Published:Updated:

ICC T20 World Cup: பௌலிங் மற்றும் பேட்டிங் - டி20 உலகக்கோப்பையின் டாப் 3 வெறித்தன சம்பவங்கள்!

T20 World Cup

டி20 களத்தைச் சூடேற்றி, அத்தனைபேரின் கவனத்தையும் கவர்ந்த டாப் 3 பௌலர்களின் ஸ்பெல்களுக்குள்ளும், டாப் 3 பேட்ஸ்மேன்களின் இன்னிங்ஸ்களுக்குள்ளும் ஒரு டைம் டிராவல்...

ICC T20 World Cup: பௌலிங் மற்றும் பேட்டிங் - டி20 உலகக்கோப்பையின் டாப் 3 வெறித்தன சம்பவங்கள்!

டி20 களத்தைச் சூடேற்றி, அத்தனைபேரின் கவனத்தையும் கவர்ந்த டாப் 3 பௌலர்களின் ஸ்பெல்களுக்குள்ளும், டாப் 3 பேட்ஸ்மேன்களின் இன்னிங்ஸ்களுக்குள்ளும் ஒரு டைம் டிராவல்...

Published:Updated:
T20 World Cup

வேட்டையாடித் தங்கள் குகைக்குள் வெற்றியை இழுத்துச் செல்லும் வீரர்கள்தான் டி20-ன் கொள்கை பரப்புச் செயலாளர்கள்.

என்னதான் கிரிக்கெட் டீம் கேமாக இருந்தாலும், தனிப்பட்ட வீரர்களின் திறனும் ஆளுமையும்தான் இதற்கான முதலீடுகள், விறுவிறுப்பிற்கும் பொழுதுபோக்கிற்கும் உத்தரவாதம் தரும் காரணிகள்.

அப்படி டி20 களத்தைச் சூடேற்றி அத்தனைபேரின் கவனத்தையும் கவர்ந்த டாப் 3 பௌலர்களின் ஸ்பெல்கள், டாப் 3 பேட்ஸ்மேன்களின் இன்னிங்ஸ்கள் ஆகியவற்றுடன் ஒரு டைம் டிராவல்...

ஸ்டெய்ன், 4/17, (2014):

கால்பந்தாட்டக் களத்தில் காணப்படும் அத்தனை அதிவேகத்தையும் ஆக்ரோஷத்தையும் உருட்டி அதற்கு ஒற்றைப் பெயர் தந்தால், அது ஸ்டெய்ன் என ஒளிரும். அப்படிப்பட்டவரின் உக்கிரத்தின் உச்சத்தைப் பார்த்த ஸ்பெல்தான் இது. 170 ரன்களைத் துரத்திய நியூசிலாந்துக்கு மற்ற பௌலர்கள் ரன் வரமளிக்க, ஸ்டெய்ன்தான் வில்லியம்சன், கோரே ஆண்டர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் ஆறு பந்துகளில் ஏழு ரன்கள் வேண்டுமென ஸ்டெய்னின் அந்தக் கடைசி ஓவருக்காகக் காத்திருந்தது நியூசிலாந்து.

பேட்ஸ்மேனைத் திணறடிக்க, யார்க்கர்கள் மட்டுமல்ல ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் ஷார்ட் பால்களாலும் முடியும். முதல் மூன்று பந்துகளும் அந்த தியரியைப் பயன்படுத்திதான் ரான்சியையும் வெளியேற்றின, டாட் பால்களாகவும் ஆகின. எல்லாமே 140+ கி.மீ வேகத்தில் முன்னேறியவை. நான்காவதிலோ வேகத்தைப் பயன்படுத்தியே எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி தேத்தியிருப்பார், நாதன் மெக்கல்லம். அப்போதும் சிரித்துக் கொண்டேதான் ஸ்டெய்ன் திரும்புவார். காரணமிருந்தது. அதே லைன் அண்ட் லென்த்திலான பந்து அடுத்ததாக ஸ்லோ மோஷனில் சென்றது, அதன் மிதவேகம் மெக்கல்லமை வீழ்த்தியது.

சிங்கிள் தட்டி மறுபுறமிருந்த டெய்லரை மீட்புக்குக் கொண்டுவரும் வாய்ப்பை ஸ்டெய்ன் தரவேயில்லை.

'Eat them all' - இந்த கோஷம்தான் பார்வையாளர்களிடம் எழுந்தது. எல்லாவற்றையும் தின்று தீர்க்கும் நெருப்பு புத்திரனிடம் வேறென்ன கேட்க முடியும்?
Dale Steyn
Dale Steyn

டை ஆக இரண்டு ரன்கள் போதுமென்ற இறுதிப்பந்திலும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஷார்ட் பால்தான் ராஸ் டெய்லரைத் திணறடித்து, ஸ்டெய்னின் கைக்கே திரும்ப அனுப்பப்பட்டு, நான் ஸ்ட்ரைக்கர் எண்டிலுள்ள ஸ்டம்பைக் காலி செய்தது. கடைசிப் பந்தைச் சந்தித்து ஓடிவர முயலும் போதிருந்த டெய்லரின் முகபாவனையே ஓவரின் தொடக்கத்திலேயே ஸ்டெய்னிடம் சரணடைந்ததைக் கூறும். நரம்புகள் புடைக்க அவர் கர்ஜித்த காட்சி, இப்போதும்கூட நமக்குள்ளும் வெறியேற்றும்.

ரங்கணா ஹெராத், 5/3 (2014):

'120 பந்துகளில், 120 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும்' - இச்சூழல், டி20-ல் நட்சத்திர பௌலர்கள் இருக்கும் அணியையும் நடுங்கச்செய்யும். ஆனால், அதேநிலை சில அசாத்தியங்களையும் அரங்கேற்றும். அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்தை வென்றாக வேண்டிய போட்டியில் இலங்கைக்கும் இதேதான் நேர்ந்தது.

பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாகத் தோற்க, 120 என்ற இலக்கே இலங்கை தொடரைவிட்டு வெளியேற்றிவிட்ட தோற்றத்தை உண்டாக்க, நம்பமுடியாதது நிகழ்ந்தது. டி20-ல் வேரியேஷன்களால் வலைவிரிக்கும் ஸ்பின்னர்களுக்கு மத்தியில், ஸ்டாக் டெலிவரியையும், டர்ன், ஃப்ளைட், டிப், ட்ரிப்டையும் பெரிதாய் நம்பி சூழ்ச்சியால் விக்கெட் வீழ்த்தும் கிளாசிக்கல் பௌலர்தான் ஹெராத். டெஸ்ட் மெட்டீரியலாக அடையாளம் காணப்பட்ட அவர், இந்த டி20-யில் வெற்றித் தூதுவனாக உருவெடுத்தார்.

ஃப்ளைட், மெக்கல்லம்மைச் செயலற்றவராக்க, டர்ன் நீசமுக்கும், ராச்சிக்கும் சதிசெய்தது. ராஸ் டெய்லருக்கு ஓவரின் முதல் நான்கு பந்துகளும் எங்கே பிட்ச் ஆனாலும் ஸ்டம்பை நோக்கியே டர்ன்ஆகி, டாட் பாலாகி பிரஷர் ஏற்றியது. 5-வது பந்து வைத்த குறிதப்பாமல் பேடைத் தகர்த்து எல்பிடபுள்யூ ஆனது.

இதுதவிர்த்து, ரன்அவுட்டால் விழுந்த இரு விக்கெட்டுகளிலும் ஹெராத்தின் பங்கிருந்தது. விளைவு, 60 ரன்களுக்கு நியூசிலாந்தை ஆல்அவுட் ஆக்கியது இலங்கை.

17 டி20-களில், 18 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்திருந்தாலும் ஹெராத்தின் இந்த ஒரு ஸ்பெல் காலத்திற்கும் நின்றுபேசும்.

அஜந்தா மெண்டீஸ், 6/8 (2012):

குறுகிய காலமே எனினும், லிமிடெட் ஃபார்மேட்டில் வெற்றி உலா வந்தவர் மெண்டீஸ். பந்தைத் தனது கரங்களான மந்திரக்கோலால் ஆட்டி வைப்பவர். மனதுக்குள் எதிர்பார்த்த வகையிலேயே தனது மாயப்பந்தை களத்தில் அவர் நகரவைப்பதும், அது பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத வகையில் இருந்ததும்தான் அவரைப் பேராபத்தானவராக்கியது. ஒன்பது மாத இடைவெளிக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பியபோதும், இப்போட்டியில் அதைத் திரும்பவும் நிகழ்த்தினார்.

அஜந்தா மெண்டீஸ்
அஜந்தா மெண்டீஸ்
Twitter

183 என்ற பெரிய இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு எதையும் கணிக்கக்கூடிய அவகாசத்தை, மெண்டீஸ் தரவில்லை. கைகளின் பின்புறமிருந்து விடுவிக்கப்படும் கூக்ளி, அவரது சிக்நேச்சர் பாலான கேரம்பால், டாப் ஸ்பின்னர், தொட்டுக்கொள்ள கொஞ்சம் லெக்பிரேக் என சுழற்சி முறையில் சுழலும் பந்துகளை அனுப்பித் திணறடித்தார். 6-வது ஓவரில் நுழைந்தவுடன் சிபாந்தா, டெய்லர் ஆகிய இரு விக்கெட்டுகளை வீழ்த்தித் தொடங்கியவர், இறுதியில் இரண்டு மெய்டன்களோடும் ஆறு விக்கெட்டுகளோடும் முடித்தார். மஸகட்ஷாவுக்கும், சிகும்புராவுக்கு வீசிய அட்டகாசமான கூக்ளிகள், சத்தமேயில்லாமல் ஸ்டம்பைச் சாய்த்தன. அஜந்தா மற்றும் ஜீவன் மெண்டீஸின் இருபுறத் தாக்குதலில் உருக்குலைந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது ஜிம்பாப்வே.

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முன்னரே ஆறு விக்கெட்டுகளை அவர் எடுத்திருந்தாலும், உலகக்கோப்பையில் வந்த இது, இன்னமும் ஸ்பெஷல். அந்த சீசனின் லீடிங் விக்கெட் டேக்கரும் (15) மெண்டீஸ்தான்.

ஹெர்செல் கிப்ஸ், 90*(55), 2007:

எந்த ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கும், ஒரு மாஸான அறிமுகம் தேவை. அதிரடியை அடிநாதமாகக் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கும், அப்படி ஒரு அறிமுகத்தை முதல் போட்டியிலேயே கெய்லும் கிப்ஸும் வரவேற்புரையாகத் தந்தனர்.

மசாலாக்கள் சேர்க்கப்பட்ட டி20 ஃபார்மட்டின் உண்மையான சுவையை, அந்த இரு இன்னிங்ஸ்களுமே மக்களை உணரச் செய்தன. தென்னாப்பிரிக்க பௌலர்களைத் துவம்சம் செய்த கெய்ல் 117 ரன்களை (57 பந்துகளில்) குவிக்க, இலக்கு 206 என நிர்ணயிக்கப்பட்டதே ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தது.

Herschelle Gibbs
Herschelle Gibbs

இனி மீட்சியில்லை, வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கே என நினைத்த எண்ணத்தை எடுத்த எடுப்பில் பௌலரது தலைக்கு மேலே பந்தைப் பறக்கவிட்டு கிப்ஸ் நிருபித்தார். இந்த இருவரது இன்னிங்ஸுகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததென்றாலும், சேஸிங் தந்த அழுத்தத்தைத் தாண்டிய புள்ளியில்தான் கிப்ஸின் ஆட்டம் தலைசிறந்ததாகிறது.

பிராவோவின் ஸ்லோ பால்கள், சாமுவேலின் ஃபுல் லென்த் டெலிவரிகள், ராம்பால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகள், எட்வர்ட்ஸின் பவுன்சர்கள் என யாரோ ஒருவர் ஏதோ ஒரு வகையில் வலைவிரிக்க, அவை அனைத்துக்கும் தனது பாணியில் கிப்ஸ் ரன்களாகத் திருப்பிக் கொடுத்தார். யார்க்கர்களால் மட்டுமே இவரை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடிந்தது. ஒப்பிடவே முடியாத ஓப்பனராக உள்ளே இறங்கியவர், வின்னிங் ஷாட்டை மிட் ஆஃபில் பவுண்டரிக்கு அனுப்பி, ஃபினிஷராகவும் அவதாரமெடுத்தார், தனி ஒருவனாகப் போராடியே எல்லைக் கோட்டைத் தொடவும் வைத்தார்.

14 பந்துகளும் எட்டு விக்கெட்டுகளும் கையிலிருக்கும்போதே 208 ரன்களோடு தென்னாப்பிரிக்கா வென்றது.

பிரெண்டன் மெக்கல்லம் 123 (58), 2012:

Bazz Ball-ன் டெஸ்ட் ரைடை பலமுறை மெக்கல்லம் தனது ஆட்டங்களிலேயே நிகழ்த்திப் பார்த்திருக்கிறார். அதில் சிக்கி சில அணிகள் சின்னாபின்னமாகியிருக்கின்றன. 2012-ல் பங்களாதேஷுக்கும் அதேதான் நேர்ந்தது.

Mccullum
Mccullum
Twitter

"மாஸ்டர் வெர்ஸஸ் மாணவர்கள்", பங்களாதேஷை கதிகலங்க வைத்த மெக்கல்லமின் இன்னிங்ஸைப் பற்றி விவரிக்க வேண்டுமென்றால் இப்படித்தான் கூற வேண்டும். டைமிங், ப்ளேஸ்மென்ட், ஃபீல்டர்களுக்கு நடுவில் கேப்பைக் கண்டுபிடிக்கும் திறன், அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களால் Wagon Wheel-ன் எல்லாப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் ஆளுமை, லைன் அண்ட் லென்த்தை அதிவேகமாகப் படிக்கும் திறன், இப்படி ஒவ்வொரு பாடப் பகுதிக்கும் செயல்முறை விளக்கம் தந்து, அவர்களை வாயடைக்க வைத்துவிட்டார்.

ஷார்ட் பாலில் பவுண்டரி தட்டிதான், 51-வது பந்தில் சதத்தைக்கூடக் கடந்தார். ஒன்டவுனில் 3.2 ஓவரில் உள்ளே வந்த மெக்கல்லம் புயல், இறுதி ஓவரின் கடைசிப் பந்துவரை சுழன்று அடித்தது.

அலெக்ஸ் ஹேல்ஸ், 116* (64), 2014:

"எதிர்கொள்ளவே முடியாத விசையின் முன், நகரமுடியாத பொருள்கள் சரணடைவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?!" என ஒரு சூப்பர்மேன் கூற்றுண்டு. இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் எனப் பெயரிடப்பட்ட அப்படி ஒரு விசை மொத்த இலங்கை பௌலர்களையும் 2014-ல் செயலிழக்கச் செய்தது.

துரத்த வேண்டிய இலக்கு 191. ஒருபுறம், எடுத்த எடுப்பில் அணியின் ஸ்கோர் 0/2. மறுபுறம் பந்துகளும் ஸ்விங்ஆகி, சீம் மூவ்மென்டோடு பயமுறுத்துகின்றன. எனினும், மாவீரராக சந்தித்த முதல் இரு பந்துகளையுமே பவுண்டரியாக்கிதான் ஹேல்ஸ் தொடங்கினார். மலிங்காவின் யார்க்கர்களோ, மேத்யூஸின் இன்ஸ்விங்கர்களோ, எல்லாவற்றிற்கும் அவரிடம் விடையிருந்தது. நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய குலசேகரா கூட அவர்முன் சராசரி பௌலராக மாறிப் போனார். ஸ்ட்ரெய்ட் டிரைவ், புல் ஷாட்டில் பவுண்டரிகள், குட்லெந்தில் வீசப்பட்ட அடுத்தடுத்த இரு பந்துகளில், டீப் விக்கெட் மற்றும் கவருக்கு மேலே சிக்ஸர்கள் என திசைக்கொன்றாகப் பந்து சிதறடிக்கப்பட்டது. அதுவும் எல்லாமே 72, 79 மீட்டர் சிக்ஸர்கள். மென்டீஸ் வீசிய ஒரு ஓவரில், எதிர்கொண்ட ஐந்து பந்துகளில் 24 ரன்கள் அவரால் விளாசப்பட்டது. ஸ்பின்னர், வேகப்பந்து வீச்சாளர் என யாருடைய பந்துகளுக்கும் மரியாதையில்லை.

Alex Hales
Alex Hales

60 பந்துகளில் விளாசப்பட்ட சதமே, கவருக்கு மேல் அடிக்கப்பட்ட சிக்ஸரோடுதான் வந்தது. ஆகமொத்தம், ஹேல்ஸ் என்னும் சூப்பர் பவர், நிறுத்தவே முடியாததாய் ஆர்ப்பரித்து வெற்றியை அபகரித்தது.

பேட்ஸ்மேனுக்கும் பௌலருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய மைதானங்களில் இவ்வாண்டும் இதே போன்ற தலைசிறந்த ஸ்பெல்களையும் இன்னிங்ஸ்களையும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். ஃபயர் விடும் குவாலிஃபயர் போட்டிகளே வர இருப்பதை உரைக்கின்றன.