Published:Updated:

TNPL: 150-வது போட்டி - சேலம் செய்யவேண்டியதை செய்து வெளியேற நெல்லைக்கு அடித்தது ஜாக்பாட்!

Sanjay Yadav
Sanjay Yadav ( TNPL )

121 ரன்களை எவ்வளவு சீக்கிரம் எட்டி, எவ்வளவு ரன் ரேட்டைக் கூட்டிக் கொள்வோம் என்பது மட்டுமே அபராஜித் மற்றும் அவரது சகாக்கள் மனதின் ஓட்டமாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'புள்ளிகள் அவசரத் தேவைக்கு, எங்களை அணுகுங்கள்' என மோதும் அத்தனை அணிகளுக்கும், இரண்டு புள்ளிகளை அன்பளிப்பாகத் தரும் சேலம், நெல்லைக்கு எதிராகவும் அதைச் செய்யத் தவறவில்லை.

டிஎன்பிஎல்லின் 150-வது போட்டி, அதன் வரலாற்றில் விக்கெட் இல்லாமல் வெறுங்கையோடு திரும்பியதில்லை என்னும் பெரியசாமியின் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, சேலத்தையும் தொடரை விட்டு வெளியேற்றி உள்ளது.

காயம் காரணமாக, ஃபெர்ராரியோ ஆட முடியாததால், கேப்டனாக இப்போட்டியில் கோபிநாத் களமிறங்கினார். டாஸை வென்ற அவர், டிஃபெண்ட் செய்து கொள்கிறோம் என்று சொல்லி, ஓப்பனிங்கில் இறங்க அக்ஷய்யோடு திரும்பி வந்தார்.

SvNRK
SvNRK
TNPL

சேலத்தின் தொடக்கம், வழக்கம் போலவே மிகவும் மோசமாக இருந்தது. பேட்டிங் பவர்பிளேயா இது என விழிகளை விரியச் செய்யுமளவு முழுக்க முழுக்க நெல்லையின் ஆதிக்கமே அதில் விரவி இருந்தது. ஓப்பனர்கள் இருவரது விக்கெட்டுகளையும், அடுத்தடுத்த ஓவர்களில் இழந்த சேலம், ஆறு ஓவர்களில் பந்துக்கு ஒன்று என்ற கணக்கிற்கும் கீழாக 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

இந்தக் கட்டத்தில் இணைந்திருந்த விஜய் சங்கர் - அபிஷேக் கூட்டணி மட்டுமே நிதானித்து, முழுக் கவனத்தோடு ஆடியது. 50+ பார்ட்னர்ஷிப் ரன்களைக் கடந்ததோடு, சற்றே துரிதமாகவும் ரன் சேர்த்தது. 45 பந்துகளில், 64 ரன்களைச் சேர்த்த இந்த அணி, அப்படியே நீடித்திருந்தால் இறுதி ஓவர்களில் இலக்கு எங்கேயோ போய் நின்றிருக்கும். ஆனால், நெல்லை இந்த இடத்தில்தான் தங்களது வெற்றிக்கதையை எழுதத் தொடங்கியது.

சஞ்சய் யாதவ் இருக்க, நெல்லைக்கு ஏது கவலை?! 21 பந்துகளில், 25 ரன்களைக் குவிந்திருந்த, அபிஷேக்கின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு, சஞ்சய் வைத்த குறி தப்பாமல் அதனை தெறித்து விழ வைத்தது. அந்த ஓவரை விக்கெட் மெய்டனாக சஞ்சய் மாற்றி முன்நின்று வழி நடத்த, அடுத்து வந்த பௌலர்களுக்கெல்லாம் விக்கெட் உண்டு எனக் கருணை கொண்டு வரமளித்தது சேலம். 35 பந்துகளில், 41 ரன்களைச் சேர்த்திருந்த சேலத்திடம் ஒட்டிக் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையான விஜய் சங்கரையும், வீரமணி வெளியேற்ற, அங்கேயே சேலம் வெற்றிக்கான சாவியை மட்டுமின்றி, ப்ளே ஆஃப் வாய்ப்பையும் நெல்லையிடம் எடுத்துக் கொடுத்து விட்டு விடைபெற்றிருந்தது.

VIJAY SHANKAR
VIJAY SHANKAR
TNPL

அந்தத் தருணத்தில் இருந்து, நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 46 பந்துகளில் 45 ரன்களைச் சேர்த்து, 120 என கொண்டு வந்து நிறுத்தியது சேலம். விஜய் சங்கரின் 41 ரன்களோடு, அபிஷேக்குடனான அவரது கூட்டணி மட்டும்தான் அவர்களது ஒரே ஆறுதலே!

121 ரன்களை எவ்வளவு சீக்கிரம் எட்டி, எவ்வளவு ரன் ரேட்டைக் கூட்டிக் கொள்வோம் என்பது மட்டுமே அபராஜித் மற்றும் அவரது சகாக்கள் மனதின் ஓட்டமாக இருந்தது. ஆனால், அவர்களது இறுதிக் கட்ட முயற்சி என்பதால், சற்றே போராடவே செய்தது சேலமும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடக்கம் முதலே அசத்தலாகப் பந்துவீசினாலும், துல்லிய லைன் மற்றும் லெந்த்தோடு அவை முன்னேறி வந்தாலும், விக்கெட்டுகளை சேலத்தின் கணக்கில் ஏற்றவில்லை. அதுதான் அவர்களுடைய முதல் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. பவர்பிளே ஓவர்களில் 36 என சராசரியான ஒரு ஆட்டத்தையே நெல்லை வெளிப்படுத்தி இருந்தாலும், ஒன்பது விக்கெட்டுகள் அவர்களது வசம் இருந்தன. அச்சமயத்தில்தான், சூர்யப்பிரகாஷை, முருகன் அஷ்வின் போல்டாக்கி அனுப்பி வைத்தார்.

முரளி அஷ்வின்
முரளி அஷ்வின்
TNPL

எனினும், அபராஜித் மற்றும் சூர்யப்பிரகாஷ் டூ டவுனுக்குக் கூட வேலை வைக்கக் கூடாது, அவர்களை, கோவையுடனான போட்டிக்குப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது போல், விக்கெட்டை தங்கப் பெட்டகத்தில் வைக்காத குறையாக பாதுகாத்தனர். ரன்களை டைட்டான லைனில் வீசியே கட்டுப்படுத்தியது சேலம். எனினும், நடுவில் சற்றே வானம் தூறல் போட்ட போது கூட டக்வொர்த் லூயிஸ் ஸ்கோரை விட, நெல்லையின் ஸ்கோர் மைல்களுக்கு அப்பால் இருந்தது.

எனினும், ரன் எ பால் கணக்கே நீடித்து, தேவைப்படும் ரன்ரேட்டை குறைய விடாமல் பார்த்துக் கொண்டதில் மட்டுமே தனது கடைசித் துடிப்பை மிச்சம் வைத்திருந்தது சேலம். அந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அபராஜித்தின் விக்கெட் விழுந்தது.

TNPL: ஒற்றை ஆளாகப் போராடிய ஷதுர்வேத்; சேப்பாக் கில்லீஸின் சித்தார்த் சுழலால் சுருண்ட மதுரை!

எனினும் இந்த நிலையிலேயே எட்டு ஓவர்கள் மீதமிருக்க, 44 ரன்கள்தான் தேவை என்ற நிலை. கயிறு மேல் நடப்பது போன்ற சூழ்நிலைகளையே சஞ்சய் யாதவ் சளைக்காமல் சமாளிப்பார். அவருக்கு இந்த ஸ்கோரா பெரிய விஷயம்?! இல்லவே இல்லை என மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் சஞ்சய். பிரதோஷை வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லி, பெரும்பாலான பந்துகளை அவரே எதிர்கொண்டார். பெரியசாமியின் ஒரு ஓவருக்கு அடங்கிப் போனாலும், அவர் வீச வந்த கடைசி ஓவரில், விட்டதை வட்டியோடு சேர்த்துப் பெற்றுக் கொண்டனர்.

இதில் பெருஞ்சோகம் என்ன என்றால் டிபிஎன்பிஎல் வரலாற்றில் முதன் முறையாக, பெரியசாமி ஒரு போட்டியில் விக்கெட் இல்லாமல் வெளியேறி இருந்ததுதான். இதுவரை அவர் ஆடியிருந்த போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்திய பெருமை பெரியசாமிக்கு உண்டு. ஆனால் அவருடைய பல போட்டிகளுக்குமான சாதனையை இப்போட்டி முடித்துவைத்து, பெரியசாமியை விக்கெட் இல்லாமல் வெறுங்கையோடு அனுப்பி வைத்துவிட்டது.

இறுதி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட, அடுத்த ஓவருக்காக எல்லாம் காத்திருக்க வைக்காமல் சஞ்சய் யாதவ், பூபாலன் வீசிய பந்தை, ஓவர் த லாங் ஆனில் ஒரு சிக்ஸராக அனுப்பினார். அதற்கடுத்த பந்தில் ரன் எதுவும் சேர்க்காமல், வின்னிங் ஷாட்டை சிக்ஸராகத்தான் அடிப்பேன் என்று மூன்றாவது பந்தில், இன்னொரு சிக்ஸரைத் தூக்கி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லையை வெல்ல வைத்தார் சஞ்சய் யாதவ்.

நெல்லை, ஏழு புள்ளிகளோடு மூன்றாவது இடத்துக்கு முன்னேற, சேலமோ, தங்களுடைய மோசமான பேட்டிங்கினால் மீண்டும் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்து புள்ளிப் பட்டியிலின் அடியிலேயே தேங்கி உள்ளது.
INDRAJITH PRADOSH
INDRAJITH PRADOSH
TNPL

தொடரின் தொடக்கத்தில், திருப்பூர் தமிழன்ஸுடன் மோதிப் பெற்ற ஒரு வெற்றியைத் தவிர, இத்தொடரில் சொல்லிக் கொள்வதைப் போல் வேறு எதையுமே சேலம் நிகழ்த்தவில்லை. ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையிலேயே ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்துவிட்ட சேலம் ஸ்பார்டன்ஸ், ஆறுதல் வெற்றி கிட்டுமா என லீக் சுற்றில் தங்களுடைய கடைசிப் போட்டியை, மதுரையுடன் விளையாட இருக்கிறது. நெல்லை, தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வரும் ஞாயிற்றுக்கிழமை, கோவையுடன் தனது கடைசி லீக் போட்டியில் பலப் பரிட்சை செய்ய உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு