Published:Updated:

`கோலி எதுவேணாலும் பேசட்டும், எங்களுக்கு கவலையில்லை!'- வெடிக்கும் பயிற்சியாளர் விவகாரம்

ராம் பிரசாத்

``இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியது எங்களை பாதிக்காது. நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்'' எனக் கிரிக்கெட் ஒழுங்குமுறை குழுவைச் சேர்ந்த அன்ஷுமான் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

கோலி
கோலி

``விராட் கோலி என்ன வேண்டுமானாலும் பேசட்டும் எங்களுக்கு கவலை இல்லை. அது எங்களை எந்த விதத்திலும் பாதிக்கப்போவது இல்லை. நாங்கள் ஒரு குழு. அவருடைய கருத்தை பிசிசிஐ குறித்துக்கொள்ளும். நாங்கள் அல்ல” என கிரிக்கெட் ஒழுங்குமுறை குழுவைச் சேர்ந்த அன்ஷுமான் கெய்க்வாட், கோலியின் கேள்விக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இந்திய கேப்டன் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே பணிப்போர் நிலவிவருகிறது. இந்திய அணியில் சுமுகமான சூழல் நிலவவில்லை. ரோஹித் கேப்டன்ஷிப் ஏற்க வேண்டும் எனச் சிலர் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால் டெஸ்ட் மற்றும் குறைந்த ஓவர்களுக்கான கேப்டன்ஷிப் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்தது. கோலிதான் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டன் எனக் கூறப்பட்டது.

விராட் கோலி
விராட் கோலி

இந்த நிலையில், ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமிலிருந்து கோலி, அனுஷ்கா சர்மாவையும் அன்ஃபாலோ செய்தார். இதுபோதாதா என நெட்டீசன்கள் இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தனர். `பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்’ என்ற அனுஷ்காவின் ஸ்டேட்மென்ட் இவர்களுக்குத் தீனியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பை கோலி புறக்கணிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியானது. இது வதந்தி. கோலி செய்தியாளர்களைச் சந்திப்பார் என பிசிசிஐ திட்டவட்டமாகக் கூறியது.

அமெரிக்கா செல்வதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி, ரவி சாஸ்திரி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ரோஹித் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ``எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. யாரோ வதந்திகளைக் கிளப்பிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். நான் எப்போதும் ரோஹித்தைப் புகழ்ந்துதான் பேசியுள்ளேன். ஏனென்றால் அவர் நல்லவர் என நான் நம்புகிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை'' என கோலி கூறினார். செய்தியாளர்கள் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். விராட் பேச முற்பட்டபோது ரவி சாஸ்திரி தடுத்தார். அணியைவிட இங்கு எந்த தனி நபரும் முக்கியமில்லை. ஏன் நானோ, கோலியோ அல்லது வேறு எந்த வீரராக இருந்தாலும் சரி என சாஸ்திரி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

உலகக்கோப்பைத் தொடருடன் ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்தது. தற்போது அவருக்கு 45 நாள்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோலி அந்த பிரஸ்மீட்டில், ``பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கிரிக்கெட் ஒழுங்குமுறை குழு தன்னை அணுகவில்லை. அவர்கள் என்னுடன் ஆலோசனை நடத்த விரும்பினால் நான் அவர்களைச் சந்திக்கத் தயார். வீரர்களுடன் அவர் நல்ல நட்பில் உள்ளார். பயிற்சியாளர் பொறுப்பில் மீண்டும் அவர் நீடித்தால் மகிழ்ச்சி'' என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர், பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் பயிற்சியாளர், பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தால் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கபில் தேவ், அன்ஷுமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளருக்கான நேர்காணலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி இவர்கள் நடத்துகின்றனர்.

ரவி சாஸ்திரி, கோலி
ரவி சாஸ்திரி, கோலி

கோலியின் கருத்துக்குப் பதிலளித்துள்ள அன்ஷுமான் கெய்க்வாட், ``விராட் கோலி என்ன வேண்டுமானாலும் பேசட்டும் எங்களுக்கு கவலை இல்லை. அது எங்களை எந்த விதத்திலும் பாதிக்கப்போவது இல்லை. நாங்கள் ஒரு குழு. அவருடைய கருத்தை பிசிசிஐ குறித்துக்கொள்ளும். நாங்கள் அல்ல. பிசிசிஐ-யின் வழிகாட்டுதலின்படி நாங்கள் நடந்துகொள்வோம். நாங்கள் மகளிர் அணிக்காக பயிற்சியாளர்களை சமீபத்தில் தேர்வு செய்தோம். இதுகுறித்து நாங்கள் யாரிடமும் ஆலோசிக்கவில்லை. இந்தக் குழுதான் முடிவெடுத்தது. வெளிப்படையாக திறந்த மனதுடன் நேர்காணல் நடத்தப்படும். இந்தப்பதவிக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் விண்ணப்பித்துள்ளனர். நான் கபில்தேவ் ஆகியோர் பயிற்சியாளராக இருந்துள்ளோம். பயிற்சியாளர்களுக்கு மனித மேலாண்மை, திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகிய மூன்று முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அப்போது தான் அவரால் திறம்பட செயலாற்ற முடியும். இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும், சிறப்பாக செயல்பட வேண்டும், என்ற நோக்கத்தில்தான் இந்த மூன்று அளவுகோளைக் காண்கிறோம். நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த மூன்றும் மிகவும் முக்கியம்'' எனக் கூறியுள்ளார்.