Published:Updated:

130 பந்துகளில் 85 சதவிகிதம் ஷார்ட் பால்கள்... பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி?!

130–ல் 85% ஷார்ட் பால்கள்... வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி?!

``ரஸல்லின் அந்த மூன்று ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை” – ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது சொன்ன வார்த்தைகள் இவை. நூற்றுக்கு நூறு உண்மை.

Published:Updated:

130 பந்துகளில் 85 சதவிகிதம் ஷார்ட் பால்கள்... பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி?!

``ரஸல்லின் அந்த மூன்று ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை” – ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது சொன்ன வார்த்தைகள் இவை. நூற்றுக்கு நூறு உண்மை.

130–ல் 85% ஷார்ட் பால்கள்... வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி?!

`ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (481) அடிக்கப்பட்டது, இந்த மைதானத்தில்தான். 2015, ஜனவரிக்குப் பிறகு இந்த மைதானத்தின் சராசரி ரன் ரேட் 6.98' - ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் பற்றி புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.

``இது அற்புதமான பேட்டிங் பிட்ச். பெளலர்கள் இந்த பிட்சிலிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்தப் போட்டியில் நிச்சயம் நிறைய ரன்கள் அடிக்கப்படும்!”
மைக்கெல் ஹோல்டிங், பிட்ச் ரிப்போர்ட்டில் சொன்னது.

இப்படி டெக்னிக்கலாகவும் புள்ளிவிவரங்களாலும் பேட்டிங்குக்கு சாதகமாகவே ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் இருந்ததால் நிச்சயம் இந்தப் போட்டியில் 300 ரன்கள் அடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேலைக்குச் சென்றவர்கள் `வீட்டுக்கு வந்து ரெண்டாவது இன்னிங்ஸைப் பார்ப்போம்' என டிவியை ஆன் செய்தால், அதில் மேட்ச் முடிந்து ஹைலைட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலை வந்ததுதான் மிச்சம். 50 ஓவர் போட்டி இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்தே 35.2 ஓவர்களில் முடிந்தது. டி20 போட்டிகளைவிட விரைவாக முடிந்தது.

ஜேசன் ஹோல்டரைப் பராட்டும் சக வீரர்கள்.
ஜேசன் ஹோல்டரைப் பராட்டும் சக வீரர்கள்.

எப்படி பேட்டிங்குக்கு கைகொடுக்கும் இந்த பிட்ச்சில் இப்படிக் குறைவான ஸ்கோர் பதிவானது? பிட்ச்சின் தன்மை மாறிவிட்டதா அல்லது கணிப்பு தவறாகிவிட்டதா? எதுவும் மாறவில்லை. இந்த மேட்சை `ஷார்ட்’டாக முடிக்க முடிவு செய்துவிட்டனர் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள். ஆம்! ஷார்ட் பாலைக்கொண்டே ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

``நான் இதுவரை பார்த்த ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு போட்டியிலும் இவ்வளவு ஷார்ட் பால்கள் வீசியதில்லை” - கமென்ட்டரி பாக்ஸில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை. ஆம், ஆட்டம் முழுவதும் ஷார்ட் பால்களால் நிரம்பியிருந்தது. பாகிஸ்தானுக்கு வீசப்பட்ட 130 பந்துகளில் 85 சதவிகித பந்துகள் ஷார்ட் மற்றும் பேக் ஆஃப் தி லென்த்தில் வீசப்பட்டது. பாகிஸ்தான் பேட்டிங்கை முற்றிலுமாகக் குளறுபடியாக்க வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திய ஒரே ஆயுதம் பெளன்ஸர்கள்! அதை பாகிஸ்தானும் கடைப்பிடித்தனர். இந்தப் போட்டியில் விழுந்த 13 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகள் ஷார்ட் பாலில் எடுக்கப்பட்டவை.

ரஸல் மேஜிக் (மூன்று ஓவர், நான்கு ரன்)

பவர் ப்ளே முடிந்து 12-வது ஓவரில் ஒஷேன் தாமஸ் பந்துவீச வருகிறார். ஓவருக்கு ஒரு விக்கெட் வீழ்த்துகிறார். விக்கெட் வீழ்த்த அவர் பயன்படுத்திய ஆயுதம் பெளன்ஸர்கள். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்செல்கிறார் தாமஸ். அவரைப்போலவே ஜேசன் ஹோல்டரும் 17-வது ஓவரில் மீண்டும் பந்து வீச வந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அதில் இரண்டு விக்கெட்டுகள் ஷார்ட் பால் போட்டு எடுக்கப்பட்டவை. மற்றொன்று பேக் ஆஃப் தி லென்த்தில் போடப்பட்டது.

மேஜிக் நிகழ்த்திய ரஸல்.
மேஜிக் நிகழ்த்திய ரஸல்.

ஹோல்டர் மூன்று விக்கெட் வீழ்த்தியிருக்கலாம், ஒஷேன் தாமஸ் நான்கு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருக்கலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் விதை ரஸல் போட்டது. ஒஷேன் தாமஸ் பந்து வீச வருவதற்கு முன், ஜேசன் ஹோல்டர் கம்பேக் கொடுப்பதற்கு முன்னே எப்படி இந்த பிட்ச்சில் பந்துவீச வேண்டும் என 6-வது ஓவரிலேயே பாடமெடுத்துச் சென்றுவிட்டார் ஆண்ட்ரே ரஸல்.

``ரஸல்லின் அந்த மூன்று ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை” - ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது சொன்ன வார்த்தைகள் இவை. நூற்றுக்கு நூறு உண்மை.

கட்… 6-வது ஓவருக்கு ரீவைண்டு

ஏற்கெனவே சொன்னதுபோல் அந்த மைதானத்தில் பந்து ஸ்விங் ஆகாது. அதனால் ஃபுல் லென்த்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன் அழகாக டிரைவ் ஆட வசதியாக இருக்கும். பெளலருக்கு சுத்தமாக உதவாத அந்த மாதிரி ஒரு தரையில் பேட்ஸ்மேனைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் `அட்டாக்’ செய்வதே ஒரே வழி. ரன்கள் போகலாம். ஆனால், விக்கெட் எடுக்க அதுதான் சரியான வழி. வேரியேஷன்கள் மூலம் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்த முடியும். இந்தச் சூத்திரத்தைதான் முதல் ஓவரை வீச வரும் முன்பே புரிந்து வைத்திருந்தார் ரஸல். 6-வது ஓவரை வீச வருகிறார் ரஸல். ரன்கள் போனாலும் சரி, தமக்கு விக்கெட்தான் முக்கியம் என்பதை உணர்ந்து பெளன்ஸர்களாய் வீசினார். ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு பந்துகளூம் ஷார்ட் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள்தான்.

ஐ.பி.எல் போட்டிகளில் 135 ஆவ்ரேஜ் வேகத்தில் வீசிய ரஸல், நேற்று 140 கி.மீ வேகத்தில் வீசினார். அந்த வேகம், அந்த கன்சிஸ்டன்சி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறச்செய்தது. ஒரே லென்த்தில் வீசப்பட்டாலும், அதில் எப்படியெல்லாம் வேரியேஷன்ஸ் காட்ட முடியுமோ அத்தனையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்குக் காட்டினார் ரஸல். மூன்று ஓவர்களில் 16 ஷார்ட் பால்கள் வீசினார். முதல் இரண்டு ஓவர் முழுவதும் ஷார்ட் பாலாகவே வீசினார். அதில் வெற்றியும் கண்டார்.

ரஸல், ஹரிஸ் சொஹைல் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு வீழ்த்தினார். அவருக்கு வீசப்பட்ட முதல் மூன்று பெளன்ஸர்களும் உடம்பை நோக்கி வந்தது. அதுவும் வெவ்வேறு வேகத்தில். மூன்றுமே டாட் பால்! அடுத்த பந்தும் அதே ஷார்ட் லென்த்தில் வீசப்பட்டது. ஆனால், இந்த முறை உடம்பை நோக்கி வராமல் கொஞ்சம் ஆஃப் சைடு பக்கம் விலகிச் சென்றது. எக்ஸ்ட்ரா பேஸ் காரணமாக எதிர்பார்த்ததைவிட அதிகம் பெளன்ஸ் ஆனது. ஹரிஸை கட் செய்யத் தூண்டும்படி வலை விரித்த அந்தப் பந்தைத் தொட முயன்று எட்ஜாக, கீப்பரிடம் கேட்ச்சானார்.

ரஸல்லின் அந்த மூன்று ஓவர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பெளலர்களிடமும் பெரியதாக தாக்கம் ஏற்படுத்தியது. அதற்கு உதாரணம், ஜேசன் ஹோல்டர். அவரின் முதல் இரண்டு ஓவர்களையும் (அதாவது ரஸல் பந்து வீச வருவதற்கு முன்) கடைசி மூன்று ஓவர்களையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே தெரிந்துவிடும் ரஸலின் தாக்கம் ஏற்படுத்திய விளைவை. முதல் இரண்டு ஓவர்களில் மூன்றே ஷார்ட் பால்கள் வீசிய ஹோல்டர், ரஸலின் ஸ்பெல்லுக்குப் பிறகு வீசிய மூன்று ஓவர்களில் 15 ஷார்ட் பால்கள் வீசினார். அதில் மூன்று விக்கெட்டுகளும் அடக்கம்.

அவர் மட்டுமல்ல, பவர் ப்ளே ஓவர்களில் ரஸல் பந்து வீசுவதையும் அதற்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதையும் கூர்ந்து கவனித்த ஒஷேன் தாமஸ், அவரும் தன் பங்குக்கு ஷார்ட் பால்களால் மிரட்டினார். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ``மேட்ச் தொடங்குவதற்கு முன்பே இந்த பிளான் தயாரிக்கப்பட்டுவிட்டதா?'' எனக் கேட்டதற்கு ``இல்லை. ரஸல்தான் அந்த வழியைக் காண்பித்தார்” என பதில் கூறினார் ஆட்டநாயகன் தாமஸ். ஆம், ரஸல்தான் அவர்களுக்கு அந்தப் பாதையைக் காட்டினார். அவர் போட்டுச் சென்ற பாதையில் இவர்கள் அழகாகப் பயணப்பட்டனர்.

ஒஷேன் தாமஸ்.
ஒஷேன் தாமஸ்.

பிறகு 106 என்ற எளிய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெயில் அதிரடியான தொடக்கம் தந்து, தன்னுடைய கடைசி உலகக் கோப்பையை அரை சதத்தோடு தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் அவர் அடித்த மூன்று சிக்ஸர்களால் உலகக் கோப்பையில்அதிக சிக்ஸர் (40) அடித்த வீரரானார்.

இந்தத் தோல்வியின் மூலம் தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது பாகிஸ்தான். அந்த அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த ஆறுதலான ஒரே விஷயம் முகமது ஆமிரின் செயல்பாடு மட்டும்தான். அவரின் பலமான ஸ்விங்குக்கு, பிட்ச் துளியும் ஒத்துழைக்காதபோதும் நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதற்கு முன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.

அரைசதம் அடித்த கிறிஸ் கெய்ல்!
அரைசதம் அடித்த கிறிஸ் கெய்ல்!

105 ரன்னுக்கு ஆல் அவுட். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. இந்தப் போட்டியை நிச்சயம் மற்ற அணி வீரர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள், முக்கியமாக இங்கிலாந்து. ஷார்ட் பால்களை எதிர்கொள்வதில் இவ்வளவு தடுமாற்றம், அதுவும் உலகக் கோப்பைபோல் ஒரு பிரமாண்டத் தொடரில் இவ்வளவு எளிதாக பேட்ஸ்மேன்கள் பலியாவது பாகிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல, உலகக் கோப்பைக்கும் பின்னடைவுதான்!