Published:Updated:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை யாராலும் அழிக்க முடியாது... அவர்கள் போராளிகள்... திருப்பி அடிப்பார்கள்!

வெஸ்ட் இண்டீஸ் - கைல் மேயர்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் - கைல் மேயர்ஸ்

நிதானம், பக்குவமான ஆட்டம், ஸ்ட்ரைக் ரொட்டேஷன் என்பதையெல்லாம் அவர்கள் முற்றிலும் மறந்து போயிருந்தார்கள். வந்தோமா... நாலு முறை பேட்டை சுழற்றினோமோ... இரண்டு சிக்ஸ் அடித்துவிட்டு பெவிலியனில் போய் ரிலாக்ஸாக உட்கார்ந்தோமா என்கிற ஆட்டிட்யூடைத்தான் அவர்களிடம் அதிகம் பார்க்கமுடிந்தது.

''வெஸ்ட் இண்டீஸ், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே லாயக்கற்ற அணியாக மாறிவிட்டது. ஐசிசி அவர்களின் டெஸ்ட் ஸ்டேட்டஸை நீக்கவேண்டும். டி20 போட்டிகளில்தான் அந்த வீரர்கள் கவனம் செலுத்துகிறார் எனும்போது அவர்கள் இன்னமும் டெஸ்ட் போட்டிகளை இப்படி ஆடிக்கொண்டிருப்பது கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்குகிறது.''

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மீதான சமீபத்திய விமர்சனங்கள் இப்படித்தான் மிகக்கடுமையாக இருந்தன.

க்ளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ஸ், கார்டன் கீரினிட்ச், சோபர்ஸ், பிரையன் லாரா, ஷிவ்நாராயண் சந்தர்பால் என இவர்கள் இருந்தபோது இருந்த வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் அணியும், இப்போதைய டெஸ்ட் அணியும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது. கிறிஸ் கெய்ல்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் காலடி எடுத்துவைத்தப்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையே கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு மறந்துபோனது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான நிதானம், பக்குவமான ஆட்டம், ஸ்ட்ரைக் ரொட்டேஷன் என்பதையெல்லாம் அவர்கள் முற்றிலும் மறந்து போயிருந்தார்கள். வந்தோமா... நாலு முறை பேட்டை சுழற்றினோமோ... இரண்டு சிக்ஸ் அடித்துவிட்டு பெவிலியனில் போய் ரிலாக்ஸாக உட்கார்ந்தோமா என்கிற ஆட்டிட்யூடைத்தான் அவர்களிடம் அதிகம் பார்க்கமுடிந்தது. ஆனால், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன, அதை விளையாடுவதற்கு எவ்வளவு பெரிய மன உறுதியும், பக்குவமும் வேண்டும் என்பதை கரீபியன் தீவுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் முதல் சர்வதேசப் போட்டியில் ஆடிய இரண்டு அறிமுக வீரர்கள்.

சிறுசிறு தீவுகளாகப் பிரிந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸை ஒரே நாடாக சேர்த்துவைத்திருப்பது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் அங்கே கொண்டாட்டமான ஒரு விளையாட்டு. உலகுக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிற செய்தியைப் பெரும்பாலும் அவர்கள் கிரிக்கெட் வழியேதான் சொல்வார்கள். அவர்களின் எதிர்க்குரல்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டுக்குள் இருந்துதான் ஒலிக்கும். ஆனால், சமீபமாக கிளப் கிரிக்கெட், டி20 கிரிக்கெட்டுக்குள் மூழ்கிப்போன கரீபியன் வீரர்களால் டெஸ்ட் அரங்கில் பல அவமானங்களை சந்தித்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்.

கைல் மேயர்ஸ்
கைல் மேயர்ஸ்

''வெஸ்ட் இண்டீஸின் கதை முடிந்துவிட்டது...'' என வெஸ்ட் இண்டீஸை கிரிக்கெட் வரலாற்றில் இருந்து அழிக்க முற்படும்போதெல்லாம் திடீரென நான்கு வீரர்கள் கிளம்பிவந்து மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி அசரடிப்பார்கள். அப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே இவர்களுக்குத் தகுதியில்லை என அவர்களை அழித்தொழிக்கும் விமர்சனங்கள் வந்த நேரத்தில்தான் கிளம்பிவந்திருக்கிறார்கள் கைல் மேயர்ஸ் மற்றும் நிக்ருமா பொன்னெர்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எல்லோராலும் சாதாரணமாக விளையாடிவிடமுடியாது. எதிர்முனையில் பந்து வீசும் பெளலர்களை மதித்து, அவர்கள் எந்த லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசுகிறார்கள் எனத்தொடர்ந்து கண்காணித்து, தவறான லைனில் வரும் பந்துகளை மட்டுமே அடித்து ரன் சேர்க்கும் வித்தை எல்லோருக்கும் கைவராது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மிக முக்கியத் தேவை பொறுமை, நிதானம், பக்குவம். நிலைத்து நின்று ஆடக்கூடிய ஸ்டெபிளிட்டி. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் அதெல்லாம் சில காலமாகக் காணாமல் போயிருந்தது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் என ஆசியநாடுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவந்தால் ஆட்டம் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிடும். ஐந்து நாள் கிரிக்கெட் எல்லாம் அவர்கள் ஆடியதே மறந்தேபோனது. பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பார்கள். அதுவும் 2018-ல் தங்கள் நாட்டுக்குள் வந்த வெஸ்ட் இண்டீஸை அவமானப்படுத்தி அனுப்பிவைத்தது வங்கதேசம். இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே மூன்று நாட்களுக்குள் முடிந்துபோயின. 2-0 என வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.

இந்தமுறையும் அப்படிப்பட்ட அவமானகரத் தோல்விக்க்கான முன்னோட்டங்களோடே வங்கதேசம் வந்தது வெஸ்ட் இண்டீஸ். கேப்டன் ஜேசன் ஹோல்டர், முக்கிய பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், ஆல்ரவுண்டர் ராஸ்டன் சேஸ் எனப்பல முக்கிய வீரர்கள் அணியில் இல்லை. கிராக் பிராத்வெயிட் தலைமையில் வந்த அணி கிட்டத்தட்ட கத்துக்குட்டிகளின் அணி. நிக்ருமா பொன்னெர், கைல் மேயர்ஸ், ஷேன் மோஸ்லி என ப்ளேயிங் லெவனில் களமிறங்கிய மூன்று வீரர்களுக்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியே... ஆனால், வழக்கம்போல அழிவில் இருந்து மீண்டுவந்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை யாராலும் அழிக்க முடியாது... அவர்கள் போராளிகள்... திருப்பி அடிப்பார்கள்!

ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆடி, வங்கதேசத்தில் வைத்தே பங்களா டைகர்களை சிதைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அதுவும் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்து கரீபியனின் ஹீரோவாகியிருக்கிறார் மேயர்ஸ்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 430 ரன்கள் குவித்தது. அப்போதே இது இன்னிங்ஸ் வெற்றிக்கான ஸ்கோர் எனக் கொண்டாடப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட்டும், பிளாக்வுட்டும் போராட முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் மோமினுல் ஹக் சென்சுரி அடிக்க 223 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, முடிந்தால் அடித்துப்பாருங்கள் என 395 ரன்கள் டார்கெட்டை வைத்தது வங்கதேசம். ஆசிய பிட்ச்களில் இதுவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை யாரும் சேஸ் செய்ததில்லை என்பதோடு, விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ்தானே என தைரியமாக சவால்விட்டது வங்கதேசம். அவர்கள் நினைத்ததுபோலவே இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்களுக்குள் மூன்று விக்கெட்கள் காலி.

ஆனால், ஐந்தாம் நாள் ஆட்டம் கரீபிய வீரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 110 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தநிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது பொன்னர்- மேயர்ஸ் கூட்டணி. இருவருக்குமே இதுதான் முதல் சர்வதேசப்போட்டி என்கிற பதற்றமோ, பயமோ கொஞ்சமும் இல்லாமல் வங்கதேச பெளலர்களை எதிர்கொண்டார்கள்.

பெளலர்கள் பந்தை எங்கே பிட்ச் செய்கிறார்கள், எந்த லைனில் தொடர்ந்து பந்து வீசுகிறார்கள், ஃபீல்டர்களை எங்கே ப்ளேஸ் செய்கிறார்கள் என ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்த்து, நிலைத்து நின்று பிரமாதமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். மோசமான பந்துகள் சிக்கினால் அதை அடித்து வெளுத்தார் மேயர்ஸ். இன்னொருபக்கம் மேயர்ஸுக்கு பக்கபலமாக நின்று பொறுமையாக ஆடினார் பொன்னெர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை யாராலும் அழிக்க முடியாது... அவர்கள் போராளிகள்... திருப்பி அடிப்பார்கள்!

கடைசி நாளின் இரண்டு செஷன்களிலும் விக்கெட் விழாமல் 200 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்த்திகொண்டிருந்தார்கள். இரண்டு அறிமுக வீரர்கள் இணைந்து 200 ரன் பார்ட்னர்ஷிப் அமைப்பது டெஸ்ட் வரலாற்றில் இதுதான் இரண்டாவதுமுறை. கடைசி செஷன்... இன்னும் 129 ரன்கள் அடிக்கவேண்டும். கிட்டத்தட்ட 30 ஓவர்கள்தான் இருக்கிறது. ஆனால், விக்கெட்கள் சரிகிறது. மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் சொதப்பிவிடுமோ என்கிற பதற்றம் எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், மேயர்ஸுக்கு இல்லை. 303 பந்துகளில் 200 ரன்கள் அடித்தவர் , இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று வெஸ்ட் இண்டீஸுக்கு வரலாற்று வெற்றியைப் பரிசளித்துவிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பதும் நம் வாழ்க்கையைப் போன்றதுதான். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், வீழ்ச்சியில் இருந்து மீண்டெழவும் காலம் நமக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும். கிரிக்கெட் மொழியில் சொல்வதென்றால் இரண்டாவது இன்னிங்ஸ் எல்லோரின் வாழ்க்கையிலும் கிடைக்கும். அந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிநாதம். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டே ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் டபுள் சென்சுரி அடிக்க இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கிறது டெஸ்ட் கிரிக்கெட். முதல் இன்னிங்ஸில் 40 ரன்களில் அவுட் ஆன, கைல் மேயர்ஸ்தான் இரண்டாவது வாய்ப்பில் இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெறவைத்திருக்கிறார். முதல் இன்னிங்ஸ் தோல்வியை, அவமானத்தை, ஏமாற்றத்தை மொத்தமாக துடைத்து தூக்கியெறிந்திருக்கிறார்.

இரண்டாவது வாய்ப்பு தவற விடக்கூடாத தங்கமான வாய்ப்பு... போராளிகள் அதை தவறவிடுவதில்லை!

அடுத்த கட்டுரைக்கு