Published:Updated:

SA vs IND: வீழ்ச்சிக்கு நடுவே கோலி சந்தித்த அந்த 15 பந்துகளும், வெளிக்காட்டிய நிதானமும்!

Virat Kohli
News
Virat Kohli ( ICC )

16வது பந்தில் கோலி அடித்த அந்த கவர் ட்ரைவிற்கு முன்பான 15 பந்துகளில் அவர் ஆடிய விதம்... அதுதான் மற்ற இன்னிங்ஸிற்கும் இந்த இன்னிங்ஸிற்குமான வித்தியாசம்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் கேப்டன் விராட் கோலி நின்று நிதானமாக, பொறுப்பாக ஆடி 79 ரன்களை அடித்திருந்தார்.
Rahul & Mayank Agarwal
Rahul & Mayank Agarwal
ICC

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியே டாஸை வென்றிருந்தார். இந்தப் போட்டியிலும் இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்தது. வழக்கம்போல, கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். ஆனால், இருவருமே அவர்களிடமிருந்து எதிர்பார்த்த இன்னிங்ஸை ஆடவில்லை. சீக்கிரமே அவுட் ஆகியிருந்தனர். மயங்க் அகர்வால் 15 ரன்களில் ரபாடாவின் பந்திலும் கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஒலிவியரின் பந்திலும் கேட்ச் ஆகி விக்கெட்டை விட்டிருந்தனர்.

ஓப்பனர்கள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் புஜாராவும் கேப்டன் கோலியும் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியை அவ்வளவு எளிதில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக ஆடுவதே புஜாராவின் வழக்கம். ஆனால், கடந்த போட்டியிலிருந்து புஜாரா இந்த வழக்கத்தை மாற்றத் தொடங்கியிருக்கிறார். கடந்த போட்டியிலேயே 90+ ஸ்டரைக் ரேட்டில் அரைசதம் அடித்திருந்தார். 90 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதெல்லாம் புஜாராவின் இயல்பே கிடையாது. 50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவார்; சமீபமாக அதைவிட கூட குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ச்சியாக சொதப்பலாக ஆடி அணியில் தனது இடம் கேள்விக்குறியாகி இருப்பதால் புஜாராவின் மனநிலை மாறியிருக்கிறது.

Kohli & Pujara
Kohli & Pujara
ICC
எத்தனை பந்துகளை எதிர்கொண்டு எத்தனை மணி நேரம் க்ரீஸில் நின்றோம் என்பதை விட எத்தனை ரன்கள் அடித்திருக்கிறோம் என்பதை வைத்தே நம்மை அளவிடுகிறார்கள் என்று புஜாரா உணர்ந்திருக்கக்கூடும்.

அதனாலயே, வழக்கத்தை விட அதிகமான பந்துகளுக்கு பேட்டை விட்டு அட்டாக்கிங்காக ஆட தொடங்கியிருக்கிறார். இந்த இன்னிங்ஸிலுமே கூட துணிச்சலாக பேட்டை விட்டு சிறப்பாக சில ட்ரைவ்களை ஆடியிருந்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளை மடக்கி அடித்திருந்தார். லெக் ஸ்டம்பில் வந்த பந்துகளுக்கு முழு மனதோடு பேட்டை விட்டு ஆடியிருந்தார். ஆனாலும், இந்த அட்டாக்கிங் இன்னிங்ஸ் புஜாராவிற்குத் தேவையான பெரிய இன்னிங்ஸாக மாறவில்லை. மார்கோ யான்சன் ரவுண்ட் தி விக்கெட்டாக வந்து 4 வது ஸ்டம்ப் லைனில் ஆங்கிள் இன்னாக வீசிய டெலிவரியில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகியிருந்தார். இந்த மாதிரியான டெலிவரிகளுக்கு எட்ஜ் ஆகி அவுட் ஆவதை புஜாரா நீண்ட கால வாடிக்கையாக வைத்திருக்கிறார். 77 பந்துகளில் 43 ரன்களை புஜாரா எடுத்திருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நம்பர் 5 இல் களமிறங்கிய ரஹானே, ரபாடாவின் ஓவரில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரொம்பவே ஒயிடாக சென்ற அந்த பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகியிருந்தார். ஆனால், அந்த பந்து மூன்றாவது ஸ்லிப்பை தாண்டி கொஞ்சம் தள்ளி விழுந்திருந்ததால் தப்பித்திருந்தார். இந்த வாய்ப்பை ரஹானே சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 9 ரன்களில் அதே ரபாடாவின் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

ஒரு பக்கம் முக்கியமான விக்கெட்டுகள் எல்லாம் வரிசையாக சரிந்தாலும் கேப்டன் கோலி மட்டும் நின்று நிதானமாக ஆடி அரைசதம் அடித்திருந்தார்.

மொத்தமாக 79 ரன்களை அடித்து அவுட் ஆகியிருந்தார். கடந்த 28 இன்னிங்ஸ்களில் கோலி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.
விராட் கோலி
விராட் கோலி
Kirsty Wigglesworth

கோலியிடம் நீண்டகாலமாக எதிர்பார்த்த 71வது சதம் இந்த இன்னிங்ஸிலும் சாத்தியப்படவில்லை என்றாலும் அந்தக் காத்திருப்பு சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் கொடுத்திருக்கிறது. ஏனெனில் அந்தளவுக்கு நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்து சிறப்பான இன்னிங்ஸை கோலி ஆடியிருக்கிறார்.

கோலி பெரிய இன்னிங்ஸ்களை ஆடாமல் இருப்பதற்கு அவர் பந்துகளை லீவ் செய்யும் கலையில் தடுமாறியதும் மிக முக்கிய காரணமாக இருந்தது. 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் இப்படித்தான் பந்துகளை லீவ் செய்வதில் தடுமாறி சொதப்பியிருப்பார். ஆனால், அதே கோலி 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்து ஆசையைத் தூண்டும் பந்துகளைக் கச்சிதமாக லீவ் செய்து வெற்றிகரமாக ஆடியிருப்பார். ஆண்டர்சனே கோலியின் லீவ் செய்யும் திறனைப் பாராட்டியிருந்தார். ஆனால், இப்போது சமீபமாக கோலி மீண்டும் பந்துகளை லீவ் செய்வதில் தடுமாறத் தொடங்கியிருந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளைத் துரத்தி சென்று அவுட் ஆகியிருந்தார். 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பந்துகளை லீவ் செய்வதில் கோலி காட்டிய மனப்பக்குவத்தை 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி காட்டியிருக்கவில்லை. இந்த தென்னாப்பிரிக்க தொடரிலுமே முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ரொம்பவே ஒயிடாக சென்ற பந்தைத் துரத்திச் சென்றே கோலி அவுட் ஆகியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பந்துகளை லீவ் செய்யும் விஷயம் தனக்குப் பின்னடைவாக இருப்பதை கோலியுமே உணர்ந்திருந்தார். 28 இன்னிங்ஸ்களில் அடிக்காத ஸ்கோரை இந்த இன்னிங்ஸில் அடித்ததற்கு அவர் பந்துகளை லீவ் செய்வதில் அதிக கவனத்தைச் செலுத்தியதும் ஒரு காரணமாக இருந்தது.

கோலி இந்த இன்னிங்ஸில் சந்தித்திருந்த முதல் 50 பந்துகளில் 66% பந்துகளை ஷாட் ஆட முயற்சியே செய்யாமல் லீவ் மட்டுமே செய்திருந்தார்.
Kohli
Kohli
ICC

கோலியின் கரியரிலேயே எந்த இன்னிங்ஸிலும் அவர் இத்தனை அதிகமாக பந்துகளை லீவ் செய்தது கிடையாது. குறிப்பாக, அவர் ஆடிய முதல் 15 பந்துகள் ரொம்பவே முக்கியமானது. இந்த 15 பந்துகளில் வெறும் இரண்டே இரண்டு பந்துகள் மட்டுமே கோலியின் பேட்டில் பட்டிருந்தது. அந்த இரண்டு பந்துகளும் மார்கோ யான்சன் ஓவர் தி விக்கெட்டில் வந்து மிடில் & லெக் ஸ்டம்பில் வீசியவை. மற்றபடி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவும் ஷார்ட்டாகவும் வீசிய பந்துகளை கோலி தொடவே இல்லை. 16 வது பந்தில்தான் கோலி முதல் ரன்னை அடித்திருந்தார். பவுண்டரி மூலம் அந்த ரன் வந்திருந்தது. யான்சனின் பந்தில் கவர் ட்ரைவ் மூலம் கோலி அந்த பவுண்டரியை அடித்திருந்தார். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இப்படி கவர் ட்ரைவ் அடிக்க நினைத்தே விக்கெட்டை விட்ட கோலி இங்கே தனது முதல் ரன்னையே கவர் ட்ரைவ் மூலம் அடிக்கிறார்.

ஆனால், 16வது பந்தில் கோலி அடித்த அந்த கவர் ட்ரைவிற்கு முன்பான 15 பந்துகளில் அவர் ஆடிய விதம்... அதுதான் மற்ற இன்னிங்ஸிற்கும் இந்த இன்னிங்ஸிற்குமான வித்தியாசம்.

சகட்டுமேனிக்கு பேட்டை விடாமல் தனக்கான பந்து வரும்வரை பிழையே இல்லாமல் கவர் ட்ரைவ் அடிப்பதற்கான நம்பிக்கை வரும் வரை கோலி காத்திருந்தார். காத்திருப்பின் பலனாக தனக்கென ஒரு பந்து கிடைத்தபோது கன கச்சிதமாக ஒரு ட்ரைவை ஆடியிருந்தார். எப்போதும் ட்ரைவ் ஆடிவிட்டு பந்தையே பார்க்கும் கோலி இந்த முறை அந்த 16வது பந்தில் ட்ரைவ் ஆடிய அடுத்த நொடியே தனது ஆஃப் ஸ்டம்பையும் கால் பாதங்களையுமே கவனித்து பார்த்தார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே கோலியின் கால்கள் சென்றிருக்கவில்லை. அதை உறுதிப்படுத்திய பிறகே பவுண்டரிக்குச் சென்ற பந்தை நோக்கி பார்வையைத் திருப்பினார். கோலி காட்டிய இந்த நிதானமும் ஜாக்கிரதையுமே இந்த இன்னிங்ஸில் தனித்துவமாக அமைந்தது.

Kohli
Kohli
BCCI

எந்தப் பந்துகளை ஆட வேண்டும் என்பதை விட எந்தப் பந்துகளை ஆடக்கூடாது என்பதில் கோலி தெளிவாக இருந்ததன் விளைவாக 92% கட்டுக்கோப்பான ஷாட்களையே ஆடியிருந்தார். பெரிதாக தடுமாறவே இல்லை.158 பந்துகளிலேயே அரைசதத்தைக் கடந்திருந்தார். கோலியின் கரியரிலேயே அவர் அடித்த இரண்டாவது மெதுவான அரைசதம் இது. கடைசியில் ரபாடாவின் பந்தில் ஒயிடாகச் சென்ற பந்தைத் துரத்திச் சென்றே அவுட் ஆகியிருந்தாலும் அது எந்தச் சமயத்தில் நிகழ்ந்தது என்பதை கவனிக்க வேண்டும். டெய்ல் எண்டர்கள் வரத் தொடங்கியதால் மட்டுமே கோலி அந்த ஷாட்டை ஆட முயன்றார். ரஹானேவோ புஜாராவோ குறைந்தபட்சமாக அஷ்வினோ கூட கோலியுடன் நின்றிருந்தால் ரபாடாவின் அந்தப் பந்தை கோலி அப்படித் துரத்திச் சென்று விக்கெட்டை விட்டிருக்கமாட்டார். இந்த இன்னிங்ஸில் சதம் அடிக்க தவறியிருந்தாலும் இதே பொறுமையை தக்க வைத்து ஆடுவார் எனில் கோலியின் 71வது சதத்தை விரைவிலேயே காணலாம். அது இரண்டாவது இன்னிங்ஸிலேயே நிகழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை.

கோலி அவுட் ஆன பிறகு, மற்ற விக்கெட்டுகளும் வேகமாக சரிய இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 17-1 என்ற நிலையில் இருக்கிறது. டீன் எல்கர் 3 ரன்களில் பும்ரா ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசிய பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

கோலியின் நிதானமான பேட்டிங்கும் அவர் அடித்த 79 ரன்களும் மட்டுமே முதல் நாளில் இந்திய அணிக்கு சாதகமான விஷயங்களாக அமைந்திருந்தன. பந்துவீச்சில் மிரட்டி இரண்டாம் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?