
''என் வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் என்னால் மாற்ற முடியவில்லை. மேலும், அது மிகவும் தனிமையான நேரம்" என்று மார்க் நிக்கோலஸுடனான பாட்காஸ்ட் கலந்துரையாடலில் பேசியிருக்கிறார் இந்திய கேப்டன் விராட் கோலி.
"ஆமாம், நானும் மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறேன்"... இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மார்க் நிக்கோலஸ் உடன் இணைந்த பாட்கேஸ்ட்(Podcast) பேட்டியில் விராட் கோலி சொன்ன பதில் இது.
மார்க் நிக்கோலஸ் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களுடன் 'Not just cricket' என்ற பாட்காஸ்ட் மூலம் கலந்துரையாடி வருகிறார்கள். அதில் இந்த முறை விராட் கோலியுடன் பேசியிருக்கிறார் மார்க். அந்தப் பேட்டியில் "2014-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது நீங்கள் மிகவும் மனஅழுத்தத்துடன் இருந்தீர்களா?" என்ற கேள்வியை முன்வைத்தார் மார்க்.

மார்க்கின் கேள்விக்குக் காரணம் இங்கிலாந்தில் நடந்த சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து 10 இன்னிங்ஸ்களில் கோலி அடித்த ரன்கள் முறையே 1, 8, 25, 0 ,39, 28, 0, 7, 6, 20.
"ஆமாம்... நானும் மன அழுத்தத்தில் போராடியிருக்கிறேன். காலையில் எழும்பும்போதே நம்மால் ரன்களைக் குவிக்க முடியாது என்ற மனநிலையோடு இருப்பது சிறந்தது கிடையாது. எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் இதுபோன்ற ஒரு மனநிலை சில நேரங்களில் உருவாகும். நம்மை நம்மாலே கட்டுப்படுத்த முடியாத நேரம் அது. அதனை எப்படிக் கடந்து வருவது என்றும் புரியாது. அந்தச் சூழலில் என் வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் என்னால் மாற்ற முடியவில்லை. மேலும், அது மிகவும் தனிமையான நேரம்" என்று சொல்லியிருக்கிறார் விராட் கோலி.

"எவ்வளவு தனிமையாக உணர்ந்தீர்கள்" என்று மார்க் தொடர்ந்து கேட்க, "இந்த உலகிலேயே மிகவும் தனிமையான மனிதன் நான் தான் என உணர்ந்தேன். ஆனால் அது ஒரு காலகட்டம். நான் அதைக் கடந்து வரவேண்டியிருந்தது" என்றார்.
"இது போன்ற சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, "எனக்கு உதவி செய்ய நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஆனால், என்ன நடக்கிறது என்பது எனக்கே புரியவில்லை. எனக்கு ப்ரொஃபஷனலாக உதவிகள் தேவைப்பட்டது" என்றார். மேலும், "கிரிக்கெட்டில் இது போன்ற எதிர்மறையான மனநிலை உருவாகும் போது, அதனை எதிர்த்துப் போராடுவதை விட, கடக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனை. தற்போதைய சூழலில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலுமே ஒரு மனநல ஆலோசகர் தேவை" என்று சொல்லியிருக்கிறார் கோலி.
இங்கிலாந்துத் தொடருக்குப் பிறகு நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிகளில் 672 ரன்கள் குவித்தார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.