Published:Updated:

`சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி... அதிருப்தி தோனி!’ - விராட் கோலியின் நாஸ்டால்ஜி நினைவுகள்

சச்சின் -விராட் கோலி
சச்சின் -விராட் கோலி ( Cricket.com.au )

சச்சினின் கடைசி ஒருநாள் போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான 2012 ஆசிய கோப்பைப் போட்டியின்போது நடந்த நிகழ்வுகளை விராட்கோலி பகிர்ந்திருக்கிறார்.

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், விராட் கோலி - ரவிச்சந்திரன் அஷ்வின் இடையிலான சமீபத்திய உரையாடல் கவனம் பெற்றிருக்கிறது. தான் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு தோனி செய்த உதவி மிகப் பெரியது எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள கோலி, தங்கள் இருவருக்கும் இடையிலான புரிதல் குறித்துப் பேசியிருக்கிறார். அதேபோல், தான் மற்றும் ரோஹித் ஷர்மா செய்த செயல் ஒன்றுக்கு தோனி அதிருப்தி வெளிப்படுத்திய சம்பவம் ஒன்றையும் இந்திய அணியின் கேப்டன் கோலி நினைவுகூர்ந்திருக்கிறார்.

தோனி - விராட் கோலி
தோனி - விராட் கோலி
Twitter

அஷ்வினுடனான உரையாடலின்போது பேசிய விராட் கோலி, 2012 ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நினைவலைகளைப் பகிர்ந்தார். அப்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்தை ஃபீல்டிங் செய்தபோது தானும் ரோஹித் ஷர்மாவும் களத்தில் இடித்துக்கொண்டதாகவும், அதனால், ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் ஓடி எடுத்ததாகவும் கோலி குறிப்பிட்டார். இதனால், தோனி தம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கோலி நினைவுகூர்ந்தார்.

`அவர் எப்போது வந்து பேசுவார் தெரியுமா..?’ -தோனி கேப்டன்ஷிப் குறித்து சுவாரஸ்யம் பகிரும் ஹர்பஜன்

கோலி பேசுகையில், ``அந்த நிகழ்வு மிகவும் வேடிக்கையானது. நன்றாக நினைவிருக்கிறது அப்போது தோனி அதிருப்தியடைந்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 329 ரன்கள் அடித்ததாக நினைக்கிறேன். தொடக்கத்தில் பெரிய பாட்னர்ஷிப்புகளை அவர்கள் அமைத்தார்கள். அந்தப் போட்டியின் ஒருகட்டத்தின் ஃபீல்டிங் செய்யும்போது நாங்கள் (கோலி, ரோஹித் ஷர்ம) தவறுதலாக ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டோம். அதனால், ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் 3 ரன்கள் எடுத்துவிட்டனர்.

விராட் கோலி
விராட் கோலி

அதன்பின்னர், இர்ஃபான் பதான் வந்து பந்தைப் பிடித்து தோனியிடம் த்ரோ செய்தார். `ஒரு ரன் கொடுக்க வேண்டிய இடத்தில் எப்படி இவர்கள் 3 ரன்கள் கொடுத்தனர்’ என்கிறரீதியில் தோனி அதிருப்தியடைந்தார். அப்போது நீங்கள் (அஷ்வின்) பௌலிங் செய்துகொண்டிருந்தீர்கள். அந்தப் பந்தை அடித்தது உமர் அக்மல் என்று நினைக்கிறேன். நான் டீப்-மிட் விக்கெட் திசையிலும் ரோஹித் டீப்- ஸ்கொயர் லெக் திசையிலும் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தோம். அப்போது பந்தைப் பிடிப்பதற்காக நான் செல்ல, ரோஹித்தும் அந்த முயற்சியில் இறங்கினார். ஒருகட்டத்தில் ரோஹித்தின் தோள்பட்டையில் எனது தலை மோதியது. ஒரு 5 நிமிடங்களுக்கு என்ன நடந்தது என்றே நினைவில் இல்லை’’ என்றார்.

என் சச்சின்! #MySachin

அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் நாசிர் ஜாம்ஷெட் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் சதமடிக்க பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. இதை சேஸ் செய்த இந்திய அணிக்கு விராட் கோலியின் சதம் உதவியது. அவர் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் கோலி. இதன்மூலம் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

விராட் கோலி - ரோஹித் ஷர்மா
விராட் கோலி - ரோஹித் ஷர்மா

இதில், சச்சின் டெண்டுல்கருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்து 133 ரன்கள் கோலி பாட்னர்ஷிப் அமைத்தார். அரைசதமடித்து சச்சின் ஆட்டமிழந்த அந்தப் போட்டிதான், தற்செயலாக இந்திய அணிக்காக அவரது கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.

அந்தப் போட்டியில் பாகிஸ்தானின் பந்துவீச்சு குறித்து பேசிய கோலி, ``அவர்களது பந்துவீச்சு லைன் அப்பும் வலிமையானதாக இருந்தது. சயீத் அஜ்மல், உமர் குல், அய்சாஸ் சீமா மற்றும் ஹஃபீஸ் எனப் பலர் இருந்தனர். முதல் 20 - 25 ஓவர்கள் அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. அதேநேரம், சச்சினுடன் நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவே அவரது கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்துவிட்டது. அவர் அரைசதமடித்தார். நாங்கள் 100 ரன்களுக்கும் மேல் பாட்னர்ஷிப் அமைத்தது, என்றும் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது’’ என்றார்.

மேலும், அந்தப் போட்டியே தனக்கும் இந்திய அணிக்கும் கேம் சேஞ்சர் போட்டியாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட கோலி, ``அந்தப் போட்டி எனக்கு கேம் சேஞ்சராக மாறியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அந்தப் போட்டியில் சேஸிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடக்கத்தில் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் 3 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்ட உதவினர். அப்போதைய சூழலில் 330 ரன்களை சேஸ் செய்வது என்பது என்றுமே மறக்க முடியாத நிகழ்வு’’ என்று நெகிழ்ந்தார் கோலி.

`லஞ்சம் கேட்டார்கள்... என் தந்தை கொடுக்க மறுத்தார்! - கோலி பகிர்ந்த டெல்லி நாள்கள்
அடுத்த கட்டுரைக்கு