு வழங்கியிருக்கிறது. வழக்கமான வெஸ்ட் இண்டீஸ் அணியைப்போல் இந்த அணியும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணியாகவே இருக்கிறது. பொல்லார்ட், டுமினி, ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் கிரீன், ஜேசன் ஹோல்டர் என ஒன்பதாவது வீரர் வரை பேட்டிங் செய்வார்கள். 60+ சராசரி வைத்திருக்கும் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஆடுவதால், இந்த அணியில் அவருக்கு இடமில்லை. நடப்பு சாம்பியன் பார்படாஸ் அணியை வழிநடத்திய ஹோல்டர்தான் சிபிஎல் அணிக்குக் கேப்டன்.

அணி : பிராண்டன் கிங், லெண்டில் சிம்மன்ஸ், ஜான்சன் சார்லஸ், கிளென் ஃபிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), கரண் பொல்லார்ட், ஜீன் பால் டுமினி, ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் கிரீன், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் காட்ரல்

பாகிஸ்தான் சூப்பர் லீக்

Pakistan Super League XI
Pakistan Super League XI

இன்னும் சீசன் முடியவில்லைதான். இருந்தாலும் இதுவரை நடந்த போட்டிகளை வைத்து இந்த அணியைத் தேர்வு செய்வோம். பிக்பேஷில் பௌலிங் யூனிட் முழுக்க ஓவர்சீஸ் வீரர்கள் என்றால், இங்கு முழுதும் பாகிஸ்தான் பௌலர்கள்தான். பாகிஸ்தானில் பௌலர்களுக்கா பஞ்சம்! வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை கிறிஸ் லின், காலின் முன்றோ, பென் டன்க், லூக் ராஞ்சி போன்றவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். டன்க் மான்சி சூப்பர் லீக் அணியில் இருப்பதால், இங்கு அவருக்கு வாய்ப்பில்லை. நான்காவது வெளிநாட்டு வீரராக சமித் படேல். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமிருக்கும் அணிக்கு கூடுதல் ஸ்பின்னர் வேண்டுமல்லவா! இந்த அணியில் இடம்பிடித்திருப்பவர்களில் ஷதாப் கான் மட்டுமே ரெகுலராக பி.எஸ்.எல் அணியை வழிநடத்தியிருக்கிறார் என்பதால், அவரே இந்த அணிக்குக் கேப்டன். வழக்கமான பாகிஸ்தான் அணிகளைப்போல் இதிலும் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம்தான்!

அணி : கிறிஸ் லின், காலின் முன்றோ, பாபர் ஆசம், ஷோயப் மாலிக், சமித் படேல், லூக் ராஞ்சி (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான் (கேப்டன்), முகமது ஆமிர், ஷஹீன் ஷா அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், சோஹைல் தன்வீர்.

இந்தியன் பிரீமியர் லீக்

Indian Premier League XI
Indian Premier League XI

கடைசியாக நம் ஏரியா. நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களுக்கு மத்தியில் 11 வீரர்களை மட்டும் தேர்வு செய்வது எளிதில்லையே! தாஹிர், ரஷீத் கான் என இரண்டு ஸ்பின்னர்களையும் மற்ற லீகுகளுக்கு இழந்துவிட்டதால் இங்கு இரண்டு இந்திய ஸ்பின்னர்களைத் தேர்வு செய்யவேண்டியிருக்கிறது. அந்த இரண்டு இடங்களுக்கு சஹால், ஷ்ரேயாஸ் கோபால் இருவரையும் எடுத்துவிடுவோம். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி அசத்திய பும்ரா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மூவரையும் தவிர்க்க முடியாது. கடைசி 2 இடங்கள்… தோனி & கோலி இருவருக்கும். மிடில் ஆர்டரில் ஆடும் ஓவர்சீஸ் வீரர்களைவிட டாப் ஆர்டரில் ஆடுபவர்களே கடந்த சீசனில் சிறப்பாக ஆடினார்கள். அதனால், இந்திய ஓப்பனர் தவானின் இடம் காலி. நல்லவேளை ரஸல், ரபாடா போன்றவர்கள் அவர்கள் சொந்த நாட்டு டி-20 தொடர்களில் நன்றாக ஆடவில்லை. அது ஐபிஎல் லெவனுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துவிட்டது. எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஐபிஎல் லெவனை வழிநடத்துவது எம்.எஸ்.தோனி. கடந்த சீசனில் முப்பதுக்கும் குறைவான சராசரியில் ஸ்கோர் செய்ததால் ஹிட்மேனுக்கும் அணியில் இடமில்லை.

அணி : டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ககிஸோ ரபாடா, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா
அடுத்த கட்டுரைக்கு