2016 -லிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்களை நடத்தி முடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 7- வது சீசனை அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சீசனில் சில மாற்றங்களைக் கொண்டுவர TNPL ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், TNPL போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து Draft முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இனி அந்த ஒதுக்கீடு முறை இருக்காது. அதற்கு பதிலாக IPL போன்று TNPL போட்டிகளிலும் வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். நடைபெறப்போகும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதிக்குள் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலோ அல்லது TNCA,TNPL இணையதளத்திலோ பெற்றுக்கொள்ளலாம். அதே போல் நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் அதனை சரி செய்ய DRS (Decision Review System) தொழில்நுட்பமும் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.