Published:Updated:

TNPL: கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர், கேப்டனின் ஸ்பெஷல் ஸ்பெல்; திருப்பூர் பெற்ற முக்கிய வெற்றி!

TNPL | #LKKviDTT

முயற்சி செய்வோம் என எண்ணாமல் முடிப்போம் என முனைந்த திருப்பூர் கேப்டன் மொகம்மத்தின் வெறிகொண்ட வேகத்தில், கோவை கட்டுண்டது.

TNPL: கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர், கேப்டனின் ஸ்பெஷல் ஸ்பெல்; திருப்பூர் பெற்ற முக்கிய வெற்றி!

முயற்சி செய்வோம் என எண்ணாமல் முடிப்போம் என முனைந்த திருப்பூர் கேப்டன் மொகம்மத்தின் வெறிகொண்ட வேகத்தில், கோவை கட்டுண்டது.

Published:Updated:
TNPL | #LKKviDTT
புதுப் பெயரோடும், இளம் வீரர்களோடும், இந்த சீசனில் களம் கண்டுள்ள திருப்பூர் தமிழன்ஸ், ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, வரும் போட்டிகளில் எல்லாம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அவர்களை நேர்கொண்ட கோவையோ, முதலிடத்திற்கு முன்னேறும் முயற்சியில் இருந்தது.

எவ்வளவு வேண்டுமென்றாலும் சேஸ் செய்து விடக்கூடிய பிட்ச் என்பதால், கோவை டாஸ் வென்று சேஸிங் என்றது. சித்தார்த்தும், சென்ற போட்டியில் தனி ஒருவனாகப் போராடிய தினேஷும் களமிறங்கினர். ஷாருக்கான் ஆக்ரோஷத்தின் ஆளுருவான அபிஷேக்கை ஒருபுறமும், ஸ்பின்னர் செல்வக்குமாரை மறுபுறமும் கொண்டு ஆரம்பித்தார்.

பவர்பிளேயில் ரன் சேர்க்கத் திணறும் திருப்பூர் தமிழன்ஸ், அதே தவற்றைத்தான் முதல் நான்கு ஓவர்களிலும் செய்தது. நெல்லைக்கு எதிரான போட்டியில் அடித்த 41 ரன்களைத் தவிர, இத்தொடரில் இன்னமும் ஒரு பெரிய இன்னிங்ஸை சித்தார்த்தின் பேட் பார்க்கவில்லை. முதல் பந்திலிருந்தே தள்ளாடியவர், இறுதியாக ஒரு மோசமான ஷாட்டால் வெளியேற, மான் பாஃப்னா ஒன்டவுனில் வந்தார்.

TNPL | #LKKviDTT
TNPL | #LKKviDTT

எல்லாப் போட்டிகளிலும் ஒருசில வீரர்களை மட்டுமே நம்பியிருப்பதுதான், திருப்பூருக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது. எனினும் வழக்கம் போலவே இந்த இணை ஏமாற்றவில்லை. மிக முதிர்ச்சியடைந்ததாக, தங்களது பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். குறிப்பாக, அறிமுக வீரர், யுதீஸ்வரனின் ஓவரை எல்லாம், மூன்று பவுண்டரிகளோடு இவர்கள் அட்டாக் செய்ய, அடுத்தடுத்த ஓவர்களில், ஷாருக்கான் ஸ்பின்னர்களைப் பரிட்சித்துப் பார்க்க வேண்டி இருந்தது. அவரது மனக்கணக்குப்படியே, அஜித் தனது சுழலில் தினேஷை அனுப்பி வைத்தார். இதோடு நிற்கவில்லை கோவை. அடுத்த ஓவரிலேயே, அபாயகரமான மான் பாஃப்னாவையும் வெளியேற்றியது. இரு அடுத்தடுத்த முக்கிய விக்கெட்டுகள், 10 ஓவர்களின் முடிவில், வெறும் 68 ரன்களை மட்டுமே சேர்க்க வைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டியின் இப்போக்கு, அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைத்தது. பின்வரிசை வீரர்கள் சரிந்து விழ, 128-க்கும் கீழ்தான் மொத்த ஸ்கோரே இருக்கப் போகிறதென திருப்பூரின் கடந்த போட்டி முடிவுகள் கட்டியம் கூறின. ஆனால் புதிதாக இணைந்திருந்த கேப்டன் மொகம்மத்தும், அவர்களது தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான ரோக்கின்ஸும், அப்படி விட்டுவிடத் தயாராக இல்லை. அடுத்த ஐந்து ஓவர்களை, மிகப் பொறுமையாக எடுத்துச் சென்றிருந்தனர். 30 ரன்கள் மட்டுமே, பாலுக்கு ஒன்று என்று வந்திருந்தது. ஆனால், அடுத்த மூன்று ஓவர்களும், கோவையின் கண்களில் பயத்தைக் கொண்டு வந்தனர் இருவரும்.

18 பந்துகளை இந்தச் சமயத்தில் சந்தித்து, 43 ரன்களை அதில் சேர்த்து, 140-க்கு மேல் ஸ்கோரை எடுத்துச் சென்றனர். குறிப்பாக, கங்கா ராஜுவின் ஓவரில், ஓவர் தி வொய்ட் லாங் ஆனில் இரண்டு, டீப் மிட் விக்கெட்டில் ஒன்று என, மூன்று சிக்ஸர்களைக் காற்றைக் கிழித்து அனுப்பி 23 ரன்களைச் சேர்த்திருந்தனர். 18-வது ஓவரின் கடைசிப் பந்தில், ரோகின்ஸை, 38 ரன்களோடு அனுப்பிய கோவை, அதற்கடுத்த ஓவரிலும், மொகம்மத்தையும், அடுத்ததாக இறங்கிய கருப்பசாமியையும், வரிசையாக வீழ்த்தியது. எனினும், கொஞ்சமும் விட்டுத் தராத திருப்பூர், இறுதி இரண்டு ஓவர்களில், 22 ரன்களைச் சேர்த்து, 162 ரன்களில் கொண்டு போய் ஸ்கோரை நிறுத்தியது. இந்த சீசனில் இதுவே திருப்பூர் தமிழன்ஸின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

TNPL | #LKKviDTT
TNPL | #LKKviDTT
163 என்பதெல்லாம், கோவைக்குச் சவால் விடுக்கும் இலக்கில்லை என்றாலும், எளிதில் பணிந்து விடாமல், வெல்ல வேண்டுமென்ற திருப்பூரின் வேட்கையும், வெல்வோம் என்ற நம்பிக்கையும்தான் போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. அது இரண்டாவது பாதியிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதைப் பொய்யாக்காதவாறுதான் தொடர்ந்தது அடுத்து வந்த நிகழ்வுகளும். கடைசிப் பந்து வரை தொடர்ந்தது திருப்புமுனைகள்!

கோவையின் டீப் பேட்டிங் லைன் அப்பை கவனத்தில் கொண்டு, ஓப்பனிங் ஓவரை கவனிக்க வேறு யாரையும் இறக்காமல், கேப்டன் மொகம்மத்தே இறங்கி வந்தார். அணிக்குத் தேவையான திருப்பத்தையும் திருப்பூருக்காக அவரே கொண்டு வந்தார், அதுவும் முதல் ஓவரிலேயே! சுரேஷை அவர் டக் அவுட்டாக்க, மிகச் சிறப்பாக ஆரம்பித்தது திருப்பூர். ஆனால், அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரோடு கங்கா பதிலடி தர, கொஞ்சமும் தளராமல், அவரது விக்கெட்டையும் தனது இரண்டாவது ஓவரில் மொகம்மதே வீழ்த்தினார்.

இரண்டு விக்கெட்டுகள் மட்டும் கோவையின் கதையை முடிக்கப் பத்தாதே, வலிமையான அவர்களது பேட்டிங் படையை, என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் ஓட, அடுத்த சில ஓவர்கள் கோவையின் கையே ஓங்கி இருந்தது. வழக்கமாக ஒன்டவுனில் இறங்கும் சாய் சுதர்சன் இன்று இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு இறங்கி இருந்தார். பேட்டிங் பொஷிசன் மாறி இருக்கலாம், ஆனால், அவரது ஆட்டத்திறன் மாறவில்லை.

அஷ்வினும் சுதர்சனும் இணைந்து ஆறு ஓவருக்கு தாக்குப் பிடித்து, 43 ரன்களைச் சேர்த்தனர். பத்து ஓவர்கள் கடந்த நிலையிலேயே 78 ரன்களை எட்டி, அடிக்க வேண்டியதில் பாதியைக் கொண்டு வந்துவிட, எல்லாமே சாதகமாய்த்தான் சென்று கொண்டிருந்தது கோவையின் பக்கம். அவ்வப்போது விழுந்த விக்கெட்டுகள் மட்டுமே திருப்பூரை நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொள்ள வைத்திருந்தது.

TNPL | #LKKviDTT
TNPL | #LKKviDTT

விட்டுத் தருவதாக இல்லை, கோவை சூப்பர் கிங்ஸும். கேப்டன் ஷாருக்கான் இறங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தார். மொகம்மத் வீசிய பந்துகளைக் கூட பரிதவிக்க வைத்து, அவர்கள் அடித்து நொறுக்க, திருப்பூர் ரசிகர்களுக்கே நம்பிக்கைக்குக் கொஞ்சம் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் தான், எதிர்பாராத ஒன்று நேர்ந்தது. கிறிஸ்டன் வீசிய பந்தை, டீப் லாங் ஆனுக்கு அனுப்ப முயன்ற ஷாருக்கான், அதை ராஜ்குமாரிடம் கேட்சாகக் கொடுத்து வெளியனுப்பினார். இதுதான் போட்டியின் முக்கியமான தருணம். வெற்றி கொஞ்சமாவது திருப்பூரின் பக்கம் கருணை காட்டத் தொடங்கியது இதற்குப் பிறகுதான்.

எனினும் சாய் சுதர்சன் இருக்கும் வரை போட்டியை எப்படி, கோவையிடமிருந்து எடுக்க முடியும்?! முகிலேஷ் அதிரடி காட்டிக் கொண்டிருக்க, சாய் சுதர்சனும் 35 பந்துகளில், அரைசதம் தொட்டார். இதுவரை கோவை ஆடியுள்ள ஐந்து போட்டிகளில், நான்கு அரை சதங்களை, சாய் சுதர்சன் அடித்துள்ளார். அரை சதம் வராத அந்தப் போட்டியில் கூட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அவர், 40 ரன்களோடு களத்தில் இருந்தார் என்பதுதான், ஏன் அடுத்த ஐபிஎல் ஏலத்தில், அவர் பெயர் இருக்கப் போகிறதென்பதை உணர்த்தியது.

அந்தத் தருணத்தில் எல்லாம், நான்கு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என போட்டி, கோவையின் கைகளுக்குள்தான் அடைக்கலமாகி இருந்தது. அடுத்த ஓவரில் நிகழ்ந்த சாய் சுதர்சனின் ரன் அவுட் தான் போட்டியையே புரட்டிப் போட்ட தருணம். ஒரு லோ ஃபுல் டாஸ் பந்தை பௌலரை நோக்கி அடித்த முகிலேஷ் ஓடிவர, எதிர்முனையில் இருந்து ஓடிவந்த சாய் சுதர்சனால் ஸ்ட்ரைக்கர் எண்டை எட்ட முடியாது போக 51 ரன்களில் அவர் வெளியேறினார்.

இருப்பினும், முகிலேஷ், ஒரு பவுண்டரியாலும் சிக்ஸராலும் உருவான அழுத்தத்தைக் குறைத்தார். அபிஷேக் ஆட்டமிழந்து சென்றிருந்தாலும் அதனால் எதுவும் மாறாது, இறுதி ஓவரில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், போட்டியைக் கொண்டு வந்து நிறுத்தினார்.

முதல் ஓவரை வீசிய மொகம்மத்தான், தற்போதும் வந்தார். ரன் எ பால் எடுத்தாலே போதுமென்பதால், பதற்றம் அதிகமில்லை, கோவைக்கு‌. முதல் பந்தில் முகிலேஷ் ஒரு ரன் அடிக்க, இரண்டாவது பந்துக்கு ஸ்ட்ரைக் அஜித்திடம் சென்றது. அவர் ரன் எதுவும் எடுக்காமல் வீணாக்கி மூன்றாவது பந்தில் சிங்கிள் தட்ட, தற்போது ஸ்ட்ரைக் முகிலேஷிடம். பதற்றத்தில், பந்தைச் சரியாகக் கணிக்காமல் அவர் சிக்ஸருக்குத் தூக்க, அது மான் பஃப்னாவிடம் இருந்து தப்பவே இல்லை. இக்கட்டான நிலையில், முகிலேஷ் வெளியேறினார்.

TNPL | #LKKviDTT
TNPL | #LKKviDTT

மீதமுள்ள இரண்டு பந்துகளில், நான்கு ரன்கள் தேவையென்ற நிலையில், பந்தை எதிர்கொண்ட அஜித், அதில் சிங்கிள் எடுக்க, இறுதிப் பந்து, செல்வக் குமரனுக்கு. இறுதிப் பந்தில், மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி, இரண்டு ரன்கள் எடுத்தால் டிரா, ஒரு ரன் எடுத்தால் தோல்வி என்ற நிலை. துணிந்து அந்தப் பந்தை அவர் ஏரியல் ஷாட்டாக மாற்ற, சரி சிக்ஸர்தான், வெற்றி கோவைக்கே என ரசிகர்கள் முடிவுகட்ட, பந்து காற்றில் மிதந்து, ராஜ்குமாரை அடைந்து, திருப்பூரை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தது. இரண்டு புள்ளிகளையும் பரிசாகத் தந்தது. திருப்பூருக்கு மிக மிகத் தேவையான ஒரு வெற்றி இது.

தொடக்கம் முதல் இறுதிவரை, சிறந்த தலைவனாக, தனது கேப்டன் ஸ்பெஷல் ஸ்பெல்லினால், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது அணியை வெல்ல வைத்துள்ளார் மொகம்மத்.

இந்த ஒரு வெற்றியால், புள்ளிப் பட்டியலில் பெரிதாக எதுவும் நேர்ந்து விடவில்லை, திருப்பூர், ஒருபடி மேலேறியதைத் தவிர. ஆனால், பலம் வாய்ந்த கோவை கிங்ஸை, குறைந்த ரன்களுக்குள் டிஃபெண்ட் செய்திருப்பதுதான், திருப்பூரின் தன்னம்பிக்கையின் அளவீடை, பலமடங்கு உயர்த்தியுள்ளது. தொடருக்குள், தங்களது இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள உதவியுள்ளது.