
2020-ல் மட்டும் 222 ரன்களை எடுத்திருக்கிறார். மீதமுள்ள 4 சீசன்களில் 229 ரன்கள் மட்டுமே. 2020-ல் மட்டும் என்ன ஆனது... இவரின் பேட்டிங் எப்படி முன்னேறியது?
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அறிமுக வீரரான கைல் மேயர்ஸ் கிரிக்கெட் உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார். எதிர்பாராத சமயத்தில் மேட்ச் வின்னிங் இரட்டை சதத்தை அடித்து ஆசியாவில் அதிகபட்ச சேஸிங்கை சாத்தியமாக்கி சாதனைப்படைத்திருக்கும் இந்த கரீபிய வீரர் யார்?
கரீபிய தீவுகளின் பார்படாஸ் பகுதியை சேர்ந்தவர் கைல் மேயர்ஸ். இவரின் தந்தையான ஷெர்லே க்ளார்க் உட்பட இவரின் குடும்பத்தில் பலருமே கிரிக்கெட் வீரர்கள். ஷெர்லே க்ளார்க் ஒரு ஆல்ரவுண்டராக வெஸ்ட் இண்டீஸின் U19 அணியில் ஆடியிருக்கிறார். ஷெர்லே க்ளார்க்கின் சகோதரரான டெர்ரி க்ளார்க்தான் கைல் மேயர்ஸின் கிரிக்கெட் திறனை கண்டறிந்து பயிற்சியளிப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த அதிரடி ஓப்பனர் மற்றும் 100 டெஸ்ட்டுக்கும் மேல் ஆடிய பிரபல வீரரான டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் நடத்திவரும் கிளப்பில்தான் கைல் மேயர்ஸும் பயிற்சி பெற்றிருக்கிறார். பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் சில பெரிய இன்னிங்ஸ்களை ஆடியதன் மூலம் மேயர்ஸின் மீது கவனம் விழத்தொடங்கியது.

2012-ல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கைல் மேயர்ஸ் களமிறங்கினார். இப்போதைய வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் அணியில் இருக்கும் பிராத்வேட், கேம்ப்பெல் போன்றோரும் இந்த அண்டர் 19 அணியில் இடம்பெற்றவர்களே.
அந்த உலகக்கோப்பை தொடரில் 156 ரன்களை எடுத்திருந்தார் மேயர்ஸ். குறைவான ரன்கள் போல தெரிந்தாலும் அணிக்குத் தேவையான சமயத்தில் வந்த ரன்கள் இவை. இந்தியாவுக்கு எதிராக இவர் அடித்த 43 ரன்கள்தான் அந்த போட்டியை வெல்ல காரணமாக அமைந்தது. மேலும், வலக்கை மிதவேகப் பந்துவீச்சாளரான இவர் 12 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.
பெரிய சதங்கள் அடிக்காத காரணத்தால் இவர் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டராக மட்டுமே பார்க்கப்பட்டார். உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்ததால் கரீபியன் ப்ரீமியர் லீகில் பர்படாஸ் அணிக்காக ஆடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அங்கேயும் இப்படித்தான் இவர் அதிரடியாக ஆடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் இவரால் ஆட முடியவில்லை. இதுவரை 5 சீசனில் ஆடியிருக்கும் மேயர்ஸ் 441 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் 2020-ல் மட்டும் 222 ரன்களை எடுத்திருக்கிறார். மீதமுள்ள 4 சீசன்களில் 229 ரன்கள் மட்டுமே. 2020-ல் மட்டும் என்ன ஆனது... இவரின் பேட்டிங் எப்படி முன்னேறியது?
2018-ல் கைல் மேயர்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் பந்துவீச முடியாது என்பதால் பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தியிருக்கிறார்.

30-க்கும் மேற்பட்ட முதல்தர போட்டிகளில் ஆடி 3 சதம் மட்டுமே அடித்திருந்த மேயர்ஸின் பேட்டிங் மெருகேற இந்த ஓய்வு காலம்தான் காரணமாக அமைந்திருக்கிறது.
காயத்துக்குப் பிறகு நார்வே ப்ரீமியர் லீகில் ஆடியவர் 6 போட்டிகளில் 528 ரன்களை அடித்து அசத்தினார். ஆவரேஜ் மட்டும் 105- க்கும் மேல். வெஸ்ட் இண்டீஸுக்கு உள்ளேயே நடக்கும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். இதன் நீட்சியாக கரீபியன் ப்ரீமியர் லீகிலும் நன்றாக ஆடினார்.
இந்த இன்னிங்ஸ்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் இருக்கும் குழப்பங்கள் காரணமாக மேயர்ஸுக்கு வங்கதேச டெஸ்ட் தொடரில் அறிமும் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னரே இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் ரிசர்வ் ப்ளேயராக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாலும் வங்கதேசத்துக்கு எதிராகத்தான் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது.
நம்பர் 5-ல் இறங்கிய கைல் மேயர்ஸ் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களை சேர்த்திருந்தார். பின்னங்கால்களை பயன்படுத்தி ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார். இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 20 பவுண்டரிக்கள் மற்றும் 7 சிக்ஸர்களின் உதவியுடன் 210 ரன்களையெடுத்து போட்டி முடிய 1.3 ஓவர்களே இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸை த்ரில் வெற்றியடைய வைத்தார்.
``வங்கதேசத்துக்கு எதிராக சதமடிப்பேன்'' என இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பேட்டி கொடுத்தார் மேயர்ஸ். சொன்னதுக்கும் மேல் இரட்டிப்பாக அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்து கிரிகெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.