Published:Updated:

ஆஸ்திரேலியாவை ஊருக்குள் விட்டு வெளுத்தெடுக்கும் வெஸ்ட் இண்டீஸ்…2-0 முன்னிலையில் களமாடும் கரீபியன்ஸ்!

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிடும்.

Published:Updated:

ஆஸ்திரேலியாவை ஊருக்குள் விட்டு வெளுத்தெடுக்கும் வெஸ்ட் இண்டீஸ்…2-0 முன்னிலையில் களமாடும் கரீபியன்ஸ்!

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிடும்.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா

எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. வெஸ்ட் இண்டீஸை துச்சமென நினைத்து, முக்கிய வீரர்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு தெனாவட்டாக கரீபிய தீவுகளில் ‘பி’ டீமோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக, இரண்டு டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டாக தோற்கடித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

முதல் டி20 போட்டியில் 145 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா, இரண்டாவது போட்டியில் 197 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் வெஸ்ட் இண்டீஸிடம் பரிதாபமாக தோற்றிருக்கிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியே முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலியாவை வைத்து உலகக்கோப்பைக்கு வார்ம் அப் செய்யும் விதமாக, ப்ளேயிங் லெவனில் நிறைய மாற்றங்களை செய்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் பொல்லார்ட் இந்த போட்டியிலும் ஆடவில்லை. டாப் ஆர்டரில் எவின் லீவிஸையும் பௌலிங்கில் ஓபெட் மெக்காயையும் டிராப் செய்திருந்தனர்.

பேட்டிங் ஆர்டரிலும் மாற்றங்கள் இருந்தது. கேப்டனான நிக்கோலஸ் பூரன் தன்னுடைய ஆர்டரை மாற்றி, பிராவோவை டாப் ஆர்டரில் இறக்கிவிட்டார். ரஸல் ஃபினிஷர் ரோலில் ஆடினார்.

ஹெட்மயர்
ஹெட்மயர்

டாப் ஆர்டரில் ஃப்ளெட்சரும், கெய்லும் சீக்கிரமே அவுட் ஆகி விட, சிம்மோன்ஸ் மட்டும் கொஞ்ச நேரம் நின்றிருந்தார். அதிரடியாக சில சிக்சர்களை அடித்து 21 பந்துகளில் 30 ரன்களை அடித்த அவரும் ஹேசல்வுட் பந்துவீச்சில் மேத்யூ வேடிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர், ஹெட்மயரும் பிராவோவும் கூட்டணி சேர்ந்தனர். பிராவோ டி20 போட்டிகளில் இவ்வளவு சீக்கிரமாக க்ரீஸுக்குள் வந்து ஒரு யுகமே ஆகிவிட்டது. ஆனாலும், இந்த போட்டியில் தன்னுடைய அனுபவத்தை வெளிக்காட்டினார் பிராவோ. மெதுவாக தொடங்கி ஹெட்மயருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து எந்த பௌலரை அட்டாக் செய்ய வேண்டும் என்பதை அறிந்து சிறப்பாக செயல்பட்டார்.

அஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா போன்ற ஸ்பின்னர்களை குறிவைத்து முதலில் அட்டாக் செய்த இந்த கூட்டணி, டெத் ஓவர்களில் எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா பௌலர்களையும் அலறவிட்டது. ஸ்டார்க்கின் பந்தில் ஒரு ஸ்கூப் ஷாட் சிக்ஸ் அடித்து அரைசதத்தை கடந்தார் ஹெட்மயர். பிராவோ-ஹெட்மயர் கூட்டணி மட்டும் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் போட்டது. 61 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மயர் ரன் அவுட் ஆக, 47 ரன்களில் பிராவோ நாட் அவுட்டாக இருந்தார். இறுதியில், ரஸல் வந்து சிக்சர் அடித்து 190+ ஸ்கோரை எட்ட வைத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 197 ரன்கள் டார்கெட். கடந்த போட்டியில் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடி காட்டிய மேத்யூ வேடை இந்த முறை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தினார் காட்ரெல். நல்ல லென்த்தில் வந்த பந்தை மிட் ஆனில் தூக்கியடித்து கேட்ச் ஆகியிருந்தார். கேப்டன் ஃபின்ச்சும் எட்வர்ட்ஸ் வீசிய ஒரு ஃபுல் டாஸில் போல்டாகி சீக்கிரமே வெளியேறினார்.

இதன்பின், மிட்செல் மார்ஷ் கொஞ்சம் நின்று பொறுப்பாக ஆடத் தொடங்கினார். ஆனால், அவருக்கு பெரிதாக எந்த சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. ஃபிலிப், ஹென்றிக்ஸ் இருவரும் பெயருக்கு கொஞ்ச நேரம் நின்றுவிட்டு அவுட் ஆகினர். மிட்செல் மார்ஷ் மட்டும் கடமை தவறாத ஆளாக ஒரு எண்டில் நின்று என்னவெல்லாமோ முயற்சி செய்தார். ஆனால், அவராலும் ஆஸ்திரேலியாவை காப்பாற்ற முடியவில்லை. அரைசதத்தை அடித்த திருப்தியோடு ஹேடன் வால்ஷ் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார் மார்ஷ்.

நிக்கோலஸ் பூரன் - ஆரோன் ஃபின்ச்
நிக்கோலஸ் பூரன் - ஆரோன் ஃபின்ச்

14-வது ஓவரில் 101 ரன்கள் என்ற நிலையில் மிட்செல் மார்ஷ் அவுட் ஆகியிருந்தார். அடுத்த 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து 19.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகிவிட்டது ஆஸ்திரேலிய அணி. கடந்த போட்டியிலும் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த போட்டியில் மீண்டும் ஒரு பெரும் சரிவு. இந்த இரண்டு போட்டியிலுமே ஆஸ்திரேலியா முழுதாக 20 ஓவர் பேட்டிங்கே ஆடவில்லை என்பதுதான் கூடுதல் சோகம்.

பேட்டிங் மட்டுமில்லை, பௌலிங் ஃபீல்டிங் என ஆஸ்திரேலியா அத்தனையிலுமே சொதப்பியிருந்ததது. கடந்த போட்டியில் ரஸலுக்கு ஒரு கேட்சை டிராப் செய்ய அவர் நின்று அரைசதம் அடித்து போட்டியின் முடிவையே மாற்றிவிட்டார். இந்த போட்டியில் பிராவோவுக்கு இரண்டு கேட்ச்களை டிராப் செய்ய, ஹெட்மயருடன் கூட்டணி போட்டு ஆஸியை அடித்து துவம்சம் செய்துவிட்டார்.

ஹேடன் வால்ஷ்
ஹேடன் வால்ஷ்

மிட்செல் ஸ்டார்க் இரண்டு போட்டியிலும் ஒரு விக்கெட்கூட எடுக்கவில்லை. எக்கானமி ரேட்டும் 10-க்கு மேல். ஸ்டார்க்குக்கு ஹேசல்வுட் எதோ பரவாயில்லை என்கிற ரேஞ்சில் வீசிக்கொண்டிருக்கிறார். கெய்ல், பிராவோ, ரஸல், பொல்லார்ட் என வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 நட்சத்திரங்கள் அனைவருமே இப்போதுதான் அணிக்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் ஹெட்மயர், பூரன் போன்ற இளம் வீரர்களும் இருப்பதால் முரட்டுத்தனமான டி20 அணியாக இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அவர்களின் பலத்தை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணி இப்போது அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிடும். இப்போதைய நிலைமைக்கு 5-0 என வெஸ்ட் இண்டீஸ் வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்னமும் ஸ்டீவ் வாக் காலத்து ஆண்டைகள் என்ற மனநிலையிலேயே உலாவி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, மற்ற அணிகளை மட்டமாக நினைப்பதை இனிமேலாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.