Published:Updated:

TNPL 2022: அணிகளின் செயல்பாடுகள் எப்படியிருந்தன? சாதித்த, சறுக்கிய இளைஞர்கள் யார், யார்?

TNPL 2022

ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் ஒரு தொடருக்கு இறுதிப் போட்டிக்கான ஒரு ரிசர்வ் நாள்கூட வைக்கப்படவில்லை. அப்படி இருந்திருந்தால் சாம்பியனாக ஒரு அணி மட்டுமே மகுடம் சூட்டியிருக்கும்.

TNPL 2022: அணிகளின் செயல்பாடுகள் எப்படியிருந்தன? சாதித்த, சறுக்கிய இளைஞர்கள் யார், யார்?

ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் ஒரு தொடருக்கு இறுதிப் போட்டிக்கான ஒரு ரிசர்வ் நாள்கூட வைக்கப்படவில்லை. அப்படி இருந்திருந்தால் சாம்பியனாக ஒரு அணி மட்டுமே மகுடம் சூட்டியிருக்கும்.

Published:Updated:
TNPL 2022
கோவைக்கும் கோப்பைக்குமான தொலைவை மழைகூட்ட, டிஎன்பிஎல் வரலாற்றில் முதல்முறையாகக் கோப்பை இரண்டு அணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர் முழுவதும் யூகிக்க முடியாத திரைக்கதையாக போட்டி முடிவுகள் புனையப்பட, க்ளைமாக்ஸிலும் தன்னால் முடிந்த ட்விஸ்ட்டை மழை கொடுத்தது. டிஎன்பில்லின் ஆறாவது சீசனுக்கான கோப்பையைக் கோவையும் சேப்பாக்கும் பங்கிட்டன.

ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், எழுச்சிகள், ஏமாற்றங்கள் - இக்கூறுகளின் கலவையாக உயிரூட்டப்பட்டதுதான், எந்தவொரு டி20 லீக்கும். கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டிஎன்பிஎல் கூட இதற்கு விதிவிலக்கல்ல. தொடரின் பெரும்பாலான பகுதிகள், ரசிகர்கள் எதிர்பாராத வகையிலேதான் நகர்ந்தன.

முரளி விஜய் | TNPL
முரளி விஜய் | TNPL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடக்க வேண்டிய கசப்போடு லீக் சுற்றோடே சேலம், திருச்சி மற்றும் திண்டுக்கல் அணிகள் டிஎன்பிஎல் டிரெய்னிலிருந்து இறங்கின. ஆடிய ஏழு போட்டிகளில் திருச்சி மற்றும் திண்டுக்கல் இரண்டில் வென்றிருக்க, சேலமோ மொத்தமே ஒன்றைத்தான் கைப்பற்றியது. கடந்த சீசன் பாதாளத்தில் முடிந்ததால், இம்முறை கேப்டன்ஷிப் ஃபெர்ராரியிடமிருந்து முருகன் அஷ்வின் கைக்கு மாறியிருந்தது. ஆனால், முடிவென்னவோ பழையபடிதான். பேட்டிங் படை கைவிட, எந்தப் போட்டியிலும் சேலம் 150 ரன்களைக் கூடத் தாண்டவில்லை.

கடந்த சீசனின் ரன்னர் அப்பான திருச்சியும் அதிர்ச்சி அளித்தது. முந்தைய சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்திய சரவணா, சுழலில் அசத்திய கேப்டன் ராகில், மதிவண்ணன், பொய்யாமொழி என யாரோ ஒரு பௌலர் ஏதோ ஒரு நாளில் எழுச்சி பெற்றாலும், முரளி விஜய்யின் கம்பேக் சதத்தைக் கழித்தால் பேட்ஸ்மேன்களின் பங்காக எதுவுமே மிஞ்சவில்லை. பல போட்டிகளில் ஐந்து பிரதான பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே இறங்கியதால் பெரிய இலக்கை துரத்தவோ, நிர்ணயிக்கவோ முடியாமல் போனது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திண்டுக்கல், திருப்பூர் ரசிகர்களுக்கு ப்ளே ஆஃப் டிக்கெட் கிடைக்காவிட்டாலும், முறையே ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா ஒரு போட்டியில் ஆடிவிட்டுப் போனது மட்டுமே கொண்டாடத்தக்கத் தருணமாக மாறியது. திண்டுக்கலின் பேட்டிங் படையில் யாருமே ஒட்டுமொத்தமாக ஏழு போட்டிகளில் 200 ரன்களைக் கூட எட்டவில்லை. திருப்பூர் பேட்ஸ்மேன்களோ ஸ்பின்னர்களைப் பார்த்தாலே பதறினர். இந்த அணிக்கு எதிரான அதிக விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள்தான் எடுத்திருந்தனர். ப்ளே ஆஃப்புக்குள் நுழைய வென்றே ஆகவேண்டிய கடைசிப் போட்டியில்கூட சாய் கிஷோரிடம் சரணடைந்தது திருப்பூர். அப்போட்டியில் தான் வீசிய 24 பந்துகளில் 22-ஐ டாட் பால்களாக்கி மிரள வைத்ததோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தித் திருப்பூரைச் சத்தமில்லாமல் வெளியேற்றினார் சாய்.

ரவிச்சந்திரன் அஷ்வின் | TNPL
ரவிச்சந்திரன் அஷ்வின் | TNPL

ப்ளே ஆஃப் ஸ்டேஷனை அடைந்த அணிகளில் மதுரையின் வரவு நல்வரவானது. 2018-ம் ஆண்டின் சாம்பியன்தான் என்றாலும் கடந்தாண்டு ஆறாவது இடத்தில் முடித்து ஏமாற்றத்துடன் வெளியேறிய மதுரை, இம்முறை ஆக்ரோஷத்துடன் திரும்பியிருந்தது. ஐந்து போட்டிகளில் அபார வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் முடித்தது. இதில் நான்கு விக்கெட்டுகள் ஹாலுடன் அரட்டிய சீனியர்கள் கௌசிக், சிலம்பரசன் மட்டுமல்ல, பந்துவீச்சில் ஆல்ரவுண்டரான இளம் வீரர் சன்னி சந்துவும் அசத்தினார். குறிப்பாக, திருச்சிக்கு எதிரான போட்டியில் ஐந்து ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியது மதுரை. பேட்டிங்கிலோ, அருண் கார்த்திக் கை கொடுத்தார். நெல்லைக்கு எதிராக 200+ ரன்களை சேஸ் வேண்டிய நிலையில்கூட நிதானமிழக்காமல் அதே நேரத்தில் அதிரடியாக அவரது பேட் நின்று பேசிய அந்த சதம் இந்த டிஎன்பில்லின் டாப் கிளாஸ் இன்னிங்ஸ். வெறும் 57 பந்துகளில் 106 ரன்களைக் குவித்திருந்தார். மதுரை கோட்டை விட்ட எலிமினேட்டரில் கூட மற்றவர்கள் சொதப்பி அணி 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த போதும் அருண் கார்த்திக் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்களை எடுத்திருந்தார்.

டி20 எவ்வளவு நிச்சயமற்றது என்பதனை நெல்லையின் இந்தாண்டு டிஎன்பிஎல் பயணம்தான் எடுத்துக் காட்டும். முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவர் வரை சென்று கடந்தாண்டு சாம்பியனான சேப்பாக் அணியை வீழ்த்தி அதகளத்தோடு ஆரம்பித்தது நெல்லை. அதிலும் இந்த சீசனின் டாப் ரன் ஸ்கோரர்களான சஞ்சய் யாதவ் (452), அபராஜித் (396) இருவருமே நெல்லை அணியைச் சேர்ந்தவர்கள்தான். பௌலிங்கிலும் சஞ்சய் யாதவுடன், ஹரீஸ் மிகச் சிறப்பாகப் பந்து வீசினார். முதல் இடத்தில் முடித்து ஆரவாரமாக ப்ளே ஆஃப்புக்குள் நெல்லை நுழைந்தது என்றாலும் அதில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகக் கிடைத்த இரு வாய்ப்பையுமே அந்த அணி தவறவிட்டது. முதல் குவாலிஃபயரில் சேப்பாக்கிற்குக் கடினமான இலக்கை வைக்கத் தவறித் தோற்றிருந்தாலும் கோவைக்கு எதிரான இரண்டாவது குவாலிஃயரில் 208 ரன்களைக்கூட டிஃபெண்ட் செய்ய முடியாமல் தோல்வியுற்றது.

TNPL 2022
TNPL 2022

நெல்லையின் கோப்பைக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது கோவையும், ஷாருக்கான் ஆடிய அந்த மிரட்டலான கேப்டன் இன்னிங்ஸுமே. புள்ளிப் பட்டியலில் நான்காவது இடமென்றாலும் நெல்லையின் செயல்பாட்டுக்கு நேரெதிராக, ப்ளே ஆஃபில் இரண்டு போட்டிகளையுமே வென்று இறுதிப் போட்டியில் கால் பதித்தது கோவை. சுரேஷ் சீசன் முழுவதும் அணியைத் தாங்கிப் பிடித்திருந்தார். கடந்த ஆண்டின் தொடர்ச்சியாக இந்த சீசனிலும் கவனத்தை ஈர்த்த பௌலர்களில் ஒருவரான அபிஷேக் தன்வர்தான் இந்த சீசனின் லீடிங் விக்கெட் டேக்கர். அவருடைய கட்டர்களும், கட்டுக்கோப்பான பந்து வீச்சும் பல போட்டிகளில், அணிக்கான வெற்றியை ஈட்டித் தந்தன. ப்ளே ஆஃப்புக்குப் பலமுறை வந்திருந்தாலும், இதுதான் கோவையின் முதல் இறுதிப்போட்டி.

மற்ற அணிகளுக்குத்தான், ஃபைனல் ஸ்பாட் என்பதே கனவு, சேப்பாக் கில்லீஸுக்கு அது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். முதலிடத்தைத் தவறவிட்டாலும், இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக நுழைந்து விட்டது. அதிக ரன்களுக்கான அதிக விக்கெட்டுகளுக்கான வீரர்களின் பட்டியலில் டாப் 5-ல் எந்த சேப்பாக் அணியின் வீரரும் இடம் பெறவில்லை. ஆனாலும் ஜெகதீசன், சாய் கிஷோர், கௌசிக் காந்தி, சதீஷ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மட்டுமின்றி போட்டிக்கு ஒரு மேட்ச் வின்னர் கிளம்பி வந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சேப்பாக்கின் கடந்த சீசன் வரலாறுகளும் கோவை இம்முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்த விதமும் இது உயர் மின்னழுத்த போட்டியாக மாறுமென்பதற்குக் கட்டியம் கூறியது. அதனைத் தணிக்கத்தானோ என்னவோ மழை குறுக்கிட்டு போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைத்தது. கோவை பங்கேற்கும் முதல் இறுதிப் போட்டி, அதிலும் கோவையில் நடக்கிறது என்பது கோவைக்குச் சாதகமாகப் பார்க்கப்பட, மூன்று முறை சாம்பியனான சேப்பாக்கிற்கு அதிர்ஷ்டம் டாஸிலிருந்தே தொடங்கியது.

17 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், கோவையின் நான்கு விக்கெட்டுகளை சந்தீப் வாரியர் வாரிச் சுருட்டினார். அதேபோல், ஐபிஎல்லின் குஜராத் அணி வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் இருபுறமும் நாயகர்களாக ஜொலித்தார்கள். 42 பந்துகளில், 67 ரன்களை சுதர்சன் விளாச, சாய் கிஷோர், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 140 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது கோவை.

TNPL 2022
TNPL 2022

மழை வருவதற்குள் டக்வொர்த் லூயிஸுக்கான ஸ்கோரை எட்டிவிட வேண்டிய பதற்றத்தில், நான்கு ஓவர்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது சேப்பாக். ஆனால் மழை குறுக்கிட்டு ஆட்டத்தைத் தொடர விடாமல் செய்து கோவையின் கோப்பைக் கனவைக் கலைத்துப் போட, சாம்பியன்ஷிப்பை இரு அணிகளும் பங்கிட்டுக் கொண்டன.

போட்டியின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் கோவையின் கை ஓங்கியிருந்தாலும் டி20 போட்டியின் முடிவு கடைசிப் பந்து வரை மாறுதலுக்குட்பட்டது. அதனால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதேவேளையில், ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் ஒரு தொடருக்கு இறுதிப் போட்டிக்கான ஒரு ரிசர்வ் நாள்கூட வைக்கப்படவில்லை. அப்படி இருந்திருந்தால் சாம்பியனாக ஒரு அணி மட்டுமே மகுடம் சூட்டியிருக்கும்.

அணிகளின் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி இந்த சீசனும் பல வீரர்களின் திறனை வெளிச்சம் போட்டுள்ளது. ஏற்கெனவே பரிச்சயமான பெயர்தான் என்றாலும் 452 ரன்களும் 188 ஸ்ட்ரைக் ரேட்டும் ஐந்து அரைசதங்களோடு ஒரு சதமும் சஞ்சய் யாதவின் பெயரை இன்னமும் பெரிதாக எடுத்துக் காட்டியது. அவர் தவிர பால சூர்யா, அஜிதேஷ், சோனு யாதவ், சன்னி சந்து, சுரேஷ் குமார், கார்த்திக் மணிகண்டன் ஆகிய வீரர்களும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டால் இன்னமும் உயரத்தை எட்டுவோம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

TNPL 2022
TNPL 2022

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிகச்சிறந்த ஸ்பின்னர்களை இத்தொடர் அடையாளம் காட்டியதோடு, பல போட்டிகளில் அவர்களே தனி ஆவர்த்தனம் செய்தனர், கூடவே சில ஃபினிஷர்களும்! ஆனால், புதிதாகச் சிறந்த பேட்ஸ்மேன்களோ ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர்களோ பெரிதாகக் கண்டறியப்படவில்லை என்பது மட்டுமே அடுத்ததாகக் கவனம் செலுத்த வேண்டிய இடம்.

எப்படியிருப்பினும் சேப்பாக்கிற்கு கோப்பை பங்கிடப்பட்டதில் பெரிய வருத்தம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை, பங்கிட்டுக் கொள்ளப்பட்டதென்றாலும், ஹாட்ரிக்காக மூன்றாவது முறை கோப்பையை (மொத்தமாக நான்காவது) கையில் ஏந்தியுள்ளது. ஆனால், கோவை அணிக்கோ இது மிகப்பெரிய ஏமாற்றம்தான்.