Published:Updated:

`கோலி, பும்ராவுக்கு ஓய்வு; தோனிக்குப் பதில் பன்ட்?!' - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குத் தயாராகும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தோனி
தோனி ( AP )

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்தியா 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவி வெளியேறியது. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, ஆகஸ்ட் 3-ம் தேதி வெஸ்ட் இண்டீஸுடன் விளையாட இருக்கிறது இந்திய அணி. 3 டி20, 3 ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற இருக்கிறது. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், ரோஹித் ஷர்மா இந்திய அணியை தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகிறது.

விராட் கோலி
விராட் கோலி
AP

அதேபோல, டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹானே தலைமை தாங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக, ஓய்வெடுக்கும் முடிவில் இருக்கிறார் கோலி என்கிறார்கள். `வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தாமாகவே விலகிக்கொள்வார். மற்றபடி காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. மேலும், ஷமி, பாண்டியா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலியும், பும்ராவும், கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இதனால், அவர்கள் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளட்டும் என பி.சி.சி.ஐ கருதுகிறது. கோலி மற்றும் பும்ரா இருவருக்கும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் ரெஸ்ட் கொடுக்கலாமா என்பது தொடர்பாக தேர்வுக் குழு பரிசீலித்து வருகிறது. ரோஹித் ஷர்மாவும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இருப்பினும், கோலி இல்லாத நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.

கோலி, வில்லியம்ஸன் - உலகக் கோப்பை அரையிறுதி! - 2008 ஜூனியர் உலகக் கோப்பை நாஸ்டால்ஜியா
பும்ரா
பும்ரா
AP

இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் பேசிய பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர், ``அணிக்கு அவர்கள் முக்கியமான வீரர்கள், தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் கோலியும், பும்ராவும் புத்துணர்ச்சி பெற்றுவர வேண்டும் என நினைக்கிறது'' என்று கூறியிருக்கிறார். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா என்பது குறித்த எந்தவித தெளிவான தகவலும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி, மும்பையில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்படும்.

ஓய்வு குறித்து தோனி எதுவும் அறிவிக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படாது என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இடம்பிடிப்பார் என்கிறார்கள்.