Published:Updated:

TNPL: மாஸ் காட்டிய திருச்சியின் பௌலிங் படை... பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டதா சேலம்?

டி20-யின் அடிநாதமான அதிரடி என்னும் அம்சமில்லாததால் ஹாட்ரிக் தோல்வியுடன், பிளே ஆஃப் வாய்ப்பை மங்க வைத்துக் கொண்டுள்ளது சேலம் ஸ்பார்டன்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து கொள்ளும் கனவோடு திருச்சி வாரியர்ஸும், அதனைத் தக்க வைத்துக் கொள்ளும் கடைசி நிமிடப் போராட்டத்துக்காக சேலம் ஸ்பார்டன்ஸும் களத்துக்குள் கால் பதித்தன.

சேலத்திற்கு டாஸ் கூட சாதகமாக அமையவில்லை. திருச்சி டாஸ் வெல்ல, ராகில் சேஸ் என்றார். சேலம் சுகனேஷிற்குப் பதிலாக, ரத்னத்தை கொண்டுவர, திருச்சி கிடைத்த ஓப்பனர் வாய்ப்பை மறுபடி பயன்படுத்திக் கொள்ளத் தவறிய முகுந்த்துக்குப் பதிலாக சந்தோஷ் ஷிவ்வை இறக்கி இருந்தது.

சேலத்தின் தொடக்கம் பிரமாதமாக இல்லை என்றாலும், மோசமாகவும் இல்லை. முதல் மூன்று ஓவர்களில் அக்ஷய்யும் அபிஷேக்கும் வென்றே ஆக வேண்டுமென்ற உத்வேகத்தில் வேறுமுகம் காட்டிக் கொண்டிருந்தனர். 22 ரன்களும் வந்து சேர்ந்துவிட்டது. எனினும், தான் வீச வந்த அடுத்த ஓவரிலேயே கேப்டன் ராகில், இழந்ததை ஈடுகட்டினார். குட் லெந்த்தில் வந்த பந்துகளையே ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த அக்ஷய்யின் விக்கெட்டை, மிட் ஆனில் நின்றிருந்த சும்ராவிடம் கேட்ச் கொடுக்க வைத்து ராகில் வெளியேற்றினார்.

TNPL | #SSvRTW
TNPL | #SSvRTW
twitter.com/TNPremierLeague

இந்தக் கட்டத்திற்குப்பின் ரன்ரேட் சுத்தமாகப் படுத்தேவிட்டது. பவர்பிளேயின் முடிவில் 33 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த சேலம், இடையில் ஒரு ஆறு ஓவர்களுக்கு பந்தை பவுண்டரி லைனின் பக்கம் கூட அனுப்பாமல் இருந்தது. திருச்சியோ அந்த இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தது. ஓன்பதாவது ஓவர் தொடங்கி ஓவருக்கு ஒன்று என மூன்று தாக்குதல்களை திருச்சி நிகழ்த்தி மூன்று விக்கெட்டுகளை திருச்சி வீழ்த்தியிருக்க, 11 ஓவர்களில் 62 ரன்களை மட்டுமே சேலம் சேர்ந்திருந்தது. அபிஷேக் - சுசில் கூட்டணி மட்டுமே கொஞ்சமாவது நிலைத்து நின்று, 31 பந்துகளில் தத்தித் தடுமாறி 21 ரன்களைச் சேர்த்திருந்தது. மற்றவர்கள் எல்லாம் அந்தப் பொறுமைகூட இல்லாமல் வெளியேறி இருந்தனர்.

ஆண்டனி தாஸ், லைனைக் கணிக்காமல் வெளியேறி இருக்க, அபிஷேக் தவறான டைமிங்கிற்கு விக்கெட்டை விலையாகக் கொடுத்திருந்தார். விஜய் சங்கரோ ஆஃப் சைடுக்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் இருந்த ஃபீல்டரிடம் அனுப்பி வைத்து ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில், கடைசி வரை நின்று விளையாடிய முருகன் அஷ்வினும் கேப்டன் ஃபெர்ராரியோவும், கொஞ்சம் போராடினார்கள் என்றாலும் சரவணக் குமார் வீசிய பந்தை ஃபெர்ராரியோ மிட் ஆஃபில் அனுப்ப, அதை அற்புதமாகக் கேட்ச் பிடித்து, 14 ரன்களோடு அவரை வெளியேற்றினார்‌ ராகில். ஐந்து விக்கெட்களை இழந்துவிட்ட நிலையில், மீண்டு வர எந்த முயற்சியையும் சேலம் செய்யவில்லை. 21 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்திருந்த முருகன் அஷ்வினின் ஸ்கோர்தான், இப்போட்டியில் சேலம் பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகவே அமைந்தது. 100-க்குள் திருச்சி, சேலத்தைச் சுருட்டி விடும் என்ற நிலைதான் ஒருகட்டத்தில் நிலவியது.

உண்மையில், திருச்சியின் பௌலிங், ஃபீல்டிங் முயற்சிகள் எல்லாம் மிகவும் திறம்பட இருந்தன. தொடக்கத்தில் தவறவிட்ட, ஒரு ரன் அவுட்டைத் தவிற, வேறு எங்கேயும் அவர்கள் கோட்டை விடவில்லை என்பதால், 19-வது ஓவரின் முடிவில், 102 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது சேலம். எனினும், பொய்யா மொழி வீசிய கடைசி ஓவரில், லோகேஷ் மற்றும் ரத்னம் துணிந்து அடித்த இரண்டு பெரிய ஷாட்கள், அணியின் ஸ்கோரை 116 ரன்கள் எனக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

TNPL | #SSvRTW
TNPL | #SSvRTW
twitter.com/TNPremierLeague

சிறப்பாகத் தொடங்கிய அக்ஷய், அதனை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார். அதே நேரத்தில், பிட்சில் தொடக்கத்தில் இருந்தே லேட்டரல் மூவ்மெண்டை திறம்படவே பயன்படுத்தியது திருச்சி படை. சரவணக் குமார் மற்றும் பொய்யா மொழி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, ராகில் மற்றும் மதிவாணனின் அந்த மூன்று கேட்சுகள் போட்டிக்கான ஒரு புள்ளியை அப்போதே திருச்சியின் பக்கம் எழுதிவிட்டது. சேலத்திடமோ தொடர் தோல்வி தந்த வலிகளின் மிச்சம், அவர்களை உளவியல் ரீதியாக பலவீனமாக்கி இருந்ததையும், நன்றாகவே பார்க்க முடிந்தது.

தேவைப்படும் ரன் ரேட்டே ஆறுக்குக் கீழ்தான் என்பது திருச்சியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. ஆனாலும், அதனை அப்படியே விட்டு விட ஃபெர்ராரியோவும், அவரது வீரர்களும் தயாராக இல்லை. முதல் நான்கு ஓவர்கள், எவ்விதப் பரபரப்பும் இன்றியே நகர்ந்தன. 22 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தாலும், சந்தோஷ் சுமாராகவே ஆடிக் கொண்டிருந்தாலும், தொடக்கப் போட்டியில் காட்டிய அதிரடியை கடந்த ஓரிரு போட்டிகளில் காட்டத் தவறியிருந்த அமித் ஷாத்விக் இன்று திருச்சிக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சமயத்தில்தான், டிஎன்பிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட, விக்கெட் இன்றி வெறுங்கையோடு போனதில்லை என்னும் பெருமையுடைய பெரியசாமி, தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார். சேலம் எதற்காகக் காத்திருந்ததோ அந்தத் தருணம் வந்தது. பெரியசாமியை பவுண்டரியோடு வரவேற்ற சந்தோஷின் ஆட்டம் வெகுநேரம் செல்லவில்லை. மூன்றாவது பந்திலேயும் அவரை அட்டாக் செய்ய முயன்ற சந்தோஷ், அதைக் காற்றில் பறக்க விட, அது அந்தரத்தில் பறந்து அபிஷேக்கின் கையில் தஞ்சம் புகுந்தது. ஆறு ரன்களோடு திணறிக் கொண்டிருந்த முதல் ஓப்பனர் வெளியேற, அடுத்த ஓப்பனரின் விக்கெட் இலவச இணைப்பாக அடுத்த பந்திலேயே சேலத்துக்கு கிடைத்தது.

பெரியசாமி வீசிய பந்தை ஆஃப் சைடில் அடித்து விட்டு, அமித் தொலைவைக் கணக்கிடாது ஓடிவந்தார். அது திரும்பவும் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு எறியப்பட, நித்தீஷ் தயங்கி நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கே திரும்ப, அமித்தும் அங்கேயே வந்து சேர, விக்கெட் கீப்பர் தன்னருகில் இருந்த ஸ்டம்பைத் தகர்த்தார். இரண்டாவது விக்கெட்டாக இன்னொரு ஓப்பனர் அமித்தையும் இழந்தது திருச்சி.

இந்த இரண்டு விரைவு விக்கெட்டுகள் திருச்சியின் ரன் எடுக்கும் வேகத்தை சற்றே மட்டுப்படுத்தின. பொறுமை இழந்த மொகம்மத் கான், ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டிய மாத்திரத்திலேயே லோகேஷ் வீசிய ஷார்ட் பாலுக்கு இரையாகி வெளியேறினார். எனினும், நிதீஷ் அவ்வளவு சுலபமாக தனது விக்கெட்டை விட்டுத் தரவில்லை.

TNPL | #SSvRTW
TNPL | #SSvRTW

விக்கெட் விழாமல் ஒரு சில ஓவர்கள் நகர, ஃபெர்ராரியோ இறுதி ஓவர்களுக்காக ரிசர்வில் வைத்திருந்த பெரியசாமியைக் கொண்டு வந்தார். எதிர்பார்த்தபடியே, நித்தீஷின் விக்கெட்டை அவர் வீழ்த்தி, நான்காவது விக்கெட்டோடு இழந்த நம்பிக்கையையும் கொண்டு வந்தார். 22 ரன்களோடு நித்தீஷ் வெளியே சென்று ஆண்டனி தாஸை அனுப்பிவைத்தார்.

இந்தக் கூட்டணி அமைந்த சமயத்தில், 53 பந்துகளில் 46 ரன்கள் தேவை என வெற்றி திருச்சிக்கு மிக அருகில்தான் இருந்தது. ஆனாலும் அவ்வளவு இலகுவாக இலக்கை அவர்களை அடைய விடாது கட்டிப் போட்டது சேலம். அவர்களும், மிக பிரயத்தனப்பட்டு எல்லாம் ரன் சேர்க்க முயலவில்லை. மிகப் பொறுமையாக, அதே நேரத்தில் ரன் ரேட் மீதும் கண் வைத்தே ஓவர்களைக் கையாண்டனர். ரன் ரேட் அடிவாங்கிய போதெல்லாம், துணிந்து ஒரு பெரிய ஷாட்டுக்குப் போய், போட்டியின் போக்கை தங்கள் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருந்தனர்.

TNPL: கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர், கேப்டனின் ஸ்பெஷல் ஸ்பெல்; திருப்பூர் பெற்ற முக்கிய வெற்றி!

ஒருவேளை, திருப்பூர் - கோவைக்கு இடையேயான போட்டியைப் போல், இதுவும் த்ரில்லராக, கடைசிப் பந்து வரை நகருமோ என நினைப்பு வர, பெரியசாமியின் ஓவர்கள் முடிந்துவிட்டதால், அது எதுவுமே நடந்தேறிடாமல், 18.3 ஓவரிலேயே ஆண்டனி தாஸ் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி வெற்றிக் கோட்டைத் தொட்டு விட்டார். திருச்சி சுலபமாக வென்றது!

TNPL | #SSvRTW
TNPL | #SSvRTW
twitter.com/TNPremierLeague

திருச்சி பிளே ஆஃபிற்கான தங்களது வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்ய, சேலமோ இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலின் அடியிலேயே தேங்கி நிற்கிறது. இங்கிருந்து ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அவர்களுக்கு இனி பிளே ஆஃப் வாய்ப்பு வசப்படும். எனினும், அதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவே!

விஜய் சங்கர், முருகன் அஷ்வின், பெரியசாமி உள்ளிட்ட ஸ்டார் பிளேயர்கள் இருந்தும் கூட, இந்த சீசனில் சேலத்தை துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டே உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு