Published:Updated:

`கோலியின் முடிவால் இந்தப் போட்டியை இழக்க நேரிடலாம்!'- முதல் டெஸ்ட் குறித்து வி.வி.எஸ் லக்ஷ்மன்

கோலி - அஷ்வின்
கோலி - அஷ்வின் ( Ross Setford )

கோலியின் சில முடிவுகளும் காரணம் என நினைக்கிறேன். குறிப்பாக இரண்டாவது புதிய பந்து எடுத்த பின்னர், கோலியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலாவதாக ஆடிய இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட். அடுத்ததாகக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 348 ரன்கள் குவித்தது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலையில் ஆரம்பித்த போது பும்ரா, வாட்லிங் விக்கெட்டை வீழ்த்த, அடுத்து வந்த செளத்தியை இஷாந்த் ஷர்மா காலி செய்தார். அப்போது, நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள்தான் எடுத்திருந்தது.

ரஹானே
ரஹானே

எப்படியும் அந்த அணியை இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துவிடும் என நினைத்த நேரத்தில் களமிறங்கிய ஜேமிசன், அதிரடியாக 44 ரன்கள் எடுத்தார். கடைசி வீரராகக் களமிறங்கிய போல்ட், 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். டெயிலெண்டர்களின் உதவியுடன் நியூஸிலாந்து அணி 348 ரன்கள் குவித்தது. இதன்மூலம், அந்த அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. கடைசி மூன்று பார்ட்டனர்ஷிப் மூலம் அந்த அணி 132 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இறுதிக்கட்டத்தில் நியூஸிலாந்து அணியினர் அதிரடியாக ரன்கள் சேர்த்ததுக்கு கோலியின் தவறான முடிவு தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் டீ- பிரேக்கில் பேசிய வி.வி.எஸ் லக்ஷ்மன், ``டிம் செளத்தீயின் விக்கெட்டை இந்தியா எடுத்தபோது, நியூஸிலாந்து அணி 100 ரன்களுக்குள்தான் முன்னிலைபெறும் என நினைத்திருந்தோம். ஆனால், டெய்லெண்டர்களின் ஆட்டம் காரணமாக அந்த முன்னிலை என்பது 183 ஆகிவிட்டது.

வி.வி.எஸ் லக்ஷ்மன்
வி.வி.எஸ் லக்ஷ்மன்

இதற்கு கோலியின் சில முடிவுகளும் காரணம் என நினைக்கிறேன். குறிப்பாக, இரண்டாவது புதிய பந்து எடுத்த பின்னர், கோலியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அவர் அப்போது ஏற்படுத்திய ஃபீல்டிங், முறையாக இல்லை. வெளிநாடுகளில் விளையாடும்போது புதிய பந்து பெரிய அளவில் உதவும். ஆனால், புதிய பந்து எடுத்த 4-வது ஓவரில் அஷ்வினை பந்துவீச அழைக்கிறார். அணியில் தரமான மூன்று வேகப்பந்துவீச்சாளர் இருக்கும்போது, அவர்கள் புதிய பந்தை பயன்படுத்த அனுமதித்திருக்க வேண்டும். அதுவும் டெயிலெண்டர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்தான் சரியான ஆப்ஷன். ஆனால், கோலி அதை செய்யத் தவறிவிட்டார். இதனால் நாம் முதல் போட்டியை இழக்கக்கூட நேரிடலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு