Published:Updated:

"என் 120 சதவிகிதத்தைக் கொடுக்க முடியாவிட்டால் அதைச் செய்வது சரியல்ல" - ராஜினாமா செய்த விராட் கோலி

Virat Kohli
News
Virat Kohli

நான் செய்யும் ஒவ்வொரு பணியிலும் என் 120 சதவிகித உழைப்பை கொடுக்கவேண்டும் என்றே எண்ணுவேன். அப்படி இயலாத போது அதை ஏற்று செய்யக்கூடாது.

முன்னாள் கேப்டன் ஆகிவிட்டார் விராட் கோலி. ஆம், ஒருநாள் மற்றும் டி-20 ஃபார்மர்ட்களைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார் விராட். லிமிடெட் ஓவர் ஃபார்ட்மர்ட்டுகளில் அத்தனை சாதனைகள் நிகழ்த்தாவிட்டாலும், டெஸ்ட் அணியை பல உயரங்களை தொடவைத்து பல சாதனைகளை நிகழ்த்தி இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக உயர்ந்திருக்கிறார் கோலி. அவரின் இந்த முடிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே கோலி தன் கரியரின் முக்கிய முடிவுகள் பலவற்றை அறிவித்து வந்துள்ளார். இந்திய டி20 மற்றும், பெங்களூர் அணியின் கேப்டன்சியில் இருந்து விலகியது, ஒருநாள் போட்டிகளின் கேப்டசியில் இருந்து பிசிசிஐ-யால் தூக்கப்பட்டது என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீதமுள்ள டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே முன்வந்து விலகியுள்ளார் கோலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த அறிவிப்பை தன் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் அவர் “ கடந்த ஏழு வருட காலமாக அணியை சரியான பாதையில் நடத்திச்செல்ல என் முழுமையான உழைப்பையும், விடா முயற்சியையும் அளித்துள்ளேன். இப்பணியை மிகுந்த நேர்மையுடன் செய்துள்ளேன். அனைத்து விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்தே ஆகும்.

அதேபோல, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பதும் இந்நாளில் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை கொண்ட ஒன்றாகும். ஆனால் உழைப்பிலோ, நம்பிக்கையிலோ நான் என்றும் குறை வைத்தது கிடையாது. நான் செய்யும் ஒவ்வொரு பணியிலும் என் 120 சதவிகித உழைப்பை கொடுக்கவேண்டும் என்றே எண்ணுவேன். அப்படி இயலாத போது அதை ஏற்று செய்ய கூடாது. இவ்விஷயத்தை பொறுத்தவரை என் உள்ளத்தில் மிக தெளிவான சிந்தனை உள்ளது. மேலும் என் அணிக்கு நான் நேர்மையற்றவனாக இருந்துவிட கூடாது.

Virat Kohli
Virat Kohli

இந்திய அணியை இத்தனை ஆண்டு காலம் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பு வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், அணியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து போராடிய என் சக வீரர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பயணத்தை மிக அழகாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றியது நீங்களே. மேலும் அணியை பின்னாலிருந்து இயக்கி வெற்றிக்காக அதிக அளவில் உழைத்தது ரவி சாஸ்திரியும் அவரது பேக்ரூம் குழுவும்தான். கடைசியாக, என்னுள் இருந்த தலைவனைக் கண்டெடுத்து இந்திய கிரிக்கெட்டை முன்னகர்த்திச் செல்ல முடியும் என்று என் மேல் நம்பிக்கை வைத்த தோனிக்கு மிகப்பெரிய நன்றிகள்” என்று மிக உருக்கமாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கோலி.