Election bannerElection banner
Published:Updated:

நடுவருடன் வாக்குவாதம்... கோலிக்குத் தடை விதிப்பாரா ஜவகல் ஶ்ரீநாத்?!

கோலி
கோலி

ஐசிசி விதிமுறைகளின்படி கள நடுவர்களின் முடிவை எதிர்த்து தவறான முறையில் செய்கைகள் செய்வது அல்லது நடுவரோடு ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற குற்றங்களை ஐசிசி லெவல் 1, லெவல் 2 வரைமுறைப்படுத்தியிருக்கிறது.

சென்னையில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவரான நிதின் மேனனுடன் இந்திய கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சென்னை டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியா 482 ரன் டார்கெட்டை செட் செய்ய, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தடுமாற்றத்துடனேயே தொடங்கியது. நேற்றைய நாளின் கடைசி ஓவரை அக்ஸர் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து ஜோ ரூட்டின் பேட்டையும், கால் பேடையும் உரசியபடி சென்றது. இது கேட்ச் என ரிஷப் பன்ட் அப்பீல் செய்ய நாட் அவுட் சொன்னார் நடுவர் நிதின் மேனன். இதனால் விராட் கோலி ரிவியூ கேட்டார். ரிவியூவில் கேட்ச் இல்லை என்றது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்தப்பந்து பேடில் பட்டு ஸ்டம்புகளை நோக்கிப்போனது பால் ட்ராக்கிங்கின் மூலம் தெரியவந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் இதை 'அம்பயர்ஸ் கால்' என அறிவித்தார். இதனால் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவைத்தொடர்ந்து சில நிமிடங்கள் நிதின் மேனனுடன் ஆக்ரோஷமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விராட் கோலி.

ஐசிசி விதிமுறைகளின்படி கள நடுவர்களின் முடிவை எதிர்த்து தவறான முறையில் செய்கைகள் செய்வது அல்லது நடுவரோடு ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற குற்றங்களை ஐசிசி லெவல் 1, லெவல் 2 வரைமுறைப்படுத்தியிருக்கிறது.

கோலி
கோலி

ஒவ்வொரு லெவல் குற்றங்களுக்கும் ஏற்றபடி தகுதிக்குறைவு புள்ளிகள் (Demerit Points) அளிக்கப்படும். 24 மாதங்களுக்குள் 4 தகுதிக்குறைவு புள்ளிகள் எடுத்தால் அந்த வீரருக்கு 1 டெஸ்ட், 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும். இதன்படி ஏற்கெனவே 2 டிமெரிட் பாயின்ட்டுகளோடு இருக்கும் கோலிக்கு நேற்றைய வாக்குவாதத்துக்கும் டிமெரிட் பாயின்ட் கிடைக்கும் எனத்தெரிகிறது. அப்படி நடந்தால் அடுத்து அஹமதாபாத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட்டில் கோலி விளையாடமாட்டார்.

சென்னை டெஸ்ட்டுக்கான ஐசிசி மேட்ச் ரெஃப்ரி ஜவகல் ஶ்ரீநாத். இதுபோன்று போட்டிகளில் ஏதும் சம்பவங்கள் நடந்தால் 24 மணி நேரத்துக்குள் மேட்ச் ரெஃப்ரிௐௐக்கள் அதை ஐசிசிக்கு மெயில் மூலமாகத் தெரியப்படுத்தவேண்டும். ஆனால், இதுவரை ஜவகல் ஶ்ரீநாத் ஐசிசி-க்கு கோலி குறித்து எதுவும் மெயில் அனுப்பவில்லை என்கிறார்கள். ஆனால், 24 மணி நேரம் என்பதால் இன்று மாலைவரை அவருக்கு ஐசிசிக்கு தகவல் சொல்ல நேரம் இருக்கிறது.

நடுவருடன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன்.

அக்ஸர் பட்டேல், ஜோ ரூட்
அக்ஸர் பட்டேல், ஜோ ரூட்

''நடுவரின் முடிவு சரியா, இல்லையா என ரிவியூ கேட்க இந்திய கேப்டனும், இந்திய வீரர்களும் முழுமையாக 15 விநாடிகள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் கேட்டதும் கேட்சுக்காகத்தான். ஆனால், 1 நொடி மட்டுமே கள நடுவருக்கு நேரம் இருக்கிறது. அதற்குள் அவர் ஒரு முடிவை எடுக்கிறார். அந்த முடிவை மதிக்கவேண்டும். ரிவியூ கேட்டு அவுட் இல்லை என அறிவிக்கப்பட்ட பிறகும் இந்திய கேப்டன் விராட் கோலி நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு. கோலி நல்ல முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு சம்பவம் இந்திய இன்னிங்ஸிலும் நடந்தது. ஜோ ரூட் அதை அவ்வளவு பக்குவமாக எதிர்கொண்டார். ஆனால், கோலியோ மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார்'' என்று சொல்லியிருக்கிறார். மைக்கேல் வாஹன் உள்ளிட்ட இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களும் கோலியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டிலும் இதேபோன்று ஜோ ரூட் பிட்ச்சின் நடுவே ஓடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதின் மேனன் பெயரைச் சொல்லி அழைத்தார் கோலி. ''இதையெல்லாம் கவனிக்கமாட்டீங்களா'' என்பதுபோல நடுவரிடம் சத்தமாக கோலி கேட்டு தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் சர்ச்சைக்குள்ளானது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு