Published:Updated:

TNPL: பிளேஆஃப்பையே பார்த்திராத திருச்சி இந்த முறை பைனலில்... 2வது வாய்ப்பை எதிர்நோக்கும் சேப்பாக்!

ஆதிக்க நாயகனாக ஆதித்ய கணேஷ் அதிரடி காட்ட, முதல் குவாலி'ஃபயரில்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திருச்சி வாரியர்ஸ்.

டிஃபெண்டிங் சாம்பியன் மகுடம் மட்டுமின்றி, ஏற்கெனவே இரண்டு முறை கோப்பையைத் தூக்கிய பெருமையோடு, நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு நடத்தும், சென்னை சூப்பர் கில்லீஸ் ஒருபுறம், அனுபவமற்ற ரன்னர் அப் டைட்டிலைக் கூடக் கண்டிராத, ஏன் ப்ளே ஆஃப் பக்கமே கூட இதுவரை வந்திடாத அணியாக இருந்தாலும், இத்தொடரில் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்கிய திருச்சி வாரியர்ஸ் மறுபுறம் என சம பலமுள்ள இரு அணிகள் மோதிக் கொண்ட முதல் குவாலிஃபயர் போட்டி தொடங்கியது.

நாணயம் தங்களுக்குச் சார்பாக "நடத்து ராஜா" என தீர்ப்பளித்த மாத்திரத்தில் தயக்கமே இல்லாமல் தங்களது பலமான பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் ராகில். களம் பேட்ஸ்மேனுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இரண்டாவது பாதியில், பனிப்பொழிவு பந்து வீச்சையும், ஃபீல்டிங்கையும் கடினமாக்கும் என்பதே காரணம்.

திருச்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் யாரோ ஒருவர், புதிது புதிதாக தங்களது பெயரை நமது மூளை அடுக்குகளில் பதிய வைப்பர். அந்த அணி பெரும்பாலும் ஒரு வீரரை மட்டுமே நம்பி இருந்ததில்லை. அவர்களது வெற்றியின் ரகசியமும் அதுதான். அப்படி இந்தப் போட்டியில் அணிக்கு "வெற்றி" என்று சொல்லி, விக்கெட் கணக்கைத் தொடங்கி வைத்தார் சரவணக்குமார்.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

தனது ஸ்பெல்லின் முதல் ஓவரில் கௌசிக் காந்தி, இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் என சேப்பாக் சூப்பர் கில்லீஸின் இரண்டு தூண்களையும் தொடக்கத்திலேயே சாய்த்தார் சரவணக்குமார். இரண்டுமே க்ளீன் போல்டு என்பதுதான் அவரது துல்லிய பந்து வீச்சுக்குச் சான்றுகள். அதுவும் ஜெகதீசனுக்கு வீசப்பட்ட பந்தெல்லாம், நேரடியாக வருவதைப் போன்ற காட்சிப் பிழையை ஏற்படுத்தி பின் ஆஃப் ஸ்டம்ப்பைத் தாக்கி உடைக்க, நம்ப முடியாத ஜெகதீசன் சற்று நேரம் தயங்கி நின்றிருந்தார். மொத்தத் தொடருக்குமான ஒற்றைப் பந்து அது.

இதற்கடுத்து இணைந்த சசிதேவ் - நித்தீஷ் கூட்டணிதான், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்னிங்ஸின் மொத்த ஆதாரமுமே! இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சரவணக் குமாரின் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார் ராதா கிருஷ்ணன். திருச்சிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அசத்தலாக அரைசதம் அடித்ததைப் போல் இப்போட்டியிலும் சேப்பாக்கின் ஒட்டுமொத்த ஸ்கோரில் சரிபாதி அவரது பேட்டின் உபயமே.

சசிதேவ் சப்போர்டிங் ரோலைச் சரியாகச் செய்ய, வாய்ப்புக் கிடைத்த போது மட்டும் பெரிய ஷாட்டுக்குப் போய் விக்கெட்டுக்கு முட்டுக் கொடுத்தனர். டாட் பால்கள் இருந்தாலும் ஓவருக்கு ஆறு ரன்கள் உத்தரவாதம் என்று இவர்கள் ஆட, இந்தப் பார்ட்னர்சிப்பால் அணியின் ஸ்கோரை 13 ஓவர்களுக்கு 89 என்ற அளவுக்கே எடுத்துச் செல்ல முடிந்தது.

டெத் ஓவர்களில் இந்தச் சக்கரங்கள் எவ்வளவு வேகமெடுக்கும் என்பது தெரியும் என்பதால், தனது சுருள் கத்தி மதிவாணனை உடனே இறக்கினார் ராகில். அவர் வீசியது பெயருக்குத்தான் 'ராங் அன்'னே ஒழிய, அது எந்தத் தவறும் செய்யாமல், மதிவாணன் கையிலிருந்து விடுபட்டதும், தனது வேலையை எல்பிடபிள்யூ ரூபத்தில் கச்சிதமாக முடித்து சசிதேவ்வை அனுப்பியது.

ஆனால், சேப்பாக் அணிக்கே சசிதேவ்வின் விக்கெட் வரமாகவே அமைந்தது. ஏனெனில், அடுத்தபடியாக அதிரடி ஆல் ரவுண்டர் சதீஷை அவர்களால் இறக்க முடிந்தது. சதீஷ் இறங்கிய கட்டத்தில் ஏழு ஓவர்களே மிஞ்சி இருந்ததால் இக்கூட்டணி அதன்பின் அஞ்சாமல் ஆடத் தொடங்கியது. 35 பந்துகளில் ஒரு சிக்ஸரோடு ராதா கிருஷ்ணனின் அரைசதம் வந்து சேர்ந்தது.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

இதற்கடுத்த ஆறு ஓவர்களுமே, ஒரு பெரிய ஷாட்டைப் பார்க்காமல் முடித்துக் கொள்ளப்படவில்லை. இங்கேதான் திருச்சியால் சேப்பாக்கைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கடைசி 42 பந்துகளில் 64 ரன்களை இவர்கள் சேர்க்க 154 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டு விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்துவிட்டாலும், சசிதேவ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ராதா கிருஷ்ணனுடன் ஏற்படுத்திய அந்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான், போட்டிக்குள் அவர்களைத் திரும்பக் கொண்டு வந்தது.

154 ரன்களை அடைந்தால் இறுதிப்போட்டி வாய்ப்பு என கண்களில் மிதக்கவிட்ட கனவோடு களமிறங்கினர், அமித் ஷாத்விக் மற்றும் சந்தோஷ் ஷிவ். பொதுவாக, அமித்தான் அவசரப்பட்டு ஆட்டமிழப்பார். ஆனால் இப்போட்டியில், இருபக்கமுமே ஓப்பனர்களுக்கு வாஸ்து சரியில்லை போலும். முதல் பாதியில் நடைபெற்றதைப் போலவே சந்தோஷ் ஷிவ் மற்றும் அமித் ஷாத்விக்கின் விக்கெட்டுகள் நான்கு ஒவர்களுக்குள் சாய்க்கப்பட்டுவிட்டன. தேவ் ராகுலும், சதீஷும் அச்சிறப்பான பணியினை செம்மையாகச் செய்து முடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

களப்பலிக்கெல்லாம் கலங்கிவிட மாட்டோம் என்று, மறுபக்கம், நிதீஷ் நின்றிருந்தார். அதுவும் ஆறு பந்துகளில், 18 ரன்கள் என 300 ஸ்ட்ரைக்ரேட்டோடு! இத்தொடரில் இதற்கு முன்னதாகவும் பல நாள்களைத் தனதாக்கிக் கொண்ட நிதீஷ், அதையே மீண்டும் ஒருமுறை அரங்கேற்றத் தொடங்கினார். ரன்ரேட் மிகச் சீராக, சிகரம் பார்த்தது.

போட்டியும் இரண்டு விக்கெட்டுகளால் எல்லாம் சேப்பாக்கின் பக்கம் மொத்தமாகத் திரும்பி விடவில்லை. திருச்சிக்கு பாதகமில்லா ஆரோக்கியமான ரன்ரேட்டால் அவர்களுக்குச் சார்பாகவே தொடர்ந்தது. ஆனால், சேப்பாக்கின் பௌலிங்கைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும்?! மொகம்மத்தின் விக்கெட்டையும், ஐந்து ஓவர்களுக்கு உள்ளேயே எடுத்துவிட்டனர். எனினும், இந்தப் போட்டியில் மொகம்மத்‌தே தனது விக்கெட்டை வேண்டி விரும்பி சேப்பாக்கின் பெயரில் எழுதிவிட்டுச் சென்றிருந்தார்.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

போட்டியை இந்த நிலையில் பார்த்தவர்களுக்கு, மூன்று விக்கெட்டுகள் என்பது மிரட்சி அளித்திருக்கலாம். ஆனால் ரன்ரேட், தொடர்ந்து சரியான பாதையிலேயே பயணித்தது. வீசப்பட வேண்டிய ஓவர்களில், நான்கில் ஒரு பங்கு வீசப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு ஸ்கோரை திருச்சி எடுத்து விட்டது. இதை, இதே போல் நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, நிதீஷ் - ஆதித்ய கணேஷ் கைகளில் வந்தது. அதை மிகமிகச் சிறப்பாகச் செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

75 பந்துகளில், 93 ரன்களை சேர்த்திருந்தது இந்தக் கூட்டணி. விக்கெட் விழக் கூடாது என்ற முயற்சியில் ரன் ரேட்டையும் கோட்டை விடக் கூடாது, ரன்களை துரித கதியில் சேர்க்க நினைத்து, விக்கெட்டுகளையும் பறிகொடுக்கக் கூடாது என கத்தி மேல் பயணம்தான் அது. ஆனால், அதனை கேக் வாக் போல, கச்சிதமாகச் செய்தனர். எப்பொழுதெல்லாம் ரன்ரேட் சற்றே சரிவைச் சந்திக்கிறதோ, அப்பெழுதெல்லாம் ஆதித்ய கணேஷிடம் இருந்து ஒரு பவுண்டரி வரும் என அடித்துச் சொல்லலாம். அந்தளவு, திருச்சி வாரியர்ஸ் முன் கூட்டியே எல்லாவற்றையும் பற்றித் திட்டம் தீட்டி வந்ததைப் போல சின்னச் சின்ன இலக்குகளை வைத்து முன்னேறிக் கொண்டே இருந்தது. 38 பந்துகளில், நிதீஷின் அரைசதமும் வந்து சேர்ந்தது.

கௌசிக்கும், சதீஷ் மற்றும் சாய் கிஷோர் மூலமாக நெருக்கடி தந்தார், தானே கூட வீசிப் பார்த்தார். ஆனால், அசராத இக்கூட்டணி, மூன்று ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் 24 ரன்கள் மட்டுமே தேவை என வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தது. ஆனால், சோனு யாதவ் 18-வது ஓவரை வீசிய போது நிதீஷினை, 5 ரன்களில் அனுப்பி வைத்தார். விக்கெட் விழ, காற்றில் அழுத்தம் எழ, அதனைக் கிழித்து, சிக்ஸரோடு அந்த ஓவரை முடித்தார் ஆதித்ய கணேஷ். ஆண்டனி தாஸ் புது பேட்ஸ்மேனாக உள்ளே வந்திருந்தார்.

19-வது ஓவரை சாய் கிஷோர், மிக மிக கட்டுக்கோப்பாக வீசி, வெறும் 5 ரன்களை மட்டுமே தந்திருந்தார். இறுதி ஓவரை, சோனு யாதவ் வீசுவார் என எதிர்பார்க்கப்பட, வெளியே இருந்து பயிற்சியாளர் ஹேமங் பதானியிடம் இருந்து வந்த உத்தரவின்படி பந்து, சோனுவின் கையில் இருந்து மணிமாறன் சித்தார்த்தின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. திருச்சி ரசிகர்கள், "கோவைக்கு எதிரான போட்டியில், அவர் எடுத்த நான்கு விக்கெட்டுகள் எல்லாம் இப்போதுதானா நினைவுக்கு வரவேண்டும்?!" என அங்கலாய்த்துக் கொண்டனர்.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

ஆறு ரன்கள் ஆறு பந்துகள்! எளிதாய்த் தோன்றலாம், ஆனால், டி20 அடுத்த பந்தில் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஆயிரம் இல்லாவிட்டாலும், அரைநொடி அதிர்ச்சியையாவது தருபவைதானே?! ஆம்! அதுதான் நடந்தது. அவர் வீசிய முதல் பந்தே சிறிய அளவிலான ஏவுகணை போல ஸ்டம்ப்பை தாக்கித் தகர்த்தது. ரசிகர்களின் நெஞ்சில் சின்ன அதிர்வலையை ஏற்படுத்தி ஆண்டனி தாஸ் வெளியேற சரவணக்குமார் உள்ளே வந்தார்.

பௌலிங்கில், சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தவருக்கு தற்போது, முடிவிலும் வென்று தர வேண்டிய நிலை. பெரிதாக எதையும் செய்யா விட்டாலும் ஆதித்ய கணேஷுக்கு உறுதுணையாக நின்றாலே போதுமே! இரண்டாவது பந்தில், இரண்டு ரன்களை எடுத்துக் கொடுத்தார். ஆனால், மூன்றாவது பந்திலோ ரன் எதுவும் வரவில்லை. மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்றாக ஒரு ரன்னை எடுத்து ஸ்ட்ரைக்கை ஆதித்ய கணேஷிடம் கொடுத்தார் சரவணக்குமார்.

TNPL: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்த திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுருண்டது எப்படி?

இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் வேண்டும். இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு நகரும். ஒரு ரன் மட்டும் எடுத்தால், போட்டி சேப்பாக்குக்கு சார்பாக முடியும் என ரசிகர்களின் செல்கள் அத்தனையும் அழுத்தத்தால் நிரம்பி வழிந்தன. ஆனால், கடைசிப் பந்து வரை காத்திருக்காது ஐந்தாவது பந்தை ஏரியல் ஷாட்டாக மாற்றி ஆதித்யா அனுப்ப, பந்துக்கே கூட சற்று படபடப்பு ஏறி இருக்கும். ஆனால், ஆதித்யாவின் ப்ளேஸ்மெண்ட், டைமிங் எல்லாமே கனகச்சிதமாக செயல்பட்டு அதனை பவுண்டரி லைனுக்கு அந்தப் பக்கம் தரையிறக்கியது. உலகக் கோப்பையில், தோனியின் அந்த நினைவுகூரத்தக்க சிக்ஸர் போல் திருச்சிக்கு இதுவும் அமைந்தது.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG
சேப்பாக், நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் எனப் போட்டு வைத்திருந்த திட்டத்தை உடைத்து நொறுக்கிவிட்டது, திருச்சி வாரியர்ஸ். 45 பந்துகளில் 66 ரன்களைச் சேர்த்த ஆதித்ய கணேஷ், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் வாய்ப்பை நழுவவிட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தங்களது அடுத்த வாய்ப்பாக கோவை மற்றும் திண்டுக்கல் மோத இருக்கும் எலிமினேட்டர் போட்டியின் மேல் பார்வையைப் பதித்துள்ளது. இதுவரை பிளேஆஃப்பிற்கே முன்னேறாத அணியாக இருந்தாலும், திருச்சி வாரியர்ஸ் இம்முறை முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கேப்டன் ராகிலைத் தவிர, அத்தனை பேரும் அனுபவமற்றவர்கள். எனவே, திருச்சி வாரியர்ஸ் டேபிளின் அடியில் தேங்குமென தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆருடங்கள் கணிக்கப்பட்டன. ஆனால், திருச்சி உத்தேசங்களை மூக்குடையச் செய்து, தன்னை தன்னிகரற்றதாய் நிரூபித்துக் காட்டியுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு