Published:Updated:

`ஃபீல்டிங் சிறப்பாகவே செய்தோம்... தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்!' - விராட் கோலி #NZvIND

இந்திய அணி
இந்திய அணி

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும் கே.எல்.ராகுல் 88 ரன்களும் எடுத்தனர். டி-20 தொடரை இந்தியாவிடம் முழுமையாக இழந்திருந்த நியூஸிலாந்து அணி, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.

பும்ரா, கோலி
பும்ரா, கோலி

நியூஸிலாந்து அணிக்கு கப்தில், நிகோலஸ் நல்ல தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து வீரர்கள், 48.1 ஓவர்களின் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர். கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்த ராஸ் டெய்லர். செஞ்சுரி அடித்து அசத்தினார். அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 109 ரன்களும், நிக்கோலஸ் 78 ரன்களும், டாம் லாதம் 69 ரன்களும் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 `இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது... எங்களுக்கு ஏமாற்றம்தான்!'- வில்லியம்ஸன்

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் கோலி, ``நியூஸிலாந்து அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களைக் கட்டுப்படுத்த 348 ரன்கள் என்ற இலக்கு போதுமானதாக இருக்கும் என நினைத்தோம். நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசினோம். டாம்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துச்சென்றுவிட்டார். மிடில் ஓவர்களில் எங்களால் ராஸ் டெய்லர் மற்றும் டாம் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் ஃபீல்டிங் நன்றாகத்தான் இருந்தது. ஒரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். அந்த ஒரு வாய்ப்பை மட்டும் சிந்தித்துக்கொண்டிருக்க முடியாது.

டாம் லாதம்
டாம் லாதம்

எங்களைவிட எதிரணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். எங்கள் அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். இனிவரும் போட்டிகளிலும் அது தொடரும் என நம்புகிறேன். ஷ்ரேயஸ் சதம் அற்புதம். கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.

பின் செல்ல