Published:Updated:

HP vs TN: விஜய் ஹசாரே கோப்பையை விஜய் ஷங்கர் அண்ட் கோ இழந்தது எதனால்? தமிழக அணி செய்த தவறுகள்!

HP vs TN
News
HP vs TN

பெரிய மேடையில் சிறிய தவறுகள்கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி அதற்குரிய விலையை வசூலிக்கும் என்பதை நிருபித்துள்ளது விஜய் ஹசாரே இறுதிப் போட்டி.

இந்த ஆண்டு, ஒரு கையில் சையத் முஸ்டாக் அலி கோப்பையை ஏற்கெனவே ஏந்திவிட்டது தமிழ்நாடு. இன்னொரு கரத்தால் விஜய் ஹசாரே கோப்பையையும் கைப்பற்றி லிமிடெட் ஃபார்மட்டில் தனது கொடியை தமிழகம் உயரப் பறக்கவிடும் என்ற ரசிகர்களின் கனவைக் களைத்துவிட்டது இறுதிப் போட்டியின் முடிவு.

என்னதான் இந்த சீசனில், தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் இரு அணிகளும் லீக் சுற்றில் தங்களது குழுவில் முதல் இடத்தில் முடித்திருந்தாலும், இறுதிப் போட்டி நடப்பதற்கு முன்னதாக இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஒப்பீடுகளில் எல்லாம் தமிழ்நாடுதான் உயர்ந்து நின்றது. இதற்குக் காரணம், விஜய் ஹசாரே கோப்பையை தமிழ்நாடு ஐந்து முறை வென்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, இதுவரை ஒருமுறை கூட ஹிமாச்சல் பிரதேசம் இறுதிப் போட்டிக்குக்கூட முன்னேறியதில்லை என்பதும்தான்.

ஆனால், கடைசியில் நிகழ்வுகள் எல்லாம் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்திசையில் பயணித்துள்ளன. பெரிய மேடையில் சிறிய தவறுகள்கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி அதற்குரிய விலையை வசூலிக்கும் என்பதை நிருபித்துள்ளது விஜய் ஹசாரே இறுதிப் போட்டி. எங்கே தவறியது தமிழ்நாடு? விஜய் ஹசாரே கோப்பையை விஜய் ஷங்கர் அண்ட் கோ கைநழுவ விட காரணமாக அமைந்த அத்தவறுகள் என்னென்ன?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
HP vs TN
HP vs TN

பொதுவாக, வெற்றிகளை அதிக சதவிகிதம் பெறும் எல்லா அணிகளுமே ஒரே பிளேயிங் லெவனோடு ஆடும் சூத்திரத்தைப் பின்பற்றும். அதுவும், நாக் அவுட் போட்டிகளில் மாற்றம் கொண்டு வருவது பல சமயத்தில் பாதகமாகவே அமையும். ஆனால், தமிழ்நாடு அணியில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருந்தன. லீக் சுற்றின் கடைசிப் போட்டிக்கு முன்புவரை, ஜெகதீசன்தான் அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார். அதன்பிறகு, அணியில் இணைந்ததோடு தலைமைப் பொறுப்பையும் விஜய் ஷங்கர் ஏற்றபின் மாற்றங்கள் மாறாததாகியது. இறுதிப் போட்டியில் கூட மணிமாறன் சித்தார்த்துக்குப் பதிலாக, அதுவும் இத்தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாத முருகன் அஷ்வின் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எதிரணியில், வலக்கை ஆட்டக்காரர்கள் அதிக அளவில் இருப்பதை மனதில் நிறுத்தி ஆஃப் ஸ்பின்னரிடமிருந்து விஜய் ஷங்கர் லெக் ஸ்பின்னர் பக்கம் நகர்ந்திருக்கலாம். அல்லது காலிறுதி, அரையிறுதியில் சித்தார்த்தின் சராசரி எக்கானமியான 7.2 அவரை பயமுறுத்தி இருக்கலாம். எது எப்படியெனினும், தொடர் முழுவதும் விளையாடிய வீரருக்குப் பதிலாக, அதுவும் இதே ஜெய்ப்பூரில் நாக் அவுட் போட்டிகளில் ஆடி களத்தைக் கணித்து வைத்திருக்கும் வீரருக்குப் பதிலாக, இறுதிப் போட்டியில் வேறொரு வீரரை இறக்குவது சரியான முடிவாக இருக்க முடியாது. விளைவு, ஒரு விக்கெட்டை வீசிய முதல் பந்திலேயே எடுத்திருந்தாலும், 8.1 எக்கானமியோடு முருகன் அஷ்வின் ரன்களை வாரிக் கொடுத்திருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சரி, பிளேயிங் லெவனை ஒதுக்கி வைப்போம். பிளேயிங் ஆர்டராவது சரியாக இருந்ததா என்றால் அதிலும் குழப்பமே நீடித்தது.

டாஸோடு களமும், காற்றும் ஹிமாச்சலுக்கே கை கொடுத்தது. களத்தின் உதவியோடு நன்றாகவே, பந்து பவுன்ஸ் ஆனது மட்டுமின்றி காற்றிலிருந்த ஈரப்பதம் காரணமாக நன்றாக ஸ்விங்கும் ஆனது. அபராஜித்தை ஆட்டமிழக்கச் செய்த அந்த ஒரு இன்ஸ்விங் டெலிவரியே அதற்குச் சான்று. அணியின் முக்கிய துருப்புச் சீட்டுகளான காலிறுதியில் சதம் கடந்த ஜெகதீசன் மற்றும் அரையிறுதியில் சதமடித்த அபாரஜித் ஆகியவர்கள்கூட சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தனர்.

HP vs TN
HP vs TN

இந்நிலையில், அரையிறுதியைப் போலவே ஒன்டவுனில் விஜய் ஷங்கரை எதிர்பார்த்தால் சாய் கிஷோர், முருகன் அஷ்வின் என பௌலர்களை எல்லாம் முன்னதாக பிரமோஷன் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார் அவர். பந்து தேய்ந்து, வானிலை மாறும்வரை இவர்கள் சமாளித்து விட்டால் அதன்பிறகு பிரதான பேட்ஸ்மேன்கள் வந்து கவனித்துக் கொள்வார்கள் என்னும் யோசனையோடு டெயில் எண்டர்களை நைட் வாட்ச்மேன்கள் ஆக்கியிருந்தார் விஜய் ஷங்கர். சாய் கிஷோரைக்கூட காலிறுதியில் ஒன்டவுனில் இறங்கி அவர் அடித்த அரைசதத்தை மனதில் நிறுத்தி இறக்கி இருக்கலாம். முருகன் அஷ்வினை இறக்கியது முற்றிலும் தவறாகவே நகர்ந்தது. ஸ்விங் ஆகும் புதுப் பந்தை அவர்களால் சமாளிக்க முடியாமல் போக அணியின் ஸ்கோர், 17/2-ல் இருந்து, 40/4 ஆக மாறி, '15 ஓவர்களுக்குள், நான்கு விக்கெட்கள் விழுந்துவிட்டன' என்று அழுத்தத்தையே ஏற்றியது.

தினேஷ் கார்த்திக் - இந்திரஜித் கூட்டணி அதன்பிறகு ஸ்பின்னர்களை சிறப்பான முறையில் கவனித்து, இலக்கு 300-ஐ தாண்டக் காரணமாக இருந்தாலும், சாய் கிஷோர் மற்றும் முருகன் அஷ்வினுக்குப் பதிலாக விஜய் ஷங்கரே இறங்கி ஓரளவு சமாளித்திருந்தால் ரன்கள் இன்னமும் கணிசமாக ஏறி காலிறுதியைப் போல இலக்கை 350-ஐ கடக்கச் செய்திருக்கலாம்.

HP vs TN
HP vs TN

வாஷிங்டன் சுந்தர் பின்வரிசையில் இறங்கி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரும் வேகப்பந்து, சுழல்பந்து இரண்டையுமே சமாளிக்கக் கூடியவர்தான். எனவே, அவரையாவது முன்னதாக இறக்கி இருந்தால் ஒருவேளை போட்டியின் போக்கு மாறி இருக்கலாம். ஷாருக்கானின் கேமியோ சரியான நேரத்தில் வந்து சேர்ந்து, ரன்களைக் கணிசமாக உயர்த்திவிட்டாலும், அது போதுமானதாக இல்லாமல் போக இந்த பேட்டிங் ஆர்டர் குளறுபடிதான் முக்கிய காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு நேரெதிராக ஹிமாச்சலோ அசத்தலான வேகப்பந்து வீச்சில் தொடங்கி இரண்டு ஸ்லிப்களோடு அட்டாக்கிங் ஃபீல்டிங் செட்டப்போடு மிரட்டியதுவரை, இம்மியளவும் விட்டுத் தரவில்லை. தினேஷ் கார்த்திக்கின் கேட்ச் டிராப் தவிர்த்து, வேறு எந்தத் தவற்றையும் அவர்கள் செய்யவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஹிமாச்சல் பிரதேசத்தின் கேப்டன் ரிஷி தவான், "முன்னதாக இத்தொடரில் 300+ ஸ்கோரை நாங்கள் துரத்தவும் செய்திருக்கிறோம், நிர்ணயித்தும் இருக்கிறோம். எனவே எது வந்தாலும் சமாளிப்போம்", என்று கூறியிருந்தார். அவரது பேச்சில் தெறித்த தன்னம்பிக்கைதான், அந்த இளம்படையின் ஆட்டம் முழுவதும் பிரதிபலித்தது.

அந்த முனைப்புதான் தமிழ்நாடு அணியின் பக்கம், குறிப்பாக இரண்டாவது பாதியில் காணப்படவில்லை. தொடக்க ஓவர்களிலேயே விக்கெட்டுகளை எடுக்கத் தவறிவிட்டது தமிழ்நாடு தரப்பு. பௌலிங் மாற்றத்தை ஆறாவது ஓவரில் கொண்டு வந்து அதன்பின் இருபுறமும் ஸ்பின்னர்களை வீச வைத்து, இரு விக்கெட்களை அடுத்தடுத்த ஓவர்களில் சாய் கிஷோர் மற்றும் வாசிங்டன் சுந்தரை வைத்து எடுக்க வைத்துவிட்டார் விஜய் ஷங்கர். அதுவரை எல்லாம் சரிதான். ஆனால், அந்தச் சமயத்தில் மறுபடியும் சிலம்பரசனைக் கொண்டு வந்திருந்தால் அவரது வேகத்தில் மேலும் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருக்கலாம்.

HP vs TN
HP vs TN

ஆனால், விஜய் ஷங்கர் அதைச் செய்யத் தவறினார். முன்னதாக தொடக்கத்தில் சிலம்பரசனது பந்துகள் சற்றே அடிவாங்கின. அதை மனதில் வைத்து, விக்கெட் விழுந்த ஐந்து ஓவர்களுக்குப் பின்னர்தான் சிலம்பரசனைக் கொண்டு வந்திருந்தார். அதுவும்கூட ஐந்து ஓவர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக அவருக்குக் கொடுக்கப்பட்டன. இந்தத் தொடரில் தமிழ்நாடு சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் (தற்போது இரண்டாவது) இருந்த ஒரு பௌலரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததும் அணிக்கான பின்னடைவானது. இவ்வளவுக்கும் வெறும் 6.4 எக்கானமியோடே பந்துகளை அவர் வீசி இருந்தார். துணிந்து அவருக்கு இன்னமும் இரண்டு ஓவர்களாவது கொடுக்கப்பட்டிருந்தால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாவிட்டாலும், ரன்கசிவைக் குறைத்து அழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்கலாம். அது பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கும்.

அதிகரிப்பதைப் பின்னர் பார்க்கலாம், குறைக்கவாவது வழிதேடினார்களா என்றால் அதுவும் இல்லை. பௌலிங் மாற்றங்களில் தொடங்கிய தவறு, ஃபீல்டிங்கிலும் தொடர்ந்தது. ரிஷி தவான் அடுத்தடுத்த கட் ஷாட்டுகளின் மூலமாக ரன் குவிக்கத் தொடங்கிய போதுகூட தேர்ட் மேன் ஃபீல்டிங் பொஷிஷனுக்கு ஒரு ஃபீல்டரை நகர்த்தவில்லை. இறுதியில், ரன் எ பால் கணக்கில் போட்டியை அவர் கொண்டு சென்று நிறுத்த இதுதான் காரணமாக இருந்தது.

HP vs TN
HP vs TN

இந்த எல்லாத் தவறுகளுக்கும் சிகரம் வைத்து, அதோடு கோப்பைக் கனவிலிருந்த ரசிகர்களைத் தட்டி எழுப்பியது தமிழ்நாடு வீரர்களின் ஃபீல்டிங் குற்றங்கள்தான். முன்னதாக, தான் வீசிய ஓவரில் அமித் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க விஜய் ஷங்கர் தவறினார். இது போட்டியின் 23-வது ஓவரில், அமித் 24 ரன்களோடு இருக்கும்போதே நடந்திருந்தது. அங்கிருந்து அவர் அரைசதமும் கடந்ததோடு, அரோராவுக்கும் அவருக்குமான 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கும் இதுதான் காரணமாக மாறியது.

அது மட்டுமல்ல... 38-வது ஓவரில், ஒரு மாபெரும் ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டு, அதோடு தமிழ்நாட்டின் சாம்பியன் ஆசைக்கு `முற்றும்' போட்டு விட்டார் விஜய் ஷங்கர். அரோரா மற்றும் அமித் ஆகிய இரு பேட்ஸ்மேன்களுமே ஒரே முனையை நோக்கி ஓட, கைக்கு வந்த பந்தை அடுத்த முனைக்கு எறிந்து வாய்த்த வாய்ப்பை பயன்படுத்தாமல் பந்தைத் தவற விட்டார், விஜய் ஷங்கர். இதுதான் போட்டி மொத்தமாகத் தமிழ்நாட்டின் கையிலிருந்து நழுவத் தொடங்கிய தருணம்.

அதை அப்படியே கொண்டு போய் ஹிமாச்சலின் கையில் கொடுத்து விட்டு வந்தது ஜெகதீசன் விட்ட கேட்ச். சுபம் அரோரா அடித்த பந்தை மிட் ஆஃபில் நின்றிருந்த ஜெகதீசன் பிடிக்கத் தவற அங்கேயே இருள்சூழத் தொடங்கி எல்லாம் முடிந்துவிட்டது. இதைத் தவிர்த்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்னும் சில கேட்ச் டிராப்கள்தான் போட்டியைப் புரட்டிப் போட்டன.

HP vs TN
HP vs TN

ஆகமொத்தம் சுமாரான பேட்டிங், சராசரிக்கும் கீழான பௌலிங், படு மோசமான ஃபீல்டிங், இவை எல்லாமும் சேர்ந்து தமிழ்நாட்டை கோப்பையை எட்ட விடாமல் செய்துவிட்டது. இறுதியில், வெல்வதற்கான 0.001% வாய்ப்பையும், குறைந்த ஒளி தட்டிப் பறித்து, விஜேடி முறையில் (VJD Method) ஹிமாச்சல் வென்றதாக அறிவிக்க வைத்தது.

ஹிமாச்சலுக்கோ அற்புதமான பௌலிங், சராசரி ஃபீல்டிங், நிதானமான, அதே நேரத்தில், ரன்ரேட்டை ஒட்டியே பயணித்த பேட்டிங் எல்லாமும் சேர்ந்து வெற்றியைத் தேடித் தந்துவிட்டது. குறிப்பாக, இந்தியா தவறவிட்டுக் கொண்டிருக்கும் வேகப்பந்து ஆல்ரவுண்டரான 31 வயது ரிஷி தவான், 458 ரன்களோடும் 17 விக்கெட்டுகளோடும் தன்னை முப்பரிமாண வீரராக நிருபித்துள்ளார்.

HP vs TN
HP vs TN

2019-ல் சையத் முஸ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை, இரண்டிலுமே இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றம் அளித்த தமிழ்நாடு, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் டி20 கோப்பையைக் கைப்பற்றி விட்டது. ஆனால், விஜய் ஹசாரே கோப்பை, தமிழகத்துக்கு 2016-ம் ஆண்டுக்குப் பிறகு இன்னமும் கானல் நீராகவே இருந்து வருகிறது.

38 அணிகள் பங்குபெற்ற போட்டியில் ரன்னர் அப் என்பதே பெரிய விஷயம் என ஆறுதல்பட்டுக் கொண்டாலும், கோப்பை கிட்டவில்லை என்ற ஆதங்கத்தை தூரத் தள்ள முடியவில்லை.