Published:Updated:

அண்டர் ஆர்ம்ஸ் - 25: போர்க்குணம் கற்றுத்தந்த தன்னலமற்ற தலைவன்... சர்ச்சைகள் சூழ் கங்குலியின் கதை!

சௌரவ் கங்குலி

கங்குலியின் கரியரை எண்களைக் கொண்டு கணக்கிடமுடியாது. இன்று இந்தியா நம்பர் 1 அணியாக உச்சம்தொடுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் செளரவ் கங்குலிதான்.

அண்டர் ஆர்ம்ஸ் - 25: போர்க்குணம் கற்றுத்தந்த தன்னலமற்ற தலைவன்... சர்ச்சைகள் சூழ் கங்குலியின் கதை!

கங்குலியின் கரியரை எண்களைக் கொண்டு கணக்கிடமுடியாது. இன்று இந்தியா நம்பர் 1 அணியாக உச்சம்தொடுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் செளரவ் கங்குலிதான்.

Published:Updated:
சௌரவ் கங்குலி

விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் போர்க்குணம் எனும் ஃபைட்டிங் ஸ்பிரிட் என்பது மிகவும் முக்கியம். எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லையென்றால் வெற்றியோ, வளர்ச்சியோ எதுவுமே கிட்ட நெருங்காது.

‘ஃபைட்டிங் ஸ்பிரிட் இல்லை' என்பதற்கான சரியான உதாரணமாக இருந்தது 1990-களின் இந்திய கிரிக்கெட் அணி. வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்பே பெரும்பாலான வீரர்களிடம் இருக்காது. ரன் அடிப்பது ஏதோ சச்சினின் வேலை என்பதுபோல பலரும் ஒதுங்கியே இருப்பார்கள். வெற்றி/தோல்விக்குப் பதில் சொல்ல வேண்டியது கேப்டனின் பொறுப்பு மட்டுமே என்கிற ஆட்டிட்யூட் இந்திய அணியினரிடம் இருக்கும். அப்படிப்பட்ட எதிர்த்துப் போராடும் குணம் இல்லாத, தன்முனைப்பு இல்லாத ஒரு அணிக்குள் நுழைந்து, தலைவனாக உயர்ந்து, வெற்றிக்காகப் போராடும் போராளிகளை அணி முழுக்க உருவாக்கிய இந்திய கிரிக்கெட் கேப்டன் செளரவ் கங்குலியின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான அவமானகரத் தோல்வி இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றத் தொடங்கியது. அதுவரை சீனியர் வீரர்களை வைத்து மட்டுமே வெற்றிபெற்றுவிடலாம் என்கிற எண்ணத்தில் இருந்த கிரிக்கெட் வாரியம் ஓர் அணிக்குள் இளம் வீரர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தது.

கங்குலி
கங்குலி

உலகக்கோப்பை முடிந்த அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டியிருந்தது. இங்கிலாந்து கண்டிஷனைத் தாக்குப்பிடித்து ஆடுவதற்கான சரியான அணி அப்போது இல்லை. டீமுக்குள் வலுவான 2 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உடனடித் தேவையாக இருந்தது. ‘இருவரில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருந்தால் இன்னும் சிறப்பு’ என இளம் வீரர்களைத் தேட ஆரம்பித்தது இந்தியத் தேர்வுக்குழு.

அந்தக் காலகட்டத்தில் இந்திய தேர்வு குழுவின் தலைவராக இருந்தவர் குண்டப்பா விஸ்வநாத். கர்நாடகாவைச் சேர்ந்தவரான இவர் எப்போதும்போல லென்ஸை கர்நாடகாவுக்குள்ளேயே சுழற்ற, சுனில் ஜோஷி, ராகுல் டிராவிட், வெங்கடேஷ் பிரசாத் (டெஸ்ட் அறிமுகம்) என மூன்று வீரர்கள் இந்திய அணிக்குள் வந்தார்கள். இதுத்தவிர ஏற்கெனவே இந்திய அணிக்குள் ஜவகல் ஶ்ரீநாத், அணில் கும்ப்ளே என இரண்டு கர்நாடக வீரர்கள் இருந்ததால் கர்நாடக வீரர்களின் எண்ணிக்கை மொத்தமாக 5 ஆனது.

இதனால் அப்போது BCCI-ன் செயலாளராக இருந்த ஜக்மோகன் டால்மியா தன்னுடைய மாநிலத்துக்கு ஒரு வீரர் நிச்சயம் ஒதுக்கப்படவேண்டும் என சண்டைப்போட செளரவ் கங்குலியின் பெயர் 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து டூருக்கான அணியில் சேர்க்கப்பட்டது. ஜக்மோகன் டால்மியாவின் அழுத்தத்தால் கங்குலி இந்திய அணிக்குள் சேர்க்கப்பட்டதால் ‘கோட்டாவில் வந்த வீரர்' என ஏளனம் செய்யப்பட்டார்.

ஆனால், உண்மையில் கங்குலிக்கு இது இந்திய அணியுடனான முதல் சர்வதேச தொடர் அல்ல. 1990-91 ரஞ்சிக் கோப்பை சீசனில் கங்குலியின் பர்ஃபாமன்ஸ் மிகவும் கொண்டாடப்பட்டது. அந்த சீசனில் கிட்டத்தட்ட 400 ரன்கள் அடித்த அவர் 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். இதனால் 1991 இறுதியில் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய டூருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் செளரவ் கங்குலி. அப்போது அவருக்கு வயது 19.

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடர், அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்போகும் இந்திய அணிக்குள்தான் நுழைந்திருந்தார் கங்குலி. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன். ஒருநாள் தொடர் தொடங்கியது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து பென்ச்சிலேயே உட்கார வைக்கப்பட்டார் கங்குலி.

கங்குலி
கங்குலி

கொல்கத்தாவில் மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருந்த கங்குலியை ப்ரின்ஸ் ஆஃப் கொல்கத்தா என்றுதான் அழைப்பார்கள். ராஜா வீட்டு கன்னுக்குட்டியான தனக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காமல், வீரர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது, டவல் கொண்டு போய் கொடுப்பது என எடுபிடி வேலை வாங்குகிறார்களே என கோபம். இந்த மன அழுத்தத்திலேயே கங்குலிக்கு பிரிஸ்பேனில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பளித்தார் கேப்டன் அசாருதீன். இந்தப் போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் கங்குலி. ஸ்ரீகாந்த், சித்து, மஞ்ரேக்கர், அசாருதீன் என எல்லோரும் சிங்கிள் டிஜிட்டல் அவுட்டாக சச்சின் மட்டும் களத்தில் நிற்கிறார்.

18 வயது சச்சின், 19 வயது கங்குலி என இரண்டு டீனேஜ் வீரர்கள் கரீபியன் அட்டாக்கை எதிர்த்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். சச்சினோடு பார்ட்னர்ஷிப் போட்டு ஒரு அருமையான கூட்டணியை உருவாக்க வேண்டிய வாய்ப்பு கங்குலிக்கு கிடைக்கிறது. ஆனால், ஏற்கெனவே விரக்தியில் இருந்த கங்குலி, ஆண்டர்சன், கமின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்ளத் திணறுகிறார். அன்று மொத்தம் 13 பந்துகளைச் சந்தித்த கங்குலி 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். சச்சினின் அன்றைய ஸ்கோர் 77. இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பேட்டிங் சொதப்பினாலும், பெளலிங்கில் பேர் எடுத்துவிடலாம் எனக் காத்திருந்த கங்குலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆல்ரவுண்டரான கங்குலிக்கு இந்தப் போட்டியில் அசாருதீன் பௌலிங் போடும் வாய்ப்பையே வழங்கவில்லை. ஆனால், சித்து, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்துக்கெல்லாம் பெளலிங் போடும் வாய்ப்பைக் கொடுத்த அசாருதீன் மேல் இன்னும் கடுப்பானார் கங்குலி. மிகவும் சொகுசாக வளர்க்கப்பட்ட கங்குலியால் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அணியில் இருந்து விலகி இந்தியா வந்துவிட்டார்.

ஆனால், தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் மேற்கு வங்கத்துக்காக ஆடினார். இந்திய ‘ஏ’ அணியில் நிரந்தரமாக கங்குலியின் பெயர் இருக்கும் அளவுக்கு எல்லா போட்டிகளிலும் விளையாடுவார். அப்படிப்பட்டவரைத்தான் இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டுவர ஜக்மோகன் டால்மியாவின் அழுத்தம் தேவைப்பட்டது.

1991-ல் கங்குலி இந்திய அணிக்குள் நுழையும் போது ஆல்ரவுண்டர்களாக இருந்த கபில்தேவ், மனோஜ் பிரபாகர் இருவரும் இப்போது அணியில் இல்லை. ஆனால், இப்போதும் முகமது அசாருதின்தான் கேப்டன். திறமையை மட்டுமல்ல தன் பொறுமையையும் சேர்த்தே நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார் கங்குலி.

கங்குலி
கங்குலி

1996 இங்கிலாந்து டூரில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடந்தன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கங்குலிக்கு அணியில் இடமில்லை. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 291 ரன்கள் அடித்தது. சேஸிங்கின்போது 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறிக் கொண்டிருந்த போது மழை வந்து காப்பாற்றியது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 158 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது. இதனால் வேறுவழியின்றி மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது ப்ளேயிங் லெவனை மாற்றினார் அசாருதீன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கரியரில் இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கங்குலிக்கு கிடைக்கிறது.

ஓப்பனிங் இறங்கிய சச்சின் ஒரே ரன்னில் அவுட்டாக, ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுகிறார் கங்குலி. விக்ரம் ரத்தோரோடு பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணியை இக்கட்டிலிருந்து மீட்டார் கங்குலி. பொறுமையாக ஆடி 83 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். கங்குலியின் பேட்டிங் பர்ஃபாமென்ஸைப் பார்த்த அசாருதீன், இப்போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசும் வாய்ப்பையும் கங்குலிக்குக் கொடுத்தார். எக்கனாமிக்கலாகப் பந்து வீசினார் கங்குலி.

இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர்… இதற்கு எஸெக்ஸ் கவுன்ட்டி அணியுடன் இந்திய அணி விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸில் 51 ரன், இரண்டாவது இன்னிங்சில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 34 ரன்கள் அடுத்து கவனம் ஈர்த்தார் கங்குலி. ஆனால், பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் கங்குலி ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அசாருதினிடம் சண்டை போட்டுக்கொண்டு பாதியிலேயே சித்து இந்தியா வந்துவிட்டார். அவர் இடம் அணிக்குள் காலியாக இருந்தது. ஆனாலும், கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், பராஸ் மாம்ப்ரே, விக்ரம் ரத்தோர், சுனில் ஜோஷி, வெங்கடேச பிரசாத் என நான்கு வீரர்கள் இந்திய அணிக்காக தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். முதல் இன்னிங்ஸில் 214 ரன், இரண்டாவது இன்னிங்சில் 219 ரன் என ஆல் அவுட் ஆன இந்தியா இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டும் தனது ப்ளேயிங் லெவனை மாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் அசாருதீன்.

கங்குலி
கங்குலி

கிரிக்கெட் வீரர்களின் கனவான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என இருவருக்குமே கிடைத்தது. ஜூன் 20,1996... இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்தியாவுக்காக முதல்முறையாகக் விளையாடினார் கங்குலி. இந்தியா முதலில் பெளலிங் செய்தது. நாசர் உசேன், கிராமி ஹிக் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய கங்குலி, பேட்டிங்கில் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கினார். சச்சின், அசாருதீன், ஜடேஜா என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும், ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராகுல் டிராவிட் உடன் கூட்டணி போட்டு இங்கிலாந்து பெளலர்களை பதம் பார்த்தார் கங்குலி.

லார்ட்ஸில் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸிலேயே முதல் சதம். 301 பந்துகளை சந்தித்து 131 ரன்கள் அடித்து செம கிளாசிக்கல் இன்னிங்ஸ் ஆடினார் கங்குலி. முதல்முறையாக இந்தியாவின் ஓர் இடது கை பேட்ஸ்மேன் ஆடிய அற்புதமான ஆட்டம் இது. இதற்கு முன்னர் டபிள்யு.வி. ராமன், வினோத் காம்ப்ளி என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தாலும், முதல்முறையாக ஒரு சூப்பர் ஸ்பெஷல் இன்னிங்ஸை இப்போதுதான் இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள். கங்குலியின் அன்றைய பேட்டிங்கை ‘’கவிதைபோல் இருந்தது’’ என வர்ணித்தார்கள் கமெண்ட்டேட்டர்கள். இந்த இன்னிங்ஸில் 20 பவுண்டரிகள் அடித்தார் கங்குலி. ஆஃப் சைடில் பாய்ந்த ஒவ்வொன்றும் வியக்க வைக்கும் ரகம். இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.

மூன்றாவது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. கங்குலி, சச்சின், டிராவிட் என மூவருமே தரமான, சிறப்பான சம்பவங்கள் செய்த டெஸ்ட் இது. இந்தியாவின் ஓபனர்களான மோங்கியாவும், ரத்தோரும் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழக்க கங்குலியோடு கூட்டணி சேர்ந்தார் சச்சின் டெண்டுல்கர். கிறிஸ் லூயிஸ், டாமினிக் கார்க், ஆலன் முல்லாளி, மார்க் ஈல்ஹாம் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் இக்கூட்டணியை உடைக்க படாதபாடுபட்டார்கள். ஆனால், அன்று சச்சின் - கங்குலி இருவரும் இணைந்து 255 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார்கள்.

கங்குலி 17 பவுண்டரி 2 சிக்சர்கள் என மொத்தம் 136 ரன்கள் அடித்தார். பெளலிங்கில் 3 விக்கெட்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 48 ரன்கள் அடிக்க மேன் ஆஃப் தி மேட்ச் விருது கங்குலிக்கு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியையும் இந்திய அணி டிரா செய்தது. தோல்விகளோடு தொடங்கிய இங்கிலாந்து தொடர் கங்குலி, டிராவிட் எனும் புதுமுகங்களின் ஆட்டத்தால் வரலாற்று சிறப்புமிக்கத் தொடராக மாறியது.

இந்தத் தொடருக்குப்பின் இந்தியாவின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார். கங்குலி அணியில் நிரந்தர உறுப்பினர் ஆனார். கன்சிஸ்ட்டன்டாக இல்லையென்றாலும் அடிக்கடி சிறுதும், பெரிதுமான பேர் சொல்லும்படியான இன்னிங்ஸ்கள் ஆடினார் கங்குலி.

கங்குலி
கங்குலி

97-ல் ஐந்து டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வெஸ்ட் இண்டீஸ் போனது. இதன் முதல் 4 டெஸ்டுகளில் மிகச் சுமாரான ஆட்டம் ஆடினார் கங்குலி. இதனால் கேப்டன் சச்சின் ஐந்தாவது டெஸ்ட்டில் அவரை ப்ளேயிங் லைவெனை விட்டு நீக்கினார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் கங்குலி.

அந்த ஆண்டு கனடா, டொரான்ட்டோவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி தொடரை 4-1 என இந்தியா வென்றது. இதற்கான முழு முதற்காரணம் செளரவ் கங்குலி. இந்த சீரிஸின் அதிகபட்ச ரன்களாக 222 ரன்கள் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளும் எடுத்தார் கங்குலி. இதில் ஒரு போட்டியில் 10 ஓவர்கள் வீசி, வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளும் எடுத்தார் கங்குலி. இதன்பிறகு கங்குலிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவெடுக்க ஆரம்பித்தது. எல்லா தொடர்களிலுமே கங்குலியிடம் இருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்ப்பார்க்கலாம் எனும் அளவுக்கு அவரது பேட்டிங் மேம்பட்டது. அந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களிலும் மிகச்சிறப்பாக ஆடினார்.

அடுத்து ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு விளையாட வந்தது. அப்போது மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம். சச்சினுக்குப் பதிலாக அசாருதீன் மீண்டும் கேப்டன் ஆக்கப்பட்டார். இந்த டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது. கங்குலியும் சிறப்பாக ஆடினார். பெரிய இன்னிங்ஸ்கள் இல்லை என்றாலும் எல்லா போட்டிகளிலுமே சிறப்பாகப் பங்களித்தார்.

அடுத்து 1999 உலகக்கோப்பை… 7 போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் அடித்தார். இதில் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்தார். வாஸ், முரளிதரன் என எல்லோரது பந்துகளும் கேலரிக்குள் போய் விழுந்தன. இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியது. பெளலிங்கிலும் 6 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால், இந்த உலகக்கோப்பையில் இந்தியா சூப்பர் சிக்ஸ் போட்டிகளோடு வெளியேறியது.

இதனால் மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம். சச்சின் கேப்டன் ஆனார். தோல்விகளும் தொடர்ந்தன. 1999 செப்டம்பரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக சிங்கப்பூரிலும், அடுத்து கனடாவிலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் முகமது அசாருதீன் இந்திய அணியில் இல்லை.

சிங்கப்பூர் ஒருநாள் தொடரில் விளையாடிய சச்சின், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதுகு பிரச்னை காரணமாக விளையாடவில்லை. இதனால் செளரவ் கங்குலி இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுதான் கங்குலியின் முதல் கேப்டன்சி. கங்குலி கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய முதல் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

கங்குலி, ரவி சாஸ்திரி
கங்குலி, ரவி சாஸ்திரி
காயம் குணமாகாததால், கனடாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சச்சின் கலந்துகொள்ளவில்லை. இதனால் முதல் முறையாக ஒரு தொடருக்கு கங்குலி கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.

தொண்ணூறுகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்த அசாருதீன், சச்சின் இருவருமே மிகவும் நிதானமானவர்களாகவும், அதிர்ந்து பேசாதவர்களாகவும், ஆக்ரோஷம் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறிபட்டிருந்தது கங்குலியின் கேப்டன்சி. முதல்முறையாக இந்தியாவுக்கு ஒரு ஆக்ரோஷமான கேப்டன் என மீடியாக்கள் கங்குலியை கொண்டாட ஆரம்பித்தன.

இந்த சூழலில் இரண்டாயிரத்தில் ஹேன்ஸி க்ரோனியே தலைமையில் இந்தியாவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட வந்தது தென்னாப்பிரிக்கா. இத்தொடருக்கு சச்சின்தான் இந்தியாவின் கேப்டன். ஆனால் இரண்டு டெஸ்ட்களிலுமே இந்தியா தோல்வியடைந்தது. இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சச்சின் அறிவித்தார். கோட்டா மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தவர் என்று விமர்சிக்கப்பட்ட கங்குலியை தேடி கேப்டன்ஷிப் வந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். கங்குலி தலைமையில் இந்தியா இத்தொடரை வென்றது. ஆனால், இத்தொடரில் ஹேன்சி க்ரோனியே உள்ளிட்ட சில தென்னாப்பிரிக்க வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி, அது அசாருதீன், அஜய் ஜடேஜா வரை நீண்டது. இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கபில்தேவ். மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னையால் அவரும் பதவி விலகினார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரே இப்படி சர்ச்சைக்குரியதாக மாறியதில் நொந்துபோனார் கங்குலி.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அணியை முற்றிலுமாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கங்குலிக்கு வந்தது. முதல்முறையாக வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தேட ஆரம்பித்தார்கள். நியூசிலாந்தில் இருந்து ஜான் ரைட் வந்தார். இந்தியாவுக்குள் இளைஞர்களைத் தேட ஆரம்பிக்க வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ், கைஃப், ஜாகீர் கான் என ஓர் இளம் பட்டாளமே வந்தது. வெற்றிகளும் கங்குலியைத் தேடி வர ஆரம்பித்தன.

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி
ஹாசிப்கான்

2002-ல் கங்குலி தலைமையில் மேற்கிந்திய தீவுகளுக்கு போன இந்தியா, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவில் இந்தியா வென்ற முதல் டெஸ்ட் இதுதான். ஆனால், அடுத்த டெஸ்ட்களில் தோல்வியடைந்து 2-1 என தொடரை இழந்த இந்தியா, ஒருநாள் தொடரை மட்டும் 2-1 என வென்றது.

இதற்கடுத்துதான் நாட்வெஸ்ட் சீரிஸ் சம்பவம். இங்கிலாந்து, இலங்கை, இந்தியா விளையாடிய முத்தரப்பு தொடர் இது. இலங்கையை எல்லா போட்டிகளிலும் வீழ்த்தி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது இந்தியா. 325 ரன்கள் சேஸ் செய்யவேண்டும். இந்த சீரிஸின்போதெல்லாம் சச்சின் 2 டவுன் பேட்ஸ்மேனாக இறங்க, ஷேவாக்கோடு ஓப்பனிங் இறங்குவார் கங்குலி. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 106 ரன் பார்ட்னர்ஷிப் போட்டார்கள். கங்குலி 10 பவுண்டரி, 1 சிக்ஸர் என 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். ஆனால், அடுத்த 40 ரன்கள் அடிப்பதற்குள் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷேவாக், கங்குலி, டிராவிட், சச்சின் என எல்லோரும் அவுட். ஆனால், கங்குலி நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஏனென்றால் அவர் இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கு போர்க்குணம் பழக்கியிருந்தார்.

யுவராஜ் சிங்கும் - முகமது கைஃபும் 121 ரன் பார்ட்னர்ஷிப்போட இந்தியா இந்தப் போட்டியை வென்று கோப்பையைத் தூக்கியது. லார்ட்ஸ் பால்கனியில் கங்குலி சட்டையை கழற்றி, சுழற்றி கொக்கரித்தார்.

இத்தோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்தியா 1-1 என டிரா செய்தது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்திருந்த நிலையில், 3-வது டெஸ்ட் ஹெட்டிங்லியில் நடந்தது. சச்சின், டிராவிட், கங்குலி என இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களும் இணைந்து இங்கிலாந்து பெளலர்களை துவம்சம் செய்து 628 ரன்கள் குவித்தார். சச்சின் 193 ரன்கள் அடிக்க, டிராவிட் 148, கங்குலி 128 ரன் அடித்தார்கள். இந்தியா இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது. வெளிநாடுகளில் வெற்றி பெறுவது இந்தியாவுக்குப் பழக ஆரம்பித்தது.

கங்குலி தலைமையில் 2003-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இந்தியா பிரமிக்க வைத்தது. அந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் 1-1 என சமன் செய்தது. பாகிஸ்தானில் 3-2 என ஒருநாள் தொடரை வென்ற இந்தியா, டெஸ்ட் தொடரையும் 2-1 என வென்றது.

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி

இதன்பிறகுதான் கங்குலியின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஜான் ரைட் ஓய்வு தேவை என சொன்னதால் புதிய பயிற்சியாளரை இந்தியா தேட ஆரம்பித்தது. வெளிநாட்டு பயிற்சியாளர்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் கங்குலி ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பலை இறுதி செய்தார். ஆனால், இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.

2005-ல் ஜிம்பாப்வே டூர் போனது இந்தியா. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. கங்குலியும் சதமடித்தார். ஆனால் அவர் 101 ரன்கள் அடிப்பதற்கு 262 பந்துகளை எடுத்துக் கொண்டார். ‘’ஆமை வேக ஆட்டம்’’ என விமர்சனங்கள் கிளம்பின. இதற்கிடையே அடுத்த டெஸ்ட்டில், ‘’சேப்பல் என்னை பென்ச்சில் உட்கார சொன்னார்’’ என கங்குலி சொல்ல அதுவும் பிரச்னையானது. இங்கிருந்துதான் கேப்டன் கங்குலியின் சரிவு தொடங்கியது.

‘’கங்குலி தன்னுடைய சுயநலத்துக்காக அணியின் நலனைக் கெடுக்கிறார்'’ என கிரேக் சேப்பல் ஜிம்பாப்வேயில் நடந்த சம்பவங்கள் என மிக நீண்ட இ-மெயில் ஒன்றை பிசிசிஐ-க்கு அனுப்ப, பிசிசிஐ கிரெக் சேப்பலுக்கு ஆதரவாக நின்றது. அதிர்ந்துபோனார் கங்குலி. ராகுல் டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார் கங்குலி.

2003 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துக்கொண்டுபோனவர், அடுத்த இரண்டே ஆண்டுகளில் அணியைவிட்டே நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையானது. பாராளுமன்றம் வரை கங்குலியின் நீக்கம் எதிரொலித்தது. 2005-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறாத ஒரு சம்பவம் நடந்தது. செளரவ் கங்குலி இல்லாத இந்திய அணியை வெறுத்த கொல்கத்தா ரசிகர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவளித்தனர். ஒவ்வொரு இந்திய விக்கெட் விழும்போது அதைக் கொண்டாடினார்கள். குறிப்பாக ராகுல் டிராவிட் அவுட் ஆகி வெளியேறியபோது அவருக்கு எதிராக சத்தம் எழுப்பி தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இப்போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது.

தொடர்ந்து இந்தியா மோசமான தோல்விகளைச் சந்திக்க, கிட்டத்தட்ட ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்திய அணிக்குள் நுழைந்தார் செளரவ் கங்குலி. ஒருநாள் தொடரை 4-0 என இந்தியா இழந்ததால் டெஸ்ட் தொடருக்கு கங்குலி சேர்க்கப்பட்டார். கிரெக் சேப்பலோடு கைகுலுக்கினார் கங்குலி.

கங்குலி & சேப்பல்
கங்குலி & சேப்பல்
Outlook india

ஜோஹானஸ்பர்கில் நடைபெற்றது முதல் டெஸ்ட். ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று 51 ரன்கள் அடித்தார் கங்குலி. இந்திய இன்னிங்ஸின் டாப் ஸ்கோர் இதுதான். கங்குலியின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா வென்ற முதல் டெஸ்ட் போட்டி இதுதான்.

இதனைத் தொடர்ந்து ஒருநாள் அணியிலும் கம்பேக் கொடுத்தார் கங்குலி. இலங்கைக்கு எதிரான அந்த ஒருநாள் தொடர் 2006-ல் கொல்கத்தாவில்தான் தொடங்கியது. இந்தத் தொடரில் மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய கங்குலி முதல் போட்டியிலேயே (தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி) 62 ரன்கள் அடித்தார். அடுத்த போட்டியில் 48 ரன், அதற்கடுத்தப் போட்டியில் 58 ரன் நாட் அவுட் என கம்பேக் தொடரில் மேன் ஆஃப் தி சீரிஸ் விருதும் வென்றார். தொடர்ந்து சிறப்பாக ஆட 2007 கரீபியன் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேற மிக முக்கியக் காரணம் வங்கதேசத்துடனான தோல்வி. இந்தத் தோல்விக்கானப் பழி செளரவ் கங்குலி மீது விழுந்தது. இப்போட்டியில் வீரேந்திர ஷேவாக்குடன் ஒப்பனிங் இறங்கினார் கங்குலி. ஷேவாக், உத்தப்பா, சச்சின், டிராவிட் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும் என மிகப்பொறுமையாக ஆடினார் கங்குலி.
யுவராஜ் - கங்குலி
யுவராஜ் - கங்குலி

யுவராஜ் சிங்கோடு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கங்குலி. ஆனால். யுவராஜ் சிங் 58 பந்துகளில் 47 ரன்கள் அடிக்க, கங்குலியோ 66 ரன்கள் அடிக்க 129 பந்துகள் எடுத்துக்கொண்டார். இந்தியா வெறும் 191 ரன்கள் டார்கெட்டையே கொடுத்தது. வங்கதேசம் வென்றது. இந்த உலகக்கோப்பை தோல்வியால் கிரெக் சேப்பல் அணியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால், கங்குலியின் இடம் தொடர்ந்தது.

இந்தச் சூழலில்தான் 2007 டி20 உலகக்கோப்பையை வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி. இதனால் மகேந்திர சிங் தோனிக்கு இந்திய ஒருநாள் அணியில் நிரந்த இடம் தேவைப்பட, கங்குலி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், டெஸ்ட் அணியில் நீடித்தார். தனது கரியரிலேயே 2007-ம் ஆண்டில்தான் மிக அதிகபட்சமாக 19 இன்னிங்ஸ்கள் ஆடி 1000 ரன்களுக்கு மேல் குவித்தார் கங்குலி. இந்த ஆண்டில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிக அதிகபட்ச ஸ்கோராக 239 ரன்கள் குவித்தார்

2008-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பாதியிலேயே ஓய்வை அறிவித்தார் கங்குலி. நாக்பூரில் நடைபெற்ற தனது கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் அடித்தவர், கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.
கங்குலி
கங்குலி

113 டெஸ்ட் போட்டிகள், 311 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 18,575 ரன்கள் குவித்திருக்கிறார் கங்குலி. ஒருநாள் போட்டிகளில் சரியாக 100 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். கங்குலியின் கரியரை எண்களைக் கொண்டு கணக்கிடமுடியாது. இன்று இந்தியா நம்பர் 1 அணியாக உச்சம்தொடுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் செளரவ் கங்குலிதான். ஷேவாக், சச்சின், யுவராஜ், தோனி என அணியின் மற்ற வீரர்களுக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை மாற்றிக்கொண்டே வந்ததுதான் கங்குலியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

ஆனால், தன்னுடைய வீழ்ச்சியைப் பற்றி கவலைகொள்ளாமல் அணியின் நலனை மனதில்கொண்டு தியாகங்கள் செய்த கங்குலி இந்திய கிரிக்கெட்டின் ஒப்பற்ற தலைவன்!