Election bannerElection banner
Published:Updated:

நெஹ்ரா போன்ற கிரிக்கெட்டர்கள் போதும், வெறும் Proud இந்தியர்கள் வேண்டாமே... ஒரு ரசிகனின் குரல்!

Ashish Nehra
Ashish Nehra

இன்று ஆசிஷ் நெஹ்ரா பிறந்தநாள். இது நெஹ்ராவைப் பற்றியப் பதிவுதான். ஆனால், அவரைப் பற்றிய பதிவு மட்டுமே அல்ல. அவர் பெருமை பேச, இன்றைய சூழலையும் சமீபத்திய நிகழ்வுகளையும் அலசவேண்டியிருக்கிறது!

காலம் செல்லச் செல்ல மனிதர்கள் முதிர்ச்சியடையவேண்டும் என்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் அந்த மெச்சூரிட்டி அடையாமலேயே போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. அறியாப் பருவத்தில் நாம் எழுப்பிவைத்திருந்த பிம்பங்களை உடைப்பதுவே முதிர்ச்சியின் முதல் வேலையாக இருக்கிறது. உயிராய் நினைத்த கிரிக்கெட்டை, எழுதத் தொடங்கியபோது இருந்த சந்தோஷம் இந்த நான்கு ஆண்டுகளிலேயே தொலைந்துபோய்விட்டது. 20 ஆண்டுகால பிம்பங்கள் கண்முன் பொய்த்துப்போகும்போது இந்த விரக்தி ஏற்படுவது சகஜம்தானே.

2002 சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை ஜெயசூர்யாவோடு இணைந்து தூக்கியபோது கங்குலியைப் பார்த்து அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. முதல் ஹீரோவாக மனதுக்குள் அரியாசனமிட்டு அமர்ந்தது அந்த வங்கப்புலி. இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்து நினைத்து, அந்த அரியாசனத்தைச் சுற்றி மாபெரும் பளிங்குக் கோட்டை கட்டிவைத்திருந்தேன். ஆனால், காலப்போக்கில் மதியற்ற மனம் கட்டிய அந்த மதிலற்ற கோட்டை நொறுங்கிப்போனது.

The image shatters
The image shatters

கங்குலியின் பேட்டிங்கால் கட்டப்பட்ட கோட்டையா அது, இல்லை. கங்குலி எனும் ஆளுமையால், உலக கிரிக்கெட் அரங்கில் அவர் காட்டிய கம்பீரத்தால் ஈர்க்கப்பட்டு வந்த காதல் அது. கங்குலி எனும் தலைவனைத்தான் கொண்டாடிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த ஆளுமை சுயமாகக்கூட பேச முடியாமல் ஒரு பதவியில் இருக்கிறார், இதுவரை எந்த BCCI தலைவரும் செய்யாத வகையில், கௌரவ செயலாளருடன் இணைந்து கோப்பையைக் கொடுக்கிறார் எனும்போது அவரா இவர் என்று மனம் கேள்விகேட்கிறது. லார்ட்ஸ் பால்கனியிலும், ஆஸ்திரேலியாவிலும் வெளிப்பட்ட கம்பீரம் எங்கு போனது! இனி எப்படி ‘தாதா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தமுடியும்!

இந்த சில மாதங்களில் உடைந்துபோயிருப்பது நான் கட்டிய கோட்டை மட்டும்தானா! சச்சின் - 24 வருட சகாப்தத்தின் முகவுரை 220 எழுத்துக்கள் கொண்ட ஒரு ட்வீட்டால் இப்போது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி இளைஞர்களின் குழந்தைப்பருவம் நொறுங்கிப்போயிருக்கும்!

ஒருவகையில் நாம் மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையோ?! ஒரு விளையாட்டு வீரரிடம் அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் அதிகம் எதிர்பார்க்கிறோமோ! அதிகாரத்துக்கு எதிராக ஏன் கங்குலி நிற்கவேண்டும், கம்மின்ஸும் பிரெட் லீயும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு நிதி உதவி செய்தால் சச்சின் ஏன் செய்யவேண்டும்? பிரபலங்களிடம் நாம் ஏன் எல்லாமே எதிர்பார்க்கிறோம், தவறு நம்மிடம்தானோ! நம்மிடம் பிரச்னை இருக்கிறது. ஆனால், நம்மிடம் மட்டுமே பிரச்னை இல்லை. அவர்கள் விளையாட்டு வீரர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்களா, இல்லையே!

இன்று சமூக வலைதளங்களில் எல்லோரும் influencer-ஆகவே செயல்படுகிறார்கள். ஆனால், அது வணிக ரீதியலியான influence-ஆக இருக்கும்வரை பிரச்னை இல்லை. கருத்துகளில் தாக்கம் ஏற்படுத்தவல்லவா இன்றைய கிரிக்கெட்டர்கள் முயற்சிக்கிறார்கள். கிரிக்கெட்டர் என்பதைத்தாண்டி ‘ஜென்டில்மேன்’, ‘நல்லவர்’ என்ற அடையாளம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.

பெரும்பாலான இந்திய கிரிக்கெட்டர்களின் பயோவில் கிரிக்கெட் இருப்பதில்லை. ஆனால், இந்திய தேசியக்கொடி இடம்பெற்றுவிடுகிறது. விளையாட்டும் கலையும் எல்லைகள் கடந்தது என்பார்கள். ஆனால், அனைவர் பயோவிலும் இருக்கும் வாசகம் - Proud Indian. பல வகைகளை அதை நிறுவவும் ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்கள். கிளவுசில் ராணுவத்துக்கு மரியாதை செய்வதிலிருந்து, ‘இந்திய வீரர்களுக்கு ஆதரவு தரவில்லையெனில் வேறு நாட்டுக்குப் போய்விடுங்கள்’ என்பதுவரை அது தொடர்கிறது.

இவர்கள் சமூகத்துக்கும், அதன் தேவைக்கும் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்னை. சமூக வலைதளம் மூலம் காசு பார்க்கலாம். ஒரு பிளாஸ்டிக் பிம்பத்தை உருவாக்கலாம். அதேசமயம் பிரச்னை இல்லாமலும் இருந்துகொள்ளவேண்டும். இதுதான் இன்றைய பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் ஃபார்முலா.

இதையெல்லாம் யோசிக்கும்போது ஒவ்வொருவர் மீதான மரியாதையும் அடிபடுகிறது. பிம்பங்கள் நொறுங்குகிறது. இந்த சமூக முகமூடி அணியாமல் கிரிக்கெட்டராக மட்டும் இவர்களெல்லாம் இருந்திருக்கலாமோ என்றுதான் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது. அப்படி தோன்றும்போதுதான் நெஹ்ரா மீதான மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது!

நெஹ்ரா, எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. எதைப் பற்றியும் கருத்து சொல்வதில்லை. இன்னொருவரின் கருத்து தன் பெயரில் பதிவாவதையும் அவர் விரும்புவதில்லை. “நீங்கள் ஏன் சோஷியல் மீடியாவில் இல்லை” என்று அவரிடம் 2017-ல் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர் சொன்ன பதில் இன்றும் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் வாட்ஸ்அப் பயன்படுத்த கற்றுக்கொண்டதே இந்த வருடம்தான். என் மனைவி சமீபத்தில்தான் எனக்கு ஐ-போன் 7 வாங்கிக்கொடுத்தார். அதற்கு முன்புவரை நோக்கியா E 51 போன்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். இந்த போனிலும் எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், என்னை நிறையப் பேர் தொடர்பு கொள்கிறார்கள். சமீபத்தில்கூட ஒருவர் அழைத்து, 'மாதத்துக்கு 3 ட்வீட் செய்யுங்கள், வருடம் 80 லட்ச ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் என்ன ட்வீட் செய்யவேண்டும் என்பதை நாங்கள் சொல்லிவிடுகிறோம்’ என்றார். நான் ஏன் மற்றவர்கள் பேச்சைக் கேட்கவேண்டும். என் மனது சொல்வதைத்தான் நான் கேட்பேன். பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக என்னால் எதையும் செய்ய முடியாது.
ஆசிஷ் நெஹ்ரா

அவ்வளவுதான். அவர் இன்றும் கிரிக்கெட்டராக மட்டுமே இருக்க விரும்புகிறார். பதினெட்டரை வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய பௌலர் என்பதில்தான் பெருமை கொள்கிறார். ஆனால், அப்படி ஒதுங்கியே இருக்கும் ஆளும் இல்லை அவர். தன்னோடு சேர்ந்து மனோஜ் பிரபாகர், அஞ்சும் சோப்ரா, ஷிகர் தவான், ரிஷப் பன்ட் உள்பட இந்திய அணிக்கு 12 வீரர்களை உருவாக்கிக் கொடுத்த தன் பயிற்சியாளர் தராக் சின்ஹா வீடு இல்லாமல் தவித்தபோது அவருக்கு வீடு வாங்கிக் கொடுத்தவர் இவர்! சமூக வலைதளங்கில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே தவிர, சமூகத்திடமிருந்து இல்லை.

இவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், எல்லோரும் இப்படி இருந்திருக்கலாமோ என்று தோன்றிக்கொண்டே இருக்கும். இருந்திருந்தால், சிறு வயதில் நாம் கட்டியிருந்த பிம்பங்கள் உடையாமல் இருந்திருக்கும். எல்லோரும் நெஹ்ராவைப் போல் இருந்திருக்கலாமோ! வேண்டாம்.

இங்கு நெஹ்ராவைப்போல் என்பதிலும் ஆபத்து இருக்கிறது. மீண்டும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்கள் அல்லாமல், குணாதிசியங்களை வைத்து நாம் வீரர்களை மதிப்பிடத் தொடங்கிவிடுவோம். இந்த இடத்தில்தான் அவர்களுக்கும் அந்த ஜென்டில்மேன் பிம்பத்துக்கான தேவையும் ஏற்பட்டுவிடுகிறது. அதனால், அதைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது!

பிறகு ஏன் இவ்வளவு எழுதவேண்டும்? கிரிக்கெட்டர் நெஹ்ராவைப் பற்றி முதல் வரியில் இருந்து எழுதியிருந்தால் பெரும்பாலானவர்கள் சிரித்திருப்பீர்கள். அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்றுதான் தோன்றும். 'மாரி' திரைப்படத்தில், “ஆசிஷ் நெஹ்ராவுக்கு யாராவது லாஸ்ட் ஓவர் கொடுப்பாங்களாடா” என்று இடிதாங்கியை அடிப்பார் தனுஷ். அந்த இடத்தில்தான் இந்தச் சமூகம் அவரை வைத்திருக்கிறது. முகமது சிராஜ், அஷோக் திண்டாவுக்கு முன்பு மீம் கிரியேட்டர்கள் டார்கெட் செய்தது அவரைத்தானே.

Ashish Nehra
Ashish Nehra

இந்தியா ரன்களை வாரிவழங்கிய 2003 உலகக் கோப்பை ஃபைனலில் ஆறுக்கும் குறைவான எக்கானமி வைத்திருந்த ஒரே பிரதான பௌலர் இவர்தான். 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான இவரது ஸ்பெல் பெரிதாக பேசப்பட்டதேயில்லை. வழக்கம்போல் அன்றும் நம் பார்வையெல்லாம் சச்சின் மீதுதான் இருந்தது. ஆனால், அவர் வீசிய அசாத்திய ஸ்பெல், இந்திய வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது. 10 ஓவர்களில் வெறும் 33 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார். 45-வது ஓவரில் 1 ரன், 47-வது ஓவரில் ஒரு ரன் என அவ்வளவு சிக்கனமாகப் பந்துவீசியிருப்பார்.

அதேபோட்டியில் ஒரு கேட்ச் பிடிப்பதற்காக அவர் டைவ் அடித்து விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஃபைனலில் ஆடமுடியாமல் போனது. இப்படி அணிக்காக பல ரிஸ்க்குகளும் எடுத்திருக்கிறார். பல்வேறு அசாத்திய செயல்பாடுகளையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த நெஹ்ராவைப் பற்றி நாம் அதிகம் பேசமாட்டோம். நம்மிடம் இங்குதான் பிரச்னை.

Ashish Nehra
Ashish Nehra

கிரிக்கெட் களத்தில் அவர் ஒன்றும் சூப்பர் ஹீரோவாக இருந்துவிடவில்லை. ஆனால், எந்தவொரு சூப்பர் ஹீரோவுக்கும் இருக்கும் ‘கிரே ஷேட்’ இவரிடம் இருந்ததில்லை. கிரிக்கெட்டராக இருந்தவர், கிரிக்கெட்டராக மட்டுமே இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட்டில் இருப்பவர்களும் இப்படியே இருந்துவிட்டால், இளம் தலைமுறைகளின் பிம்பங்களாவது உடையாமல் இருக்கும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு