Published:Updated:

CSK-வின் இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை, செய்யவும் முடியாது! #UnbreakableIPLRecords

IPL 2020
IPL 2020

சிஎஸ்கே அணி செய்திருக்கும் இந்தச் சாதனையை வேற எந்த அணியும் செய்ததில்லை... செய்யவும் முடியாது! அது என்ன சாதனை?

ஐபிஎல்
த்ரில்லர் படங்களுக்கு இணையாக, விறுவிறுப்பு சுறுசுறுப்பு பரபரப்பு என 3 மணிநேரம் ரசிகர்களை கட்டிப்போடக்கூடிய கிரிக்கெட் போட்டி ஐபிஎல் மட்டுமே!

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள, கடந்த வாரமே தோனி சென்னை வந்திறங்கிவிட்டார். அவர் வந்தவுடன், தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் ஐபிஎல் ஃபீவர் தொற்றிக்கொண்டது. ஐபிஎல் போட்டிகளில், கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு முறியடிக்கப்பட்டுவந்தாலும், நெருங்கக்கூட முடியாத சில சாதனைகளும் ஐபிஎல்-லில் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஐபிஎல் சாதனைகளை இன்ஃபோகிராஃபிக்ஸின் உதவியோடு இங்கே அலசலாம்...

ஐபிஎல்லிலும் இவர்தான்!

சர்வதேசப் போட்டிகளில் பல முத்திரைகளைப் பதித்துவரும் கோலிதான், ஐபிஎல்லின் டாப் ஸ்கோரர். பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியின் டாப் ஸ்கோரர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த சிஎஸ்கே ஸ்டார் ரெய்னாவை ஓரம்கட்டி, 5,412 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் கோலி. இந்தப் பெருமை, கோலியை விட்டு இந்த ஆண்டு ஐபிஎல்-லிலேயே விலகிச்செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியாத சாதனையாக கோலி வைத்திருப்பது, 'ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள்' என்பதுதான்.

2016-ம் ஆண்டு, 16 போட்டிகளில் விளையாடி கோலி குவித்தது 973 ரன்கள். கிட்டத்தட்ட 1000 ரன்கள். ஒரு தொடரில் இவ்வளவு ரன்கள், அதுவும் டி20 போட்டிகளில் குவிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. இந்தச் சாதனையை முறியடிப்பதும் அவ்வளவு எளிதில்லை. இதுவரை நடந்த 12 ஐபிஎல் சீசன்களிலும், கோலியைத் தவிர வேறு எவரும் 900 ரன்களைக்கூட தொட்டதில்லை என்பதும் குறித்துவைத்துக்கொள்ளவேண்டிய செய்தி.

Most Runs In A Single IPL Season
Most Runs In A Single IPL Season
Vikatan Infographics
சென்னை அணிக்காக 'ஒரு சீசனில் அதிக ரன்கள்' குவித்தவர், மைக் ஹஸி. 2013-ம் ஆண்டு 733 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை தட்டிச்சென்றார் ஹஸி.

கெயில் புயல்!

கிரிக்கெட்டின் டி20 ஃபார்மெட்டுக்கென அளவெடுத்து செய்யப்பட்டவர், கிறிஸ் கெயில். களமிறங்கினாலே இவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இமாலய சிக்ஸர்களைத்தான். 2013-ம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் புனே வாரியர்ஸ் இந்திய அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொண்டன. அன்று, அந்த மைதானத்தில் வீசிய கெயில் புயல், சுழல்பந்து வீச்சாளர்களை மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்களையும் வெளுத்துவாங்கியது. புயல் அடங்கியபோது, கெயில் குவித்திருந்த ரன்கள் 175. ஒருநாள் போட்டிகளிலேயே விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் 170 ரன்களைக் கடந்துள்ளனர். ஆனால், டி20 போட்டியில் 175 ரன்கள் குவித்து ரசிகர்களை ஆச்சர்யக் கடலில் மிதக்கச் செய்தார் கெயில். 66 பந்துகளைச் சந்தித்தவர், அதில் 30 பந்துகளை பவுண்டரி கோட்டுக்கு அப்பால் அனுப்பினார். மொத்தம் 13 பவுண்டரிகள், 17 சிக்ஸர்கள். 2008-ம் ஆண்டு, ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களைக் குவித்திருந்தார். இவர்கள் இருவரைத் தவிர, ஐபிஎல்-லில் 150 ரன்களை எவரும் எட்டியதில்லை. மெக்கல்லத்தின் இந்தச் சாதனையை முறியடிக்க கெயிலுக்கு தேவைப்பட்டது 5 ஆண்டுகள். கெயிலின் இந்தச் சாதனையை முறியடிக்க எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படுமோ?!

Most Runs In A single IPL Match
Most Runs In A single IPL Match
Vikatan Infographics
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகபட்ச ஸ்கோர் அடித்தது, முரளி விஜய்தான். 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 127 ரன்கள் குவித்திருந்தார் விஜய்.

ஹாட்ரிக் மிஸ்ரா!

ஐபிஎல்-லின் ஹாட்ரிக் சாதனைகளைக் குத்தகைக்கு எடுத்துள்ள அமித் மிஸ்ரா, ஐபிஎல்-லின் பல அணிகளிலும் விளையாடியவர். இந்த ஆண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 2008-ம் ஆண்டு, ஐபிஎல்-லின் முதல் சீசனிலும் டெல்லி அணிக்காகத்தான் ஆடினார் அமித் மிஸ்ரா. அப்போது, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 192 ரன்கள் குவித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. சேஸ் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் தேவைப்பட்டது 12 ரன்கள். கடைசி ஓவரை வீச அமித் மிஸ்ராவைத் தேர்ந்தெடுத்தார், சேவாக். முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, டெல்லி அணியை எளிதாக வெற்றிபெறச் செய்தார் மிஸ்ரா. அடுத்த போட்டி 2011ல் நடைபெற்றது. அந்தப் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆடிய மிஸ்ரா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். இந்த ஹாட்ரிக்கின் மூலம், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் மிக மிக எளிதாக வெற்றியடைந்தது.

மிஸ்ராவின் அடுத்த ஹாட்ரிக், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரானது. 2013-ம் ஆண்டு, சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார் மிஸ்ரா. முதலில் பேட் செய்த சன் ரைஸர் அணி, 20 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அடுத்து ஆடிய புனே அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசினார் மிஸ்ரா. இரண்டாவது பந்தில் ஒரு விக்கெட். அதன்பின் கடைசி 3 பந்துகளில் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தனது 3-வது ஐபிஎல் ஹாட்ரிக்கை பதிவுசெய்தார் அமித் மிஸ்ரா. ஐபிஎல்-லில் இரண்டு ஹாட்ரிக்குகளை வீழ்த்தி, 'அதிக ஐபிஎல் ஹாட்ரிக் விக்கெட்டு'களை எடுத்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார், யுவ்ராஜ் சிங்.

இதுவரை ஐபிஎல்-லில் மொத்தம் 16 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதில் சென்னை அணியின் லட்சுமிபதி பாலாஜி, 2008-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக எடுத்த ஹாட்ரிக்தான் ஐபிஎல்-லின் முதல் ஹாட்ரிக். அதே ஆண்டு, சென்னையின் மக்காயா நிதினி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின், சிஎஸ்கே அணி வீரர்கள் யாரும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.

மிஸ்டர் டி20

ஓடி ரன்களைச் சேர்ப்பதைவிட, பவுண்டரிகளுக்கு பந்துகளை அனுப்புவதுதான் டி20 போட்டிகளின் ஸ்பெஷல்! தனக்கு ரன் ஓடுவது பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காகப் பந்துகளை பவுண்டரிக்கு அப்பால் ஓடவிட்டே பழகிவிட்டார், கிறிஸ் கெயில். கெயிலின் இந்தப் பழக்கம் அவருக்கு பெற்றுத் தந்த பெயர், 'மிஸ்டர் டி20'.

எனக்கு கிரிக்கெட்டில் பிடிக்காத விஷயம் ரன் ஓடுவது.
கிறிஸ்டோபர் கெயில்

'ஒரு ஓவரில் அதிக ரன்கள்' என்ற ரெக்கார்டும் கிறிஸ் கெயில் வசமே! ஓர் ஆண்டு மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் ஆடிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பரமேஷ்வரன் வீசிய பந்துகளை மைதானம் முழுக்க சிதறடித்தார் கெயில். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸராக்கினார் கெயில். அதில் இரண்டாவது பந்து நோ பால் ஆனதால், ஃப்ரீ ஹிட் கிடைக்க, அதை பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தும் பவுண்டரிக்கே செல்ல, அதற்கடுத்த 2 பந்துகளிலும் லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸர்களை விளாசி ரசிகர்களைக் களிப்பின் உச்சியில் ஆழ்த்தினார் கெயில். அவர் அடித்த வலி தாங்க முடியாமலோ என்னவோ, அந்த ஓவரின் கடைசியில் வீசப்பட்ட ஃபுல் டாஸ் பந்து, தானாகவே கெயில் பேட்டில் பட்டு இன்சைடு எட்ஜ் ஆகி கீப்பரை பீட் செய்து பவுண்டரியை அடைந்தது. மொத்தம் அந்த ஓவரில் ஒரு நோ பாலையும் சேர்த்து 37 ரன்கள்! கெயில் அடித்தது மட்டும் 36 ரன்கள்!

 `90-ஸ் கிட்ஸ்'  கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis
Most Runs In a Single over In IPL
Most Runs In a Single over In IPL
Vikatan Infographics

மிஸ்டர் ஐபிஎல்!

சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தான் இவரை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டுவந்தது. ஐபிஎல் முதல் சீசனிலிருந்து கன்சிஸ்டென்டாக பேட்டிங் ஆடியதால் இவருக்குக் கிடைத்த பெயர், 'மிஸ்டர் ஐபிஎல்'. பேட்டிங்கில் மட்டுமல்ல, போட்டிகளிலும் இவர் கன்சிஸ்டென்ட் காட்டியதால் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக சிஎஸ்கே-வுக்காக மட்டும் 134 போட்டிகளை விளையாடியுள்ளார் என்பதுதான் ரெய்னா வசமுள்ள சாதனை. குஜராத் லையன்ஸ் அணியையும் சேர்த்துக்கொண்டால் ஐபிஎல் -லில் ரெய்னா 158 போட்டிகளை இடைவெளி இல்லாமல் சந்தித்திருக்கிறார். தன்னை ஃபிட் ஆக வைத்துக்கொள்ளும் ஒரு வீரரால் மட்டுமே இது சாத்தியம். மும்பை அணிக்காகத் தொடர்ந்து 133 போட்டிகளில் விளையாடிய ரோகித், காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, ஜஸ்ட் மிஸ்ஸில் இந்தச் சாதனையை முறியடிக்கத் தவறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய ஃபார்ம் காட்டாத ரெய்னா, இந்த ஆண்டில் மாஸ் காட்டுவார் எனக் காத்திருக்கிறார்கள் சிஎஸ்கே ப்ளட்ஸ்.

 Most Matches for a single ipl franchise without break
Most Matches for a single ipl franchise without break
Vikatan Infographics

டீம் ஆர்சிபி!

2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், புனே வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்தப் போட்டியில், பெங்களூரு அணி குவித்த 263 ரன்கள்தான் ஐபிஎல் -லின் 'அதிகபட்ச டீம் ஸ்கோர்'. கெயில் மட்டுமே 175 ரன்கள் குவித்திருந்ததால், அந்தப் போட்டியில் இமாலய ஸ்கோரை எட்டியது ஆர்சிபி. கெயிலுடன் ஓப்பனிங் இறங்கிய தில்ஷான், 36 பந்துகளைச் சந்தித்து 33 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், கடைசியில் களமிறங்கிய ஏபிடி 8 பந்துகளில் 31 ரன்களைக் குவித்து, ஆர்சிபி அணி இந்த இமாலய சாதனையைச் செய்யத் துணைபுரிந்தார். இந்தப் பட்டியலில், இரண்டாவது இடமும் ஆர்சிபி-க்கே!

Highest Team Total
Highest Team Total
Vikatan Infographics
தனிநபர், ஒரு போட்டியில் அதிக சிக்ஸர், அதிவேக சதம் என முரளி விஜய் பல சாதனைகளை நிகழ்த்திய ராஜஸ்தான் அணிக்கு எதிரான அதே போட்டியில்தான், சிஎஸ்கே -வும் தனது அதிகபட்ச டீம் ஸ்கோரை எட்டியது.

சிக்ஸர் மன்னன்!

ஒரே போட்டிதான் ஐபிஎல்-லோடு அம்புட்டு ரெக்கார்டும் காலி!
வடிவேலு மீம் டெம்ப்ளேட்

இந்த வடிவேலு வசனம் போலத்தான், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக கெயில் ஆடிய ஆட்டமும்! இந்த ஒரே போட்டியில் பல ரெக்கார்டுகளையும் தன்வசப்படுத்திக் கொண்டார் கெயில். பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டு வீசும் பந்துகளை மிக எளிதாக சிக்ஸருக்கு அனுப்பும் வல்லமை கெயிலுக்கு உண்டு. எனவே, 'ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள்', 'ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள்' என்ற இரண்டு சாதனைகளுக்கும் கெயிலைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஐபிஎல்-லில் மொத்தம் 326 சிக்ஸர்களும், புனே அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் மொத்தம் 17 சிக்ஸர்களும் விளாசித் தள்ளி, டி20 போட்டிகளில் சிக்ஸர் மன்னனாக வலம்வருகிறார், கெயில்.

Most Sixes
Most Sixes
Vikatan Infographics
சச்சின் சாதனையை கோலி முறியடிக்கலாம்; ஆனால், ரோகித் சாதனையை? - கிரிக்கெட்டின் முரட்டு சாதனைகள்!
சிஎஸ்கே-வில் 'ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்' அடித்தவர், முரளி விஜய். 2010-ம் ஆண்டு, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

அதிவேக சதம்!

இங்கு சொல்லப்பட்டிருக்கும் 10 ரெக்கார்டுகளில், பாதி ரெக்கார்டுகளை இவரே வைத்துக்கொண்டதால், இவரைப் பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஆமாம்! கெயில்தான் இந்த பத்திலும் ஹீரோ. 'ஐபிஎல்-லில் அதிவேக சதம்'தான் அந்த ரெக்கார்டு. அதே புனே வாரியர்ஸ் அணியோடுதான் இந்தச் சாதனையையும் செய்து முடித்தார் கெயில். அந்தப் போட்டியில் அவர் சதத்தைக் கடந்தபோது சந்தித்திருந்த பந்துகளின் எண்ணிக்கை, வெறும் 30 மட்டுமே!

Fastest IPL Centuries
Fastest IPL Centuries
Vikatan Infographics
ஆர்சிபி-யின் கெயிலுக்கு புனே வாரியர்ஸ் கிடைத்ததைப் போல, சிஎஸ்கே-வின் முரளி விஜய்க்கு கிடைத்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 2010-ம் ஆண்டு, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் பல ரெக்கார்டுகளைச் செய்துவிட்டார் விஜய். 46 பந்துகளில் சதம் கடந்து, அதிவேக சதமடித்த சிஎஸ்கே வீரராகத் திகழ்கிறார் விஜய்!

பெரிய விசில் அடிங்க!

ஐபிஎல்-லின் ப்ளாக்பஸ்டர் டீம் சிஎஸ்கே! விளையாடிய 10 சீசன்களிலும் ப்ளே ஆஃப்ஸ் அல்லது செமிஸ் வரை சென்ற ஒரே அணி சென்னை மட்டுமே. 'சிஎஸ்கே ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?' என்ற கேள்விக்கான விடையாக இந்த சாதனையைச் சொல்லலாம். காரணம், தற்போது இருக்கும் எந்த அணியாலும் இந்தச் சாதனையைச் செய்துவிட முடியாது என்பதுதான். ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரே கேப்டன், ஒரே ஜெர்ஸி கலர் எனப் பெரிய மாற்றங்கள் இல்லாமல் ஐபிஎல்-லில் கலக்கிவரும் சிஎஸ்கே பெர்ஃபாமன்ஸிலும் கன்சிஸ்டென்ட் காட்டியிருக்கிறது.

Rain And Dhoni
Rain And Dhoni
CSK TWITTER

இதுவரை மற்ற அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது, பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படியே அனுமதித்தாலும் அவர்களுக்கெல்லாம் கூட்டம் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால், சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது, ரசிகர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். தோனியைக் காணவே பல்லாயிரம் ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிகின்றனர். சிஎஸ்கே-வுக்கும் ரசிகர்களுக்குமான பந்தத்தை இந்த ஒரு செய்தியைக்கொண்டே தெரிந்துகொள்ளலாம். பல கடுமையான சூழ்நிலைகளைக் கையாண்ட கேப்டனான தோனி, சென்னை பற்றியும் சிஎஸ்கே பற்றியும் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்திருந்தார், தோனி.

கடினமான சூழ்நிலைகளைக் கையாள கற்றுக்கொடுத்தது சிஎஸ்கே தான்! ராஞ்சி எனக்கு முதல் ஹோம் டவுன் என்றால் சென்னை எனது இரண்டாவது ஹோம்.
மகேந்திரசிங் தோனி

'தல' தோனி, இதுவரை 9 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். வேறு எவரும் இத்தனை இறுதிப் போட்டிகளில் விளையாடியதில்லை என்பதால், இதுவும் ஒரு ரெக்கார்டுதான்.

CSK
CSK
Vikatan Infographics
தோனியின் மாஸ் என்ட்ரிக்காகவும் சிஎஸ்கே-வின் கெத்து கம்பேக்கிற்காகவும் பெரிய விசிலோடு காத்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்!
கொரோனா பதிப்பு ஏற்படாமல் தடுக்க மைதானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்!
செளரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர்

கொரோனா ஃபீவர் பற்றிய செய்திகள் அதிகரித்துவரும் இந்த நிலையிலும் ஐபிஎல் ஃபீவர் சற்றும் குறையவில்லை. 'நிச்சயம் ஐபிஎல் நடைபெறும்' என்று கங்குலி அறிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல்-லை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

மேற்கண்ட ஐபிஎல் சாதனைகளில், எந்தச் சாதனை இந்த ஆண்டே தகர்க்கப்படும்? - உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு