கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

இது 20/20யா... இல்லை 50/50யா!

க்றிஸ் கெய்ல்
பிரீமியம் ஸ்டோரி
News
க்றிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள், கணிக்கவே முடியாத கரிபீயன் அலை! சில நேரங்களில் கரை தொடாமல் கடலுக்குள்ளேயே சுருளும், சில நேரங்களில் ஆழிப்பேரலையாய் கண்டங்களையே சுருட்டும்.

வெறும் புள்ளிவிவரங்களையும் தரவுகளையும் மட்டும் வைத்துக்கொண்டு அதன் திறனை கணிக்க முயன்றால், நாலைந்து இடியாப்பத்தை `கொசகொச'வென பிசைந்து கையில் கொடுத்தாற்போல் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும்.

இது 20/20யா... இல்லை 50/50யா!

ஒரு காலத்தில் சாம்பியன்கள், இம்முறை தகுதிச்சுற்றில் போராடிதான் உள்ளேயே வந்திருந்தார்கள். தகுதிச்சுற்று ஆட்டங்களில், ஆப்கானிஸ்தானை சந்தித்த இருமுறையும் தோல்வியைத் தழுவினார்கள். மேற்கிந்திய தீவுகள் அணி அதன் அந்திம காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என நினைத்தபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரை 2-2 என சமனில் முடித்து அதிர்ச்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நடந்த இந்தியன் ப்ரீமியர் லீக்கோ, வெஸ்ட் இந்தியன் ப்ரீமியர் லீக் ஆனது. ஆண்ட்ரே ரஸல், அல்ஸாரி ஜோசப், க்றிஸ் கெய்ல், கீரான் பொல்லார்டு ஆகியோர் மிரட்டினர். ``நாங்க இன்னும் டொக் ஆகல’’ என மேற்கிந்திய தீவுகள் அணியின் ரசிகர்கள் கெத்துக் காட்டிய நேரத்தில், அயர்லாந்து மற்றும் வங்காளதேசத்துடன் நடந்த முத்தரப்பு தொடரில் வங்காளதேசத்திடம் தொப்பென வீழ்ந்தது.

இது 20/20யா... இல்லை 50/50யா!

ஜேஸன் ஹோல்டர் தலைமையில் விளையாடும் மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக சுனில் நரைன் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. முத்தரப்பு தொடரில், ஓப்பனிங் பார்ட்னர் ஷிப்புக்கு 365 ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்த ஜான் கேம்பெல் மற்றும் ஷாய் ஹோப் இணையில் ஷாய் ஹோப் மட்டும் அணிக்கு தேர்வாகியிருந்தார். ஜேசன் ஹோல்டர், க்றிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ஆண்ட்ரே ரஸல், ஈவின் லூயிஸ், டேரன் பிராவோ, ஆஸ்லே நர்ஸ், கீமர் ரோச், ஓஷேன் தாமஸ், கார்லோஸ் ப்ராத்வெய்ட், ஃபேபியன் ஆலன், நிகோலஸ் பூரான், ஷிம்ரான் ஹெட்மயர், ஷெனான் கேப்ரியல் மற்றும் ஷெல்டன் காட்ரல் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். ஆரம்பத்தில், ``இந்த உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணி’’ என மேற்கிந்திய தீவுகளை எவரும் சும்மானாச்சிக்கி கூட சொல்லவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் வார்ம்-அப் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாம் வார்ம்-அப் ஆட்டத்திலும் மழைப் பொழிந்தது. மேகத்திலிருந்து அல்ல, மேற்கிந்திய தீவுகள் அணியின் மேட்ஸ்மேன்களிடமிருந்து ரன் மழைப் பொழிந்தது. 49.2 ஓவர்களில் 421 ரன்கள்! அதிகபட்சமாக, ஷாய் ஹோப் 86 பந்துகளில் 101 ரன்கள் விளசினார். ரஸல் தன் பங்குக்கு 25 பந்துகளில் 54 ரன்களை பறக்கவிட்டார். ரசிகர்கள், எக்ஸ்பெர்ட்கள் எல்லோருடைய கண்களும் மேற்கிந்திய தீவுகளின் பக்கம் திரும்பின.

இது 20/20யா... இல்லை 50/50யா!

உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது ஆட்டம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து பவுலிங்கைத் தேர்ந்தெடுத்த மே.தீவுகள் அணியினர், ஷார்ட் பந்துகளால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தனர். டாப் ஆர்டர் சரசரவென சரிந்தது, மிடில் ஆர்டர் அதனினும் வேகமாய். 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட். ஓஷேன் தாமஸ் அதிகபட்சமாக, 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்த இலக்கை, 13.4 ஓவர்களில் எளிமையாய் எட்டிப்பிடித்தது மே.தீவுகள் அணி. ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டியது 3 விக்கெட்களையும் மே.தீவுகள் அணி இழந்திருந்ததுதான். 50 ஓவர்கள் ஆடுவதற்கு தேவையான ஒருவித விவேகமான மனநிலை, ஷாய் ஹோப் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனிமும் காணப்படவில்லை. அடித்து நொறுக்குவோம், ஆடியன்ஸ் அலறுவார்கள் என நினைத்தனரா, இல்லை அடுத்து வருபவர் ஆடிக்கொள்வார் என நினைத்தனரா ஒன்றும் விளங்கவில்லை. பிட்சில், ஆணி அடித்தாற்போல் அசையாமல் நிலையாக நின்றுவிளையாடுவார் எனும் நம்பிக்கை, ஏனோ எவர் மீதும் உருவாகவில்லை.

அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன். 38 ரன்களுக்கு 4 விக்கெட்களைக் கழட்டி, ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தது மே.தீவுகள் அணியின் பெளலிங் யூனிட். மே.தீவுகளின் கையிலிருந்த பெட்ரோமேக்ஸ் லைட்டை, சம்பந்தமே இல்லாமல் வந்து காலி செய்தார் கூல்டர்-நைல். யாருமே எதிர்பார்க்கவில்லை! கலங்கவைத்த பெளலிங் யூனிட், கூல்டர் நைலிடம் மட்டும் சரண்டர் ஆனது. 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. டாப் ஆர்டர் நிதானமாக ஆடினாலேபோதும், மிடில் ஆர்டர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பந்துகளை பறக்கவிடும், இலக்கை அடைந்துவிடலாம். ஆனால், பேட்டிங்கில் வேறுமாதிரி வேலையைக் காட்டினார்கள். 5 ஒவர்களுக்குள் 2 விக்கெட் காலி! ஓரளவு நம்பிக்கையளித்த பூரானும் 40 ரன்னில் தூக்கி அடிக்கப்போய் கேட்ச். ரன் அவுட்டில் வீழ்ந்தார் ஹெட்மயர். மலமலவென விக்கெட் சரிந்துக்கொண்டிருக்கிறது, அப்போதும் பந்துகளை அடித்து, துவைத்து, கொடியேற்றி கேட்ச் ஆகிறார் ரஸல். என்ன சாரே, பொறுமை எருமையினும் பெருசு சாரே..! கடைசியில், ஜெயிக்க வேண்டிய மேட்சை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மே.தீவுகள் அணி. நிலைமை உணர்ந்து ஆடிய ஷாய் ஹோப் மட்டும் 105 பந்துகளுக்கு 68 ரன்கள் அடித்திருந்தார்.

இது 20/20யா... இல்லை 50/50யா!

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது. அதன்பிறகு, இங்கிலாந்தை எதிர்கொண்டது வெஸ்ட் இண்டீஸ். ஓப்பனர் இவின் லூயிஸ் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். முந்தையப் போட்டில் 1 ரன், இந்தப் போட்டியில் 2 ரன். அதிகபட்சமாக, நிக்கோலஸ் பூரான் 63 ரன்கள் சேர்த்தார். ஷாய் ஹோப் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஆண்ட்ரே ரஸல், திருந்தவே இல்லை. முந்தையப் போட்டியில் செய்த அதே தவறு. 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகினர். ராய்க்கு பதிலாக ஓப்பனிங் இறங்கிய ரூட், சதம் விளாசினார். ஒன் டவுனில் இறங்கிய க்றிஸ் வோக்ஸ், 40 ரன்கள் விளாசினார். இன்னொரு ஓப்பனர் பேர்ஸ்டொவ், 45 ரன்கள். 2 விக்கெட் மட்டுமே இழந்து 33.1 ஓவரில் இலக்கை அடைந்தது இங்கிலாந்து.

முதல் 30 ஓவர்கள் விக்கெட்களை இழக்காமல், பொறுமையாக விளையாடி, அதன்பிறகு வேகமெடுப்பதுதான் இந்த உலககோப்பையில் கிட்டதட்ட எல்லா அணிகளும் பயன்படுத்திய டெக்னிக். உண்மையில், அது நல்ல பலனும் கொடுத்தது. தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ அந்த டெக்னிக்கை, மே.தீவுகள் அணி பயன்படுத்தியது வங்கதேசத்திற்கு எதிரான மேட்சில்தான். கெய்ல், 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அடுத்து களமிறங்கியவர்கள் அஸ்திவாரத்தை பலபடுத்தினார்கள். தொடர்ந்து சொதப்பிய லூயிஸ் 70 ரன்கள் விளாசினார். ஹோப், 96 ரன்கள். ரஸல் இந்த மேட்சிலும் சொதப்பினார். அவர் செய்ய வேண்டியதை ஹோல்டர் செய்துமுடித்தார். 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் எடுத்து மாஸாக இன்னிங்ஸை முடித்தார்கள். ஆனால், பெளலர்களுக்கு ஜெயிப்பதில் உடன்பாடு இல்லை. 41.3 ஓவரில் இந்த இலக்கை சேஸ் செய்து, ஷாக் கொடுத்தது வங்கதேசம். ஷகிப் அல் ஹசன், 99 பந்துகளில் 124 ரன்கள் விளாசி மேட்சை முடித்தார்.

அடுத்ததாக, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் ஜெயித்து பெளலிங்கை தேர்ந்தெடுத்தார் ஹோல்டர். 50 ஓவர் முடிவில் 291/8 என இன்னிங்ஸை முடித்தது நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன், 148 ரன்கள் விளாசி நியூசிலாந்துக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்த மேட்சில் பெளலர்கள் ஜெயிக்க நினைத்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு அதில் விருப்பமில்லை. 6 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். கெய்ல், அதிர்ஷ்டத்தின் உதவியோடு 87 ரன்கள் எடுத்தார். கிட்டதட்ட, கைமீறிப் போயிருந்த ஆட்டத்தை ப்ராத்வெய்ட் மட்டும் தனி ஆளாகப் போராடி மீண்டும் கைக்கு நெருக்கத்தில் கொண்டுவந்தார். கடைசியில், மீண்டும் கை நழுவிப்போனது! நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது மே.தீவுகள் அணி. நியூசிலாந்து தோற்றிருந்தால், மொத்தமாய் உலகக்கோப்பையின் காட்சிகளே மாறியிருக்கும். அதன்பிறகு, இந்தியாவுடனான ஆட்டம். ஷமியின் வேகத்தில் சரண்டர் ஆனது ஹோல்டர் அண்ட் கோ!

கிட்டதட்ட, பெரும்பாலான ஆட்டங்கள் மே.தீவுகள் அணிக்கு சாதகமாகவே இருந்தன. என்ன, பேட்டிங் பிரமாதபடுத்திய மேட்சுகளில், பெளலிங் வெற்றியைத் தாரைவார்த்துக் கொடுத்தது. பெளலிங் பிரமாதப்படுத்திய மேட்ச்களிலோ, பேட்டிங் அந்த வேலையை செய்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் தன் கடின உழைப்பைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக ஒட்டுமொத்த அணியும் உழைக்காமல் போனதே மே.தீவுகள் அணியின் தோல்விகளுக்கு காரணம். முக்கியமாக, நினைவில் டி20 போட்டிகளைக் கொண்டிருக்கும் மே.தீவுகள் அணி, 50 ஓவர் போட்டிகளுக்கு ஏற்ப மனநிலையை மாற்றிக்கொள்வது மிக அவசியம். யானை அதன் பலம் அறியவேண்டும்!