Published:Updated:

TNPL: கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்ஷன் எடுத்த மாஸ்டர் கிளாஸ்... திருச்சியைச் சுலபமாக வென்ற கோவை!

TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK ( twitter.com/TNPremierLeague )

கங்கா ஸ்ரீதர் ராஜு நிர்மாணித்த தனி ராஜாங்கத்தில் தடுமாறித் தடம் புரண்டது திருச்சி வாரியர்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புள்ளிப் பட்டியலின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் திருச்சி வாரியர்ஸும், முதல் வெற்றியை வேண்டிக் களமிறங்கிய ஷாருக்கானின் கோவை கிங்ஸும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

டாஸை திருச்சி வெல்ல, பேட்டோடு தொடங்குகிறோம் என்றார் கேப்டன் ராகில். அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் கடந்து சென்ஷேசனாக மாறிய அமித் ஷாத்விக்கோடு, முகுந்த்தும் களமிறங்கினார். அவர்களை முதலில் தாக்க அபிஷேக் தன்வர் அனுப்பப்பட்டார். பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவரான அவரின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK
twitter.com/TNPremierLeague

எனினும் நெல்லைக்கு எதிரான முந்தைய போட்டியில் செய்ததைப் போலவே, அதிரடி ஆரம்பம் கொடுத்தார் அமித். போன போட்டியில், கிரீஸிலிருந்து இறங்கி வந்து ஆடி பௌலர்களை சரியான லெங்க்த்தில் பந்து வீச விட முடியாமல் குழப்பியதைப் போலவே இந்தப் போட்டியிலும் செய்தார். நிறைய பவுண்டரிகள் மிக நேர்த்தியாக அடிக்கப்பட்டன. பவர்பிளே முடிவில், 46 ரன்களை, தொட்டுவிட்டது இந்தக் கூட்டணி. முகுந்த் ரன்களைக் குவிக்காவிட்டாலும், அவரது பார்ட்னருக்கு சப்போர்டிங் ரோலை சரியாகச் செய்து கொண்டிருந்தார்.

விக்கெட் விழுந்தாக வேண்டுமென, சுழலிடம் சரண் புகுந்தார் ஷாருக்கான். எதிர்பார்த்ததைப் போல, எட்டாவது ஓவரின் கடைசிப் பந்தில், இறங்கி வந்து ஆடிய முகுந்த்தின் பேட்டில் பந்து சிக்காமல், கீப்பரிடம் சென்று சேர, நொடிக்குள் ஸ்டம்பைச் சிதற விட, 14 ரன்களோடு அவர் வெளியேறினார்.

நிதிஷ் ஒன்டவுனில் உள்ளே வர, இன்னொரு ஸ்பின்னரான அஜித் ராமைக் கொண்டு வந்தது கோவை. அவரது பந்தில் சற்றே திணறிய அமித், பொறுமையிழந்து சரியாக டைமிங் செய்யாமல், தூக்கி அடிக்க, அது வெங்கட்ராமனை அடைந்தது. போன போட்டியில் சதத்தைத் தவறவிட்ட அமித், இப்போட்டியில் அரை சதத்தை தவறவிட்டார்.

TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK
twitter.com/TNPremierLeague

புதிதாக இணைந்த நிதிஷ் - சுமந்த் கூட்டணி, அடுத்த எட்டு ஓவர்கள் நீடித்ததோடு 74 ரன்களைச் சேர்த்தது. குறிப்பாக நிதிஷின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. போன போட்டியில், டக் அவுட்டாகி வெளியேறி இருந்த நிதீஷ், இப்போட்டியில், விட்டதைச் சேர்த்துப் பிடிக்கும் வெறியோடு ஆடினார். அஜித் ராமை ஹாட்ரிக் பவுண்டரியோடு பந்தாடினார். ஸ்பின்னையும், வேகப்பந்தையும் அருமையாக எதிர் கொண்டார். அதற்கடுத்த ஓவரிலேயே சுமந்த் ஜெய்ன் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியோடு ஸ்ரீனிவாசனைச் சிறப்பித்தார். அந்த இரண்டு ஓவர்களிலேயே 34 ரன்களைக் குவித்துவிட்டது திருச்சி.

TNPL: `மதுர வீரன்' அமித்தின் அதிரடி... பௌலிங்கிலும் அசத்திய திருச்சியின் முதல் மிரட்டல் வெற்றி!

இதன்பிறகு, அந்த இன்னிங்ஸின் நூறாவது பந்தில், தனது விக்கெட்டைப் பறிகொடுத்து, நிதிஷ் 45 ரன்களோடு வெளியேறிய போதும், அணியின் ஸ்கோர் அப்பொழுதே 133 ஆக இருந்தது.

கடைசி 20 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும், ரன் குவிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை திருச்சி பேட்ஸ்மேன்கள். மொத்தமாக, அந்த இடைவெளியில் 38 ரன்களை வந்து போன பேட்ஸ்மேன்கள் இணைந்து குவித்துவிட்டனர். குறிப்பாக, மீட்டர்களுக்கு அப்பால் ஓவர் த லாங் ஆன் மற்றும் ஓவர் த மிட் விக்கெட்டில் பறந்த, சரவண் குமாரின், இரண்டு பேக் டு பேக் சிக்ஸர்கள் எல்லாம் கில்லர் ஷாட்டுகள். அவரது மெகா சைஸ் கேமியாவோடு, ஆண்டனி தாஸின் கடைசி நேர அதிரடியும் இணைந்து, திருச்சியை 171 ரன்களைச் சேர்க்க வைத்துவிட்டது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் அடித்து வெளுத்து, 70 ரன்களை மளமளவெனக் குவித்திருந்தது திருச்சி.

இந்தத் சீசனில் இதவரை அடிக்கப்பட்ட அணியின் ஸ்கோர்களில், இதுவே அதிகமென்பதால், கோவைக்கு, இது சவாலான ஸ்கோராகவே பார்க்கப்பட்டது.
TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK
twitter.com/TNPremierLeague

எனினும், இந்த சீசனில், இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை, முதல் போட்டியிலேயே அடித்தவர்கள் நாங்கள் என்ற மிடுக்கோடே கோவை கங்கா ஸ்ரீதர் ராஜுவோடு, கவினைக் களமிறக்கியது கோவை.

அமர்க்களமான ஆரம்பத்தைக் கொடுத்த இந்தப் பார்ட்னர்ஷிப், வெகு நேரம் நீடிக்கவில்லை. கேப்டன் ராகில், ஐந்தாவது ஓவரிலேயே, தனது சுழல் ஜாலத்தைக் காட்டக் களமிறங்க, கவின் அதில் சிக்கி வெளியேற, போன போட்டியிலேயே தனது வரவை, சத்தமாக அறிவித்த சாய் சுதர்சன் வந்தார். மிரட்டியது இந்தக் கூட்டணி. குறிப்பாக, ராஜுவின் ராஜாங்கம், சற்று வலிமையாகவே விரிவாக்கம் செய்யப்பட்டது.

இரண்டு சிக்ஸர்களை இரண்டு பவுண்டரிகளை ஆண்டனி தாஸின் ஓவரில் பறக்க விட்ட ராஜு, எந்த லைனில் பந்து வந்தாலும், அதை லாவகமாகக் கையாண்டார். எந்த லெந்த்தில் பந்து வீசியும், இவரை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. வெறும் 33 பந்துகளில், அதிவேக அரை சதத்தை ராஜு எட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கட்டத்திற்குள்ளாகவே மூன்று கேட்ச்களை டிராப் செய்தது திருச்சி. அவர்களது தோல்விக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. நெல்லைக்கு எதிரான போட்டியில், அட்டாக்கிங் ஃபீல்டிங்கால் கடினக் கேட்ச்களைக் கூடப் பிடித்து அசத்திய திருச்சி, இந்தப் போட்டியில் பிடித்திருக்க வேண்டிய கேட்ச்களைக் கூடத் தவறவிட்டது. அந்தத் தருணத்திலேயே, வெற்றியை கோவையின் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டது திருச்சி. அது மட்டுமில்லாமல், திருச்சி பௌலர்களால் இந்த இரண்டு ஸ்டார் பேட்ஸ்மேன்களையும் அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தங்களது பார்டனர்ஷிப்பை 106 ரன்களில் கட்டமைத்து, வெற்றிக்குத் தேவையான அரங்கத்தை உருவாக்கி விட்டனர். சுனிலின் பந்தில், 142 ஸ்ட்ரைக்ரேட்டோடு, 74 ரன்களைச் சேர்த்திருந்த ராஜு வெளியேற, கேப்டன் ஷாருக்கான் உள்ளே வந்தார்.

TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK
twitter.com/TNPremierLeague
இதன் பின், 37 பந்துகளிலேயே, சாய் சுதர்சனின் அரைசதமும் வந்து சேர்ந்தது. இது இத்தொடரில், அவரது இரண்டாவது அரை சதமாகும். கன்சிஸ்டன்டாக ரன் சேர்த்து வரும் சாய் சுதர்சன், அணியின் மிகப் பெரிய பலமாக மாறி வருகிறார்.
5 கேட்ச் டிராப், மோசமான ஃபீல்டிங்… இலங்கையின் 9 ஆண்டுகால வேதனையை முடிவுக்கு கொண்டுவந்த இந்தியா!

இதன் பின், "பவுண்டரிக்குப் பஞ்சமில்லை" எனத் தொடர்ந்த கோவையின் இன்னிங்ஸில், முழு ஓவர்களையும், வீசப்பட வேண்டிய அவசியமின்றி, 18.1 ஓவர்களிலேயே, அடிக்க வேண்டிய ஸ்கோர் வந்துவிட, மிகச் சுலபமான வெற்றியைப் பதிவு செய்தது. 19-வது ஓவரில், ஆண்டனி தாஸ் வீசிய நோ பாலை, ஓவர் த ஃபைன் லெக்கில், சிக்ஸராக மாற்றிய ஷாருக்கான், ஃப்ரீ ஹிட்டை பவுண்டரியாக மாற்ற, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அட்டகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது கோவை.

போட்டி முழுமையிலும், ரன்ரேட்டை ஆறைச் சுற்றியே வட்டமிட வைத்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செய்தது கோவை. திண்டுக்கல்லை வீழ்த்தி, தொடரை அற்புதமாகத் தொடங்கிய திருச்சி, இந்தப் போட்டியில் மோசமாகத் தோற்றுள்ளது.
TNPL | RTWvLKK
TNPL | RTWvLKK
twitter.com/TNPremierLeague

நாள்கள் நகர, போட்டிகள் முடிய, முடிவுகள் மாற்றப்படலாம், புள்ளிப் பட்டியலில் அணிகள் மேலே ஏறலாம், சரிந்தும் வீழலாம், காட்சிகள் மாறலாம் என்பதால், ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆட்டநாயகனாக கங்கா ஸ்ரீதர் ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது கோவை கிங்ஸ் அணி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு