Published:Updated:

இனி பேட் பேசட்டும்!

யோசித்துப் பார்த்தால், கோலி இந்திய அணியை வழிநடத்தியிருப்பது இரண்டு ஐ.சி.சி தொடர்களில்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

பெரும்பான்மை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நிறைவேறிவிட்டது. இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக மட்டும் ஆகியிருக்கிறார். ஓயாத விமர்சனங்களைச் சந்தித்துவந்தவர், இந்திய டி-20 அணி கேப்டன்சி, ஆர்.சி.பி கேப்டன்சி இரண்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்திய டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக செப்டம்பர் 16-ம் தேதி அறிவித்தார் விராட். ‘‘கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று ஃபார்மட்களிலும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஐந்தாறு ஆண்டுகளாக கேப்டனாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் வேலைப்பளுவை சரியாக மேனேஜ் செய்வது முக்கியம்’’ என்று கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 19-ம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார் விராட். ‘‘நான் கிரிக்கெட் ஆடும் வரை ஆர்.சி.பி அணிக்காகவே ஆடுவேன். இந்தக் கடினமான முடிவை அணியின் நலன் கருதி எடுத்திருக்கிறேன்’’ என்று கூறினார்.

மிகவும் தீர்க்கமாக முடிவெடுக்கும் ஒரு வீரர் அடுத்தடுத்து இப்படி அறிவிப்புகள் வெளியிட்டிருப்பதை எளிதாகக் கடந்துவிட முடியாது. ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் நிச்சயம் கோலியின் தலைமை கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டியதுதான். ஆனால், அதற்காக அவர் சந்தித்த விமர்சனங்கள் அளவுகடந்தவை. கோலியின் இந்த முடிவுகளுக்குத் தோல்விகள் காரணமாக இருந்திருந்தால் நாம் எதையும் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால், அப்படி இல்லையே!

`கோலியின் கையில் பேட் இருக்கும்போது, எந்த இலக்கையும் இந்தியா அடைந்துவிடும். நெருக்கடியை அவர் உணர்வதே இல்லை' என்று கொண்டாடிக்கொண்டிருந்தோம். ஆனால், இன்று அந்த கோலி இல்லை. வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்பதை காரணமாகச் சொல்லியிருப்பவர், உளவியல் ரீதியாகவும் அதை அனுபவித்திருக்கவேண்டும். அவர் கூறியதுபோல், கொஞ்சம்கூட இடைவெளியில்லாமல் இந்த 9 ஆண்டுகளாக விளையாடிக்கொண்டிருக்கிறார். மிகச் சிறப்பாக விளையாடியபோதும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார்.

ஒரு முடிவு சரியா தவறா என்பது, முடிவை (ரிசல்ட்) வைத்தே மதிப்பிடப்படுகிறது. வெற்றிக்கு வழிவகுக்கும் முடிவுகள் சரியாகவும், தோல்விக்கு வழிவகுக்கும் முடிவுகள் தவறாகவும் வரையறுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் ஒரு கேப்டன் கோப்பை வெல்லாமல் இருப்பதை நிச்சயம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான், கடந்த சில ஆண்டுகளாகவே ஷார்ட் ஃபார்மட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகவேண்டும் என்ற கோஷம் எழுந்துகொண்டே இருந்தது.

யோசித்துப் பார்த்தால், கோலி இந்திய அணியை வழிநடத்தியிருப்பது இரண்டு ஐ.சி.சி தொடர்களில்தான். 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கும், 2019 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தது இந்திய அணி. ஆனால், அவர்மீதான விமர்சனங்களெல்லாம் ஐ.பி.எல் தோல்விகளால் உருவானவைதான். அதிலிருந்து வளர்ந்ததுதான்.

இந்தியாவின் மகத்தான கேப்டன்களாகக் கொண்டாடப்படும் தோனி, 10 ஐ.சி.சி தொடர்களில் வழிநடத்தி 3 கோப்பைகள் வென்றிருக்கிறார். 7 தோல்விகள் இங்கு பெரிதில்லை. 3 கோப்பைகள்தான் பேசும்! கம்பீர், யுவராஜ், ஹர்பஜன் போன்ற சீனியர்களை நடத்திய விதம் பற்றி தோனியின் மீது விமர்சனம் இருந்தது. ஆனால், அதன் வீரியம் கோலி மீதான விமர்சனங்கள் அளவுக்கு இருந்ததில்லை. ஏனெனில், தோனி கோப்பை வென்ற கேப்டன்.

இனி பேட் பேசட்டும்!

சௌரவ் கங்குலியும் வி.வி.எஸ்.லட்சுமண் போன்ற ஒருவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாமல் இருந்திருக்கிறார். ஆனால், அவரும் சாம்பியன்ஸ் டிராபி (இலங்கையோடு சேர்ந்துதான்!) வென்றிருக்கிறார். ஆக, வெற்றிகள் அவர்களை விமர்சனங்களிலிருந்து காத்தன. கோலிக்கு அதுதான் வசப்படவில்லை.

கேப்டன் கோலியின் மீது கோடிக்கணக்கான விமர்சனங்கள் இருந்திருந்தாலும், பேட்ஸ்மேன் கோலி அவை ஒவ்வொன்றையும் தன் அட்டகாச ஆட்டத்தால் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, அவரை இந்த நெருக்கடிகளை உணர வைத்திருக்கவேண்டும். சதங்களில் குளித்துக்கொண்டிருந்தவர், இப்போது மூன்று இலக்க ஸ்கோரைத் தொட முடியாமல் திணறுகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என எந்த ஆடுகளத்திலும் தன் ஆட்டத்தை அவரால் வெளிக்கொண்டுவர முடியவில்லை. இங்குதான் கோலியின் இந்தத் தீர்க்க மனநிலை உடைந்திருக்கவேண்டும்.

கோலியின் மீது அதிக விமர்சனங்கள் எழுவதற்கு சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் ஒரு காரணம்தான். இன்று ஊடகங்களும் சமூக வலைதளத்துக்கான செய்திகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், பி.சி.சி.ஐ கோலியே கேப்டனாகத் தொடரவேண்டும் என்று ஆசைப்பட்டும் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் விராட்.

இந்த முடிவு சிலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். பலருக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். சொல்லப்போனால், அதிர்ச்சியடைந்திருக்கும் அந்த ஒரு சிலரும் ஆசுவாசப்படலாம். ஏனெனில், இந்த முடிவு கோலிக்குமே நல்லதுதான். கடந்த சில ஆண்டுகளில் அவர் அதிக டி-20 போட்டிகளில் ஆடவில்லை. ரோஹித்தான் கேப்டனாக இருந்திருக்கிறார். சொல்லப்போனால், இந்த டி-20 உலகக் கோப்பையை வென்றாலும் அது மென்ட்டர் தோனியின் கோப்பையாகவும் கருதப்படும். அதேபோல், ஐ.பி.எல் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு மேல் வென்றாலும், அவர்மீதான விமர்சனப் பார்வையை ஒரு கோப்பை மாற்றிவிடப்போவதில்லை.

அவர் அதிகம் விரும்பாத ஃபார்மட்டில் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அதனால் ஏற்படும் நெருக்கடியையும் சுமப்பதற்கு, இந்த முடிவு நிச்சயம் நல்லதுதான். இனி கேள்விகளுக்கு அதிகம் செவி சாய்க்காமல், பேட்டால் பதில் சொல்லத் தொடங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு