Published:Updated:

TNPL: சேஸிங்கில் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; இருந்தும் சம்பவம் செய்த திண்டுக்கல், ஸ்தம்பித்த கோவை!

மினி கிறிஸ் கெய்ல் மணிபாரதி, தன் அட்டாக்கிங் ஆட்டத்தால் கோவை கிங்ஸின் கூடாரத்திலேயே நங்கூரமிட்டார். "பௌலர்கள் பத்திரம்" என்ற கண்ணீர்க் கதைக்கு உரிய கதைக்கருவாய், அரங்கேறிய கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் போட்டியில் திகிலூட்டி வென்றது திண்டுக்கல்.

மதுரை பான்தர்ஸிடம் வாங்கிய மரண அடியிலிருந்து மீண்டு, டேபிளின் அடிவாரத்திலிருந்து மேடேறும் எண்ணத்தோடு திண்டுக்கல்லும், திருச்சியிடம் பறிகொடுத்த முதல் இடத்தைத் திரும்பப் பெறும் உறுதியோடு கோவையும் களமிறங்கினர். ஒரு தோல்வியே திண்டுக்கல்லை புதுக் கேப்டனாக சீனிவாசனுக்குப் பதிலாக, ஹரி நிஷாந்த்தை இறக்க வைத்திருந்தது.

டாஸை வென்ற திண்டுக்கல், கோவையை பேட்டிங் செய்யப் பணித்தது. சமீபத்திய போட்டி முடிவுகள், நிஷாந்த்தை, அப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டியிருந்தாலும், இப்போட்டியின் முதல் பாதி, 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவுபடுத்தும் என்பதை அப்போது அவர் கணித்திருக்கவில்லை.

கவினுக்குப் பதிலாக, இந்தப் போட்டியில் இணைந்திருந்த சுரேஷுடன், கங்கா ராஜு களமிறங்கினார். முதல் இரண்டு ஓவர்கள் ஆரவாரமின்றி, பவர் பிளேவுக்கு உரிய எந்த அடையாளமுமின்றி அமைதியாக நகர்ந்தன. திண்டுக்கல்லுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, உள்ளே மையம் கொண்டிருந்தது இரட்டைப் புயல்கள் என்று. மூன்று ஓவர்களின் முடிவில் 13 ரன்களைச் சேர்த்திருந்த இக்கூட்டணி, அடுத்த ஓவரில் இருந்து தனது வேலையைக் காட்டத் தொடங்கியது. விக்னேஷ் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை, காற்றைக் கிழித்து, சிக்ஸருக்கு அனுப்பி திண்டுக்கல்லின் சரிவை சிறப்பாகத் தொடங்கி வைக்க, இதற்கடுத்த குர்ஜப்நீத் சிங்கின் ஓவரை, மூன்று பவுண்டரிகளை விளாசி மிரட்ட, அரண்டது திண்டுக்கல்!

TNPL | #LKKvDD
TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague

இதற்குப் பின்னதாக, எந்த பௌலராலும், இவர்களுடைய ஓட்டத்துக்கு வேகத்தடை இட முடியவில்லை. ஹரி நிஷாந்த், எந்த அளவுக்கு வெறுத்துப் போனார் என்றால், ஓவருக்கு ஒருவர் என்னும் கணக்கில் பௌலரை மாற்றிப் பார்த்தார். அவர்கள் வசம், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும், நான்கு சுழல் பந்து வீச்சாளர்களும் இருப்பதால், எட்டு பௌலர்களையும் முயன்று பார்த்தார். ஒவ்வொருவரும் லைனையும், லெங்த்தையும் மாற்றி மாற்றிக் குழப்பிப் பார்த்தனர். 'பேக் டு த அட்டாக்' என்ற வார்த்தைகளை, ஒவ்வொரு ஓவரும் கமெண்டேட்டர்கள் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தாலும், உண்மையில் அட்டாக் செய்யப்பட்டது, பௌலர்கள்தான். இம்மியளவு கூட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, இருவரும் சுழன்று அடித்தனர், சுனாமியாக! 36 பந்துகளில் சுரேஷின் அரைசதம் வந்து சேர, 12-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது, அணியின் ஸ்கோர்.

இந்தச் சமயத்தில்தான், திண்டுக்கல் தவமிருந்த விஷயம் நடந்தது. சுதேஷ் வீசிய பந்து, சுரேஷின் ஸ்டம்பை சிதறச் செய்து, அதோடு சேர்த்து, பல பந்துகளாய் நீடித்திருந்த அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தது. 40 பந்துகளில், 58 ரன்களைச் சேர்த்து, அடுத்தடுத்த போட்டிகளில் தனது ஓப்பனிங் ஸ்பாட்டை சீல் செய்த சந்தோஷத்தோடு சுரேஷ் வெளியேற, கன்சிஸ்டென்ட் பேட்டிங்கிற்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கும் சாய் சுதர்சன் உள்ளே வந்தார்.

எட்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ஒன்பது விக்கெட்டுகளும் கைவசம் இருக்க, களத்தில் இரண்டு கண்ணி வெடிகளோடு, வெளியேயும் ஷாருக்கான் என்ற பெயரில் பாக்கெட் டைனமோவும் மீதமிருப்பதால், இது ஒரு ஹை ஸ்கோரிங் கேம் மட்டுமல்ல, 200-ஐ தாண்டப் போகும் போட்டிதான் என்பது அப்போதே உறுதி ஆனது.

அழுத்தமான சூழ்நிலையில் இலக்கைத் துரத்தும் போதே, இலகுவாக ரன்களைக் குவிக்கும் சாய் சுதர்சன், இந்தச் சூழ்நிலையை, எப்படிக் கையாள்வார்?! பறக்கவிட்டார் பந்துகளை! சந்திந்த 39-வது பந்தை இன்சைட் அவுட் மூலமாக டீப் கவரில் சிக்ஸராக மாற்றி அரைசதம் கடந்தார் கங்கா ராஜு!

TNPL | #LKKvDD
TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague

மறுபுறம், சுதர்சனும் தன் பங்கிற்கு ரன்களைக் குவித்துக் கொண்டிருக்க, இருபுறமும் ரன் மழை பொழிந்தது. இருக்கின்ற ஓவரை போட்டு முடித்தால் போதுமென்ற அளவுக்கு, வெறுத்துப் போனது திண்டுக்கல். இறுதியாக, ஒரே விக்கெட்டை மட்டும் இழந்த கோவை, 201 ரன்களை வாரிக் குவித்தது. 46 பந்துகளைச் சந்தித்த இக்கூட்டணி, 93 ரன்களை அடித்து நொறுக்கி இருந்தது. போன போட்டியைப் போலவே, இதிலும் கங்கா ராஜு ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றதுடன் சதத்தை 10 ரன்களில் மட்டுமே தவறவிட்டு 90 ரன்கள் எடுத்திருந்தார்.

202 ரன்கள் இலக்கு - "இதெல்லாம் சாத்தியமே இல்லை", என திண்டுக்கல் ரசிகர்களே கூட, இந்தியா - இலங்கை போட்டியின் பக்கம் தலையைத் திருப்பி இருப்பார்கள். ஆனால், அதுவும் எட்டக் கூடியதுதான் என்ற உறுதியோடு அருணும், ஹரி நிஷாந்த்தும் களமிறங்கினர். சந்தித்த இரண்டாவது ஓவரிலேயே, மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டார் அருண்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அட, ஒரு நிகழுலக சேஸிங்கைப் பார்க்கப் போகிறோமா?!" என்ற ஆர்வம் மிக, அக்கருத்தை அடித்துத் திருத்துவதைப் போல் அடுத்த இரண்டு ஓவர்களையும் வீசியது கோவை. அது மட்டுமின்றி, அருணையும் ஆட்டமிழக்கச் செய்து அனுப்ப, "இதோ தொடங்கி விட்டது, இதன்பின் விக்கெட்டுகள் வரிசையாக விழும், இலக்கின் சரிபாதி இலக்கங்களைக் கூட எட்டாமல் சேஸிங் செய்யும் அணி, சோக கீதமிசைக்க, போட்டியை பறிகொடுக்கும். எல்லா பிக் சேஸிங் கேமிலும், நடப்பது இதுதானே!", என்ற சலிப்போடு ரசிகர்கள், அவ்வப்போது பார்த்த ஸ்கோரைக் கூட பார்க்காமல் விட, அந்த இடைவெளியில்தான் எல்லாமே மாறத் தொடங்கியது.

ஒன்டவுனில் உள்ளே வந்த மணிபாரதி, எதிர்கொண்ட முதல் பந்தை, பவுண்டரிக்குக் கூட இல்லை, சிக்ஸருக்குத் தூக்கி "பந்தயத்துக்குத் தயார்!" என்றார். அதன்பிறகு ஓடத் தொடங்கிய இந்தக் குதிரைகள், ரேஸுக்காக ஓடியதைப் போல் ஓடவில்லை, உயிர் பயம் கொண்டது போல், வெறிபிடித்து ஓடின. அந்த சிக்ஸர் அடித்த பந்துக்குப் பின், ஒரு பந்து ஓய்வெடுத்து, அதற்கடுத்த நான்கு பந்துகளையும், அந்தரத்தில் மிதக்கவிட்டு, 18 ரன்களை கண்ணிமைக்கும் நொடி நேரத்திற்குள் சேர்த்துவிட்டனர்.

TNPL | #LKKvDD
TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague
அஜித் ராம், செல்வக் குமரன், சீனிவாசன் என வருகைப் பதிவை வாசிப்பதைப் போல ஒவ்வொருவராக அழைத்து, அவர்களது கைகளில் பந்துகளை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ஷாருக்கான். ஆனால், வேலைக்கே ஆகவில்லை. 8 ஓவர்களில் 80 ரன்கள் வந்து, ரன்ரேட் மீட்டரை கதறவிட்டது திண்டுக்கல்.

இந்தச் சமயத்தில், "சரி பார்த்து விட்டு வருவோமே!", என, இந்தியா இலங்கை தொடரிலிருந்து, இந்தப் பக்கம் வந்தவர்களுக்கு, அதுவே அதிர்ச்சி அளித்திருக்கும். ஆனாலும், உள்ளுக்குள், "எட்டு ஓவர்களில் - எண்பது ரன்களைச் சேர்க்கலாம், ஆனால், இதை, கடைசிவரை எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது!", என்றே தோன்றியிருக்கும், அவர்களை அறியாமல், கைகள், ரிமோட்டில் சேனலை மாற்றி இருக்கும். ஆனால், அதற்குப் பின்தான், இங்கே இன்னமும் உக்கிரமானது திண்டுக்கல் டிராகன்ஸ் இன்னிங்ஸ்.

பந்துக்கு வாய் இருந்தால் பட்ட கதை சொல்லி இருக்கும், அந்த அளவுக்கு அடி மேல் அடி வாங்கி, பலமுறை பவுண்டரி லைனிடம், அடைக்கலம் புகுந்தது. "நானே வருவேன்" என ஷாருக்கானே வர, "உங்களுக்கு ஸ்பெஷலாகத் தருவோம்", என அவரது ஓவரில், 18 ரன்களை மானாவாரியாக அடித்தனர்.

மறுபுறம், நிஷாந்த் அரைசதம் கடக்கவில்லை, ஆனாலும் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்து, 20 பந்துகளில், அரைசதம் அடித்தார், குட்டி கிறிஸ் கெய்ல் மணிபாரதி. அதன்பின்தான், 29 பந்துகளில், மெகா சைஸ் சிக்ஸரோடு வந்து சேர்ந்தது. நிஷாந்தின் அரைசதம்.

இதைத் தொடர்ந்தும் கூட, ரன்மழை நிற்கவே இல்லை. இந்த அணியா மதுரையிடம் அடிவாங்கி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்ற ஆச்சர்யத்தை மனதிலிருந்து அகற்றவே முடியவில்லை.
TNPL | #LKKvDD
TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague
57 பந்துகள் நீடித்த இந்த பார்ட்னர்ஷிப், 153 ரன்களைக் குவித்திருந்தது. அதாவது, பார்ட்னர்ஷிப்பின் ஸ்ட்ரைக்ரேட், கிட்டத்தட்ட, 268!

இந்தச் சமயத்தில், ஸ்கோரை மட்டும் பார்க்க வந்தவர்கள், மிரண்டு போய் இருப்பார்கள். நடப்பது உண்மையா, பொய்யா, கனவா, நனவா?! என ஸ்தம்பித்துப் போய் இருப்பார்கள்! ஆனால், அது கதையல்ல நிஜம்! அதற்குப் பின், பார்த்தவர்கள் சேனலை மாற்றி இருக்க மாட்டார்கள்.

இந்த நிலையிலேயே, ஏழு ஓவர்கள் எஞ்சியிருக்க, 34 ரன்கள் மட்டுமே தேவை என்று இலக்கு ஓடிவந்து அருகில் அமர்ந்து கொண்டது. ஆனால், அப்பொழுதுதான் ஒரு சுவையான இன்னொரு சம்பவமும் நடந்தது. "வீசித்தான் பார்க்கட்டுமே!", என கங்கா ராஜுவின் கைகளில், பந்தைக் கொடுத்தார் ஷாருக்கான். அவருக்கும் பவுண்டரி வரவேற்புக் கிடைத்தாலும், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், மணி பாரதியை ஆட்டமிழக்கச் செய்தார், ராஜு. அடுத்த அதிர்ச்சியாக, வந்த வேகத்தில் விவேக்கையும் அவர் அனுப்பி வைக்க, ஆட்டம் சூடு பிடித்தது.

இதற்கடுத்த ஓவரில், செல்வக் குமரன் வீசிய மூன்று பந்துகளில், இரண்டு விக்கெட்டுகள் வீழந்தன. அதில், செட்டில் ஆகியிருந்த ஹரி நிஷாந்த்தின் விக்கெட்டும் ஒன்று.

TNPL: தோல்வியின் விளிம்பிலிருந்து திருச்சி மீள உதவிய அந்த பார்ட்னர்ஷிப்... மதுரையின் போராட்டம் வீண்!

ஐந்து பந்துகள், நான்கு விக்கெட்டுகள்! ஆனாலும், திடுக்கிடவில்லை திண்டுக்கல். ஏனேனில், எஞ்சியிருந்த ஏழு ஓவர்களில், 25 ரன்கள்தான் தேவை எனக் கரை அவர்கள் கண்களில் தெரியத் தொடங்கி விட்டதுதான். இறுதியாக களத்தில் நின்ற, ஸ்வாமிநாதன் மற்றும் லோகேஷ்வர், "பொறுமை காக்க, பொறுமை இல்லை", என்று 18 ஓவர்களிலேயே இலக்கையும் எட்டி விட்டனர்.

TNPL | #LKKvDD
TNPL | #LKKvDD
twitter.com/TNPremierLeague

டிஎன்பிஎல்லின் வரலாற்றில், 201 ரன்கள் சேஸ் செய்யப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த எண்கள் எல்லாம் பிரம்மிக்க வைப்பதை விட, திண்டுக்கலின் ஆட்டம் எல்லோரையும் திகைக்க வைத்துவிட்டது. வென்ற அணி, தோற்ற அணி, கமெண்டேட்டர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்கள் என எல்லோருக்கும், கண்டிப்பாக நினைவை விட்டு அகலாத போட்டியாக, இது மாறி விட்டது.

32 பந்துகளில், 81 ரன்களைக் குவித்த மணி பாரதி, ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உண்மையில், அவரிடம் வாங்கிய அடிக்குப் பரிதாபப்பட்டாவது, அந்த விருதை அவர் பந்துடன் பகிர்ந்திருக்கலாம்.

இந்த வெற்றி, எட்டாவது இடத்திலிருந்த திண்டுக்கல் டிராகன்ஸை ஏணியில் ஏற்றி ஐந்தாவது இடத்தில் அமர வைத்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு