Published:Updated:

டி20 கிரிக்கெட்டின் 'லார்டு' இந்த பொலார்டு...பொல்லாதவனின் 6 பால் 6 சிக்ஸர் சாதனை நிகழ்ந்தது எப்படி?

பொலார்டு

இந்த 6 சிக்ஸர் அடிவாங்குவதற்கு முந்தைய ஓவரில்தான் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்திருந்தார் அகிலா தனஞ்செயா. எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் என வெஸ்ட் இண்டீஸின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரையும் அடுத்தடுத்த டெலிவரிக்களில் வெளியேற்றி மிரட்டியிருந்தார்

டி20 கிரிக்கெட்டின் 'லார்டு' இந்த பொலார்டு...பொல்லாதவனின் 6 பால் 6 சிக்ஸர் சாதனை நிகழ்ந்தது எப்படி?

இந்த 6 சிக்ஸர் அடிவாங்குவதற்கு முந்தைய ஓவரில்தான் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்திருந்தார் அகிலா தனஞ்செயா. எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் என வெஸ்ட் இண்டீஸின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரையும் அடுத்தடுத்த டெலிவரிக்களில் வெளியேற்றி மிரட்டியிருந்தார்

Published:Updated:
பொலார்டு

டி20 யுகத்தில் கிரிக்கெட் மொத்தமும் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிவிட்ட நிலையில், கடந்த காலங்களில் அசாத்தியமாக பார்க்கப்பட்ட சாதனைகள் அனைத்தும் இன்றைய பேட்ஸ்மேன்களால் அசால்ட்டாக அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் என்கிற சாதனை மட்டும் இந்த தலைமுறை பேட்ஸ்மேன்களுக்கு இன்னமும் கைக்கூடவே இல்லை.

2007-ம் ஆண்டு கிப்ஸும், யுவராஜ் சிங்கும் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்திருந்தனர். கிட்டத்தட்ட 14 வருடங்களாக இந்த சாதனையை எந்த மாடர்ன் டி20 பேட்ஸ்மேனாலும் நிகழ்த்திக்காட்ட முடியவில்லை. கொஞ்சம் தாமதமானாலும் சாதனைகள் எப்போதும் சரியான நேரத்தில் சரியான நபர்களால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேதானே இருக்கும்! ஆம், இந்த 14 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையான 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டிவிட்டார் கரிபியனின் கீரன் பொலார்ட். கிப்ஸ், யுவராஜ் சிங் வரிசையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பொலார்ட்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கையின் ஆஃப் ஸ்பின்னரான அகிலா தனஞ்செயா வீசிய ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக்கியிருக்கிறார் பொலார்ட். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த 6 சிக்ஸர் அடிவாங்குவதற்கு முந்தைய ஓவரில்தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்திருந்தார் அகிலா தனஞ்செயா. எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் என வெஸ்ட் இண்டீஸின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரையும் அடுத்தடுத்த டெலிவரிக்களில் வெளியேற்றி மிரட்டியிருந்தார். ஆனால், பொலார்ட் இதையெல்லாம் நினைத்து ஒரு இன்ச் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அகிலா தனஞ்செயா
அகிலா தனஞ்செயா

ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் இரும்புக்கை மாயாவியாக க்ரீஸுக்குள் நின்றுக்கொண்டே லாங்-ஆன், லாங்-ஆஃப் என பௌலரின் தலைக்கு மேலே 6 சிக்சர்களையும் பறக்கவிட்டார். வேறு எதாவது பேட்ஸ்மேனாக இருந்தால் ஹாட்ரிக் எடுத்த பௌலர் என்பதற்காக சுமாரான பந்தாக வீசினாலும் டிஃபன்ஸ் செய்து ஜாக்கிரதையாக ஆடியிருப்பார். ஆனால், பொலார்டுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சிக்சர் அடிக்க வேண்டியது என் வேலை, எதிரில் யார் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்கிற இந்த அணுகுமுறைதான் பொலார்டின் சிக்சர்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்.

கிரிக்கெட் உலகில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமான வீரராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் பொலார்ட் மட்டுமே. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் என்பதையே மறந்து ஒட்டுமொத்தமாக டி20 அணியாக வெஸ்ட் இண்டீஸ் உருமாறி கரீபிய வீரர்கள் உலகம் முழுவதும் ப்ரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினாலும் கெய்ல், ரஸல், பிராவோ, பூரன், ஹெட்மயர் என அசால்ட்டாக சிக்சர்களை பறக்கவிடும் பல வீரர்கள் இருந்தாலும் அவர்கள் யாராலும் செய்ய முடியாத 6 சிக்சர்கள் சாதனை பொலார்டால் மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது. காரணம், அவர் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமில்லை. அவர் ஒரு கேப்டனும் கூட. லாக்டெளனுக்குப்பிறகு நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீகில் பொலார்ட் கேப்டனாக தலைமை தாங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த சீசனில் ஒரு போட்டியை கூட டிரின்பாகோ அணி தோற்கவில்லை. இதுவே மிகப்பெரிய சாதனை. சமீபத்தில் நடந்த முடிந்த சூப்பர் 50 உள்ளூர் தொடரில் பொலார்ட் கேப்டான ட்ரினிடாட் அணியே கோப்பையை வென்றிருந்தது. இதிலும், அந்த அணி ஒரு போட்டியை கூட தோற்கவில்லை. இடையில், ஐ.பி.எல்-ல் மும்பை அணியிலும் சில போட்டிகளில் கேப்டனாக இருந்தார். மும்பை அணியும் சாம்பியன் ஆகிவிட்டது. இப்படி கடந்த 6 மாதத்தில் பொலார்ட் தொட்டதெல்லாம் ஹிட்தான் என்கிற நிலையே இருக்கிறது.

பொலார்ட், ஜேசன் ஹோல்டர்
பொலார்ட், ஜேசன் ஹோல்டர்

இந்த கேப்டன்ஷிப் அனுபவங்கள் பொலார்டை ஒரு பேட்ஸ்மேனாகவும் கூடுதலாக மெருகேற்றியிருக்கிறது. அவரால் எளிதில் எதிரணியின் திட்டங்களையும், எதிரில் இருக்கும் பௌலர்களின் மனநிலையையும் கணித்துவிட முடிகிறது. ''ஹாட்ரிக் சிக்சர்களை அடித்தவுடனேயே பௌலரின் மீது ப்ரஷர் விழுந்திருக்கும் எ ன்பதால் அப்போதே 6 சிக்சர்களையும் அடித்துவிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்'' என்று சிக்ஸ் சிக்ஸர் சீக்ரெட்டை சொன்னார் பொலார்ட்.

உள்ளூர் போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட பிறகு 2007 உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொலார்டுக்கு இடம் கிடைத்தது. அடுத்தடுத்த சில ஆண்டுகள் சிறப்பாக அமையாவிட்டாலும் 2010-க்குப்பிறகு டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக பொலார்ட் வளர்ந்தார். முக்கியமான வீரராக உருவெடுக்கும்போதே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டில் இருந்த சில பிரச்னைகள் காரணமாக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு அணியிலிருந்தே நீக்கப்பட்டார். இதனால் 2015 உலகக்கோப்பை தொடரில் கூட பொலார்டால் ஆட முடியவில்லை. ஆனால், அடக்கினால் அடங்குகிற ஆளா பொலார்ட்?? உலகம் முழுவதும் ப்ரீமியர் லீக் போட்டிகளில் வெளுத்தெடுத்தார். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் சாம்பியனான அனைத்து சீசனிலும் வெறித்தனமான பங்களிப்பை அணிக்காக செய்திருந்தார். கிரிக்கெட் போர்டில் சில மாற்றங்களுக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்தார். யாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அணியை விட்டே வெளியேற்றினார்களோ அவர்தான் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் லிமிட்டெட் ஓவர் கேப்டன்!

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சும்மா பேட்டை தூக்கினாலே என்டர்டெயின்மென்ட்தான். இப்போது பொலார்ட் 6 சிக்சர்களை அடித்து கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக குஷிப்படுத்திவிட்டார். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் 'இப்பவே கப்ப தூக்கி எங்க கைல குடுங்கப்பா' என்கிற லெவலுக்கு ஜாலியாகி விட்டனர். பொலார்ட் இதே ஃபார்மை தொடர்ந்தால் 2021 ஈ சாலா கப்பும் நம்தில்லையா கோலியன்ஸ்?!