Published:Updated:

TNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்!

TNPL: ராஜகோபால் சதீஷ்

வயது வெற்றிக்கான வரம்பல்ல. அது ஒரு எண் அவ்வளவே! அதை மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் 40 வயது நிரம்பிய, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ராஜகோபால் சதீஷ்.

TNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்!

வயது வெற்றிக்கான வரம்பல்ல. அது ஒரு எண் அவ்வளவே! அதை மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் 40 வயது நிரம்பிய, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ராஜகோபால் சதீஷ்.

Published:Updated:
TNPL: ராஜகோபால் சதீஷ்

அதிக வயதோ, ஐந்து முறை காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதோ, இந்த சாம்பியனின் வேகத்திற்கோ, ஓட்டத்திற்கோ வேகத்தடை இடவில்லை.

டிஎன்பிஎல்-ன் இரண்டாவது போட்டியான, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும், திருப்பூர் தமிழன்ஸுக்கும் இடையேயான போட்டி நேற்று நடந்தது. இதில் வீசிய நான்கு ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் பத்து ரன்களை மட்டுமே கொடுத்து, டிஎன்பிஎல் வரலாற்றில், இரண்டாவது சிறந்த பௌலிங் ஸ்பெல்லைப் பதிவேற்றி உள்ளார் ராஜகோபால் சதீஷ்.

'டிஃபெண்டிங் சாம்பியன்கள்' என்னும் பெருமை மட்டுமின்றி, இந்த சீசனின் வலிமையான அணிகளிலும் ஒன்று என்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மீதான நம்பிக்கையும், அதே நேரத்தில் அழுத்தமும் சற்று அதிகமாகவே இருந்தது. பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் பிட்சில், திருப்பூர் தமிழன்ஸின் தினேஷும், சித்தார்த்தும் களமிறங்க, முதல் ஓவரை வீச அனுபவம் மிகுந்த வீரரான சதீஷ் இறங்கினார்.

TNPL: திருப்பூர் தமிழன்ஸ்
TNPL: திருப்பூர் தமிழன்ஸ்

நின்று நிதானிக்க எல்லாம் நேரமில்லை என்பதைப் போல், முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டினார் சதீஷ். அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட, போட்டியின் இரண்டாவது பந்திலேயே, தினேஷை கீப்பர் கேட்ச் கொடுக்கச் செய்து, சதீஷ் அனுப்பி வைத்து, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸின் கில்லியாக மாறினார். அடுத்த ஓவரில் விழுந்த சித்தார்த்தின் விக்கெட் மட்டுமே, தேவ் ராகுலின் கணக்கில் சேர்ந்தது. ஆனால், அந்தக் கடினக் கேட்சை மிகவும் இலகுவாக, டைவ் அடித்துப் பிடித்த பெருமையும் சதீஷையே சாரும். அவரது ஃபீல்டிங் திறமை பற்றி, எல்லோருக்கும் தெரியும் என்றாலும், இந்த வயதிலும், அதே துடிப்போடும், அர்ப்பணிப்போடும், அவர் களத்தில் செயலாற்றுவதுதான், அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

சித்தார்த் வெளியேறிய பின் உள்ளே வந்தார் அரவிந்த். இக்கூட்டணி, அதே ஓவரில், இரண்டு பவுண்டரிகளை அடித்து, ஆட்டங்கண்ட தங்களது நம்பிக்கையை மீட்டு வரப் போராட, எல்லா ஆட்டமும் சதீஷ் வரும் வரைதான் நீடித்தது.

வீச வந்த இரண்டாவது ஓவரிலேயே, அரவிந்தின் விக்கெட்டை, அடித்து வீழ்த்தினார், சதீஷ். ஐந்தாவது வீரராக, ரோகின்ஸ் களமிறங்க, அவருக்கு வீசிய முதல் பந்திலேயே, அவரது விக்கெட்டையும் எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். இரண்டு ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணியின் சப்த நாடியையும் அடக்கி விட்டார், சதீஷ்! திருப்பூருக்கு, எல்லாமே முற்றுப் பெற்றதைப் போன்ற தோற்றத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார் சதீஷ்.

அடுத்ததாக இணைந்த துஷார் - மான் பாஃப்னா கூட்டணியின் அற்ப ஆயுளும், ஒரு ஓவர்தான். சதீஷ் வீச வந்த மூன்றாவது ஓவரில், துஷாரின் விக்கெட்டும் விழுந்தது. இடையில் வந்த மற்ற பௌலர்களின் ஓவர் மட்டும்தான், பேட்ஸ்மேன்களுக்கு மூச்சுவிடக் கிடைக்குமென்பதைப் போலத்தான் இருந்தது, சதீஷின் மிரட்டல் பந்துவீச்சு. ஐந்தாவது விக்கெட்டுக்கு உள்ளே வந்திருந்த ராஜ்குமாரை, டக் அவுட்டாக்கி வெளியேற்றி, தனது ஐந்து விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார் சதீஷ். இது டிஎன்பிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட, ஒன்பதாவது ஐந்து விக்கெட் ஹால் ஆகும்.

என்ன நடக்கிறதென சுதாரிக்கும் முன்பே, கிட்டத்தட்ட முற்றிலும் எல்லாமே முடிந்து விட்டது, திருப்பூர் தமிழன்ஸுக்கு. நான்கு ஓவர்களில், 10 ரன்களை மட்டுமே கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, திருப்பூரின் பேட்டிங் லைனை, பொடிப் பொடியாக்கி விட்டார் சதீஷ். அவர் ஆட்டமிழக்கச் செய்த ஐந்து பேட்ஸ்மேன்களுமே, ஒற்றை இலக்கத்தோடே வெளியேறி இருந்தனர். அதிலும் இருவரை, டக் அவுட்டாக்கி இருந்தார் சதீஷ். முதல் டிஎன்பிஎல் போட்டியில், ஒரு இருபது வயது இளைஞனின் அதிரடி ஆட்டத்தை வியந்து பார்த்த கண்களை மேலும் விரியச் செய்து விட்டது, 40 வயதாகியும் குறையாத அவரது ஆட்டத்திறனும் அவருடைய உத்வேகமும்.

யார் இந்த சதீஷ்?!

இந்த வயதிலும், ஐந்து முறை, முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தாலும், ஆர்வம் குறையாது அவரை ஓட வைப்பது எது?!

திருச்சியைச் சேர்ந்த சதீஷ், 1981-ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே, அவருக்குக் கிரிக்கெட்தான் எல்லாமும். பலநிலைகளிலும் கிரிக்கெட் ஆடியவருக்கு ரஞ்சித் தொடரிலான வாய்ப்பு, 2000-ஆவது ஆண்டு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில், சற்றே தொய்வடைந்ததாக இருந்த சதீஷின் கரியரை, சரி செய்வதற்கான வாய்ப்பு, சரியாக வழங்கப்படாமல் போனது. தொடர்ந்து அவருடன் தமிழ்நாடு அணி, 'உள்ளே வெளியே' விளையாட வெறுத்துப் போன சதீஷ், அசாமுக்கு விமானம் ஏறினார்.

2003-ஆம் ஆண்டு, அசாமுக்காக ஆடத் தொடங்கினார் சதீஷ். பொருளின் அருமையே, நம் கையிலிருந்து நழுவிய பின்தானே நமக்கே தெரிய வரும்? இதேதான் நடந்தது சதீஷுக்கும். அவரது கிரிக்கெட் வாழ்வின் முதல் பெரிய திருப்புமுனையாக இது அமைந்தது. அத்தொடரில், 54 சராசரியோடு ரன்களை அடித்து நொறுக்கினார் சதீஷ்.

குறிப்பாக, எந்த தமிழ்நாடு அணி அவரை வெளியே உட்கார வைத்ததோ, அதே அணிக்கு எதிராக இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததோடு, 204 ரன்களோடு கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இழந்த பொக்கிஷத்தின் மதிப்பை உணர்ந்த தமிழ்நாடு அணி, அவரை மறுபடியும் உள்ளே கொண்டு வந்தது. ஆனாலும் சில போட்டிகளுக்குப் பின்பு, பழையபடி அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

அணிக்குள் 'உள்ளை வெளியே' ஆடுவதைப் போல், பேட்டிங் பொசிஷன்களிலும் 'மேலே கீழே' என பல நிலைகளிலும் சதீஷை அணிகள் மாற்றி இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து இறங்கி ஆடக் கூடியவர்தான் சதீஷ். அது மட்டுமில்லாமல், ஃபுல் பௌலிங் கோட்டாவையும் போட்டு முடிக்கக் கூடியவராகவும், எல்லாவற்றிலும் சகலகலா வல்லவராகவும், கைதேர்ந்த ஆல் ரவுண்டராகவும் இருந்தார் சதீஷ்.

TNPL: ராஜகோபால் சதீஷ்
TNPL: ராஜகோபால் சதீஷ்

என்ன இருப்பினும், தமிழ்நாடு அணியில் அவருக்கான நிரந்தர இடம் கிடைக்காமல் போக, இம்முறை அவரது மீட்புக்கு வந்தது, ஐசிஎல் என்று அழைக்கப்பட்ட, 20ஓவர் லீக். உலகக் கோப்பையை இந்தியா தோற்றதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இத்தொடர்தான், ஐபிஎல்லுக்கு முன்னோடி. இந்தத் தொடர்தான், சதீஷைப் பிரபலமாக்கியது. அடிக்கடி அவரது பெயர், பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கியதற்கு இத்தொடர்தான் காரணமாக அமைந்தது. இவர் சார்ந்திருந்த சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் சார்பாக பலமுறை, ஆட்டநாயகன் விருதை சதீஷ் வென்றார்.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் தன் முழுத் திறமையையும் சதீஷ் காட்டினார். களத்தின் லைவ் வயராக செயல்படும் வீரராக, இருந்தார் சதீஷ். ஒருமுறை, கொல்கத்தா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஜெயசூர்யா வீசிய பந்தை உபுல் சந்தனா அடிக்க, அதை அற்புதமாகப் பிடித்தார். இந்த நூற்றாண்டுக்கான கேட்ச் அது என சொல்லப்பட அந்த ஒரு கேட்சுக்காகவே அவரை அதிகமாகக் கொண்டாடத் தொடங்கினர், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர். கேப்டன் ஸ்டூவர்ட் லா இல்லாத நேரங்களில், கேப்டனாக, சதீஷே பங்கேற்றார். வெளி நாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு, அவரது திறனை மேம்படுத்த உதவியது.

இதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு, லான்காஷயரில், Whalley கிரிக்கெட் கிளப்புக்காக ஆடி, 27 போட்டிகளில், 1351 ரன்களை, அதுவும் 67.55 ஆவரோஜோடு குவித்திருந்தார், சதீஷ்.

இங்கிருந்து, ஐபிஎல் கதவுகளும் அவருக்காகத் திறக்க, மும்பை இந்தியன்ஸுக்குள் நுழைந்த சதீஷ், அங்கேயும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என ஒரு வலம் வந்து, 34 போட்டிகளில் ஆடியும் விட்டார்.

இந்த காலகட்டங்கள் எல்லாவற்றிலும், பல காயங்கள் அவரைத் துரத்தினாலும், முழங்கால் காயத்திற்காக, நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டார் சதீஷ். ஒவ்வொரு முறையும், அதற்குப் பின், ஓய்வெடுத்து அவர் திரும்ப வரவும், சில மாதங்கள் பிடிக்கும். இதுவும் அவரது கன்சிஸ்டென்சி அடிவாங்க ஒரு காரணமாக இருந்தது. காயங்கள் தடுமாறச் செய்யும்தான், தடம் மாறும்தான், ஆனாலும் அவரை ஒவ்வொரு முறையும் பழைய டிராக்குக்கு எடுத்து வருவது கிரிக்கெட் மீதான காதல்.

2015-ஆம் ஆண்டு, ரஞ்சித் தொடரில் அவரது திறமையை நம்பி, 34 வயதில், தமிழ்நாடு அணியின் கேப்டனாக அவரைப் பதவியேற்க வைத்தது வாரியம். அதற்கடுத்த சீசனிலேயே, அணியை, அரை இறுதிவரை எடுத்துச் சென்றார், சதீஷ். அதற்கு முந்தைய ஐந்து வருட ரஞ்சி வரலாற்றில், அதுவே முதல் முறை.

TNPL: ராஜகோபால் சதீஷ்
TNPL: ராஜகோபால் சதீஷ்

டிஎன்பிஎல் தொடரைப் பொறுத்தவரையும், 2017-ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தலைமை தாங்கிய சதீஷ், அதன்பிறகு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், காஞ்சி வீரன்ஸ் என எல்லா அணியையும் பார்த்து வந்து விட்டார். குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டனாக்கப்பட்டார், சதீஷ். அந்தத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, அவரது முழங்காலில் மறுபடி காயமேற்பட்டு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு எடுத்துச் செல்லப்பட, அதைக்கூடப் பொருட்படுத்தாமல், இறுதிப் போட்டி வரை வலியோடே விளையாடினார். கோப்பையை அணியை வெல்ல வைத்த பிறகுதான், அறுவை சிகிச்சைக்கே சம்மதித்தார் சதீஷ். இதன்பிறகு, காலின் காயம் ஆறும்வரை கூடக் காத்திருக்காது, தமிழ்நாடு அண்டர் 19 அணிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, அதையும் சிறப்பாகச் செய்து முடித்தார், சதீஷ்.

சேப்பாக் அணிக்குள் திரும்ப வந்திருக்கும், சதீஷ், இந்தத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கி உள்ளார். நெஹ்ராவைப் போலவே காயங்கள் அவருக்குச் சவால் விட்டாலும், அதை மன உறுதியோடு எதிர் கொண்டு, ஒவ்வொரு முறையும், முன்னிலும் வலுவானவராகக் மீண்டு வந்து கொண்டே இருக்கிறார், சதீஷ்.

காயங்களையும், கம்பேக்குகளையும் சரிசமமாய் சந்தித்திருக்கும் இந்த முரட்டுக் குதிரையின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

ஆனால், தமிழ்நாடு பிரிமியர் லீகின் இரண்டாவது நாளிலும் சென்னை மழை குறுக்கிட போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.