இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்க தேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை மயங்க் அகர்வால் 16, ரோஹித் ஷர்மா 21 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா - கோலி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 55 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதம் கடந்தார். இதன்மூலம் டெஸ்ட் கேப்டனாக அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 59, ரஹானே 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தை செஸ் மாஸ்டர்களான விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் ஆகியோர் பாரம்பர்ய முறைப்படி மணியடித்து தொடங்கிவைத்தனர். கோலி, ரஹானே இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் கடந்த நிலையில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 27வது சதம் இதுவாகும். பிங்க் நிறப் பந்துகளில் விளையாடும் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், சர்வதேச அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கோலி சர்வதேச அரங்கில் முன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 70 சதங்களை விளாசியுள்ளார். அதேநேரத்தில் சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்களை அடித்த ரிங்கி பாண்டிங்கின் சாதனையையும் கோலி சமன் செய்தார். பாண்டிங் 376 இன்னிங்ஸில் கேப்டனாக செயல்பட்டு 41 சதங்களைப் பதிவு செய்துள்ளார். கோலி 188 இன்னிங்ஸில் விளையாடி 41 சதம் விளாசியுள்ளார். தொடர்ந்து விளையாடிய கோலி 136 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேசத்தைவிட இந்தியா 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த டெஸ்டில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.