ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் வார்னர் 166 ரன்களுடனும் லாபஸ்சேஞ்ச் 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே வார்னர் - லாபஸ்சேஞ்ச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 361 ரன்கள் சேர்த்தநிலையில் 162 ரன்களுடன் லாபஸ்சேஞ்ச் ஷாகின்ஷா அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த ஸ்டீவன் ஸ்மித் நீண்டநேரம் நிலைக்கவில்லை. அவர் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் முச்சதத்தைப் பதிவு செய்தார். 389 பந்துகளில் 37 பவுண்டரிகளுடன் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வீரர் ஒருவர் அடித்த முதல் முச்சதம் இதுவாகும்.
அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்காக முச்சதம் அடித்த 7வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன், டான் பிராட்மேன், பாப் சிம்சன், பாப் கௌபர், மார்க் டெய்லர், மேத்யூ ஹைடன் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் முச்சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களாவர். இதற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்னி மைதானத்தில் மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்திருந்தார். அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிராக 15 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2004-ம் ஆண்டு முல்தான் மைதானத்தில் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்திருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாகப் பதிவான முச்சதம்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்ச ஸ்கோர் என்பது ஜிம்பாப்வே அணிக்கெதிராக பெர்த் மைதானத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேத்யூ ஹைடன் விளாசிய 380 ரன்கள்தான். இன்றைய போட்டியில் வார்னர், அந்தச் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், அந்த அணியின் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் இருந்தபோது டிக்ளேர் செய்தார். வார்னர் 335 ரன்களுடனும் மறுமுனையில் மேத்யூ வேட், 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 126 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை அவர் முறியடித்தார்.