Published:Updated:

கோலியைக் காதலிப்பதற்கான காலம்!

விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி

பதவி விலகுவதாக சமூக வலைதளங்களில் கோலி வெளியிட்ட கடிதத்தில் இரண்டு வரிகள் மிகவும் முக்கியமானவை.

கோலியைக் காதலிப்பதற்கான காலம்!

பதவி விலகுவதாக சமூக வலைதளங்களில் கோலி வெளியிட்ட கடிதத்தில் இரண்டு வரிகள் மிகவும் முக்கியமானவை.

Published:Updated:
விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விராட் கோலி. ஆகஸ்ட் மாதம் மூன்று ஃபார்மட்களிலும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர் இனி பேட்டர் மட்டும்தான். கேப்டன் விராட் கோலி எனும் வார்த்தைக்கு முன்னால் ‘முன்னாள்’ என்ற வார்த்தை சேர நான்கு மாதங்களே ஆகியிருக்கின்றன!

அரசியல், ஈகோ எனப் பல்வேறு காரணங்கள் கோலியோடு விளையாடியிருக்கின்றன. டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, “ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை வழிநடத்துவதற்கு போதுமான ஸ்பேஸ் எனக்குத் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் கோலி. அந்த இரண்டு ஃபார்மட்களிலும் அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்தார். ஆனால், அவருக்குத் தேவைப்பட்ட அந்த ஸ்பேசைக் கொடுக்காமல், நெருக்கி வெளியே தள்ளியிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட்டின் ஈகோ யுத்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவாக இது இணைந்திருக்கிறது.

விராட் கோலி கேப்டனாக இருந்த இந்த ஏழாண்டுகளை அலசினால், அவரைக் கொண்டாடவும் செய்யலாம். விமர்சிக்கவும் செய்யலாம். ஒருநாள், டி-20 போட்டிகளில் அவரது கேப்டன்சியை விமர்சித்த பலரும், ஒரு டெஸ்ட் கேப்டனாக அவரைப் பாராட்டியிருக்கிறார்கள். ஒருசிலர், டெஸ்ட் அணியின் முன்னேற்றத்துக்கு அவர் பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை என்று வாதாடுகிறார்கள். இந்தியாவுக்கு மிகச் சிறந்த வீரர்கள் இருந்தனர், அட்டகாசமான பௌலர்கள் கிடைத்தனர், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் டிராவிட்டும் இந்திய அணியில் பரத் அருணும் வேகப்பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக உருவாக்கி மெருகேற்றினர் என்ற வாதங்களையும் கோலியின் ராஜினாமாவுக்குப் பிறகு பார்க்க முடிகிறது.

இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட முடியாது என்றாலும், அனைத்தையும் ஒன்றிணைத்த கோலியையும், அதை வெற்றியை நோக்கிச் செலுத்திய கோலியின் அணுகுமுறையையும் தவிர்த்துவிட முடியாது. ஆனால், மறுபடியும் விவாதங்கள் செய்யத் தேவையில்லை. கோலி அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று திரும்பத் திரும்ப எழுதித்தான் அவரைக் கொண்டாட வேண்டும் என்றில்லை. ஒருவகையில், இந்த முடிவே அவரைக் கொண்டாடுவதற்குப் போடப்பட்டிருக்கும் பந்தக்கால்தான்!

இந்த ஏழு வருடம் என்ன நடந்தது என்பதை விட்டுவிடுவோம். அவர் என்ன செய்தார் என்பதை விட்டுவிடுவோம். அடுத்த நான்கைந்து ஆண்டுகள் என்ன காத்திருக்கிறது என்று யோசித்தால், கோலிக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கப்போவதாகத் தெரிகிறது.

பதவி விலகுவதாக சமூக வலைதளங்களில் கோலி வெளியிட்ட கடிதத்தில் இரண்டு வரிகள் மிகவும் முக்கியமானவை. “எந்த விஷயத்தையும் 120 சதவிகிதம் அர்ப்பணிப்போடு செய்யவேண்டும் என்று நினைப்பேன். அப்படி முடியாதபோது அதைச் செய்வது சரியல்ல” என்றிருக்கிறார் விராட். ஒரு கேப்டனாக உண்மையாகவே கோலி அதை இழந்திருக்கிறார். உண்மையை இழந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக, ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு கேவலமான காரணத்தை வெளியிடத் தொடங்கியது இந்திய அணி. விமர்சனங்களுக்கு எதிரான பயமே அதற்குப் பின்னணியில் தெரிந்தது. விமர்சனங்களுக்கு பயந்து உண்மை மறைந்தது. அதற்குப் பின்னால்தான் சதங்களாக அடித்துக் குவித்த கோலியும் மறைந்தார்.

கோலியைக் காதலிப்பதற்கான காலம்!

இப்போது அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் வார்த்தை, அந்தப் பழைய கோலி மீண்டு வரப்போகிறார் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. தன்னால் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்க முடியவில்லை என்று மனதில் இருந்து நேர்மையாகச் சொல்லியிருக்கிறார் விராட். ஏனெனில், இனி விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

ஏழாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை யோசித்துப் பாருங்கள். ஏன் அஷ்வினை எடுக்கவில்லை, ஏன் ரஹானேவை எடுத்தீர்கள், ஏன் 2 ஸ்பின்னர்கள் இல்லை, ஏன் சூர்யகுமார் இல்லை என்ற கேள்விகள் இல்லாத காலம். விமர்சனங்கள் இல்லாத காலம். டாஸ் போடும் முன்பே, களத்திற்குள் நுழையும் முன்பே, விமர்சனங்கள் பற்றி யோசிக்கவேண்டிய அவசியம் இல்லாத காலம். விராட் கோலி ரன் மெஷினாக உருவெடுத்த காலம் அது. அந்தக் காலம் மீண்டும் திரும்பப்போகிறது.

இனி யாரும் கோலியிடம் கேள்விகள் கேட்கப்போவதில்லை. யாரும் அவர் முடிவுகளை விமர்சனம் செய்யப்போவதில்லை. அவரும் களத்தில் எந்தத் தவறும் செய்யப்போவதில்லை. இனி அவர் ஒரு தவறு செய்கிறாரென்றால், அது அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வரும் பந்தைப் பின்னால் தொட்டுக் கொடுத்து கேட்ச் ஆவது மட்டுமாகத்தான் இருக்கும். வேறொரு தவற்றை இனி கோலியிடமிருந்து பார்க்க முடியாது. இனி அவரை விமர்சிக்க முடியாது. இனி அவரைக் கேள்விகள் கேட்க முடியாது.

வலி மிகுந்த அந்தக் கடிதத்தின் வார்த்தைகள், பழைய கோலியின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது. அந்தக் கோலியைக் காதலிக்க மட்டுமே முடியும். அவர் கிரிக்கெட்டை ஆராதிக்க மட்டுமே முடியும். அடுத்த சில ஆண்டுகள் கோலியைக் காதலிப்பதற்கான காலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism