Published:Updated:

TNPL: தோல்வியின் விளிம்பிலிருந்து திருச்சி மீள உதவிய அந்த பார்ட்னர்ஷிப்... மதுரையின் போராட்டம் வீண்!

TNPL | #SMPvRTW
News
TNPL | #SMPvRTW ( twitter.com/TNPremierLeague )

கௌசிக்கின் முப்பரிமாண ஆட்டத்தை, முகமத்தின் அரைசதம் இருட்டடிப்புச் செய்ய, எழுச்சி பெற்றது திருச்சி.

தலா ஒரு வெற்றியுடன், புள்ளிப் பட்டியலின், மூன்றாம், நான்காவது இடத்தில் இருக்கும் மதுரை பான்தர்ஸும், திருச்சி வாரியர்ஸும் மோதிக் கொண்டன.

எந்த மாற்றமும் இல்லாமல் மதுரை களம் காண, திருச்சி ஓப்பனராக சோபிக்கத் தவறிய முகுந்த் மற்றும் ஆகாஷ் சும்ராவுக்கு பதிலாக முகமத் அத்னான் கான், பொய்யாமொழியுடன் இறங்கியது. இந்த நாளில் அவர்கள் எடுத்த மிகச்சிறந்த முடிவு இது என்பது பின்புதான் தெரிய வந்தது‌.

டாஸை வென்ற திருச்சி, சேஸிங்கைத் தேர்ந்தெடுக்க, ஸ்டார் பேட்ஸ்மேனான அருண் கார்த்திக்கும், ராஜ்குமாரும், ஓப்பனிங்கில் இறங்கினர். முதல் ஓவரில் மட்டும் பணிந்து 5 ரன்களை எடுத்த மதுரை, இரண்டாவது ஓவரிலிருந்து ரன்களை வாரிக் குவிக்க ஆரம்பித்தது. சரவணக் குமாரின் ஓவரில் அருண் ஆஃப் சைடுக்கு ஒன்று, லெக் சைடுக்கு ஒன்று என இரு பவுண்டரிகளை அடித்தார். சுனிலும் அடுத்த ஓவரில் சரியான லைனில் போட முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

பவர்பிளே ஓவர்களின் அடிப்படை அம்சமாக ரன்ரேட் ஒன்பதுக்கு மேலே உலவிக் கொண்டிருந்தது. அதே உற்சாகத்தில் பந்தை அருண் உயரத்தில் தூக்கி அடிக்க, மிகமிகக் கடினமான அந்தக் கேட்சை ஓடிக்கொண்டே பிடித்தார் மதிவண்ணன். இந்த சீசனில், இதுவரை எடுக்கப்பட்ட மிகச்சிறந்த கேட்ச் அது! மணிவண்ணனின் முயற்சியால், அருணின் விக்கெட் திருச்சிக்கு மிகப்பெரிய பம்பர் பரிசாக அமைந்தது. ஒன்டவுனில், ரோகித்தை முன்கூட்டியே இறக்கியது மதுரை. இதன்பிறகு படுத்த ரன்ரேட்தான், பல ஓவர்களுக்கு எழவே இல்லை.

TNPL | #SMPvRTW
TNPL | #SMPvRTW
twitter.com/TNPremierLeague

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தச் சமயத்தில்தான் நெல்லையை நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நிலைகுலைய வைத்த மதிவண்ணனை திருச்சி இறக்கியிருந்தது. தனது ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரை வீசக் களமிறங்கினார் அவர். அன்று செய்த ஒரு ஓவர் மாயத்தை, இப்போட்டியிலும் மதிவண்ணன் மீண்டும் நிகழ்த்தினார். மிட் விக்கெட்டில், பந்தை பவுண்டரியாக்க முயன்ற ராஜ்குமாரை 18 ரன்களோடு அனுப்பிய மதிவண்ணனுக்கு அடுத்ததாக ரோகித்தின் விக்கெட்டை வீழ்த்த, மேலும் நான்கு பந்துகளே தேவைப்பட்டன. அருமையான ஆர்ம் பாலினால் அவர் ரோகித்தையும் ஆட்டமிழக்கச் செய்ய, 8 ஓவர்களில், ரன் ஏறிய வேகத்துக்கு விக்கெட்டும் வீழ்ந்து, 48/3 என தள்ளாடியது மதுரை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அந்த அதிர்ச்சியில் இருந்து மதுரை மீள்வதற்குள், ஆஃப் ஸ்டம்பைக் கழறச் செய்து சுனில் மதுரையின் கேப்டன் ஷதுர்வேத்தை டக்அவுட் ஆக்கினார். அவரது உச்சகட்ட ஆக்ரோஷமான செலிப்ரேஷன் சொன்னது, எந்த அளவிற்கு அது முக்கியமான விக்கெட் என்பதனை! வெறும் ஒன்பது பந்துகளுக்குள் மூன்று விக்கெட்டுகளை மதுரை இழந்திருந்தது.

போட்டியின் சரிபாதி பந்துகள் கூட வீசப்படவில்லை. ஆனால், நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து, திணறிக் கொண்டிருந்தது மதுரை. அடுத்து இணைந்த கௌசிக் - அனிருத் கூட்டணிதான், ஒட்டுமொத்த போட்டிக்குமான ஆதாரமாக அமைந்தது. 55/4 என்று இருந்தபோது இணைந்த இவர்களது கரங்கள், மேலும் 79 ரன்களை 62 பந்துகளில் குவிக்கும் வரை விடவே இல்லை.

தொடக்கத்தில், விக்கெட்டுகளைக் காப்பாற்ற இந்தக் கூட்டணி ஆடிக் கொண்டிருந்ததால் மதிவண்ணன் ஓவரில், கௌசிக் அடித்த சிக்ஸரைத் தவிர, அடுத்த ஐந்து ஓவர்களுக்கு, எந்தப் பெரிய ஷாட்டையும், இக்கூட்டணி அடிக்கவுமில்லை, அந்த வாய்ப்பை திருச்சி தரவுமில்லை.

TNPL | #SMPvRTW
TNPL | #SMPvRTW
twitter.com/TNPremierLeague

14 ஓவர்கள் கடந்து விட்ட நிலையில், அதுவரையிலும், பத்துக்கு அதிகமாக ரன்கள் எறிய இரண்டு பெரிய ஓவர்களை மட்டுமே மதுரையின் ஸ்கோர் போர்டு பார்த்திருந்தது. வெறும் 86 ரன்களே சேர்ந்திருக்க, மீதமுள்ள பந்துகளில் ரன்களை அடித்துச் சேர்த்து, இலக்கை திருச்சிக்கு எட்டாத தொலைவுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது மதுரை.

அனிருத் ஆங்கரிங் ரோலை எடுத்துக் கொள்ள, முதல் போட்டியில், எல்லோரும் ஏமாற்றியபோதும், சிறப்பாக ஆடிய கௌசிக், இப்போட்டியிலும் அதையே செய்யத் தொடங்கினார். மதிவண்ணன், சுனில் உள்ளிட்ட முக்கிய பௌலர்களின் விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், பொய்யாமொழியின் ஓவரை, பதம் பார்த்தது இக்கூட்டணி. அடுத்த 3 ஓவர்களில் மட்டும், 33 ரன்களைக் குவித்து அமர்க்களப்படுத்தினர். 20 ஓவர்களிலும் இமைக்காமல் பார்க்க வைத்தது இந்த ஓவர்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திகைத்து விடவில்லை திருச்சி, திருப்பிக் கொடுத்தது! நெல்லை போட்டியில், கொத்துக் கொத்தாக விக்கெட்டை எடுத்த அவர்களது பாணி, இதிலும் தொடர்ந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது போல் டெத் ஓவர்களிலும் அதுவே நிகழ்ந்தது மதுரைக்கு.

மூன்று ஓவர்களில் 33 ரன்களைக் குவித்ததற்கு, அடுத்த மூன்று ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி தந்தது திருச்சி. 19-வது ஓவரில் கௌசிக்கின் விக்கெட் விழ, கடைசி ஓவரில் வெறும் மூன்று ரன்களை மட்டுமே திருச்சி தர, 137 ரன்களோடு முடிவுக்கு வந்தது மதுரையின் இன்னிங்ஸ்.

138 ரன்கள் என்பதெல்லாம், பிட்சின் தற்போதைய நிலைக்கு, பெரிய விஷயமல்ல என்பதால், சீக்கிரம் முடித்து, இந்தியா - இலங்கை மேட்ச் பார்க்கப் போகலாம் என்ற எண்ணத்தோடு இறங்கிய அவசரம் தெரிந்தது திருச்சியின் ஆட்டத்தில்!
TNPL | #SMPvRTW
TNPL | #SMPvRTW
twitter.com/TNPremierLeague

வீசப்பட்ட ரோகித்தின் முதல் ஓவரிலேயே, போன இரு போட்டிகளிலும் அணியின் அச்சாணியாகத் திகழ்ந்த, அமித் ஷாத்விக் மற்றும் நிதீஷின் விக்கெட்டுகளை எடுத்தது மதுரை. 0/2 என திகிலூட்டியது திருச்சியின் ஸ்கோர் போர்டு. 'நிற்கவாவது நேரம் தாருங்கள்', என்பதை எல்லாம் காதில் வாங்காமல், அடுத்த ஓவரிலேயே, சுமந்த் ஜெயினின் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகள், வெறும் எட்டுப் பந்துகளில் எடுக்கப்பட்டது. மதுரை மிரட்டியது!

ஆனாலும் திருச்சி பணிந்து விடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஆதித்ய கணேஷ் மற்றும் முகமத் கான் கூட்டணி, நிதானத்தோடு போட்டியை அணுகத் தொடங்கியது. எடுக்க வேண்டிய ரன்கள் இயலாத ஒன்று இல்லை என விக்கெட் வீழ்ச்சியை ஒருபுறம் தடுத்ததோடு, மறுபுறம் தேவைப்படும் ரன் ரேட்டை எகிற விடாமல் கட்டுக்குள் வைத்துக் கொண்டு களத்தை தங்குளுடையதாக ஆக்கினர்.

முகமத், முகுந்த்துக்குப் பதிலாக, தன்னைச் சேர்த்ததற்கு முழுமையாக நியாயம் கற்பித்தார். இடையில் வந்த மூன்று ஓவர்களைத் தவிர, எல்லா ஓவரும், பெரிய ஷாட்டைப் பார்க்காமல் போகவில்லை. பேக்வர்ட் பாயிண்டில் இருந்த கௌசிக், ஆதித்ய கணேஷ் தந்த ஓர் அருமையான கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட, இந்தப் பார்ட்னர்ஷிப் முன்னிலும் வேகமாக தங்களது இன்னிங்ஸைக் கட்டமைக்கத் தொடங்கியது.

32 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிப் கொண்டிருந்தார் முகமத். விக்கெட் விழுந்தேயாக வேண்டுமென்ற சூழ்நிலையில், கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதகளம் காட்டிய கௌசிக்குக்கு பௌலிங் வாய்ப்புத் தரப்பட்டது. செட்டில் ஆகி வெற்றியை நோக்கி எட்டி நடை போட்டுக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியை அவர் முறித்தார். முகமத் நடையைக் கட்ட, அதற்கடுத்த 7-வது பந்திலேயே ஆண்டனி தாஸை, சிலம்பரசன் அனுப்பி வைத்தார். கௌசிக் பிடித்த அந்த அற்புதமான கேட்ச், மதுரைக்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. 34 பந்துகளில் 39 ரன்கள் வேண்டுமென்ற நிலைக்கு திருச்சி வந்தது.

TNPL | #SMPvRTW
TNPL | #SMPvRTW
twitter.com/TNPremierLeague

சுலபமாக அடிக்கக் கூடிய ரன்கள்தான், திருச்சி ஏறக்குறைய வென்றுவிட்டது என்ற நிலையில், மதுரைக்குரிய வெற்றிக்கான ஒரே வழி, கணேஷின் விக்கெட்டுதான் என்று தெளிவாகப் புரிந்தாலும், அதை விட்டுத் தர கணேஷும் தயாரில்லை. எனினும், கௌசிக்கின் பந்தில் மதிவண்ணனின் ஸ்டம்ப் சிதறியது. அந்த நிலையில்தான், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான கிரண் ஆகாஷ், ஓர் அற்புதமான சம்பவத்தை நடத்திக் காட்டினார். கிரண் வீசிய ஒரு ஸ்லோ பால் மேஜிக், கணேஷை தேர்ட் மேனிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்ற, ஆனந்தக் கூத்தாடியது மதுரை.

17 பந்துகள் பாக்கி, 20 ரன்கள் வேண்டும் என்னும் சூழ்நிலையில், சரவணக் குமாரும், பொய்யாமொழியும் களத்தில் நிற்க, அதை டிஃபெண்ட் செய்யப் போராடியது மதுரை. பொறுப்பாக ஆடிய இக்கூட்டணி, ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரால் அதிரவிட, வெற்றிக் கோட்டை ஒரு ஓவர் மீதமிருந்த நிலையிலேயே தொட்டுவிட்டது திருச்சி.

மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்திருந்தாலும் மதுரை அதை டிஃபெண்ட் செய்ய முழுமையாகப் போராடியது. எனினும், அவர்களுக்குத் தண்ணீர் காட்டிய, முகமத் மற்றும் ஆதித்ய கணேஷுக்கு இடையேயான, 84 ரன்கள் பார்ட்னர்ஷிப், திருச்சியை வெல்ல வைத்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மொமண்டத்தை மதுரை தவறவிட, எல்லாவற்றையும் அதுதான் புரட்டிப் போட்டது.

'வாரியர்ஸ்' என்ற பெயருக்கு ஏற்றாற் போல், எல்லாப் போட்டியிலும் தோல்வியின் விளிம்பிலிருந்து திரும்பத் திரும்ப மீண்டு வருகிறது, திருச்சி. அதுவும், சென்ற போட்டியில் கோவைக்கு எதிராக, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற திருச்சிக்கு, இது அற்புதமான கம்பேக். இந்த வெற்றியின் மூலமாக திருச்சி வாரியர்ஸ், முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.