Published:Updated:

உலகக் கோப்பை சாதனையை டிஎன்பிஎல்-லிலும் நிகழ்த்திய விஜய் சங்கர்!

கார்த்திகா ராஜேந்திரன்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கருக்கு டிஎன்பிஎல் தொடரின் அறிமுகப் போட்டி இது. கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வில் இருந்ததால், டிஎன்பிஎல் தொடரில் விஜய் சங்கர் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

Vijay Shankar
Vijay Shankar ( TNPL )

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள், திருநெல்வேலி ஐ.சி.எல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தன. ஏற்கெனவே, திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், நேற்று நடந்த போட்டிகளை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் இணைந்தன.

"இந்திய அணியில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை!" - விஜய் சங்கர்

முதல் போட்டி: சேப்பாக் vs தூத்துக்குடி 

மதியம் 3:30 மணிக்கு தொடங்கிய போட்டியில், சேப்பாக் - தூத்துக்குடி அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கருக்கு டிஎன்பிஎல் தொடரின் அறிமுகப் போட்டி இது. கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வில் இருந்ததால், டிஎன்பிஎல் தொடரில் விஜய் சங்கர் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

நேற்று, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விஜய் சங்கர், பெளலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். முன்னதாக, தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில், முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

தூத்துக்குடிக்கு எதிரான போட்டியில், 3.5 ஓவர்கள் வீசிய விஜய் சங்கர், 2 விக்கெட்டுகள் எடுத்தார். பேட்டிங்கில் பெரிதாக சோப்பிக்காத அவர், 7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோபிநாத், அரை சதம் கடந்தார். தூத்துக்குடியின் கார்த்திக் சண்முகம், மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.

எளிதான இலக்கை சேஸ் செய்த தூத்துக்குடி பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்திலேயே சறுக்கல். ஓப்பனிங் ஸ்பெல் வீசிய விஜய் சங்கரின் ஓவரில், ஆகாஷ் சிவன் டக்-அவுட்டானார். அக்‌ஷய் ஶ்ரீனிவாசன் மட்டும் நிதானமாக பேட்டிங் செய்ய, மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சேப்பாக் அணியின் ஹரிஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுக்க, விஜய் சங்கர், பெரியசாமி, சித்தார்த் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தூத்துக்குடி, 95 ரன்கள் எடுத்து போட்டியை இழந்தது.

Chepauk Super Gillies
Chepauk Super Gillies
TNPL

ஏற்கெனவே, டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிகளில் இரண்டு முறை சேப்பாக் - தூத்துக்குடி அணிகள் மோதியுள்ளன. அதில், இரு அணிகளும் தலா ஒரு முறை கோப்பையை வென்று அசத்தின. ஆனால், இந்த சீஸனில் சுமாராக விளையாடிய தூத்துக்குடி அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. ஐந்து போட்டிகளை வென்றுள்ள சேப்பாக் அணி, ப்ளே ஆஃபுக்கு முன்னேறியது.

இரண்டாவது போட்டி: திருச்சி vs காஞ்சி

திண்டுக்கல், மதுரை, சேப்பாக் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. கடைசி இடத்துக்கு இரண்டு அணிகளுக்கி டையே போட்டி நிலவியது. 8 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் அணி களத்தில் இருக்க, கட்டாய வெற்றிக்காகக் களமிறங்கியது, காஞ்சி வீரன்ஸ்.

டிஎன்பிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், திருச்சி வாரியர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருச்சி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. போட்டியை வென்றாகவேண்டிய கட்டாயத்தில் சேஸிங் களமிறங்கிய காஞ்சி அணிக்கு, ஓப்பனிங் பேட்ஸ்மேன் லோகேஷ்வர் (43) சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். கேப்டன் பாபா அபாரிஜித்தின் அரை சதம் கைகொடுக்க, 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிய காஞ்சி அணி போட்டியை வென்றது.

Baba Aparijith
Baba Aparijith
TNPL

கோவை கிங்ஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள், தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் காஞ்சி அணி முன்னிலையில் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆகஸ்ட் 11-ம் தேதி நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.