Published:Updated:

7,000 விக்கெட்டுகள், ஃபீல்டில் 60 ஆண்டுகள்! - ஓய்வு பெற்றார் 85 வயதுப் பந்துவீச்சாளர்

எம்.குமரேசன்

சுமார் 60 ஆண்டுகளாகப் பந்து வீசி வரும் செசில் ரைட் 7,000 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Cecil Wright
Cecil Wright

கிரிக்கெட் விளையாட்டை எத்தனை ஆண்டுகள் விளையாடிவிட முடியும்? பந்து வீச்சாளர்களுக்கு 30 வயதிலேயே மூட்டு வலி வந்து விடும். தோள்பட்டை காயங்களும் பந்து வீச்சாளர்களை மிரட்டும். ஆனால், உலகமே வியக்கும் வகையில், வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், 85 வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். கிரிக்கெட் உலகை வியக்க வைக்கும், அந்தப் பந்து வீச்சாளரின் பெயர் செசில் ரைட்.

Cecil Wright
Cecil Wright

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களுடன் விளையாடி அனுபவம் கொண்டவர். ஜமைக்கா மற்றும் பார்படாஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 1959-ம் ஆண்டில் இங்கிலாந்தில் லாங்ஷயர் நகரில் உள்ள கிராம்ப்டன் கிளப்புக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், அங்கேயே செட்டிலாகிவிட்டார். 60 ஆண்டுகளாகப் பந்து வீசி வரும் செசில் ரைட் 7,000 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்து சீஸன்களில் 538 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார். அதாவது, 27 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

செசில் ரைட்
செசில் ரைட்

தன் உடல் வலிமையின் ரகசியம் குறித்து செசில் கூறுகையில், ''என் உடல்வலிமையின் ரகசியம் எனக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளும் ஆசை எனக்கு உள்ளது. லாங்ஷயர் நகரத்தின் பாரம்பர்யமான உணவுகளை அதிகம் சாப்பிடுவேன். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எனக்குப் பிடித்த உணவுகளை நான் சாப்பிடுவேன். அதிகமாக மது அருந்த மாட்டேன். பீர் மட்டுமே குடிப்பேன். எனது வயதைக் காரணம் காட்டி பயிற்சி செய்யாமல் இருந்தது இல்லை. அதேபோல், டிவி முன் அமர்ந்து இருந்ததும் இல்லை'' என்றார்.

தற்போது அப்பர்மில் அணிக்காக விளையாடி வரும் செசில் ரைட், வரும் செப்டம்பர் 7-ம் தேதி தன் கடைசி ஆட்டத்தில் களம் காண்கிறார்.