Published:Updated:

ஐபிஎல் கிரிக்கெட்டைக் கலாய்க்கும் இலங்கை, லங்கா பிரிமியர் லீகை நடத்தத் திணறுவது ஏன்?! #LPL

#LPL
#LPL ( twitter.com/ICC )

கொரோனாவால் தேதிகள் தள்ளிப்போனாலும், நவம்பர் 26 முதல் போட்டிகள் நடப்பது உறுதி என அறிவித்துவிட்டார்கள். டிரீம்11 போல, எம்பிஎல் எனும் ஃபேன்டஸி ஆப் நிறுவனத்தின் ஸ்பான்சரையும் பிடித்துவிட்டார்கள். ஆனால்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2008-ல் கிரிக்கெட் உலகில் ஐபிஎல் பற்றவைத்த நெருப்பு இப்போது எல்லா நாடுகளிலும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் ஆடும் ஆசிய நாடுகளில் இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பிஎஸ்எல், வங்கதேசத்தில் பிபீஎல் என எல்லா நாடுகளிலும் ஒரு பிரிமியர் லீக் தொடர் நடக்கும் நிலையில் பல ஆண்டுகளாக இலங்கையும் எப்படியாவது ஒரு டி20 லீகை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தவிடவேண்டும் எனத் தவியாய்த் தவிக்கிறது.

கொரோனாவால் தேதிகள் தள்ளிப்போனாலும், நவம்பர் 26 முதல் போட்டிகள் நடப்பது உறுதி என அறிவித்துவிட்டார்கள். டிரீம்11 போல, எம்பிஎல் எனும் ஃபேன்டிஸி ஆப் நிறுவனத்தின் ஸ்பான்சரையும் பிடித்துவிட்டார்கள். ஆனால், சர்வதேச வீரர்கள் எல்லாம் ஒருவர்பின் ஒருவராக ஜகா வாங்க, என்ன செய்வது எனத் தெரியாமல் பெரும்சோகத்தில் மூழ்கியிருக்கிறது இலங்கை கிரிக்கெட் போர்டு.

Dream11 IPL 2020
Dream11 IPL 2020

வரலாறு!

ஐபிஎல் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் காண வேண்டிய அவசியத்தினாலும், 2012-ம் ஆண்டு, 7 அணிகள் பங்கேற்ற ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் முதன்முதலாக நடத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்களில் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் வீரர்களை உள்ளடக்கியிருந்த இந்தத் தொடரில், யூவிஏ நெக்ஸ்ட் அணி மகுடம் சூட்டியது. திறமையான வீரர்களை அடையாளம் காட்டிய இந்தத் தொடர், தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், ஸ்பான்சர்கள் கிடைக்காததாலும் முதல் சீசனோடு நிறுத்தப்பட்டது. அந்தத் தொடர்தான் இப்போது லங்கன் பிரிமியர் லீகாக உருமாறியுள்ளது.

தடங்கல்கள்!

ஆகஸ்ட்டில் நடைபெற்று இருக்க வேண்டிய இந்தத் தொடர், கொரோனாவின் தீராத விளையாட்டால் பலமுறை, தள்ளிப் போனது. தொடக்கத்தில் இலங்கையில் மூன்று மைதானங்களில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள், மலேசியாவுக்கு மாற்றப்படுமா, அரபு நாடுகளில் அரங்கேறுமா எனக் குழப்பம் நீடித்து வந்தது. பின்னர் இலங்கையிலேயே நடைபெறுவதாய் இறுதி செய்யப்பட்டு, அதுவும் அத்தனை போட்டிகளும், மஹிந்தா ராஜபக்சே மைதானத்தில் மட்டுமே நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டது.

போட்டிகள் எப்படி?!

21 நாட்களில் 23 போட்டிகள் நடக்க உள்ள இந்தத் தொடரில், கலந்து கொள்ளும் ஐந்து அணிகளில், ஒவ்வொரு அணியும், ரவுண்ட் ராபின் முறையில் மற்ற நான்கு அணிகளையும் இரண்டு முறை சந்திக்கும். இருபது போட்டிகளை உள்ளடக்கிய இந்த லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிகளின் அடிப்படையில் ஒரு அணி வெளியேற, மீதமுள்ள நான்கு அணிகளும் அரையிறுதிப்போட்டிகளுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி டிசம்பர் 16 நடக்கும்.

ஷாகித் அஃப்ரிடி
ஷாகித் அஃப்ரிடி

அணிகளின் விபரம்!

கொழும்பு கிங்ஸ், தம்புல்லா வைகிங், கண்டி டஸ்கர்ஸ், ஜாஃப்னா ஸ்டால்லியன்ஸ், காலே கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. அஃப்ரிடி தலைமையில் விளையாட உள்ள காலே அணியைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் இலங்கை வீரர்களின் தலைமையில் களமிறங்குகின்றன. இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற இர்ஃபான் பதான், முனாஃப் பட்டேல் ஆகியோர் பங்கேற்கயிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சவால்கள்!

இப்போது தொடருக்கு பெரிய சவாலாய் மாறியிருப்பது வீரர்களின் விலகல். ஐபிஎல் தொடங்குவதற்கு முன் பல வீரர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி தொடரிலிருந்து விலகினர். ஆளானப்பட்ட ஐபிஎல்லுக்கே இந்த கதியெனில் எல்பிஎல் மட்டும் எப்படித் தப்பிப் பிழைக்கும்? கொரானாவால் பல நாடுகளின் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, இப்போது அடுத்தடுத்து நடைபெற இருப்பதனால், டுப்ளஸ்ஸிஸ், டேவிட் மில்லர், முகமது ஹபீஸ், கார்லோஸ் பிராத்வொயிட் போன்று ஆரம்பத்தில் உறுதிசெய்யப்பட்ட பெயர்கள்கூட டெலீட் செய்யப்பட்டுவருகின்றன.

கிறிஸ் கெயில் | #LPL
கிறிஸ் கெயில் | #LPL

இங்கிலாந்தின் ரவி பொபரா சம்பளம் குறித்த பிரச்னைகளால் வெளியேற, கனடா வீரர், ரவீந்தரபால் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விலகும் நிலை நேர, அவருடன் பயணித்த ஆன்ட்ரே ரஸலும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, சர்ஃப்ராஸ் அஹ்மத், லயம் ப்ளங்கெட் என ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு காரணங்களுக்காக விலக, வெளியேறும் வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கொழும்பு கிங்ஸுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வாட்மோர் சொந்தக் காரணங்களுக்காக விலக, அவருக்குப் பதிலாக இணைந்த கபீர் அலிக்கு கோவிட் பாசிட்டிவ் என முடிவு வர, இறுதியில் என்ன செய்வதென்று புரியாமல் வர்ணனையாளராக அழைத்துச் செல்லப்பட்ட ஹெர்ஷெல் கிப்ஸ், கல்யாண வீட்டில் செய்யப்படும் கடைசி நேரக் கிச்சடி போல இன்ஸ்டன்ட் கோச்சாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்படி குழப்பங்கள் கும்மியடிக்கும் நேரத்தில், நட்சத்திர வீரர்கள் கெய்ல் மற்றும் மலிங்காவின் விலகல் இலங்கை கிரிக்கெட் அமைப்புக்கு இடியாக இறங்கியுள்ளது. கெய்ல், காயத்தைக் காரணமாகச் சொல்ல, பயிற்சி ஆட்டங்களில் ஆட முடியாமல் போனதை மலிங்கா காரணமாய்க் கூற, மொத்தத்தில் தொடரின் வெற்றிக்குத் தேவைப்படும் எந்த எக்ஸ் ஃபேக்டர்களும், ப்ரைம் பிளேயர்களும் இல்லாமலே அணிகள் தொடரை எதிர்கொள்ளப் போவது ரசிகர்களுக்கு இடையேயான எதிர்பார்ப்பினை பெரிதாய்க் குறைத்துள்ளது.

இர்ஃபான் பதான் | #LPL
இர்ஃபான் பதான் | #LPL

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வீரர்களுக்கு பதிலாய், புதிதாய் வீரர்களைச் சேர்ப்பதா, சேர்த்தாலும் அவர்கள் இலங்கைக்கு வந்து உரிய நேரத்தில் சேர முடியுமா, அப்படியே சேர்ந்தாலும் அவர்களும் போட்டிகளில் விளையாடும் முன் குறிப்பிட்ட காலம், தனிமைப்படுத்தபட வேண்டுமே என அடுக்கடுக்கான கேள்விகளையும், குழப்பங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது எல்பிஎல். இவை எல்லாவற்றையும் சமாளித்து, தொடர் நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு, தொடரை நடத்தியே தீருவோம் என்று பதிலளித்து, அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது, இலங்கை கிரிக்கெட் அமைப்பு.

வீரர்களின் விலகலில் பெரும்பிரச்னையாக இருப்பது சம்பளம்தான். ஒப்பந்தத்தில் சொல்லும் சம்பளத்தை முழுமையாக அணிகள் தருவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் வீரர்கள். கிறிஸ் கெயில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக 100 சதவிகித சம்பளத்தையும் கொடுத்தால்தான் விளையாடுவேன் எனச் சொல்லியிருந்தார். அதேபோல் பல்வேறு வீரர்களும் குறைந்தது 75 சதகிகித சம்பளத்தைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

எல்லா பிரச்னைகளையும் சமாளித்து லங்கா பிரிமியர் லீக் எப்படி நடக்கப்போகிறது என்பதைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு