2016 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், 7வது சீசனை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் டிராஃப்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் IPL போன்று வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் TNPL 2023-ம் ஆண்டிற்கான ஏலம் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் உள்ள ஐடிசி கென்சஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு அணியும் ஏற்கெனவே 2 வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். மொத்தம் 943 வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த ஏலத்தில் வீரர்கள் 4 பிரிவுகளாக (A, B, C, D) பிரிக்கப்பட்டுள்ளனர்.
'A' பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) அடிப்படை விலை ரூ.10 லட்சமாகவும், ‘B’ பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் சீனியர் போட்டியில் பங்கேற்றவர்கள்) அடிப்படை விலை ரூ.6 லட்சமாகவும், ‘C’ பிரிவு வீரர்களின் (A, B, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) அடிப்படை விலை ரூ. 3 லட்சமாகவும், ‘D’ பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 70 லட்சத்தை மொத்தத் தொகையாகக் கொண்டே தங்களின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்க முடியும். 8 அணிகளும் ஏலத்தில் குறைந்தபட்சம் 16 வீரர்களையும் அதிகபட்சமாக 20 வீரர்களையும் (தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உட்பட) தேர்வு செய்யலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.