Published:Updated:

சந்தர்பால் எனும் சரித்திரம்; ஒரு பக்கம் விக்கெட்டா விழும்... ஆனா, இன்னொரு பக்கம்?- அண்டர் ஆர்ம்ஸ் 11

சந்தர்பால் ( ஹாசிப் கான் )

இந்திய பெளலர்களுக்கு பெரும் சோதனையாக இருந்திருக்கிறார் சந்தர்பால். இந்தியாவுக்கு எதிராக மட்டுமே 7 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். 25 போட்டிகளில் விளையாடி 2171 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சந்தர்பாலின் ஆவரேஜ் 70.

சந்தர்பால் எனும் சரித்திரம்; ஒரு பக்கம் விக்கெட்டா விழும்... ஆனா, இன்னொரு பக்கம்?- அண்டர் ஆர்ம்ஸ் 11

இந்திய பெளலர்களுக்கு பெரும் சோதனையாக இருந்திருக்கிறார் சந்தர்பால். இந்தியாவுக்கு எதிராக மட்டுமே 7 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். 25 போட்டிகளில் விளையாடி 2171 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சந்தர்பாலின் ஆவரேஜ் 70.

Published:Updated:
சந்தர்பால் ( ஹாசிப் கான் )
கன்சிஸ்டென்ஸி... கிரிக்கெட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல். ஆனால், இந்த கன்சிஸ்டென்ஸிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டர்களுக்கும் எப்போதுமே பிரச்னைதான். டெஸ்ட் போட்டிகளில் திடீரென 400 ரன்களை சேஸ் செய்து உலக சாதனை படைப்பார்கள். ஆனால், அடுத்த போட்டியிலேயே 80 ரன்களில் ஆல் அவுட்டும் ஆவார்கள். இதுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் டிஎன்ஏ.

ஆனால், இந்த டிஎன்ஏ-வுக்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கும் எந்தs சம்பந்தமும் இருக்காது. இவர் தனி ரகம். வெஸ்ட் இண்டீஸின் வெற்றியை, வளர்ச்சியை, வீழ்ச்சியை, அதன் தேக்கத்தை இவரைப்போல அருகில் இருந்து பார்த்தவர் எவரும் இருக்க மாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதை இன்னொரு முனையில் நின்று அதிகமுறை பார்த்தவர் இவராகத்தான் இருப்பார். அவர்தான் ஷிவ் நாராயண் சந்தர்பால்.

சந்தர்பால்
சந்தர்பால்

18-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தொழிலாளர்களாகக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் சந்தர்பால். அப்பா மீனவர். தந்தை கரீபியக் கடல்களில் மீன் பிடிக்க, சந்தர்பாலுக்கு கிரிக்கெட் பிடித்தது. 8 வயதிலேயே பேட்டைப் பிடித்துவிட்டார். 13 வயதில் பள்ளிப்படிப்பில் இருந்து நின்றுவிட்டரின் கவனம் முழுக்கவும் கிரிக்கெட் மீதுதான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரிய ஆக்ரோஷ நடையோ, ஆவேச உடல்மொழியோ சந்தர்பாலிடம் இருக்காது. காற்றில் அலைந்தாடும் வெள்ளை உடையோடு, தரைக்கும் வலிக்காத வகையில் பிட்ச்சை நோக்கி நடந்துவருவார் சந்தர்பால். க்ரீஸூக்குள் போனதும் ஸ்ம்டப்பில் இருந்து பெய்ல்ஸை எடுத்து பேட் ஹேண்டிலால் பிட்ச்சில் ஆணி அடிப்பதுபோல், ஒரு சிற்பத்தை செதுக்குவதைப்போல செதுக்கிவிட்டு கார்ட் எடுப்பார்.

இவரது பேட்டிங் ஸ்டான்ஸையெல்லாம் இதுவரை யாராலும் காப்பியடிக்க முடியவில்லை. அவ்வளவு யுனிக்கானது. ஒரு நண்டு நிற்பதைப்போல, மூன்று ஸ்டம்ப்புகளையும் காட்டி, கொஞ்சம் லெக் அம்பயரைப் பார்த்தவாறு நிற்பார். இப்படித்தான் பேட் பிடிக்க வேண்டும், இப்படித்தான் கார்டு எடுக்க வேண்டும், இப்படித்தான் பேட்டிங் பொசிஷனில் நிற்க வேண்டும் என்கிற எந்த விதிமுறைகளுக்குள்ளும் சந்தர்பால் இல்லை. அவருக்கு எது சரியாக இருக்குமோ, எது பழக்கமோ அதைத்தான் செய்வார். கண்களுக்கு கீழே கண் கூச்சத்தைத் தடுக்க கறுப்பு வண்ண ஸ்டிக்கர்களோடு விளையாடுவது சந்தர்பாலின் இன்னொரு டிரேட்மார்க் அடையாளம்.

90-களில் 1 டவுன் பேட்ஸ்மேனாக கரியரைத் தொடங்கியவர், 2000-களில் 3-வது டவுன் அல்லது 4-வது டவுன் பேட்ஸ்மேனாக நிலையான இடத்தைப் பிடித்தார். இடது கை பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றுமொரு இடது கை பேட்ஸ்மேன் சந்தர்பால். இவருக்கு ஏரியல் ரூட் எடுப்பது எப்போதும் பிடிக்காது. தரையோடுதான் ஆடுவார். ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ், புல் ஷாட் என இந்தியாவின் ராகுல் டிராவிட்டைப்போல இவரது பேட்டிங் ஸ்டைல் இருக்கும்.

Shivnarine Chanderpaul
Shivnarine Chanderpaul
Hannah Johnston
லாராவா, சந்தர்பாலா என்றால் இந்திய ரசிகர்களுக்கு சந்தர்பால் என்றால்தான் பயம் அதிகம். லாராவைக் கண்டு இந்திய ரசிகர்கள் பயந்ததே கிடையாது. காரணம், இந்தியாவுக்கு எதிராகப் பெரிய இன்னிங்ஸ்களை லாரா ஆடியதில்லை.

இந்தியாவுக்கு எதிராக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,002 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் லாரா. இரண்டு சதங்கள் மட்டுமே அடித்திருக்கும் லாராவின் ஆவரேஜ் இந்தியாவுக்கு எதிராக வெறும் 34 ரன்கள் மட்டுமே. ஆனால், இந்திய பெளலர்களுக்கு பெரும்சோதனையாக இருந்திருக்கிறார் சந்தர்பால். இந்தியாவுக்கு எதிராக மட்டுமே 7 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். 25 போட்டிகளில் விளையாடி 2,171 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக சந்தர்பாலின் ஆவரேஜ் 70.

சந்தர்பால் பல சாதனைகள் செய்திருக்கிறார். அந்தச் சாதனைகளில் ஒன்று இவ்வளவு சாதனைகள் இவர் செய்திருக்கிறாரா என்பதே வெளியுலகத்துக்குத் தெரியாமல் இருப்பது. 90-களில் வந்த கிரிக்கெட்டர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் விளையாடியவர் சந்தர்பால். 21 ஆண்டுகள் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ரன்கள் அடித்திருக்கிறார் சந்தர்பால். இன்னும் 45 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் சாதனையை முறியடித்து அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்கிற முதலிடத்தைப் பிடித்திருப்பார். அந்தக் கடைசி வாய்ப்புக்காக கெஞ்சிக்கொண்டிருந்தவரை கட்டாய ஓய்வுபெறவைத்து வீட்டுக்கு அனுப்பியது வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம். ஆனால், அப்போது அவர் வயது 41.

சந்தர்பால் கிளாஸிக்கலான டெஸ்ட் பேட்ஸ்மேன் மட்டுமல்ல. ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸின் ரன் மெஷினாகவும் இருந்தவர். 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,778 ரன்கள் அடித்திருக்கிறார் சந்தர்பால். கிறிஸ் கெய்ல், லாராவுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் சந்தர்பால்.

சந்தர்பாலின் ஆச்சர்ய சாதனைகளில் ஒன்று 69 பந்துகளில் அவர் அடித்த டெஸ்ட் சதம். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிரெட் லீ, கில்லெஸ்பி, பிக்கெல், ஹாக் ஆகியோருக்கு எதிராக சண்டை செய்திருப்பார் சந்தர்பால். டெஸ்ட்டில் அதிவேக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இப்போதும் 6-வது இடத்தில் இருக்கிறது சந்தர்பாலிடம் எப்போதும் பார்க்க முடியாத அந்த ஆக்ரோஷ ஆட்டம். மெக்கல்லம், விவியன் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக், ஆடம் கில்கிறிஸ்ட், கிரிகோரி எனும் இந்த லிஸ்ட்டில் சந்தர்பாலின் பெயரும் இருப்பதைப் பார்ப்பதே ஒரு அதிசயம்தான். சச்சின் டெண்டுல்கர் கடைசியாக ஆடிய 200வது போட்டி சிவநாராயணன் சந்தர்பாலுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் போட்டி. சந்தர்பால் ஆடிய 150வது டெஸ்ட் போட்டி அது. தன் மகனுடன் சேர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடியவர் என்கிற பெருமையும் சந்தர்பாலுக்கு உண்டு.

Shivnarine Chanderpaul
Shivnarine Chanderpaul

சந்தர்பாலின் எழுச்சி!

யார் எல்லாம் ஃபார்மில் இல்லாமல் இருக்கிறார்களோ, யார் எல்லாம் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தவிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் 90-களில் இருந்த இந்திய அணிதான் நட்புக்கரம் நீட்டி அவர்களை வளர்த்துவிடும். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதங்களை, சதங்களாக மாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருந்த சந்தர்பாலுக்கும் உதவியது இந்தியா. ஒருநாள் போட்டியிலும் தனது முதல் சதத்தை இந்தியாவுக்கு எதிராகத்தான் அடித்தார் சந்தர்பால்.

இந்திய கிரிக்கெட் அணியும், இந்திய ரசிகர்களும் ஆயுசுக்கும் மறக்க முடியாதபடியான சம்பவத்தையும் செய்திருக்கிறார் சந்தர்பால். 2002-ல் வெஸ்ட் இண்டீஸின் ஆண்டிகுவாவில் நடந்த போட்டி அது. நல்ல பேட்டிங் விக்கெட்டான இந்த டெஸ்ட் போட்டியில் சுமாராக ஆடக்கூடியவர்கள் எல்லாம் சதம் அடித்துக்கொண்டிருந்தார்கள். அஜய் ரத்ரா என இந்திய அணியில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கூட இந்தப் போட்டியில் செஞ்சுரி அடித்தார். ஒரு இந்திய விக்கெட் கீப்பர் வெளிநாட்டு மைதானத்தில் அடித்த இரண்டாவது சென்சுரி இதுதான். கும்ப்ளே தலையில் கட்டோடு பெளலிங் போட்டு லாராவின் விக்கெட்டை எடுத்தப் போட்டியும் இதுதான். ஐந்து நாள்களில் இரண்டு அணிகளுமே ஒரே ஒரு இன்னிங்ஸ்தான் விளையாடின.

இந்தப் போட்டியில்தான் சந்தர்பால் ஒட்டுமொத்த இந்திய அணியின் பொறுமையையும் சோதித்தார். இந்தியா மூன்றாவது நாள் காலை வரை விளையாடி 513 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ய, வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கார்ல் ஹூப்பர் செஞ்சுரி, ரிட்லி ஜேக்கப்ஸ் செஞ்சுரி, நம்ம சந்தர்பாலும் செஞ்சுரி. ஆனால், எத்தனை பந்துகளில் தெரியுமா? 336 பந்துகளில். செஞ்சுரி அடித்த பிறகும் சந்தர்பால் இந்திய பெளலர்களை பாவம் பார்த்துவிடவில்லை. இதன் பிறகும் 174 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே இருந்தார் சந்தர்பால். கங்குலி அன்று சந்தர்பாலின் விக்கெட்டை வீழ்த்த விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா உட்பட 11 பேரையுமே பெளலிங் போட வைத்தார். ஆனால், சந்தர்பால் அன்று இந்திய வீரர்களுக்கு கொடுத்தது மிருகின ஜம்போ தண்டனைகளில் ஒன்று. ஶ்ரீநாத், நெஹ்ரா, ஜாகிர்கான் என வேகப்பந்து வீச்சாளர்கள் மூவருமே ஆளுக்குக் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் வரை வீசிப்பார்த்தும் சந்தர்பாலை அசைக்க முடியவில்லை. 510 பந்துகளில் 136 ரன்கள் அடித்து கெத்தாக க்ரீஸில் நின்றுகொண்டிருந்தார் சந்தர்பால்.

Shivnarine Chanderpaul
Shivnarine Chanderpaul

சந்தர்பாலின் பல இன்னிங்ஸ்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிக முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனையான 418 ரன் சேஸிங்கில் சந்தர்பாலின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. 2003-ல் செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி அது. முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே தலா 240 ரன்கள் அடிக்க, இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்ட்டின் லேங்கர், மேத்யூ ஹேடனின் சதங்களால் 417 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸுக்கு 418 ரன் டார்கெட்டைக் கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

டெஸ்ட்டின் மூன்றாவது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸின் சேஸிங் தொடங்கிவிடும். ஓப்பனர்கள் கெய்ல், ஸ்மித், 1 டவுனில் வந்த கங்கா எல்லோருமே சீக்கிரமே அவுட் ஆகி வெளியேற முதல் நம்பிக்கையை லாரா தருவார். லாரா 60 ரன்களில் அவுட் ஆக, ராம்நரேஷ் சர்வானோடு இணைந்து பார்ட்னர்ஷிபோட வருவார் சந்தர்பால். லாரா அவுட் ஆகும்போது அணியின் ஸ்கோர் 165 ரன்கள். வெற்றிக்கு இன்னும் 253 ரன்கள் தேவை எனும் சூழலில் சர்வானோடு சேர்ந்து செம சூப்பர் இன்னிங்ஸ் ஆடுவார் சந்தர்பால். சர்வான் கூட அவசரப்பட்டு ஆடிக்கொண்டிருப்பார். ஆனால், சந்தர்பாலிடம் அவ்வளவு நிதானம், தெளிவு. சர்வான் 105 ரன்களில் அவுட் ஆகும்போது வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோர் 288. வெற்றிக்கு இன்னும் 130 ரன்கள் தேவை. பேங்ஸுடன் பார்ட்னர்ஷிப் போடுவார் சந்தர்பால். 154 பந்துகளில் 104 ரன்கள். இதில் 17 பவுண்டரிகள், 1 சிக்ஸர். வெற்றிக்கு வெறும் 43 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில்தான் சந்தர்பால் அவுட் ஆனார். மெக்ராத், கில்லெஸ்பி, பிரட் லீ என மூவரின் பவுன்சர்களையுமே சமாளித்து சந்தர்பால் ஆடிய மிகச்சிறப்பான ஆட்டம் இது.

வெஸ்ட் இண்டீஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி சந்தர்பாலின் கரியரில் மிக முக்கியமானது. முதல் இன்னிங்ஸில் லாராவோடு பார்ட்னர்ஷிப்போட்டு மிகச்சிறப்பான இன்னிங்ஸ் ஆடுவார் சந்தர்பால். லாரா செஞ்சுரி அடிக்க சந்தர்பால் 92 ரன்களில் அவுட் ஆகி செஞ்சுரி மிஸ் ஆகும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்கள் அடித்து, நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று பாகிஸ்தான் சேஸ் செய்ய அதிகபட்ச ஸ்கோரை செட் செய்திருப்பார் சந்தர்பால். மிகப்பெரிய வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பெறும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார் சந்தர்பால். ஒன்று வங்கதேசத்துக்கு எதிராக அவரது கரியரின் இறுதியில் அடிக்கப்பட்டது. இன்னொன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடிக்கப்பட்டது. வேவல் ஹிண்ட்ஸோடு சேர்ந்து, தென்னாப்பிரிக்க பெளலிங்கை ஒன்றும் இல்லாமல் செய்து 284 ரன்கள் பார்ட்னர்ஷிப்போட்டு இருவருமே இரட்டை சதம் அடித்த போட்டி அது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டராகக் களமிறங்கிய சந்தர்பால் ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன். 1997-ல் வெஸ்ட் இண்டீஸ் வந்திருந்த இந்தியாவைப் பதறவைத்தார் சந்தர்பால். டெஸ்ட்டில் சதம் அடித்து ஃபார்முக்கு வந்தவர், ஒருநாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சிகள் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்தத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார் சந்தர்பால். இந்தியாவின் டார்கெட்டான 200 ரன்களை விக்கெட் இழக்காமல் ஆடி வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்.

Shivnarine Chanderpaul
Shivnarine Chanderpaul

ஒருநாள் போட்டிகளில் 1999-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் சந்தர்பால் அடித்த 150 ரன்கள் மிக முக்கியமானது. பொல்லாக், காலிஸ், க்ளூஸ்னர், குரோனியே என மிகப்பெரிய தென்னாப்பிரிக்க பெளலிங்குக்கு எதிராக எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினார் சந்தர்பால். ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தர்பால், 3வது டவுன் பேட்ஸ்மேன் கார்ல் ஹூப்பர். இவர்கள் இருவரும் அடித்தது மட்டும்தான் ரன்கள். சந்தர்பால் 136 பந்துகளில் 150 ரன்கள் அடிக்க, ஹூப்பர் 108 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுமே அந்தப் போட்டியில் சிங்கிள் டிஜிட்டில் அவுட்.

2007-ல் இந்தியாவுக்கு எதிராக நாக்புரில் அடித்த 149 ரன்களும் சந்தர்பாலின் கரியரில் மிக முக்கியமானது. இந்தியாவின் 338 ரன்களை சேஸ் செய்ய முயன்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ். கெய்ல், லாரா, சாமுவேல், பிராவோ என ஒவ்வொருவராக அவுட் ஆகிக்கொண்டேயிருக்க சந்தர்பால் மட்டும் ஒருமுனையில் நங்கூரம் மாதிரி நின்று ஆடினார். ஜாகிர் கான், ஶ்ரீசாந்த், அகர்கர், ஹர்பஜன், சச்சின் என எல்லோருமே சந்தர்பாலை அவுட் ஆக்க முயன்று தோல்வியடைந்திருப்பார்கள். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தாலும் சந்தர்பாலின் நிலையான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 324 ரன்கள் அடித்திருக்கும்.

ரேர் பீஸ் என்று சொல்வார்களே... அப்படி கிரிக்கெட்டின் ரேர் பீஸ் சந்தர்பால். பெளலிங் பிட்ச், எதிர் அணியின் பெளலர்கள் மிகவும் திறமையானவர்கள், விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருக்கிறது எனக் களத்தில் சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஷிவ் நாராயண் சந்தர்பால் வேறு மனநிலையில், வேறு சிந்தனையில், வேறு நோக்கத்தில் இருப்பார். தன் விக்கெட்டைக் காப்பாற்றுவதில் அவ்வளவு கவனம் இருக்கும். 21 வருட கரியரில் ஏகப்பட்ட ரன் அவுட் சம்பவங்களில் சந்தர்பால் சிக்கியிருக்கிறார். ஆனால், மிகக்குறைந்த முறையே சந்தர்பால் அவுட் ஆகியிருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் எதிர்முனையில் இருப்பவர்கள்தான் தங்கள் விக்கெட்டை இழந்து வெளியேறியிருக்கிறார்கள்.

தேவையில்லாத பயமோ, பதற்றமோ, உணர்ச்சிவயப்படுதலோ இல்லாத சந்தர்பால் போன்ற இன்னொரு கிரிக்கெட்டர்கள் எல்லாம் வரலாற்றில் அரிதிலும் அரிதுதான்!

சந்தர்பால் ஆடி உங்களுக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எது? கமென்ட்டில் சொல்லுங்கள்.