Published:Updated:

தலைவனின் தாக்கம் வரலாற்றையே மாற்றும்... தலைவர் கங்குலி என்ன செய்ய வேண்டும்? #Ganguly

Ganguly
Ganguly ( AP )

பாதாளம் நோக்கிப் பாயும் இந்திய கிரிக்கெட்டை இவரால் பாதுகாப்பாய் மீட்க முடியும் என்ற நம்பிக்கை, 18 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியை வழிநடத்தியபோது உருவானது. இதோ, இப்போது மீண்டும் ஒருமுறை..!

பேட்ஸ்மேன்களின் தாக்கம் அவர்களின் ஓய்வோடு முடிந்துவிடும்.

கேப்டன்களின் தாக்கம், அடுத்த தலைமுறை அணியின் செயல்பாட்டோடு ஓய்ந்துவிடும்.

ஆனால், ஒரு தலைவன் ஏற்படுத்தும் தாக்கம் எந்தவொரு காலகட்டத்திலும் முடிந்துவிடாது!

இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பி.சி.சி.ஐ தலைவர் பதவியைப் பற்றி இத்தனை பேர் பேசுவது எப்படி? இந்திய கிரிக்கெட் சங்கத்தைக் கழுவி ஊற்றியவர்கள் ஓரளவுக்கேனும் நிம்மதிப் பெருமூச்சு விடுவது எப்படி? இந்திய கிரிக்கெட்டின் நிலைகண்டு வருந்தியவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டிருப்பது எப்படி? இவையெல்லாம் கடந்த வாரமோ, கடந்த மாதமோ நடந்த சம்பவங்கள் கொடுத்த நம்பிக்கை இல்லை. பதினைந்து, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை. பாதாளம் நோக்கிப் பாயும் இந்திய கிரிக்கெட்டை இவரால் பாதுகாப்பாய் மீட்க முடியும் என்ற நம்பிக்கை, 18 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியை வழிநடத்தியபோது உருவானது. இதோ, இப்போது மீண்டும் ஒருமுறை. நீதிமன்றத்தால் நிர்வகிக்கும் நிலைக்குச் சென்று, யார்யாரோ புகார்கள் கொடுத்துக்கொண்டு, அத்தனை பேரும் கேலி பேசும் நிலையில் இந்திய கிரிக்கெட் சங்கம் தள்ளாட, மீண்டும் மீட்கக் கிளம்பிவிட்டான் அந்தத் தலைவன். செளரவ் கங்குலி - இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர்!

ஒருபக்கம் பெருமகிழ்ச்சி; இன்னொரு பக்கம், அமித்ஷா மகனும் பதவியில் இருப்பதால், கங்குலியால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி. ஊழல் அரசியலில் ஊடுருவிக்கிடக்கும் இந்தியாவில், அரசியலும் கிரிக்கெட்டும் பிணைந்துகிடக்கும் இந்தியாவில், அதைத் தூர்வாருவது என்பது எளிதல்ல. கங்குலியின் பதவிக்காலத்திலும் அது நடக்கும். அதன் பின்னும் நடக்கும். அதை மாற்ற முடியாது. பல ஆயிரம் கோடிகள் புரளும். அதில் பெரும்பாலானாவை, டெல்லியின் அசோகா ரோட்டில் இருக்கும் கட்சியின் தலைமையகத்துக்கும் போகலாம். ஆனால், மாற்றக்கூடிய, இதுவரை மாற்றப்படாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. கிரிக்கெட்டை, கிரிக்கெட் வீரர்களை, தேசமே நேசிக்கும் இந்த ஆட்டத்தின் சூழலை அவரால் மாற்ற முடியும்.

Ganguly
Ganguly
AP

நவம்பர் 16, 2017 - இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டனில் தொடங்குகிறது. ஈடன் - ஒரு காலத்தில் ஸ்பின்னர்களின் சொர்க்க பூமியாக விளங்கிய இடம். 20 ஓவர்களில், 18 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே முடிப்பார் நைட்ரைடர்ஸ் கேப்டன் கம்பீர். அப்படியான ஆடுகளத்தில் தொடங்கியது அந்தப் போட்டி. ஆட்டத்தின் முதல் பந்து… ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி அவுட் ஸ்விங்… கீப்பரிடம் கேட்சாகி வெளியேறுகிறார் கே.எல்.ராகுல். ஏழாவது ஓவரில் தவான் அவுட். 11-வது ஓவரில் கோலி டக் அவுட். 18-வது ஓவரில் துணை கேப்டன் ரஹானேவும் நடையைக் கட்டினார். அடிபட்டுக்கொண்டிருந்த இலங்கை அணியிடம் இந்தியா அப்படித் தடுமாறியது எல்லோருக்கும் அப்படியொரு ஆச்சர்யம். ஈடன் ஆடுகளம் ஸ்விங்குக்குச் சாதகமாக இருந்ததைப் பார்க்க பேரதிர்ச்சி. 20 ஓவர்களில் பதினெட்டை ஸ்பின்னர்கள் வீசிக்கொண்டிருந்த ஆடுகளத்தில், அந்தப் போட்டியில் வீசப்பட்ட 258.2 ஓவர்களில் 18 ஓவர்கள்தான் இரு அணிகளின் முன்னணி ஸ்பின்னர்களும் (ஹெராத், அஷ்வின், ஜடேஜா) வீசினார்கள். ஈடன் இப்படியொரு மாற்றத்தைக் காட்டியது பேரதிர்ச்சியாக இருந்தது. ஏன் அப்படியொரு ஆடுகளம் தயாரிக்கப்பட்டது? உலகக் கோப்பை நடக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு இந்திய வீரர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக. இதை இங்கு ஏன் சொல்ல வேண்டும்? இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றிச் சொல்ல வேண்டுமல்லவா!

பதவியேற்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு, “என்னுடைய மிக முக்கியமான கவனம், முதல் தரக் கிரிக்கெட்டர்களைப் பாதுகாப்பதுதான்” என்று சொல்லியிருக்கிறார். “கிரிக்கெட் ஆட்சிமன்றக் குழுவிடம் இதை மூன்று ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார். சில மாதங்கள் முன்பு, ‘கிரிக்கெட் நிர்வாகி கங்குலியின் முன் இருக்கும் சவால் என்ன?' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுப்பதுதான்” என்றார். வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் மிகவும் அக்கறை காட்டுகிறார். இந்தத் தெளிவான திட்டமிடலும் கண்டிப்பான அணுகுமுறையும் கங்குலியின் மிகப்பெரிய பலங்கள். அவற்றைக் கொண்டு அவர் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இந்திய கிரிக்கெட்டின் சின்னச் சின்ன சிக்கல்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. அவர் சீர்செய்ய வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றுபவை இதோ…

அவர் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தாரோ, அங்கேயே இப்போது ஒரு சிக்கல் முளைத்துள்ளது. துலீப் டிராஃபி - கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நடந்துவரும் தொடர். இந்த ஆண்டு துலீப் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டி முடிந்ததும், இந்தியா கிரீன் அணியின் கேப்டன் ஃபைஸ் ஃபாசல், “எங்கள் வீரர்கள் யாரும் டீம் ஸ்பிரிட்டோடு விளையாடவே இல்லை. கொஞ்சம்கூட வெற்றிபெற வேண்டும் என்று ஆடவில்லை. ‘சுயநலனுக்காக ஆடினால் ஜெயிக்க முடியாது’ என்று நான் சொல்லியும் அவர்கள் சரியாக ஆடவில்லை. மண்டல வாரியாகப் போட்டிகள் நடந்தபோது எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது” என்றார். எதிரணியின் (இந்தியா ரெட்) பெளர் அக்‌ஷய் வாக்கரே கூட இதையேதான் சொன்னார். “மண்டல வாரியாக ஆடும்போது, ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிந்திருப்போம். அது ஒரு நல்ல சூழலை உருவாக்கியது. ஆனால், இப்போது போட்டிக்கு ஒருநாள் முன்புதான் எல்லோரும் சந்தித்துக்கொள்கிறோம். இதில் எப்படி ஒருங்கிணைந்து ஆட முடியும்” என்றார். விமர்சகர்கள் பலரும் அந்தப் போட்டியில் வீரர்கள் ஆடிய விதத்தை விமர்சித்தார்கள். ஒரு பழமையான தொடரில் வீரர்களின் மனநிலை இப்படியா இருக்கவேண்டும்? வீரர்களின் சூழல் சற்று மாறியே இருக்கிறது!

3 ஆண்டுகளுக்கு முன்புவரை மண்டல வாரியாக ஆடப்பட்டுக்கொண்டிருந்த போட்டியின் ஃபார்மேட்டை மாற்றப்போக இப்படியொரு விளைவு. அதுவும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படவில்லை. ஓயாமல் மாற்றிக்கொண்டேதான் இருந்தார்கள். 2002 வரை ஒரு ஃபார்மேட், 2002 - 03 சீஸனில் ஒரு ஃபார்மேட், 2003 முதல் 2008 வரை ஒரு ஃபார்மேட், அடுத்த 6 ஆண்டுகளுக்கு புதிய ஃபார்மேட், 2015 - 16 தொடரே நடக்கவில்லை. அதன்பிறகுதான் இந்த இன்னும் புதிய ஃபார்மேட். அதேபோல், துலீப் டிராஃபியின் ஒருநாள் ஃபார்மேட்டான தியோதர் டிராபியிலும். 2015-ல் ஒருமுறை, 2018-ல் ஒருமுறை எனத் தொடர்ந்து மாற்றங்கள். எதற்காக இத்தனை மாற்றங்கள்? இதனால் எதை மாற்றினார்கள். எதுவும் தெரியவில்லை. இப்போது ரஞ்சி விளையாட புதிய அணிகளை அனுமதித்ததுபோல் ஆக்கபூர்வமான மாற்றங்களாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த மாற்றங்கள் இப்போது வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி உள்ளூர் தொடர்கள் விமர்சனப்படும் அளவுக்கு வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் கேடு. தற்போது நடைமுறையில் இருக்கும் 6 உள்ளூர் தொடர்களுக்கும் (ஐ.பி.எல் தவிர்த்து) சரியான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளெல்லாம் இந்தியாவின் டொமஸ்டிக் கிரிக்கெட் கட்டமைப்பை மெச்சிக்கொண்டிருக்கும் வேளையில், அதில் சிறு சிக்கல் ஏற்படவும் விட்டுவிடக்கூடாது.

ரஞ்சிக் கோப்பைத் தொடர் 40 அணிகளாக கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டபோது, நடுவர் பற்றாக்குறை ஆகும் நிலை ஏற்பட்டது. அதேபோல், அட்டவணை தயாரிப்பிலும் சிக்கல்கள் எழுந்தன. அப்போதே, உள்ளூர் கிரிக்கெட்டில் இப்படி மாற்றங்கள் ஏற்படுத்திக்கொண்டே இருப்பது பற்றி விமர்சித்தார் கங்குலி. அதே விஷயம், இப்போது வீரர்கள் வரை பாதித்திருக்கும் நிலையில், அவர் இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

அதேபோல், இந்த நடுவர்கள் விஷயத்திலும் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமீபகாலமாக சர்வதேச அளவிலேயே நடுவர்களின் செயல்பாடுகள் மோசமாகத்தான் இருக்கிறது. இதில் குறிப்பாக, இந்திய நடுவர்களின் செயல்பாடு படுமோசமாக இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டபோது, அதன் ‘எலைட் பேனலில்’ ஒரு இந்திய நடுவர்கூட இல்லை. அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை அல்லவா! கடந்த ஐ.பி.எல் தொடர் ஒன்று போதாதா சுந்தரம் ரவி போன்றவர்களின் செயல்பாடுகளைப் பறைசாற்ற. பெரும்பாலான இந்திய நடுவர்கள் பெரிய அனுபவம் பெறாததால், தவறு செய்தாலும் ரவி போன்றவர்களையே பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

நேற்று இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. சையது கலீத், சதாஷிவ் ஐயர் இருவரும் நடுவர்களாகச் செயல்பட்டார்கள். வோல்வார்ட், மரிசான் காப் என இரண்டு தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளுக்கு LBW கொடுக்கப்பட்டது. அந்த இருவருமே கடும் கோபத்தோடு நடுவர்களைத் திட்டிக்கொண்டேதான் சென்றார்கள். முதல் விக்கெட் தெளிவாக Bat-ல் பட்டு pad-ல் பட்டது. பந்துவீசிய ராஜேஷ்வரி கேயக்வாட்கூட ஒழுங்காக அப்பீல் செய்யவில்லை. சம்பிரதாயத்துக்காக கீப்பரும், ஸ்லிப் ஃபீல்டரும் அப்பீல் செய்ய, விரலைத் தூக்கிவிட்டார் நடுவர். அடுத்ததும் பேட்டில் பட்டதுபோலத்தான் இருந்தது. அதற்கும் அவுட். மொத்த ஆட்டத்தையும் மாற்றின அந்த முடிவுகள். இதுதான் இந்திய நடுவர்களின் தரம். கால்பந்திலெல்லாம் நடுவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவே ஒரு குழு இருக்கும். கள நடுவர்களின் ஒவ்வொரு முடிவையும் அலசி ரிப்போர்ட் கொடுக்கவே ஒரு அதிகாரியை ஒவ்வொரு போட்டிக்கும் நியமித்திருப்பார்கள். அப்படி ஒரு குழுவை அமைத்தாவது இவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். இந்தப் பிரச்னை ஒருபுறமென்றால், போதாக்குறைக்கு எண்ணிக்கையிலும் பற்றாக்குறை. கடந்த ஆண்டு சிக்கல் ஏற்பட்டதைப்போல் 2011-ம் ஆண்டிலும் ஒருமுறை ஏற்பட்டு, U-16, U-19 போட்டிகளெல்லாம் தடைபட்டன. இந்த நடுவர் பற்றாக்குறை, அவர்களின் தரம் போன்றவற்றைச் சரிசெய்ய கங்குலி ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தே ஆக வேண்டும்.

2019 உலகக் கோப்பைக்கு ஏற்றவாறு தன் கட்டுப்பாட்டில் இருந்த ஈடன் ஆடுகளத்தைத் தயார் செய்ய வைத்தார் கங்குலி. ஆனால், ஓர் ஆடுகளம் மட்டும் அப்படி இருந்தால் பெரிய நன்மைகள் ஏற்பட்டுவிடாது. அதேபோல், உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு மட்டும் ஆடுகளங்களின் தன்மையை மாற்றினால் போதாது. உள்ளூர் வீரர்களைத் தயார் செய்யவும் ஆடுகளங்களின் தன்மையை மாற்றவேண்டும். கடந்த 2 ஆண்டுகளில், பும்ராவின் விஸ்வரூபத்துக்குப் பின்னால், பெரும் எழுச்சி கண்டிருக்கிறது இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட். இப்போதுதான் இந்தியச் சிறுவர்கள் பெளலர்களையும் ரோல் மாடல்களாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இப்படியான சூழ்நிலையில், இளம் வேகப்பந்துவீச்சாளர்களை வளர்ப்பது முக்கியம். சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே ஆடிக்கொண்டிருந்தால் அவர்களால் எப்படி முன்னேற்றம் காண முடியும்? அவர்களுக்கு என்ன நம்பிக்கை கிடைக்கும்? ஆஸ்திரேலியாவிலும், வெஸ்ட் இண்டீஸிலும் பட்டையைக் கிளப்பிய இஷாந்த் ஷர்மா உள்ளூரில் தடுமாறியதாகத்தானே வரலாறு சொல்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களை ஊக்குவிக்க, அதேசமயம், அதுபோன்ற ஆடுகளங்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்களையும் பழக்க (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் ஆட்டம் காணுவதுதானே நம் வரலாறு!) எல்லா வகையான ஆடுகளங்களையும் பயன்படுத்துவது அவசியம். வெறும் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் எத்தனை காலம் ஆனாலும், இங்கிலாந்து மண்ணிலெல்லாம் தொடரை வெல்லவே முடியாது.

கங்குலி சரிசெய்ய வேண்டிய இன்னும் மிகமிக முக்கியமான ஒரு விஷயம். சர்வதேச தொடர்களுக்கான மைதானத் தேர்வு. அதிக மைதானங்களைப் பயன்படுத்தி, ‘எல்லா மாநிலங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்கிறோம்’ என்பார்கள். சுழற்சி முறையில்தான் மைதானம் தேர்வு செய்யப்படுவதாய்ச் சொல்வார்கள். ஆனால், அதில் நடக்கும் உள்குத்துகள் ஏராளம். ஒவ்வொரு சுற்றுப்பயணித்திலும், குறைந்தபட்சம், ஒரு போட்டியாவது மகாராஷ்ட்ராவில் நடந்துவிடும். ஒன்று மும்பை, இல்லையெனில் புனே, அதுவும் இல்லையா நாக்பூர். அந்த மாநிலத்தில் மட்டும் போட்டி நடக்காமல் இருக்காது. 2017-ம் ஆண்டிலிருந்து பார்த்தால், மஹாராஷ்ட்ராவில் மொத்தம் 9 போட்டிகள் (நாக்பூர் - 4, புனே - 3, மும்பை - 2) நடந்துள்ளன. தமிழகத்தில் 2!

2017 ஜனவரிக்குப் பிறகு சுற்றுப்பயணம் மெற்கொண்ட எந்த அணியுமே மகாராஷ்ட்ராவில் விளையாடாமல் இருந்ததில்லை. 2017 ஜனவரியில், நாக்பூரில் ஒருநாள் போட்டியில் மோதியது இங்கிலாந்து. அடுத்து வந்த ஆஸ்திரேலியா, புனேவில் டெஸ்ட்டும் நாக்பூரில் ஒருநாள் போட்டியும ஆடியது. இலங்கை நாக்பூர் (டெஸ்ட்), மும்பை (டி-20) ஆடுகளங்களில் ஆடிச்செல்ல, அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் புனேவிலும் மும்பையிலும் ஒருநாள் போட்டிகளில் ஆடியது. உலகக் கோப்பைக்கு முன்பு வந்த ஆஸ்திரேலியாவும் நாக்பூரில் ஆடிச்சென்றது. இவை போக, அடுத்து வரும் தொடர்களும் இப்படித்தான் இருக்கின்றன. 5 ஒருநாள் போட்டிகளில் ஆடவரும் வங்கதேசம் நாக்பூரில் ஆடவிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸும் ஆஸ்திரேலியாவும் மும்பையில் ஆடப்போகின்றன. அந்தத் தொடர்களுக்கு நடுவே சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை புனேவில் டி-20 போட்டியில் ஆடுகிறது. 2020 மார்ச்சில், 3 டி-20 போட்டிகளில் ஆட வரும் தென்னாப்பிரிக்க அணிதான், கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்ட்ரா மண்ணை மிதிக்காமல் செல்லும் அணியாக இருக்கும்! ஒருவேளை, புனேவில் டெஸ்ட் ஆடிவிட்டதால், அதை டீலில் விட்டுவிட்டார்களபோல! இது என்ன மாதிரியான சுழற்சி முறை என்பதை ஆராய்ந்து கண்டறிந்து சரிசெய்வதில் கங்குலி ஆர்வம் காட்டினால் நல்லது. நாமும் எப்போதுதான் நம் ஊரில் நல்ல மேட்ச் பார்ப்பது? எப்போது பார்த்தாலும் சென்னைககு வெஸ்ட் இண்டீஸ்தானா?!

‘டால்மியாவின் வழியே கங்குலி’ எனப் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். டால்மியா, இந்திய கிரிக்கெட்டின் ஒளிபரப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கங்குலியும் அந்த ஏரியாவில் சில புரட்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது எல்லாமே ஒளிபரப்பாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. போட்டியின் நேரத்தை மாற்றுவது வரை தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். 2017-ம் ஆண்டு இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்தபோது, அதை ஒளிபரப்பவே ஆள் இல்லை. இப்படியான சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். உலகக் கோப்பை போன்ற சமயங்களில் பிற அணிகளைக் கேலிசெய்யும் விளம்பரங்கள் பற்றியும் நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கையும் தாண்டியது என்பதை கங்குலி அறிவார். அதேபோல், பாகிஸ்தான் அணியுடனான தொடர், பாகிஸ்தான் வீரர்களின் ஐ.பி.எல் வருகை போன்றவற்றிலும் பழைய கேப்டனாக சில முன்னெடுப்புகள் எடுத்தால், இந்திய கிரிக்கெட்டையும் மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் தாக்கம் ஏற்படுத்த முடியும்.

இதுபோன்ற விஷயங்களில் அவரால் தனியாக எதுவும் செய்திட முடியாது. தன் நிர்வாகக்குழுவின் ஒப்புதல் வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒத்துழைப்பு வேண்டும். அப்படியானால் மட்டுமே இவை சாத்தியப்படும். ஆனால், இப்படியான முன்னெடுப்புகளை இவர் மாதிரியான ஒரு நபரால்தான் செய்திட முடியும். கங்குலி இந்த விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தினால், இந்திய கிரிக்கெட் இன்னும் சிறப்பாக இருக்கும். அதேசமயம், அவர் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. இதுவரை பி.சி.சி.ஐ தலைவராக இருந்தவர்கள் அனைவருமே அரசியல் நிழலில் இருந்தவர்கள்தாம். கங்குலி அதிலிருந்து விலகி நிற்பது நல்லது. ஒரு மிகப்பெரிய ஆளுமை, இந்திய கிரிக்கெட்டை நிர்வகிப்பதை நினைத்து, கிரிக்கெட் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். தன் கேப்டன்சியில் செய்த ஜாலங்களை, கங்குலி மீண்டும் செய்தால், இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த காலமாக இது மாறும்!

அடுத்த கட்டுரைக்கு