Published:Updated:

`போராட்டங்கள் வேண்டாமே... கறுப்புக்கு அனுமதியில்லை!' - வான்கடே சர்ச்சை #CAA #INDvAUS

வான்கடே மைதானம்
வான்கடே மைதானம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்துக்குள் கிரிக்கெட் ரசிகர்கள் கறுப்பு டி-ஷர்ட், கறுப்பு தொப்பிகள் போன்றவை அணிந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றன. தொடர்ந்து, இந்தச் சட்டத்துக்கு எதிராக பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வரும் வான்கடே மைதானத்தில் கறுப்பு நிறம் தொடர்பான பொருள்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புகள் எழக் கூடாது என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஷிகர் தவான் - கே.எல்.ராகுல்
ஷிகர் தவான் - கே.எல்.ராகுல்
BCCI

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்துக்குள் கிரிக்கெட் ரசிகர்கள் கறுப்பு டி-ஷர்ட், கறுப்பு தொப்பிகள் போன்றவை அணிந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில், ``நான் வான்கடே மைதானத்தில் இருக்கிறேன். இங்கு, கறுப்பு நிறம் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், கறுப்பு நிறம் போராட்டத்துக்கான அடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.

`இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, மிக மோசமானது!’ -குடியுரிமை சட்டத்தைச் சாடிய மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ``என்னுடைய நண்பன் கறுப்பு டி-ஷர்ட் அணிந்து வந்தான். ஆனால், அவன் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டான். ஏனெனில், அவன் தனது டி-ஷர்ட்டில் தேசியக் கொடியை அணிந்து வந்தான்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இந்தத் தடைக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வான்கடே மைதான ரசிகர்கள் குழு ஒன்று ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியைக் காணவரும் ரசிகர்கள், கறுப்பு நிற சட்டைகளை அணிந்து வரவேண்டாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று பதிவு செய்துள்ளனர்.

`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, #CAA நிலைப்பாடு!' - பேரவையில் ஆளுநர் உரை
பின் செல்ல