Published:Updated:

TNPL: `மதுர வீரன்' அமித்தின் அதிரடி... பௌலிங்கிலும் அசத்திய திருச்சியின் முதல் மிரட்டல் வெற்றி!

TNPL
TNPL ( twitter.com/TNPremierLeague )

மதுர வீரன் அமித்தின் அதிரடி அறிமுகத்தில் ஆரம்பித்து, முடிவில் மதிவண்ணனின், ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகள் எனும் மரண அடியால் நிலைகுலைந்தது நெல்லை.

மழை ஹாட்ரிக் அடிக்குமா, முழுப் போட்டியும் இன்றாவது நடக்குமா என்ற எதிர்பார்ப்போடே தொடங்கியது திருச்சி வாரியர்ஸுக்கும், நெல்லை ராயல் கிங்க்ஸுக்குமான டிஎன்பிஎல்லின் மூன்றாவது போட்டி. முதல் இரு போட்டிகளைப் போல் இல்லாமல், இது பேட்டுக்கும் பாலுக்குமான சரிசம யுத்தமாக இருக்குமென்ற பிட்ச் ரிப்போர்ட், போட்டியின் மீதான ஆர்வத்தை ஆரம்பத்திலேயே தூண்டியது.

டாஸை வென்ற நெல்லை பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. அமித் ஷாத்விக்கும், முகுந்த்தும் ஓப்பனிங்கில் இறங்கினர். அதிசயராஜைக் கொண்டு அபராஜித் ஆரம்பிக்க, முதல் ஓவர், எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் முடிவைக் காண, இரண்டாவது ஓவரில் பந்து, அஜித்திடம் கொடுக்கப்பட்டது. வீசிய மூன்றாவது பந்திலேயே, முகுந்த்தை, இந்திரஜித்திடம் கேட்ச் கொடுக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார் அஜித்.

ஒன்டெளனில் நிதீஷ் களமிறங்க, விக்கெட் விழுந்ததால் திடீரென காற்றில் கூடிய கனத்தைக் கிழித்துப் பறந்தன அமித் அடித்த இரு பவுண்டரிகள். அங்கே தொடங்கியது அமித்தின் அதிரடி. ஆனால், அதே ஓவரில், நிதீஷையும் டக் அவுட்டாக்கி, அதிசயராஜ் வெளியேற்ற, இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகள், நெல்லையின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்தது.

TNPL
TNPL
twitter.com/TNPremierLeague

கரம் சேர்த்தது, அமித் - ஆதித்யா கூட்டணி. மொத்தப் போட்டியினையும் முழுமையாக ஆக்கிரமித்தது இக்கூட்டணிதான். தொடக்கத்தில் விக்கெட்டைக் காத்துக் கொள்ள ஆடியவர்கள், போகப் போக, ரன்னெடுக்கும் வேகத்தைக் கூட்டத் தொடங்கினர். பவர்பிளேவின் முடிவில், 35/2 என இருக்க, அதுவரை நெல்லையே ஆதிக்கம் செலுத்த, அதைத் தங்கள் பக்கம் திருப்பத் தொடங்கியது, இந்தக் கூட்டணி.

அமித் சிறப்பாக பெரிய ஷாட்களை, ஓவருக்கொன்று என ஆட, ஆதித்யாவோ, பந்துகளை விரயமாக்காமல், ஸ்ட்ரைக்கை, நல்ல ஃபார்மில் இருந்த அமித்திடம் கொடுத்தார். சிங்கிள்களை இரட்டையாக மாற்றிக் கொண்டிருந்தது, இந்த இரட்டை.

மிக நேர்த்தியாக ஆடிக் கொண்டிருந்த அமித், ஆஃப் சைடைத், தனது கோட்டையாக்கினார். கவர் ஷாட்டுகள் கண்களில் ஒற்றிக் கொள்வதைப் போல் இருந்ததென்றால், லாங் ஆன், டீப் மிட் விக்கெட் சிக்ஸர்கள், அதிரடி காட்டின. பேக் ஃபுட் பன்ச் அசத்தலாக இருந்தது. சுழல்பந்து வீச்சாளரான சஞ்சய் யாதவ்வை அபராஜித் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில், தானே பந்து வீசியும் பார்த்தார். ஆனால், அறிமுகப் போட்டி என்ற சுவடே இல்லாமல், சிக்கிய பௌலர்களைச் சிதைத்துக் கொண்டிருந்தார் அமித். அபராஜித்தின் பந்தை, டீப் எக்ஸ்ட்ரா கவரில் அனுப்பி, வெறும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார் அமித். முதல் ஆறு ஓவர்களில், 35 ரன்கள் மட்டுமே வந்திருந்த நிலையில், அடுத்த ஆறு ஓவர்களில், 50 ரன்களைச் சேர்த்தது இந்தக் கூட்டணி.

ரன் எ பால் என்ற கணக்கில் சேர்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவும், மிக அழகாக, அமித்துக்கு சப்போர்டிங் ரோல் செய்து கொண்டிருக்க, நெல்லை காத்திருந்த தருணம், சஞ்சய் யாதவ் வீசிய போட்டியின் 15-வது ஓவரில்தான் வந்து சேர்ந்தது. ஆதித்யா கணேஷ், பந்தை சரியாக டைமிங் செய்யத் தவற, அது உயரத்தில் உலவி, அர்ஜுனை அடைந்து, 33 ரன்களில் இருந்த அவரை அனுப்பி வைத்தது. 135 ஸ்ட்ரைக்ரேட்டோடு நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேனாக ஆண்டனி தாஸ் உள்ளே வந்தார்.

TNPL
TNPL
twitter.com/TNPremierLeague

இரண்டு சிக்ஸர்களை விளாசி ஆண்டனி அதிரடியாக ஆட, 71 ரன்களோடு களத்தில் இருந்த, அமித், ஷாருன் வீசிய யார்க்கரை, ஃபைன் லெக்கில் அடிக்க முயன்று, போல்டாகி ஆட்டமிழந்தார். மிக கட்டுக்கோப்பாக சென்று கொண்டிருந்த அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் மறுபுறம், ஆண்டனி தாஸ், ஒரு அருமையான கேமியோவை ஆடிக் கொண்டிருந்தார். அமித், ஆகாஷ் என இரண்டு விக்கெட்டுகள், மறுபக்கம் ஆட்டமிழந்ததெல்லாம், அது அவரது கவனத்தைச் சிதறச் செய்யவில்லை. இரண்டுமுறை கேட்ச் தவறவிடப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் 20 பந்துகளில், 35 ரன்களைக் குவிக்க, 151 ரன்களைச் சேர்த்தது, திருச்சி வாரியர்ஸ் அணி.

இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்திருந்தாலும், அமித்தின் அதகள ஆட்டம், நெல்லையின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்ய, ஆண்டனி தாஸின் இறுதி ஓவர்கள் அதிரடியும், 151 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வைத்தது.

ஸ்ரீ நிரஞ்சனும், சூர்யப் பிரகாஷும் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரிலேயே, பவுண்டரியோடு கணக்கைத் தொடங்கிய ஸ்ரீ நிரஞ்சனை, சுனில், ஸ்விங்கரால் காலி செய்ய, பாபா அபராஜித் உள்ளே வந்தார். மிக மந்தமாக ஆட்டத்தைத் தொடங்கிய அபராஜித்தையும், சுனிலே அனுப்பி வைத்தார். அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்தை, சரியாகக் கணிக்காமல் ஆடி, தேர்ட் மேனிடம் கொடுத்து ஆட்டமிழந்தார் அபராஜித். இதற்கடுத்த சரவண் குமாரின் ஓவர் போட்டியையே புரட்டிப் போட்டது. இரண்டு பேக் டு பேக் விக்கெட்டுகளாக, சூர்யப் பிரகாஷையும், மோகன் அபினவ்வையும் ஆட்டமிழக்கச் செய்தார் சரவண் குமார். முதல் விக்கெட்டை கீப்பர் கேட்சாகவும், இரண்டாவது விக்கெட்டை, க்ளீன் போல்டாகவும், சரவண் எடுத்திருந்தார்.

மழை வருவதற்குள் அடித்து ரன் ஏற்றி, டக்வொர்த் லூயிஸ் ஸ்கோரை எட்ட வேண்டுமென்ற கவனத்தில், 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நெல்லை, அதே அவசரத்தில், ரன்அவுட்டில், ஐந்தாவது ஓவரில், ஐந்தாவது விக்கெட்டையும் பறிகொடுத்தது.

TNPL
TNPL
twitter.com/TNPremierLeague

அட்டகாசமான ஆல்ரவுண்டரான சஞ்சய் யாதவ்வும், இந்திரஜித்தும் இணைந்தனர். இந்தக் கூட்டணியின் ஆட்டம்தான், நெல்லை இன்னிங்சின் ஸ்பாட் லைட்டே. எண்ட் கார்டு போடப்பட்ட இடத்திலிருந்து, மறுபடி ஆரம்பித்தனர். முதலில் சில பந்துகளில், விக்கெட் வீழ்ச்சிக்குக் கடிவாளமிட்ட இவ்விருவரும் அதன்பிறகு, ரன்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் 'எதுவும் நடக்கலாம்' என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டனர். முதலில் ஓடி ரன் எடுத்துக் கெண்டிருந்தவர்கள், அதன்பின் அடித்து ரன்சேர்க்கத் தொடங்கினர். ரன்களைக் கசிய விட்டது திருச்சி.

ஆனால் வாரியர்ஸ் அல்லவா?! திரும்பவும் போட்டியைத் தம் பக்கம் வலுக்கட்டாயமாகத் திருப்பியது திருச்சி. 47 பந்துகளில், 63 ரன்களைச் சேர்த்து, 'வெற்றி பக்கம்தான்' என ஓடிக் கொண்டிருந்த நெல்லையின் சக்கரத்தில் இருந்த அச்சாணிகளான சஞ்சய் மற்றம் இந்திரஜித் இருவரையும் வெளியே எடுக்கத், தடுமாறியது நெல்லை. இரண்டு ஓவர்களில், ஐந்து விக்கெட்டை வீழ்த்தி, போட்டியையும் வென்று விட்டது திருச்சி.

TNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்!

கேப்டன் ராஹில் வீசிய போட்டியின் 13-வது ஓவரில்தான் எல்லாமே மாறத் தொடங்கியது. இருபக்கத்தில், ஏதோ ஒருபக்கம் ஆடி வெற்றி பெறுமா, இல்லை மழைபுகுந்து, மத்தியஸ்தம் செய்து, போட்டியின் முடிவை அது நிர்ணயிக்குமா என எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, சஞ்சய் யாதவ்வை அற்புதமாக ரன் அவுட் செய்தார் அமித். இதற்கடுத்த பந்திலேயே அர்ஜுனின் விக்கெட்டை ராஹில் வீழ்த்த, 'இந்திரஜித் இருக்கும்வரை எதுவும் முடியவில்லை' என்றே நெல்லைத் தரப்பு நினைத்திருக்கும்.

TNPL
TNPL
twitter.com/TNPremierLeague

ஆனால், அடுத்து வீசப்பட்ட மதிவண்ணனின் ஓவரில், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்வுகள் நடந்தேறின. வீசிய நான்கு பந்துகளில், மூன்று விக்கெட்டுகளை வரிசைகட்டி வீழ்த்தினார் மதிவண்ணன். அதுவும் அத்தனை விக்கெட்டுகளும் எல்பிடபிள்யூ என்பதுதான் கூடுதல் சிறப்பே. 14 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், நெல்லையின் அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 74 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றுள்ளது திருச்சி வாரியர்ஸ்.

திருச்சி வாரியர்ஸ், சாய் கிஷோரை டிரேட் முறையில் இழந்ததோடு, அனுபவ வீரர்களான முரளி விஜய்யும், அனிருதாவும் கடைசி நேரத்தில் விலகிவிட, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர் கூட அணியில் இல்லை. எனவே, நெல்லையோடு ஓப்பிடுகையில், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவே என்றெல்லாம், ஆருடங்கள் கணிக்கப்பட, 'எண்ணமிருந்தால் எல்லாம் சாத்தியமே' என திருச்சி வாரியர்ஸ், தெறிக்க விட்டு, புள்ளிப் பட்டியலில் முதன் முறையாக, இரண்டு புள்ளிகளை, தங்கள் பெயரில் எழுதி உள்ளது.
அடுத்த கட்டுரைக்கு