Published:Updated:

கிளாசிக் ஸ்மித்... மாஸ்டர் ஸ்டோக்ஸ்... சிங்கிள் லீச்... ஆஷஸின் டாப் 5 மொமென்ட்ஸ்!

கடந்த ஒன்றரை மாதங்களாக, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் கட்டிப்போட்டிருந்த ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ரசிகர்களின் ஆக்ரோஷ கூச்சல், எதிர்பாராத காயங்கள் என டி20 போட்டிகளுக்கே சவால்விடும் வகையில் நடைபெற்ற இந்த ஆஷஸ் தொடரின் டாப் – 5 மொமென்ட்ஸ் இங்கே.

1
steve smith ( AP )

`திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ ஸ்டீவ் ஸ்மித்

அணியினர் செய்த தவற்றை வேடிக்கைபார்த்ததற்கு, அணியின் கேப்டன் என்ற முறையில் அந்தத் தவற்றுக்கு பொறுப்பேற்று, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டபோதிலும், இந்த உலகம் `ஏமாற்றுக்காரன்’ எனக் கூற, கடந்த ஒரு வருடமாக அதுவே காதில் ஒலித்துக்கொண்டிருக்க... ஆஷஸ் தொடரில் அமைந்தது ஸ்மித்தின் மரண மாஸ் ரீ-என்ட்ரி.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழக்க, நங்கூரம் போல நின்றார் ஸ்மித். இங்கிலாந்து பௌலர்களின் அட்டகாச பந்துவீச்சு, இங்கிலாந்து ரசிகர்களின் வசைப் பேச்சு எதுவுமே அவரைத் தாக்கவில்லை. அனைத்தையும் சமாளித்து, தன் கிளாஸை நிரூபித்தார் ஸ்மித். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலியா 122-8 என்று தள்ளாடிக் கொண்டிருக்க, ஒன்பதாவது விக்கெட்டிற்கு பீட்டர் சிடிலுடன் சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சிடிலின் விக்கெட் வீழ்ந்தபோது, ஸ்மித் 165 பந்துகள் சந்தித்து 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதன்பிறகுதான் தொடங்கியது அவரின் ருத்ர தாண்டவம்.

கடைசி விக்கெட்டிற்கு லயானுடன் சேர்ந்து பேட் செய்யும்போது, இங்கிலாந்தின் ஃபீல்டிங் பொசிஷனே அவரின் விளாசலைக் கூறிவிடும். இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் மற்றும் பௌலர் தவிர மற்ற ஒன்பது ஃபீல்டர்களும் பவுண்டரி லைனில் நிற்கும் வகையில், அனைத்து பந்துகளையும் விளாசித்தள்ளினார் ஸ்மித். சுமார் ஐந்தரை மணி நேரம் வரை களத்தில் நின்று, 144 ரன்கள் குவித்து வெளியேறினார். அவர் களத்திலிருந்து வெளியேறியபோது, மொத்த பர்மிங்ஹம் அரங்கமும் அவருக்கு ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுத்தது!

2
Steve Smith ( AP )

ஆர்ச்சர் vs ஸ்மித்

முதல் டெஸ்டில் தொடங்கிய ஸ்மித்தின் ஆதிக்கம், இரண்டாவது டெஸ்டிலும் தொடர்ந்தது. என்னதான் முயன்றாலும் அவரின் விக்கெட்டை இங்கிலாந்து பௌலர்களால் வீழ்த்த முடியவில்லை. எனவே, அவரைச் சமாளிக்க இதுதான் வழி என அவரின் தலைக்குக் குறிவைத்து, அசுர வேகத்தில் பவுன்ஸர்களை வீசத்தொடங்கினார், ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆனால், அதையும் நேர்த்தியாக விளையாடி அரை சதத்தைக் கடந்து விளையாடிக்கொண்டிருந்தார், ஸ்மித். ஆனால், 80 ரன்களில் இருக்கும்போது ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர், நேராகச்சென்று ஸ்மித்தின் தலையைத் தாக்கியது. சுமார் 148.7 kmph வேகத்தில் வந்த இந்த பந்தால், அவர் தடுமாறி தரையில் வீழ்ந்தார். பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆட்டத்தைத் தொடர முடியாமல் வெளியேறினார்.

சிறிது நேரம் கழித்து விளையாட வந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் பேட் செய்ய முடியவில்லை. அடுத்த போட்டியில், ஸ்மித் இல்லாமல் இங்கிலாந்து வெற்றிபெற, மீண்டும் உஷ்ணம் ஏறியது ஆஷஸ். ஸ்மித்தின் அடுத்த கம்பேக் மீண்டும் எதிர்பார்ப்பைக் கிளப்ப, “ ஸ்மித் களத்தில் இருந்தால்தானே அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியும்” என கமென்ட் செய்தார் ஆர்ச்சர். அதற்கு ஸ்மித், “நான் களத்தில் விழுந்தேனே தவிர, என் விக்கெட்டை அவர் வீழ்த்தவில்லை” என ஆர்ச்சருக்கு பதிலடிகொடுத்தார். அதன்பிறகு, ஒவ்வொரு முறை ஆர்ச்சர், ஸ்மித்துக்குப் பந்துவீசியபோதும் தீப்பொரி பறந்தது. ஆனால், ஸ்மித் அரணாக நின்றார். கடைசிவரை ஆர்ச்சரால் அவரை வீழ்த்தவே முடியவில்லை!

3
Ben Stokes ( AP )

ஸ்டோக்ஸின் மாஸ்டர் கிளாஸ்!

இரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-0 என இருந்தது. மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள். அப்போதே ஆஷஸ் முடிந்துவிட்டது என்று எல்லோரும் ஆரூடம் சொன்னார்கள். போதாக்குறைக்கு, 359 என்ற இமாலய இலக்கு. எல்லாமே இங்கிலாந்துக்கு ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டிருக்க, பென் ஸ்டோக்ஸ் என்னும் ஒற்றை மனிதன் அதை டாப் கிரியரில் மாற்றி ஆஷஸ் கனவை உயிர்பெறவைத்தார். முதலில் பொறுமை, பின்பு தேவையான அளவு வேகம், கடைசியில் ஆக்ரோஷம் எனத் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கினார் ஸ்டோக்ஸ். மூன்றாவது நாள் இறுதியில், 50 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், நான்காவது நாளில் நங்கூரமாய் நிற்க, அவரின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பௌலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

வெற்றிக்குத் தேவை 73 ரன்கள். கையில் இருப்பதோ 1 விக்கெட்... கூட இருப்பதோ டெய்லெண்டர் லீச். அதுவரை 174 பந்துகளுக்கு வெறும் 61 ரன்களுடன் இருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 42 பந்துகளுக்கு 7 சிக்சர் உட்பட 72 ரன்கள் அடித்து, தன் இன்னொரு முகத்தைக் காட்டினார். கடைசிக் கட்டத்தில் ரிவ்யூ டிராமாக்கள் அரங்கேறினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனி ஆளாக ஆட்டத்தை முடித்தார். அவர், இங்கிலாந்தை வெற்றிபெற மட்டும் வைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்தான இன்னிங்ஸை, ஒரு ஆகச் சிறந்த போட்டியையும் பரிசளித்தார்.

4
Jack Leach

ஒரு ரன் அடிச்சா 100 ரன் அடிச்ச மாதிரி!

"தன் வாழ்நாளின் மிகமுக்கியமான ஒற்றை ரன்னை அடித்திருக்கிறார்” - லீச்சின் அந்த ஒற்றை ரன் குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைனின் கருத்து இது. அப்படி என்ன இருக்கிறது அந்த ஒற்றை ரன்னில்?!

பௌலர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்தால் எதுவுமே கூறாத உலகம், ஒரு பேட்ஸ்மேன் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்துவிட்டால், திட்டித்தீர்த்துவிடும். ஆனால் அன்று, லீச் சந்தித்தது இதற்கு அப்படியே முரணான சூழல். கடைசி விக்கெட் கையிலிருக்க, இழப்பதற்கு ஒன்றுமில்லை என பென் ஸ்டோக்ஸ் ஒருபுறம் பௌலர்களை விளாசிக்கொண்டிருக்க, லீச்சிற்கு தன் விக்கெட்டை காப்பாற்றுவதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரே வேலை. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தால், கடைசி வரை போராடினார் என்ற பெயர் கிடைக்கும். லீச் ஆட்டமிழந்தால், அந்தப் போட்டியை இழக்க, ஏன் ஆஷஸ் தொடரையே மீட்கும் வாய்ப்பைத் தவறவிடக் காரணமாகி இருப்பார். ஒவ்வொரு ஓவரிலும் கடைசி இரு பந்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், `ஆஸ்திரேலிய பௌலர்களின் டார்கெட் நாம்தான்’ எனப் புரிந்து, பந்துகளை மிக அருமையாக எதிர்கொண்டார் லீச். இறுதியில், பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில், தனது பதினேழாவது பந்தில் அவர் அடித்த முதல் ரன், போட்டியை டை செய்தது. அடுத்த பந்திலே போட்டியை முடித்தார் ஸ்டோக்ஸ். லீச்சின் அந்த ஒற்றை ரன்னே இந்த ஆஷஸ் தொடரின் மிகமுக்கிய தருணம்.

5
Tim Paine ( AP )

வரலாறு மாறியது..!

2001-ம் ஆண்டுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அப்போது, அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் . அதன்பிறகு ரிக்கி பான்ட்டிங் , மைக்கேல் கிளார்க் , ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அணிகள் செய்யமுடியாததை டிம் பெய்ன் தலைமையிலான அணி சாதித்துக்காட்டியுள்ளது. தன் கேப்டன்ஸி குறித்து அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தன் பேட்டிங் பர்ஃபாமன்ஸ் அந்தக் கேள்விகளுக்கு வலுசேர்க்க, இந்தத் தொடரில் மொத்தமாக எடுத்த 13 ரிவ்யூக்களில், ஒன்று மட்டுமே சாதகமாக அமைய, நான்காவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு தவறுதலாக மூன்றாவது அம்பையரிடம் அப்பீல் செய்ய... தன்னைச் சுற்றி அனைத்துமே தனக்கு எதிராக இருக்க, டிம் பெய்னோ சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து, கம்பீரமாக ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தா,ர்.

தொடரின் நான்காவது போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தலான 200 மற்றும் பேட் கம்மின்ஸின் அற்புத பந்துவீச்சால், பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது, இந்தத் தொடரின் மற்றொரு பொன்னான தருணம்.

ஸ்மித் எனும் ராஜபோதை... அவமானத்தால் அழுதவன் மீண்டெழுந்த கதை!
அடுத்த கட்டுரைக்கு