Published:Updated:

இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம்; கவாஜாவின் திமிருத்தனமான பேட்டிங்கும் பதிலடியும்!

Khawaja
News
Khawaja ( Fox Cricket )

கடந்த 3 போட்டிகளில் லபுஷான் 229 ரன்களையும் ஸ்மித் 127 ரன்களையும் மட்டுமே எடுத்துரைக்கின்றனர். அதேநேரத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடியிருக்கும் கவாஜா 238 ரன்களை எடுத்திருக்கிறார்.

வாய்ப்புகள் மறுக்கப்படும் போது நமக்கான கதவுகள் திறக்கப்படாத போது எந்தளவுக்கு ஆக்ரோஷமாக முயல வேண்டும் என்பதை உஸ்மான் கவாஜா ஆஷஸில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த கவாஜா நான்காவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்திருக்கிறார். கொஞ்சம் தடுமாறுவது போல் தெரிந்த ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டு வலுவான நிலைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஒரு போட்டியோடு ஓரங்கட்டப்பட்டுவிடுவார் என கணிக்கப்பட்டவர் தன்னை ஒதுக்குவதற்கான சாத்தியமே இல்லாத அளவிற்கு பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்.

இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களாக வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷான் இருவரும், ஏற்கனவே முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் எடுத்த ரன்களை விட கவாஜா இந்த போட்டியில் அதிக ரன்களை எடுத்திருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் லபுஷான் 229 ரன்களையும் ஸ்மித் 127 ரன்களையும் மட்டுமே எடுத்துரைக்கின்றனர். அதேநேரத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடியிருக்கும் கவாஜா 238 ரன்களை எடுத்திருக்கிறார். ஆடியிருக்கும் ஒரே ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்திருக்கிறார்.

இந்த இரண்டு சதங்களுமே ரொம்பவே முக்கியமான நேரத்தில் ஆஸ்திரேலியா தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் வந்தவை. முதல் இன்னிங்ஸில் 117-3 என்ற நிலையில் இருந்த போது கவாஜா க்ரீஸிற்குள் வந்தார். அவர் அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 398-8. வார்னர் மற்றும் லபுஷான் இருவரும் 30 மற்றும் 28 ரன்களில் அவுட் ஆகியிருக்க, ஸ்மித் அரைசதம் அடித்து அவுட் ஆகியிருந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த போதும் ஒரு முனையில் தற்காப்பாக நின்று நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதில் கவாஜா கவனமாக செயல்பட்டிருந்தார். 260 பந்துகளில் 137 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அவர்களின் முதல் இன்னிங்ஸ் பெர்ஃபார்மென்ஸே. பெரிய முன்னிலை எடுத்து கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸிலேயே ஆட்டம் மொத்தத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கவாஜா
கவாஜா
Fox Cricket

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காபாவில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 400+ ஸ்கோரை எடுத்திருந்தனர். இங்கிலாந்து பேட்டிங்கில் தடுமாறவே பெரிய முன்னிலையோடு போட்டியையும் எளிதில் வென்றிருந்தனர். அடிலெய்டில் பகலிரவாக நடந்த இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவே முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 400+ ஸ்கோரை எட்டியது. முதல் போட்டியை போன்றே பெரிய முன்னிலையோடு போட்டியை ஏறக்குறைய முதல் இன்னிங்ஸிலேயே வென்றுவிட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களான வார்னர், லபுஷான், ஸ்மித் மூவரும் பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருந்தனர். அதுவே 400+ ஸ்கோருக்கு காரணமாக இருந்தது. போட்டியையும் வென்று கொடுத்தது. மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்கு ஆஸ்திரேலியா 267 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருந்தாலும் 400+ ஸ்கோர் எடுக்கப்படாததற்கு காரணம் அணியின் முக்கிய வீரர்களான வார்னர், ஸ்மித், லபுஷான் மூவருமே பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கவில்லை.

இப்போது நான்காவது போட்டிக்கு வருவோம். இங்கே முதலில் ஆஸ்திரேலியாதான் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவும் 400+ ஸ்கோரை எட்டியது. ஆனால் வார்னர், லபுஷான் இருவரும் பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை. ஸ்மித் அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். அப்படியிருந்தும் ஆஸ்திரேலிய அணியால் தங்களின் டிரேட்மார்க் 400+ ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் உஸ்மான் கவாஜா மட்டுமே. ஆஸ்திரேலியாவிற்கு முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர், லபுஷான், ஸ்மித் ஆகிய மூவரும் பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கவில்லை. 3, 23, 29 என்றே மூவரும் ஸ்கோர் செய்திருந்தனர். கவாஜா க்ரீஸிற்குள் வந்த போது அணியின் ஸ்கோர் 68-3. ஆஸ்திரேலியா 190 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆடியதை போன்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கவாஜா இருந்தார்.

அணிக்கு மட்டுமல்ல, அவருக்குமே ஒதுக்க முடியாத அளவுக்கு தன்னை நிலைநிறுத்த இன்னொரு சதம் தேவைப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவாஜா
கவாஜா
Cricket Australia

க்ரிஸ் க்ரீனுடன் கூட்டணி சேர்ந்தார். இருவரும் மிகச்சிறப்பாக கூட்டணி அமைத்து ரன்களை உயர்த்தினர். முதல் இன்னிங்ஸை போல தன்னை ஒரு தற்காப்பு சிறையில் அடைத்துக் கொண்டு முழுமையாக நிதானமாக ஆடாமல், ஏதுவான பந்துகளில் ஸ்கோர் செய்து வேகமாக ரன்களை உயர்த்தினார். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில் குறியாக இருந்தார். இன்னொரு முனையில் க்ரீனும் தனது கரியரின் மிக முக்கிய இன்னிங்ஸை ஆடி அரைசதம் கடந்திருந்தார். கவாஜா தொடர்ச்சியாக தனது இரண்டாவது தத்தை நிறைவு செய்துவிட கம்மின்ஸ் டிக்ளேர் செய்த போது ஆஸ்திரேலிய அணி 387 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்திற்கு டார்கெட் 388. நான்காம் நாள் முடிவில் 30-0 என்றிருக்கும் இங்கிலாந்து அணி கடைசி ஒரு நாளில் மட்டும் 358 ரன்களை எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் இப்போதைய ஃபார்முக்கு இது கொஞ்சம் சாத்தியமற்ற டார்கெட்டே. அதிகபட்சமாக இங்கிலாந்து விக்கெட்டை இழக்காமல் டிரா செய்யவே முயலும். இந்த போட்டியை ஆஸ்திரேலியா வெல்லும்பட்சத்தில் அதற்கான மிக முக்கிய காரணம் கவாஜாவே. ஆட்டநாயகன் விருதும் அவரையே அலங்கரிக்கப்போகிறது.

ஆஸ்திரேலிய அணியில் வெளிநாட்டை சேர்ந்த முதல் இஸ்லாமிய கிரிக்கெட்டராக அறிமுகமானவர் கவாஜா. 2010-11 ஆஷஸில் இதே சிட்னியில்தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார். வேற்று இனத்தை சேர்ந்தவராக ஆஸ்திரேலிய ட்ரெஸ்ஸிங் ரூமில் மற்ற வீரர்களுடன் ஒன்றிணைவதில் கவாஜாவிற்கு பெரும் மனத்தடைகள் இருந்திருக்கிறது.

'உன் நிறத்தில் இருப்பவர்களெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு ஆடவே முடியாது' என வெளிப்படையாகவே சகவீரர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்

மது அருந்தும் பழக்கமற்றவர் என அறிந்திருந்தும் வேண்டுமென்றே மது அருந்த சொல்லி வற்புறுத்தியிருக்கின்றனர். இப்படி ஏகத்துக்கும் கவாஜா வேற்றுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். கவாஜாவிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் ஆடியிருக்கிறார்கள்? என்பதை பார்த்தாலே அந்த அணிச்சூழலை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். 2019 ஆஷஸ் தொடரின் போது அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். டெஸ்ட் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்ட போது கூட கவாஜா அவ்வளவு வருத்தமடையவில்லை.

அதே ஆண்டில் லிமிட்டெட் ஓவர் போட்டியிலிருந்தும் கவாஜாபை டிராப் செய்தார்கள். அதுதான் கவாஜாவின் மனதை உடைத்தது. ஏனெனில் அந்த ஆண்டில் ஓடிஐ போட்டிகளில் மட்டும் அவருடைய ஆவரேஜ் 50 க்கு நெருக்கமாக இருந்தது.
கவாஜா
கவாஜா
Fox Cricket

அணியிலிருந்து விலக்கப்பட்டதோடு சம்பள ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்டார். கவாஜாவிற்கு வயதும் 32 ஐ தாண்டியிருந்தது. ஆஸ்திரேலிய அணியிலும் இளம் வீரர்கள் உள்ளே நுழைய தொடங்கினர். இனிமேலும் கவாஜாவிற்கு ஆஸ்திரேலிய அணியிம் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. கவாஜாவிற்கான அத்தனை கதவுகளும் சாத்தப்பட்டதாகவே பேசப்பட்டது. ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை. குயின்ஸ்லாந்து அணிக்காக மீண்டும் வெறித்தனமாக ஆட தொடங்கினார். ஆஸ்திரேலிய அணியின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டினார். ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் கவாஜாவை ஓரங்கட்ட முடியாது என்ற போதே ஆஷஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். இங்கேயும் பென்ச்சிலேயேதான் வைக்கப்பட்டிருந்தார். டிராவிஸ் ஹெட்டிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லையெனில், கவாஜாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அப்படி வாய்ப்பு கிடைத்த போதும் கவாஜா பேட்டை கையில் ஏந்துவதற்குள்ளேயே, 'அடுத்த போட்டியிலேயே டிராவிஸ் ஹெட் மீண்டும் அணிக்கு திரும்பிவிடுவார்' எனும் செய்தி அதீத சத்தத்துடன் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது. இதையெல்லாம் கடந்த கவாஜா க்ரீஸிற்குள் வந்தார். இரண்டே இன்னிங்ஸ்கள். இரண்டிலும் சதம். அதுவும் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்த போது தூக்கிய நிறுத்திய சதங்கள். இனிமேலும் அவரை ஓரங்கட்ட முடியுமா? ஓரங்கட்டினாலும் பரவாயில்லை என்கிறார் கவாஜா.

அடுத்த போட்டியில் நான் பென்ச்சில் வைக்கப்படாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அப்படியான பேச்சுகள்தான் தேர்வுக்குழு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். எப்போதும் யார் வேண்டுமானாலும் கொரோனாவால் பாதிக்கப்படலாம்.
கவாஜா

இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த பிறகு கவாஜா இப்படி பேசியிருக்கிறார். ஆனால், இனி கவாஜாவே நினைத்தாலும் கவாஜாவை வெளியேற்றுவது கடினம். தன்னுடைய இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை, இந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மித் மற்றும் லபுஷானை மட்டுமே நம்பி ஆஸ்திரேலிய எதையெல்லாம் தவறவிட்டதென்பதை இரண்டே இன்னிங்ஸ்களில் கவாஜா ஆஸ்திரேலிய அணிக்கு உணர்த்தியிருக்கிறார். இனியும் அவரை பென்ச்சில் வைக்கமாட்டார்கள் என்பதே அனைவருடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.இத்தோடு சேர்த்து கவாஜா இன்று இன்னொன்றையும் பேசியிருந்தார். அது,

Khawaja
Khawaja
Cricket Australia
நான் திமிரோடு பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். ஆஸ்திரேலியாவின் டாப் 6 சிறந்த பேட்ஸ்மேன்களில் நானும் ஒருவனே
கவாஜா

ஒடுக்கப்படுவதாக ஓரங்கட்டப்படுவதாக நினைக்கும் போது கொஞ்சம் திமிரோடு பேசினாலும் தவறில்லையே!