Published:Updated:

TNPL: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்த திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுருண்டது எப்படி?

TNPL | #RTWvCSG

பிளேஆஃபின் முதல் குவாலிஃபயருக்கான பயிற்சி ஆட்டமாக, கடைசி லீக் போட்டி மாற, அதில் திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டியிருக்கிறது.

TNPL: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்த திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுருண்டது எப்படி?

பிளேஆஃபின் முதல் குவாலிஃபயருக்கான பயிற்சி ஆட்டமாக, கடைசி லீக் போட்டி மாற, அதில் திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டியிருக்கிறது.

Published:Updated:
TNPL | #RTWvCSG
பிளேஆஃபுக்கே ஆளெடுத்த பின் ஆடிஷன் எதுக்கு என்ற தோற்றம் உண்டானாலும், இது புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கான மோதல், ப்ளே ஆஃபுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கப் போகும் இரு அணிகளுக்கு, அதற்கு முன்பாக நடக்கும் ஓர் ஒத்திகை. இப்போட்டியால், டாப் 4 அணிகள் தங்களுக்குள் இடமாற்றம் செய்யலாம் என்பதால், திருச்சி வாரியர்ஸுக்கும், சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்குமான இந்த கடைசி லீக் ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

கடந்த இரண்டு போட்டிகளிலும், சேப்பாக்கத்தின் டிரெண்ட் கொஞ்சம் மாறி உள்ளது. டாஸ் வென்ற அணிகள், பேட்டோடு களமிறங்கி, பின் வெற்றியும் பெற்றன. கௌசிக் காந்தியும், அதையேதான் செய்தார். ஆனால், அது தவறான முடிவென அவர் தாமதமாக உணர்ந்திருப்பார்.

ஓப்பனர்களாக ஜெகதீசனும், கௌசிக் காந்தியும் களமிறங்கினர். முதல் பந்திலிருந்தே, மிரட்டியது திருச்சி. பௌலிங் அவர்களது பலம் என்பது தெரிந்த கதைதான் என்றாலும், அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது, கேப்டன் ராகில் தலைமையிலான பௌலிங் படை. பொதுவாக, ஸ்பின்னோடுதான் ராகில் தொடங்குவார், சில சமயங்களில் தானே கூட இறங்கி வருவார். ஆனால், இந்தப் போட்டியிலோ, வேகப்பந்து வீச்சாளர்களிடம் பந்தைக் கொடுக்க, அவர்களும் அவரை ஏமாற்றவில்லை.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுனில் சாம், அவுட் ஸ்விங்கர்களை வீசிக் கொண்டே இருக்க, சரவணக் குமாரோ, துல்லியமான லைன் மற்றும் லெங்த்தில் பந்தினை வீச, ரன் சேர்க்க ரொம்பவே திணறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். லேட்டரல் மூவ்மெண்டையும் ஸ்லிங்கையும் ஆயதமாக்கி இவர்கள் தாக்க, இரண்டு ஓவர்களில் ஏழு ரன்கள் மட்டுமே வந்திருந்தன. இது கௌசிக் தலையில் அழுத்தத்தை டன் கணக்காக ஏற்றி வைத்தது. அதைத் தணிக்க ஒரு பவுண்டரியை பாயிண்டில் அடித்த அவர், அதே வேகத்தோடு அதற்கடுத்த பந்தையும், மிட் ஆஃபில் அனுப்ப அது ஆகாஷ் சும்ராவிடம் சென்று சேர்த்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன்பிறகு இணைந்த ஜெகதீசன் - ராதாகிருஷ்ணன் கூட்டணி மட்டுமே அதிக நேரம் நீடித்தது. ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒருமுறை ராதாகிருஷ்ணனின் கேட்ச் விடப்பட, அதைச் சிறப்பாகப் பயன்படுத்தி, ஆங்கர் ரோல் செய்ய ஆரம்பித்தார் ராதா கிருஷ்ணன். 5 ஓவர்கள் இணைந்திருந்த இவர்கள், 26 ரன்களை மட்டுமே சேர்த்து, மந்தமாகத் தொடர்ந்தனர். இதனால் பவர்பிளே 31/1 எனப் பரிதாபமாகப் பார்த்தது.

விக்கெட் விடக் கூடாதென்ற அதிதீவிர கவனம்தான் சேப்பாக் அணிக்கு மிகப்பெரிய வில்லனாக மாறியது. ஆனால், விக்கெட் விழாத வரை, எந்த நொடியிலும் டிஃபெண்டிங் சாம்பியன் தனது கையை ஓங்கச் செய்யும் என்பதை உணர்ந்த ராகில், உடனடியாக தானே பந்து வீச இறங்கினார். அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் உடனே ஏற்பட்டது. ராகிலின் முதல் ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரிலேயே ஒன்றல்ல, இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன! ஜெகதீசன் ஓவரின் தொடக்கத்தில் வெளியேற, கடைசியில், சசிதேவ் ரன் அவுட் ஆகி வெளியேற, 39/3 என சேப்பாக் சூப்பர் கில்லீஸை அலற வைத்தது திருச்சி வாரியர்ஸ்.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

ஜெகன்னாத், ராதாகிருஷ்ணனோடு இணைந்தார். திருச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, பார்ட்னர்ஷிப்களை நீடிக்க விடாமல் செய்ததுதான். இரண்டு ஓவர்களுக்கு ஒன்று என்ற கணக்கில், விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தனர். ஒருசமயம், ஒரு ஓவருக்கு இரண்டு விக்கெட்டுகள் கூட விழுந்தன. இப்படி பார்ட்னர்ஷிப் பில்டப் ஆக ஆக, உடைத்துக் கொண்டே இருந்தது, திருச்சி. நடுவில் எங்கேயும் கிடைத்த மொமண்டத்தை விடவே இல்லை அவர்கள்.

தொடர்ச்சியான விக்கெட் வீழ்ச்சியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்ஸ்மேன்களுக்கு, வந்து செட்டில் ஆகவும், சற்றே ஆசுவாசப்படுத்தி ரன் சேர்க்க ஆரம்பிக்கவும் நேரம் எடுத்தது. இந்த இடைவெளியில் 'அடுத்த விக்கெட் பார்சல்!' என திருச்சி அனுப்பி வைத்தது.

ஒன்டவுனில் இறங்கிய ராதாகிருஷ்ணன் மட்டுமே நிலைத்து நின்று ஆடி, கொஞ்சமாவது திருச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். 45 பந்துகளில் அவரது அரை சதம் வந்தாலும், அவருடன் சேர்ந்து நின்று பொறுப்பாக ரன் சேர்க்க யாரும் முயலவில்லை.

போன போட்டியில், அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த சதீஷ் கூட சிறப்பாக ஆடாமல் வெளியேற, பெரிய ஷாட்களைப் பார்க்க வேண்டிய டெத் ஓவர்கள் கூட விக்கெட்டுகளை மட்டுமே கண்டன. அந்த இன்னிங்ஸின் கடைசிப் பந்தில்கூட, விக்கெட்டின் வாடைதான் அடித்தது. 10-வது விக்கெட்டாக, சித்தார்த் வெளியேற, வெறும் 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. சரவணக் குமார் மற்றும் ஆண்டனி தாஸ், முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

சுலபமான இலக்குதான் என்றாலும், பந்து வீசப் போவது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆயிற்றே. எனவே சர்வ ஜாக்கிரதை உணர்வோடே, திருச்சி தங்களது இன்னிங்ஸைக் கட்டமைத்தது. சந்தோஷ் மற்றும் அமித் களமிறங்கினர். அமித் வழக்கம் போல, இறங்கி வந்து பந்தை முன்னதாக எதிர்கொண்டு கொண்டே இருந்தார்‌. அதை வைத்தே அவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தூக்கியது.
TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

இதற்கடுத்தாக இணைந்த சந்தோஷ் - நிதீஷ் கூட்டணி சற்று நேரம் பொறுமை காத்தது. ஐந்து ஓவர்கள் மட்டுமே அது நிலைத்தாலும், அணியின் ஸ்கோரை, 54-க்குக் கொண்டு வந்து விட்டனர். ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அலெக்சாண்டரை வைத்து, சந்தோஷைச் சாய்த்து திரும்பி அடித்தது. அவர் அடித்த பந்து, டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகி, அவரை வெளியே அனுப்பியது.

12 ஓவர்களில், 78 ரன்கள் வேண்டும். அடிக்க வேண்டியது பெரிய ஸ்கோர் இல்லை என்பதால், ரிஸ்க் எல்லாம் எடுத்து ஆடாமல், மிகவும் நிதானமாக ஆடியது திருச்சி. ஆனால், நிதீஷ், 'சரி சொந்தச் செலவுக்கு ஆகும், அரைசதம் எடுத்துக் கொள்கிறேன்', என அவசரமாக, 45 பந்துகளில் அதனை அடைந்தார். பத்து ஓவராக, அவருக்கு உறுதுணையாக நின்ற ஆதித்ய கணேஷ், 18-வது ஓவரில் வெளியேறினாலும், வெல்லத் தேவை 4 ரன்களே என எல்லாமே முடிந்திருந்தது.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG
இறுதியாக, 19.1 ஓவரிலேயே, நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக மூன்று ரன்களை வைத்துக் கொள்ளுங்கள் என வின்னிங் ஷாட்டாக, கவரில் அடித்த பவுண்டரியோடு முடித்தார் நிதீஷ். புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் முடித்தது திருச்சி வாரியர்ஸ்.

போட்டியின் தொடக்கம் முதலே நோக்கமும், செயலும் ஒரே திசையில் பயணிக்க, வெற்றி மட்டுமே திருச்சியின் கண்களில் தென்பட்டிருக்கும் போலும்‌. அதைக் கண்கொண்டுதான் அவர்கள் முன்னேறினர். பொதுவாக, பேட்டிங்கில் ஒருவர் போனால் மற்றொருவர் என கல்லாக் கட்டும் சேப்பாக் சூப்பர் கில்லீஸே, இப்போட்டியில், திருச்சியிடம் சரணாகதி அடைந்தது. இந்த வெற்றி முதல் குவாலிஃபயரில் தோற்றாலும் கூட, இறுதிப் போட்டிக்கு முன்னேற, இன்னொரு குவாலிஃபயர் இருக்கிறதென்ற உத்திரவாதத்தைத் திருச்சிக்கு அளித்துள்ளது.

TNPL | #RTWvCSG
TNPL | #RTWvCSG

இந்த இரு அணிகளுக்கு இடையேயான குவாலிஃபயர், ஆகஸ்ட் 10 அன்றும், திண்டுக்கல் மற்றும் கோவை இடையேயான, முதல் எலிமினேட்டர், ஆகஸ்ட் 11-லும் நடக்கின்றன. முதல் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக, இறுதிப் போட்டிக்கு முன்னேற, தோற்கும் அணி இரண்டாவது போட்டியில் வெல்லும் அணியோடு, பலப்பரிட்சை மேற்கொள்ளும். அந்தக் களத்தை வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஸ்டார் பிளேயர்கள் பெரிதாக இல்லாமல் இறங்கியே சந்தித்த ஏழு போட்டிகளில் ஐந்தில் வென்றிருக்கிறது திருச்சி. இது அவர்களது முதல் பிளேஆஃப் என்பதுதான் இன்னமும் சிறப்பே.