Published:Updated:

`ரன் மெஷின்' Retrieved... கிங் கோலி இஸ் பேக்!

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இப்படித் தடுமாறுவதைப் பார்க்கவே அவ்வளவு சங்கடமாக இருந்தது. ஆனால், நேற்றைய போட்டி விராட்டின் அந்த பழைய வெர்ஷனை கண்முன் காட்டிச் சென்றிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது இந்திய அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வெளியேறியிருந்தாலும், தன் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தால் அணியை மீட்டெடுத்தார் கேப்டன் விராட் கோலி. 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை, கரைசேர்த்து 156 என்ற ஸ்கோர் வருவதற்கு உதவினார். இந்திய அணி இந்தப்போட்டியில் தோற்றிருந்தாலும், விராட்டின் இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது.

அவர் அரைசதம் எடுத்தார் என்பதற்காக அல்ல. இரண்டு ஆண்டுகள் முன்பு ஒவ்வொரு பௌலரையும் அலறவிட்டுக்கொண்டிருந்த பழைய கோலி இந்தப் போட்டியில் தென்பட்டிருக்கிறார். மார்க் வுட் வீசிய 18-வது ஓவரின் அந்த 3 பந்துகளில் மீண்டும் தன் வருகையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.

முதல் போட்டியில் அரைசதம் அடித்த விராட், டி வில்லியர்ஸ் தனக்கு டிப்ஸ் கொடுத்ததாகச் சொன்னார். பந்தைக் கவனிக்குமாறு கோலியிடம் சொல்லியிருக்கிறார் ஏ.பி.டி. அதாவது ‘basics’ விஷயத்தில் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறார்.

கோலி #INDvENG
கோலி #INDvENG

அப்கிரேட் செய்யப்பட்ட ஃபைல்களில் சில சிக்கல்கள் ஏற்படும்போது, அதன் பழைய வெர்ஷனை நாம் ‘Retrieve’ செய்வோம். இப்போது விராட் கோலி அதைத்தான் செய்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் உலக கிரிக்கெட்டை அதிர வைத்துக்கொண்டிருந்த தன்னுடைய பழைய வெர்ஷனை மீண்டும் மீட்டெடுத்திருக்கிறார்.

சர்வதேச அரங்கில் சதங்கள் அடித்துக் குவித்துக்கொண்டவர், கடைசியாக ஹெல்மெட்டையும் பேட்டையும் சேர்ந்ததுபோல் உயர்த்திக் காட்டி 16 மாதங்கள் ஆகிவிட்டன. அவரின் 71-வது சதமும், ஆர்சிபி-யின் ஐபிஎல் கனவைப் போல் நனவாகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சதங்கள்தான் குறைந்ததா என்றால், இல்லை. அவரின் ஒட்டுமொத்த ஃபார்முமே சரியத் தொடங்கியது.

ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டின் தலைப்புச் செய்திகளை கடந்த சில மாதங்களாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்க, ஏலியன் லெவலில் ஆடிக்கொண்டிருந்த விராட் சில லெவல்கள் கீழே இறங்கினார். அவ்வப்போது சில பெரிய இன்னிங்ஸ்கள் ஆடினாலும், அவை விராட்டின் இன்னிங்ஸாக இருக்கவில்லை. 2020 விராட்டுக்கும் சரியாக அமையவில்லை என்று ரசிகர்கள் புலம்பத் தொடங்கினார்கள். ஆனால், விராட்டின் இந்த ஃபார்ம் வீழ்ச்சி 2018-ம் ஆண்டே தொடங்கிவிட்டது.

அக்டோபர் 2018 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடர். முதல் 3 போட்டிகளிலுமே சதமடித்து அமர்க்களப்படுத்தினார் விராட். அவர் உச்சகட்ட ரன் ஸ்கோரிங் ஃபார்மில் இருப்பதாக கொண்டாடினார்கள். ஆனால், இந்தத் தொடரில்தான் அதுவரை காட்டாத குறைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார் கோலி.

#INDvENG | Virat Kohli
#INDvENG | Virat Kohli

கோலியின் சிறப்பே, அவரின் கன்ட்ரோல்தான். சச்சின், ரோஹித் போல் அவர் ஷாட்கள் பேரழகாக இல்லாவிட்டாலும், கன்ட்ரோல் என்ற விஷயத்தில் இவருக்கு நிகராக யாரும் இருக்க முடியாது. ஷாட்டின் டைமிங், பிளேஸ்மென்ட் அவ்வளவு துல்லியமாக இருக்கும். பௌன்சர் வந்தால் புல் ஷாட் ஆடமாட்டார். ஆனால், அதே பந்தை, கிராஸ் பேட் கொண்டு மிகப் பிரமாதமாக மிட் விக்கெட் திசைக்கு அனுப்புவார். ரோஹித் ஷார்ட் பாலை ஆடும்போதுகூட விக்கெட் போவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், கோலியின் அந்த ஷாட், சர்க்கிளுக்கு முன்பே பிட்சாகிவிடும். ரவி சாஸ்திரி சொல்லும் ட்ரேஸர் புல்லட் போல் பவுண்டரியையும் அடைந்துவிடும்.

மற்ற வீரர்களின் சதங்களுக்கும் கோலியின் சதங்களுக்கும் இன்னொரு வித்தியாசம் இருக்கும் - பேட்ஸ்மேன்கள் பெரும் வாய்ப்புகள். கேட்ச் டிராப்கள், ஃபீல்ட் மிஸ்கள் என ஃபீல்டர்கள் நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுப்பார்கள். ஆனால், கோலியின் இன்னிங்ஸில் இப்படிப் பார்ப்பது அரிது. ஃபீல்டர்களுக்கு கேட்ச் வாய்ப்பே அதிகம் வழங்கமாட்டார். பெரும்பாலும் கிரவுண்ட் ஸ்ட்ரோக்ஸ் மட்டுமே ஆடுவதாலும், ‘ஏரியல்’ ஷாட்களில் அவரின் துல்லியம் வேறு லெவலில் இருப்பதாலும், ஃபீல்டர்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்புகளே கிடைக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவையெல்லாம் தலைகீழாக மாறியது. கோலியின் பர்ஃபக்‌ஷன் அடிபடத் தொடங்கியது. டைமிங் தவறியது. ‘ஏரியல்’ ஷாட்கள் கேட்ச் வாய்ப்புகளாக மாறின. ஆனால், கோலிக்குச் சாதகமாக அந்தத் தொடரில் ஒரு மிகப்பெரிய விஷயம் அமைந்தது - எதிரணி வெஸ்ட் இண்டீஸ். மோசமான ஃபீல்டிங்கால் இவர்கள் கோலியின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளாமல் போக, கோலி சதங்களாக அடித்துக் குவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோலியின் இன்னிங்ஸ்களைக் கூர்ந்து கவனித்தால் முன்பு இருந்த வித்யாசங்கள் தெளிவாகத் தெரியும். அதிகமாக கேட்ச் மூலம் அவுட் ஆகத் தொடங்கினார் விராட். முன்பும் கேட்ச் ஆவார். அவை ஸ்லிப் ஏரியாவில் அவுட்டாகும் அவருடையே ஒரே பிரச்னையாக இருக்கும். இல்லையெனில், 30-35 ஓவர்களில் களத்தில் ஓடிக்கொண்டே இருந்து, தன் ஸ்டாமினாவை இழந்து, ஷாட்டில் பலம் இல்லாமல் அவுட் ஆவார். ஆனால், சமீப காலமாக சாதாரணமாகவே மிட் ஆன், ஷார்ட் மிட் விக்கெட் ஃபீல்டர்களிடமெல்லாம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகத் தொடங்கிவிட்டார்.

Virat Kohli
Virat Kohli
Rick Rycroft via AP

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் எல்லாம் இப்படித்தான் அவுட் ஆகிக்கொண்டிருந்தார். முதல் ஒருநாள் போட்டி, ஹேசில்வுட் ஏற்படுத்திய பௌன்ஸ் அவரை வழக்கத்துக்கு மாறாக தடுமாற வைத்தது. தன்னுடைய வழக்கமான Cross bat slice அவரால் சரியாக ஆடமுடியவில்லை. டைமிங் தவறுகிறது. மிட் விக்கெட் திசையில் கேட்ச் ஆகி வெளியேறுவார். இதில் என்ன கொடுமையெனில், அதற்கு முன்பு இரண்டு முறை தப்பிப் பிழைத்திருப்பார். கம்மின்ஸ் பந்துவீச்சில் எட்ஜாகி ஷார்ட் ஃபைன் லெக் திசையில் செல்லும். அதை ஆடம் ஸாம்பா டிராப் செய்துவிடுவார். அதன்பிறகு மீண்டும் இன்னொருமுறை கமின்ஸ் ஓவரில் அப்படியே நடக்கும். ஆனால், இம்முறை ஃபீல்டருக்கு முன்பாகவே பந்து விழுந்துவிடும். ஒரே போட்டியில் 3 வாய்ப்புகள் கொடுத்திருப்பார் கோலி. இத்தனைக்கும் அன்று அவர் சந்தித்தது வெறும் 21 பந்துகளே!

21 பந்துகளில் 3 வாய்ப்பு கொடுக்கிறார் என்றால் அது நிச்சயம் பழைய கோலியாக இருக்க முடியாது அல்லவா! அடுத்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தும் அதேபோல்தான் அவுட் ஆகியிருப்பார். இப்படி கடந்த சில மாதங்களாக கோலியின் பர்ஃபக்‌ஷன் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. 2020 ஐபிஎல் தொடரில் மிடில் ஓவர்களில் பவுண்டரி அடிக்கவே அவ்வளவு தடுமாறினார் விராட். இந்த டி-20 தொடரின் முதல் போட்டியிலும்கூட அவர் அப்படித்தான் அவுட் ஆகியிருந்தார். இம்முறை பந்தின் டைமிங்கை சரியாகக் கணிக்கத் தவறி ஆட்டமிழந்தார். அவர் பழைய ஆள் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியது.

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இப்படித் தடுமாறுவதைப் பார்க்கவே அவ்வளவு சங்கடமாக இருந்தது. ஆனால், நேற்றைய போட்டி விராட்டின் அந்த பழைய வெர்ஷனை கண்முன் காட்டிச் சென்றிருக்கிறது. அதிலும் 18-வது ஓவரில் மார்க் வுட்டை விரட்டியதெல்லாம் “எங்கயா இருந்த இத்தனை நாளா” என்று சொல்லவைத்தது. அந்த பழைய பர்ஃபக்‌ஷன் அப்படியே இருந்தது!

Virat Kohli | #INDvENG
Virat Kohli | #INDvENG

அந்த 18-வது ஓவர் மட்டுமல்ல, நேற்று அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டுமே துல்லியத்தின் உச்சமாக இருந்தது. சாம் கரணின் இன் ஸ்விங்கை, ஜோர்டனின் ஸ்லோ பாலை, மார்க் வுட்டின் பெளன்சரை, ஆர்ச்சரின் லைனை… ஒவ்வொன்றையும் துல்லியமாகக் கணித்தார். அற்புதமாக பவுண்டரி எல்லைக்கு அனுப்பினார். ஆர்ச்சர் வீசிய 16-வது ஓவரின் நான்காவது பந்து - இந்த ஒரு ஷாட் மட்டும்தான் டைமிங் கொஞ்சம் தவறியிருக்கும். மற்றபடி கோலி வேற லெவல் ஆட்டம்தான்.

அதே 16-வது ஓவரின் முதல் பந்து. வழக்கமாக வெறித்தன வேகத்தில் வீசும் ஆர்ச்சர், ஸ்லோ பால் வீசுகிறார். பந்தில் கொஞ்சம் பௌன்ஸும் இருக்கிறது. ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட அந்தப் பந்து எந்தவொரு பேட்ஸேனையுமே வீழ்த்துவதற்கான சரியான பொறி. ஆனால், அதை கோலி அட்டகாசமாக பவுண்டரி அடித்தார். பந்தின் லைனை, வேகத்தை முன்கூட்டியே கணித்தவர், ஃபீல்ட் செட் அப்புக்கு ஏற்றவாறு சிறப்பாக ப்ளேஸ் செய்தார். பவுண்டரி!

அதேபோல் 17-வது ஓவரின் கடைசிப் பந்து. வாஷிங்டன் சுந்தரை விட மெதுவாக, மணிக்கு 97.3 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார் ஜோர்டன். அதையும் மிகச் சிறப்பாக லாங் ஆன், டீப் மிட்விக்கெட் ஃபீல்டர்களுக்கு நடுவே அனுப்பினார்.

அடுத்த ஓவரில் மார்க் வுட்டை விளாசியதெல்லாம் 2016 காலகட்டத்தில் பார்த்த கோலியின் மறு உருவமாகத் தெரிந்தது. பந்தின் லைனை மட்டுமல்லாது, லென்த்தையும் முன்கூட்டியே கணித்து விளையாடினார். முதல் பந்து ஷார்ட் பால், நன்றாக விலகிச் சென்று புல் ஷாட் மூலம் மிட்விக்கெட்டில் சிக்ஸர் அடித்து மிரட்டினார். அடுத்த பால், ஃபுல் லென்த்தில் வீசப்படுகிறது. இம்முறை கிரீஸிலேயே நின்று கிளாசிக்காக நேரே சிக்ஸராக்கினார். இரண்டு ஷாட்களும் அப்படியே ஒற்றிக்கொள்ளும் வகையில் இருந்தது!

Kohli - Hardik #INDvENG
Kohli - Hardik #INDvENG

மூன்றாவது பந்து - அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்த வேகத்தில் மீண்டும் தூக்கி அடிக்காமல், விலகிச் சென்ற பந்தை கவர் டிரைவ் மூலம் பவுண்டரியாக்கினார். முழுமையாக ஆட்டத்தையும் தன் டெக்னிக்கையும் கட்டுக்குள் வைத்திருக்கும் விராட் இந்தப் பந்துக்குப் பிறகு முழுமையாகத் தெரிந்தார்!

இந்தப் போட்டியில் இந்தியா தோற்றிருப்பது கவலைதான் என்றாலும், இரண்டு ஆண்டுகளாக கண்ணில் படாத ஏலியன் இப்போது மீண்டும் தென்படத் தொடங்கியிருப்பது நாம் நிச்சயமாக கொண்டாடுவதற்கான ஒரு விஷயம். கோலியின் retrieval ப்ராசஸ் முழுமையாக முடிந்தது எனில், இனி அவரைக் கட்டுப்படுத்துவது எவராலும் முடியாது ஒன்று.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு